Language Selection

வினவு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மனுஷ்ய புத்திரனைத் தெரியுமா? தீவிர இலக்கியவாதி, உயிர்மை இதழ், பதிப்பகத்தின் ஆசிரியர், வெளியீட்டாளர், அப்புறம் கவிஞர். இவர் சினிமாப் படம் ஒன்றுக்கு பாடல் எழுதிய கதையை குமுதம் 27.05.09 இதழ் வெளியிட்டிருக்கிறது.

கமல் ஒரு நாள் நம்ம கவிஞரை தொலைபேசியில் அழைத்து வருமாறு கேட்டாராம். கவிஞரும் ஆச்சரியத்துடன் பார்க்கப் போனாராம். அங்கே கமல், அவர் மகள் ஸ்ருதி, இயக்குநர் சக்ரி மூவரும் இருந்தார்களாம். “உன்னைப் போல் ஒருவன்” படத்தில் ஒரு முக்கியமான பாடலை எழுதுமாறு கவிஞரை, உலக நாயகன் பணித்தாராம். உடனே கவிஞருக்கு இன்ப அதிர்ச்சியாம். அதுவும் கமல், மோகன்லால் என இரண்டு திரையுலகப் பிரம்மாக்களின் படத்தில் அறிமுகமென்றால் கேட்கணுமா? மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

இயக்குநர் சக்ரி பாடல் இடம்பெறும் சூழலை விளக்க, படத்தின் இசையமைப்பாளர் ஸ்ருதி இந்தியில் ஒரு சரணத்தைப் பாடி இசையமைத்து அதைப்பற்றி விளக்கி கவிஞரிடன் கொடுத்தாராம். இந்தி தெரியாதென்றாலும் ஸ்ருதி அந்தப்பாடலில் வெளிப்படுத்திய ஆழ்ந்த துயரம் கவிஞரின் மனதைக் கசியச் செய்ததாம்.

அடுத்து வீட்டில் உட்கார்ந்து கவிஞர் எழுதிய பாடலை ஸ்ருதி அவரது மெட்டுக்கு கச்சிதமாகப் பொருந்துவதாக கூறியதும் கவிஞருக்கு சந்தோஷமாம். அடுத்து கமல் சினிமாவில் பாடும் பாடல்கள் கவிஞருக்கு சின்ன வயதிலேயே பிடிக்குமாம். எண்ணெற்ற பாவங்களும், உணர்ச்சிகளும் வெளிப்படும் குரலாம் அது. அந்தக் குரல்தான் இந்தப் பாடலைப் பாடவேண்டுமென கவிஞர் விரும்பினாராம். அந்த ஆசையும் நிறைவேறியதாம்.

ஸ்ருதியின் இசையில் கமல் அந்தப் பாடலை பாடிய போது மனதைக் கரையச் செய்யும் வேறொரு கலைப்படைப்பாக மாறியதைக் கண்டு கவிஞரின் கண்களில் நீர் தளும்பியதாம். அவருக்கே நீர் வந்துவிட்டதால் இந்தப் பாடல் நம் காலத்தின் மாபெரும் துயரை வெளிப்படுத்தும் பாடலாக எல்லோருடைய இதயத்தையும் தொடுமாம்.

அடுத்து ஸ்ருதியின் ஆளுமையை, ” பல்வேறு ஆற்றல்களைக் கொண்ட நுட்பமான பெண், சினிமாவைத் தாண்டி ஒரு ஆளுமையை உருவாக்கிக் கொண்டவர், மிகப்பெரிய சாதனைகளையும், வெற்றிகளையும் எதிர்காலத்தில் குவிப்பார்” என்றெல்லாம் கவிஞர் உணர்ச்சிகரமாக நெகிழ்ச்சியுடன் விவரிக்கிறார்.

இதற்கு முன்னரே ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற தீவிர இலக்கியவாதிகள் சினிமாவுக்கு வந்திருக்கின்றனர். இதில் மனுஷ்ய புத்திரன் சமீபத்திய வரவு. பொதுவில் இந்த இலக்கியவாதிகளெல்லாம் சினிமாக்காரராக மாறுவதற்கு முன்னர் சினிமாவை சந்தைக் கலாச்சாரம், சதையை விற்கும் வியாபாரம் என்று பயங்கரமாக தாக்குவார்கள். ஆனால் சான்ஸ் கிடைத்துவிட்டால் போதும் மற்ற சினிமா உலகினரை விட நா கூசும் அளவில் வாய்ப்பு கொடுத்த புண்ணியவான்களை பயங்கரமாக ஐஸ் வைப்பார்கள். இதற்கு வாரமலரில் கவிதை எழுதுபவர்கள் தேவலாம்.

மேற்கண்ட சம்பவத்தில் ஒரே ஒரு சினிமாப் பாடல் எழுத சான்ஸ் கிடைத்ததும் கமலையும் அவரது மகளையும் எத்தனை தடவை உணர்ச்சிவசப்பட்டு, நெகிழ்ச்சியுடன், நுட்பம், ஆற்றல் என்றெல்லாம் உருகுகிறார் பாருங்கள். அந்தக்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் தங்களுக்கு பொற்காசுகள் கொடுக்கும் மன்னர்களை இந்திரனே, சந்திரனே என்று வாய்நிறைய பாடுவார்கள். இந்தக்காலத்து சிற்றிலக்கியவாதிகளோ அந்த வார்த்தைகளை கொஞ்சம் மாற்றிப்போட்டு பாடுகிறார்கள். இதுதான் காலம்காலமாக தொடர்ந்து வரும் தமிழ் மரபு போலும்!

மனுஷ்ய புத்திரன் சினிமா பாடல் http://www.vinavu.com/2009/06/22/mp/