Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிரித்தானியாவின் ஐரோப்பிய காலனியான சைப்ரசில் எண்பதுகளில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியினால், அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு நிகராக, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. இதற்கு உல்லாசப்பிரயானதுறை, கட்டட நிர்மாணத்துறை, மற்றும் ஆடை தயாரிப்பு தொழில்துறை அதீத வளர்ச்சி அடைந்தமை முக்கிய காரணங்கள். குறிப்பாக பிரித்தானியாவில்

இருந்து வரும் உல்லாசபிரயாணிகள், தமது நாட்டின் குளிரான காலநிலையில் இருந்து தப்பி, வெயில் காய வருவதற்கு ஏற்ற நாடாக சைப்ரசை கண்டுபிடித்தனர். வெப்ப மண்டல நாடொன்று ஐரோப்பிய கண்டத்திற்கு அருகில் இருப்பதும், ஆங்கிலம் பேசுவதும் அவர்களை கவர்ந்தன. அதே நேரம் ஓய்வூதியம் பெறும் ஆங்கிலேய வயோதிபர்கள் அமைதியான நாட்டுப்புறங்களில் வீடுகளை வாங்கி குடியேறியதும், "ரியல் எஸ்டேட்" துறை புதிய சந்தையை கண்டு கொண்டது. தற்போதும் கடற்கரையோர நகரங்களில் புதிய வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.


பொருளாதார மாற்றங்கள், மக்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது. நமது நாடுகளில் இருப்பது போலவே, சைப்ரஸ் பெண்களும் குடும்பத்தை பராமரிப்பதிலும், வீட்டு வேலைகளையுமே காலங்காலமாக செய்து வந்தவர்கள். ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் உழைப்பும் தேவையாக இருந்ததால், பெண்கள் வேலைக்கு போவதும், உயர்கல்வி கற்று பதவிகளை பெறுவதும் சர்வசாதாரணமாக காணக்கூடியதாக உள்ளது. வருமான உயர்வு, வசதிகளை பெருக்கினாலும், வீட்டை பராமரிக்கவும், குழந்தைகளை வளர்க்கவும், வேலைக்கு போகும் பெண்களால் நேரம் ஒடுக்குவது கஷ்டமான போது, அரசாங்கம் அதற்கொரு தீர்வை காட்டியது. வீட்டுப் பணிப்பெண்களை, குறைந்த கூலிக்கு, இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற வறிய நாடுகளில் இருந்து தருவித்துக் கொடுத்தது.


பிற்காலத்தில் பணிப்பெண்களின் இறக்குமதி, பிறிதொரு பிரச்சினையை தீர்க்கவும் உதவியது. வாழ்க்கைத்தரம் உயர்வதென்பது, அனைவருக்கும் மருத்துவ வசதிகள் கிடைகின்றன என்பதும் அர்த்தமாகும். இதனால் மக்கள் நீண்ட காலம் வாழ்வதால், வயோதிபர்களின் எண்ணிக்கை நாட்டில் பெருகியது. அறுபதுகளில் ஓய்வு பெறும் வயோதிபர்கள், தேசிய பொருளாதார உற்பத்தியில் ஈடுபடாமல், ஓய்வூதியம் என்ற செலவினத்தையே வைக்கின்றனர். இதனால் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது, ஏற்கனவே கிரீஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாரம்பரிய முறையான பிள்ளைகள் பராமரிக்கும் நிலை மாறி, அரசாங்கமே வயோதிபரை பராமரிக்கும் பொறுப்பை கையில் எடுத்துள்ளதால், அதற்கு ஏற்படும் செலவினங்களை ஈடுகட்டுவதும் பெரும்பாடாக இருந்தது. தாராளவாத முதலாளித்துவ சட்டங்களின் கீழ், அரச பொறுப்பு தனியார்மயமாகியது. அதன் படி வயோதிபர்கள், அவர்களின் வீடுகளில் வைத்து, பணிப் பெண்களால் பராமரிக்கப்படும் நிலை தோன்றியது. இதற்கெனவே இருக்கும் முகவர்கள் இலங்கை, பிலிபைன்ஸ் பணிப் பெண்களை குறைந்த கூலிக்கு தருவிக்கின்றனர். உலகமயமாக்கலின் கீழ் தொழிலாளர்களை ஏற்றுமதி செய்யும் இலங்கை, பிலிபைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாட்டு அரசாங்கங்களுடன் ஒரு மாத சம்பளம் எவ்வளவு என்று முன்கூட்டியே பேசி தீர்மாணிக்கப் படுகிறது. இந்தப் பேரம் பேசலில் ஒரு பணிப்பெண்ணின் ஊதியம் அண்ணளவாக மாதம் 300 யூரோ என்று உள்ளது. தற்போது இலங்கை அரசு தொகையை அதிகரிக்குமாறு கேட்டு வருவதால், முகவர்கள் வேறு வறிய நாடுகளில் வலைவீசுகின்றனர். சைபிரசில் சட்டப்படி குறைந்த சம்பளம் 700 யூரோ என்றிருந்த போதும், அந்நாட்டு பிரசைகளுக்கே அது பொருந்தும். அங்கே பாகுபாடான சம்பளம் வழங்குவது சர்வசாதாரணம். ஒரே வேலைக்கு சைப்ரஸ் பிரசைக்கு கொடுப்பதை விட மிக குறைவாக வெளிநாட்டு தொழிலாளருக்கு வழங்கபடுகின்றது.

