Language Selection

புதிய ஜனநாயகம் 2011

கடந்த 2008ஆம் ஆண்டில் விருதை மினரல்ஸ் என்ற நிறுவனம், விருத்தாசலம் நகரிலுள்ள ஆலடிரோடு, எம்.ஆர்.கே.நகர் குடியிருப்புப் பகுதியில் ஆழ்குழாய் கிணறு தோண்டி தண்ணீரை வரைமுறையின்றி உறிஞ்சி வியாபாரம் செய்ய முயற்சித்தது. இதனால் ஆலடி ரோடு பகுதியில் உள்ள எம்.ஆர்.கே.நகர், முல்லைநகர், வீ.என்.ஆர்.நகர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட பல குடியிருப்புப் பகுதிகள் பாலைவனமாகும் அபாயத்தை உணர்ந்த இப்பகுதிவாழ் மக்கள் இத்தண்ணீர்க் கொள்ளையை எதிர்த்து ஊர் வலம்,  ஆர்ப்பாட்டம் எனத் தொடர்ந்து போராடியதையடுத்து இந்நிறுவனம் மூடப்பட்டது. இருப்பினும், இரவில் இரகசியமாகத் தண்ணீரை உறிஞ்சிப் பகலில் குடுவைகளில் தண்ணீரை ஏற்றிச் சென்று வியாபாரம் செய்யும் இத்தண்ணீர்க் கொள்ளை அவ்வப்போது நடந்துவந்தது.

 

 

தண்ணீர்க் கொள்ளையருக்கு எதிரான போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கடந்த அக்டோபர் மாதத்தில் இந்நிறுவனம் மீண்டும் நிலத்தடி நீரை ஆழ்குழாய் மூலம் உறிஞ்சி விற்பனை செய்ய முயற்சிப்பதை எதிர்த்து இக்குடியிருப்புப் பகுதி முழுவதும் வீடு வீடாக இத்தண்ணீர்க் கொள்ளைக்கு எதிராக பிரச்சாரம் செய்ததோடு, மக்களின் புகார் மனுக்களை அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பி, உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில் இந்நிறுவனத்தை மக்களைத் திரட்டி மூடுவோம் என எச்சரித்தது. இத்தண்ணீர்க் கொள்ளையருக்கு ஆதரவாகப் பல தரப்பினரும் ம.உ.பா.மையத்துடன் சமரசம் பேச முயன்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தனது பரிவாரங்களுடன் வந்து, "நம்ம பையன்தான், இதனால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை, எதற்காக நீங்கள் எதிர்க்கிறீர்கள்?' என்று ம.உ.பா.மையத்தின் நிர்வாகிகளிடம் வாதிட்டுப் பார்த்து விட்டு திரும்பினார்.

கடந்த அக்டோபர் 12ஆம் தேதியன்று இந்நிறுவனத்தினர் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய குடுவைகளில் தண்ணீரை வாகனத்தில் எடுத்துச் செல்ல முற்பட்ட போது, ம.உ.பா.மையத்தின் விருத்தாசலம் பகுதியின் தலைவர் குணசேகரன் தலைமையில் இப்பகுதிவாழ் மக்கள் திரண்டு வாகனத்தை மறித்து, ஆலையை முற்றுகையிட்டுச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீர்க் குடுவைகளை கீழே போட்டு உடைத்ததோடு, தண்ணீர்க் கொள்ளை நிறுவனத்தை உடனடியாக மூடக் கோரினர். பின்னர் வட்டாட்சியரும் போலீசு அதிகாரிகளும் போராட்டக் களத்துக்கு வந்து மக்களின் போராட்டத்துக்குப் பணிந்து அந்த ஆலையை மூடி முத்திரையிட்டனர்.

ம.உ.பா.மையத்தின் முன்முயற்சியால் நடந்த இந்தப் போராட்டம், மக்களிடம் பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதோடு, போராடாமல் தண்ணீர்க் கொள்ளையர்களை விரட்டியடிக்க முடியாது என்பதை உணர்த்துவதாகவும் அமைந்தது.

தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம், விருத்தாசலம்.