Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"லட்சக்கணக்கான கிரிமினல் முஸ்லிம்களை ஐரோப்பாவில் இருந்து வெளியேற்ற வேண்டும். அவர்களின் பிரஜாவுரிமை பறிமுதல் செய்யப்பட வேண்டும். முஸ்லிம் நாடுகளில் இருந்து குடியேற வருபவர்களை தடை செய்ய வேண்டும்." - டென்மார்க் தொலைக்காட்சியில் தீவிர வலதுசாரி வில்டர்சின் நேர்காணல்.

கடந்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்திற்கான தேர்தலில், தீவிர வலதுசாரிக் கட்சிகள் பல முதன்முறையாக வென்று, ஆசனங்களைப் பெற்றுள்ளனர். தேர்தல் முடிவுகளை அறிவித்த ஊடகங்கள், ஐரோப்பாவில் தீவிர வலதுசாரி அலை பரவுவது போலவும், பெருமளவு மக்கள் இனவெறிக் கட்சிகளுக்கு வாக்களித்தது போலவும் பிரமையை தோற்றுவித்துள்ளன. வேற்றினத்தவருக்கு எதிராக இனவாதம் பேசும் கட்சிகள் கணிசமான வாக்குப் பலத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு தெரிவானது உண்மை தான். ஆனால் இவை ஒப்பீட்டளவில் மிகக் குறைவான ஆசனங்களையே பெற்றுள்ளன.

 

நெதர்லாந்தில் முஸ்லிம் விரோத வில்டர்சின் கட்சி நான்கு ஆசனங்களையும், பிரித்தானியாவில் குடிவரவாளர்/அகதிகளுக்கு எதிரான BNP இரு ஆசனங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்க வெற்றி தான். புதிய அங்கத்துவ நாடுகளான ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளிலும் வேற்றினத்தவரை சகித்துக் கொள்ளாத கட்சிகள் தலா ஒரு ஆசனத்தை தன்னிலும் பெற்றுள்ளன. இதே நேரம் ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் தீவிர வலதுசாரிகள் தோல்வியுற்றுள்ளன.

 

தீவிர வலதுசாரிக் கட்சிகளின் வெற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ஐரோப்பிய ஊடகங்கள், தீவிர இடதுசாரிக் கட்சிகளின் வெற்றியை இருட்டடிப்பு செய்ததன் மர்மம் என்ன? அயர்லாந்தில் (திரொஸ்கிச) உழைப்பாளர் கட்சி இரு ஆசனங்களையும், செக் குடியரசில் (மார்க்சிச லெனினிச) கம்யூனிஸ்ட் கட்சி நான்கு ஆசனங்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர்களும் இருக்கிறார்கள் என்பதை பிற ஐரோப்பிய மக்கள் அறியக் கூடாது என்பதில் ஊடகங்கள் அவதானமாக நடந்து கொள்கின்றன.

 

நெதர்லாந்தில் முஸ்லிம் விரோத பேச்சுகளால் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக, தீய வழியில் பிரபலமடைந்துள்ள வில்டர்சின் வெற்றியை அடுத்து, பரவலான ஊடக அங்கீகாரத்தை பெற்றுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த அன்றிரவே, ஐரோப்பிய ஊடகங்களில் "வில்டர்ஸ் புராணம்" களை கட்டியது. டென் மார்க் தொலைக்காட்சி ஒன்று வில்டர்சை அழைத்து செவ்வி கண்டது. வில்டர்ஸ் இந்த நேர்காணலில், ஐரோப்பாவில் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளார். "ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருபது மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். 2025 ம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி விடும். அப்போது ஐரோப்பாவில் மூன்றில் ஒருவர் முஸ்லீமாக இருப்பர்." என்று பூச்சாண்டி காட்டுகின்றார். "முஸ்லிம்கள் ஐரோப்பிய கலாச்சாரத்தை ஏற்க மறுப்பதாகவும், ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்புவதாகவும், ஜிஹாத் ஆதரவாக இருப்பதாகவும்..." இவ்வாறு முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டிய காரணங்களை அடுக்கிக் கொண்டே போகின்றார்.