 

சைப்ரஸ் வந்த பின்பு இலங்கை பணிப்பெண்களின் அடிமைவாழ்வு ஆரம்பமாகின்றது. பணியில் அமர்த்தும் சைப்ரஸ் குடும்பம் (தொழில் வழங்குனர்) அவர்களது கடவுச்சீட்டை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். வாரம் 40 தொடக்கம் 44 மணித்தியாலம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று இருந்த போதும், பல பெண்கள் குறிப்பாக வயோதிபரை பராமரிக்கும் பெண்கள் 24 மணிநேரம் வேலை செய்ய வேண்டி உள்ளது. இரவில் குறைந்தளவு நேரம் மட்டுமே உறங்கும் வயோதிபர்கள் விழித்திருக்கும் நேரம் முழுவதும் கவனித்துக் கொள்ளுமாறு பிள்ளைகளால் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். இதனால் இந்தப் பணிப்பெண்கள் ஒரு நாளைக்கு சராசரி 12-17 மணிநேரம் வேலைசெய்தாலும், ஒப்பந்தப்படி வேலைசெய்த அதிக நேரத்திற்கு ஊதியம் வழங்குவது அரிதாகவே நடக்கும் விஷயம். அதேநேரம் தமது 8 மணி வேலை நேரம் தவிர்ந்த பிற நேரங்களில், இந்த இளம்பெண்கள் வெளியில் சென்று வரவோ, அல்லது பொழுதுபோக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.

 

ஞாயிற்றுகிழமைகள் அல்லது பிற விடுமுறை தினங்கள் சுதந்திரமாக வெளியில் போக அனுமதி கிடைத்தாலும், மாலைநேரம் வீடு திரும்ப வேண்டும். இதனால் பகல் நேரம் மட்டுமே உண்மையான ஓய்வு கிடைக்கிறது. நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஞாயிற்றுகிழமைகளில் இலங்கையர் கூடும் இடங்களில் முக்கியமானது. இந்த தேவலாயம் அவர்களது ஆன்மீக தேவைகளுக்கு மட்டுமல்லாது, பிறரை சந்திக்க வாய்ப்பளிக்கும் சமூக பரிவர்த்தனை மையமாகவும் செயற்படுகின்றது. சைப்ரஸ் மக்கள் கிரேக்க கிறிஸ்தவத்தை பின்பற்றுவதால், கத்தோலிக்க தேவாலயங்கள் முழுக்கமுழுக்க வெளிநாட்டு தொழிலாளரை நம்பியே இயங்குகின்றன. இருப்பினும் எந்தவொரு மத நிறுவனமும், தன்னை நம்பி வரும் தொழிலாளரின் அடிமைநிலையை போக்க முயற்சி செய்வதில்லை. அதற்கு மாறாக, அவர்கள் மீது பிறிதொரு வடிவில் சமூக கட்டுபாடுகளை திணித்து, அடங்கிப் போக வழி செய்வனவாகவே உள்ளன.