 

இதுவரை காலமும் நவ-நாசிச, பாசிச கட்சிகளே, மேற்குறிப்பிட்ட பொய்யான தரவுகளை பரப்புரை செய்து வந்தன. தற்போதெல்லாம் வில்டர்ஸ் போன்ற பாசிஸ்ட்கள் "வெகுஜன அரசியல்வாதிகள்" என்ற போர்வையில் இனவெறி நஞ்சை கக்குகின்றனர். வில்டர்ஸ் பயன்படுத்தும் சொற்பிரயோகங்கள் பல நவீன பாசிச அகராதியில் இடம்பெறத்தக்கவை. முஸ்லிம்கள் ஐரோப்பாவை "காலனிப்படுத்துவதாக", காலனியத்திற்கு புதிய விளக்கம் கொடுப்பார். தன்னை எதிர்க்கும் வெளிநாட்டவரை "இனவெறியர்கள்" என்றழைப்பார். வீதியில் ரவுடித்தனம் செய்யும் வேலையற்ற பொறுக்கிகளுக்கு "தெருப் பயங்கரவாதிகள்" என நாமம் சூட்டியுள்ளார்.

 

குறிப்பாக மொரோக்கோ குடிவரவாளர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவது உண்மை தான். இருப்பினும் அப்படிப்பட்டவர்கள் ஒரு சிறிய தொகையினர் தான். பெரும்பான்மை மொரோக்கோ சமூகத்தினர் தாமுண்டு, தமது வேலையுண்டு என்று அமைதியாக வாழ்பவர்கள். ஒரு சில கிரிமினல் இளைஞர்களை உதாரணமாகக் காட்டி, முஸ்லிம்கள் அனைவரையும் கிரிமினல்களாக காட்டும் வில்டர்சின் செயல் வன்மையாக கண்டிக்கப்படவேண்டும். தற்போது "முஸ்லிம்களை மட்டும் தானே வெளியேற்றுவார்கள்." என்று பிற சிறுபான்மை சமூகத்தினர் அலட்சியமாக இருந்தால், அவர்களுக்கும் அந்த நிலை வர அதிக காலம் எடுக்காது. கிரிமினல் செயல்களில் ஈடுபடுவோர், புலம்பெயர்ந்த நாட்டில் குறுந்தேசியவாதம் பேசுவோர் பிற சமூகங்களிலும் உள்ளனர். அவர்களுக்கும் இது ஓர் எச்சரிக்கை.

 

ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வாழும் அரபு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களிடையே இஸ்லாமிய அடிப்படைவாத அரசியல் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. ஐரோப்பிய பேரினவாதிகள் அதனை தமக்கு சாதகமாக மாற்றிக் கொள்கின்றனர். தீவிரவாத முஸ்லிம்களால் மொத்த ஐரோப்பிய சமூகத்திற்கும் ஆபத்து என்று பயமுறுத்துவதன் மூலம், பெரும்பான்மை ஆதரவை திரட்டிக் கொள்கின்றனர். அரபு-முஸ்லிம்களல்லாத பிற சமூகங்களான துருக்கியர், குர்தியர், பஞ்சாபியர், தமிழர் மத்தியில் குறுந்தேசியவாத அரசியல் செல்வாக்கு அதிகம். தற்போது இவர்களின் தேசிய இன அரசியல், ஐரோப்பிய பேரினவாதத்திற்கு எதிரானதல்ல போன்று தோன்றலாம். ஆனால் ஐரோப்பா முழுவதும், ஒரே கலாச்சார மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் திட்டமிடும் பேரினவாதத்தின் பாதையில் இவையெல்லாம் தடைக்கற்களாக தெரிகின்றன.

 

வில்டர்ஸ் பற்றிய மேலதிக தகவல்களை எனது முன்னைய பதிவுகளில் வாசிக்கலாம்.


- இஸ்லாமிய எதிர்ப்பு காய்ச்சல் பரவுகின்றது
- சுதந்திரம் கேட்கிறது நிறவாதம்


டென் மார்க் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வில்டேர்சின் நேர்காணல் வீடியோ (in English):