  

சில சைப்ரஸ் தொழில் வழங்குனர்கள் தந்திரமாக ஒப்பந்தத்தில் இல்லாத வேலை வாங்குவதில் கில்லாடிகள். தமது குடும்ப பண்டிகைகளில் பணிப்பெண்களையும் கலந்து கொள்ள அழைப்பர். இவ்வாறு "குடும்பத்தில் ஒருவர்" என்ற மாயையை தோற்றுவித்து விட்டு, ஒப்பந்தத்தில் குறிப்பிடாத வேறு வேலைகளை செய்ய சொல்வர். அப்பாவி பணிப்பெண்களும் எஜமானர்களின் "தாராள குணத்தை" மெச்சி முணுமுணுக்காமல் வேலை செய்து முடிப்பர். இத்தகைய "புத்திசாலி" எஜமானர்கள் எதாவது வியாபாரநிலையம் வைத்திருந்தால், அவற்றையும் துப்பரவாக்கும் படி பணிக்கின்றனர். சிலர் ஒரு படி மேலே போய், தமது உறவினர் வீடுகளுக்கு சென்று வேலை செய்யுமாறு உத்தரவிடுகின்றனர். இவ்வாறு பெருமளவு இலங்கை தொழிலாளரின் இலவச உழைப்பு, உபரிமதிப்பாக சைப்ரஸ் மக்களை இன்னும் இன்னும் பணக்காரர் ஆக்குகின்றது. நிலைமை இவ்வாறு இருக்க அப்பாவி இலங்கை பணிப்பெண்கள் இலங்கையில் இருக்கும் தொழிலாளியை விட நான்கு மடங்கு அதிகம் சம்பாதிப்பதற்காக திருப்திப்படுகின்றனர். அவர்கள் தமது தாய் நாட்டிற்கு அனுப்பும் பணத்தால் பெருமளவு அந்நிய செலாவணி கிடைத்தாலும், இலங்கை அரசும் தனது பிரசைகள் நலன் குறித்து அதிக அக்கறை எடுப்பதில்லை.


பெருமளவு பணிப்பெண்கள் கல்வியறிவு குறைவால், அல்லது அக்கறையின்மையால் வேலை ஒப்பந்தத்தில் என்ன இருக்கின்றது என்று கவனிப்பதில்லை. இதனால் ஒப்பந்தத்தை அடிக்கடி மீறும் எஜமானர்கள், பணிப்பெண்களை உரிமைகளற்ற அடிமைகளாக வைத்திருக்கவே விரும்புகின்றனர். இளம்பெண்களின் பாலியல் சுதந்திரம் கூட கட்டுப்படுத்தப்படுகின்றது. பல பணிப்பெண்கள் ஆண்-நண்பர்கள் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எந்த ஒப்பந்தமும் ஒரு பெண், ஆண் நண்பர் வைத்திருக்க கூடாது என்று கூறவில்லை. இருப்பினும் ஒரு பெண்ணுக்கு காதலன் இருப்பது அடிப்படை மனித உரிமை என்ற விடயம் கூட அவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை. இந்த "பாலியல் நன்னடத்தை" குறித்த எதிர்பார்ப்பு, பணிப்பெண்களை அடக்கி அதிக வேலை வாங்கவும், அதே நேரம் எஜமான் தரப்பு பிழைகளை மறைக்கவும் பயன்படுகின்றது.


தற்போது ஐரோப்பிய யூனியனில் உறுப்பு நாடாக உள்ள சைப்ரஸ் அரசாங்கமோ, தந்து பிரசைகள் நலன் குறித்தே அதிக அக்கறை படுகின்றது. தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் நலசட்டங்களை வைத்து, ஒப்பந்தத்தை மீறும் தொழில் வழங்குனர் மீது நடவடிக்கை எடுக்கப்போனால், அது அதிக காலம் எடுக்கும், அதிக பணம் விரயமாகும் செயலாகும். இதனால் நீதியை எதிர்பார்க்காத தொழிலாளர்கள், தமது தாய் நாட்டிற்கே திரும்பி செல்கின்றனர். மேலும் பொதுவாக சைப்ரசில் நிலவும் வெள்ளை இனவாத மேலாண்மை, தொழிற்சங்கம் அமைக்க அனுமதியின்மை, வாக்குரிமை உட்பட பிற அரசியல் உரிமைகளின்மை என்பன, சைப்பிரசில் இலங்கை தொழிலாளரை, அடிமைகளாக அடக்கி வைக்க சாத்தியமாக்கும் பிற காரணிகள்.

 

(இந்த ஆய்வுக்கட்டுரை நேரே பார்த்த சம்பவங்களையும், சாட்சிகளையும் அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டது.)

 

http://kalaiy.blogspot.com/2008/08/blog-post.html