Language Selection

சமூகவியலாளர்கள்

சமுதாய சீர்திருத்தம் என்பது வெறும் சாதியை பற்றிப் மட்டும் பேசுவது என்பது அல்ல; சமயத்தைப் பற்றியோ, "அரிஜனங்கள்' என்று கூறப்படுபவர்களைப் பற்றியோ, நிலம் இல்லாதவர்களைப் பற்றியோ பேசுவது முக்கியம் அல்ல. இவை சாதாரண விஷயம். இதற்கெல்லாம் காரணம் எவை என்று பார்க்க வேண்டும். "அரிஜனங்'களுக்கு வீடு இல்லை என்றால், யார் என்ன பண்ணுவது? ஏன் அவர்களுக்கு வீடு இல்லை? எனக்கு ஏன் 150 வீடுகள் இருக்கின்றன? அரை ஏக்கர் நிலம்கூட ஏழைகளுக்கு இல்லை. ஏன் இல்லை? ஏன் இந்த நிலை? ஒருவனுக்கு 5,000 ஏக்கர் இருக்கின்றது என்றால் எப்படி வந்தது? யாரை ஏமாற்றி எழுதி வாங்கினான்? இந்தச் சீர்கேட்டை ஒழிக்க – பரிகாரம் காண "அரிஜனங்'களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதோ, ஏழை மக்களுக்கு அரை ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுப்பதோ போதுமா?

தோழர்களே! இந்தக் கோவையை எடுத்துக் கொள்ளுங்கள். இங்கு கொசுத் தொல்லை ஏராளமாக இருக்கின்றது. இதற்குப் பரிகாரம் தேட, ஆளுக்கு ஒரு கொசுவலை வாங்கிக் கட்டிக் கொண்டு படுங்கள் என்று கூறினால் போதுமா? உள்ளவன் வலை வாங்கிக் கட்டிக் கொள்ளுகிறான். வசதியற்றவன் வலைக்கு எங்கே போவான்? ஒருவன் யோக்கியமாக இருந்து கொசுவால் வரும் மலேரியா காய்ச்சலுக்குக் கொய்னா தின்றால் போதும் என்று கூறுவானா? என்ன சொல்ல வேண்டும்? நகரில் சாக்கடை நீர் கசுமாலங்கள் தங்குவதன் காரணமாக கொசு உற்பத்தி பெருகுகின்றது. அதன் மூலம்தான் மலேரியா காய்ச்சல் வருகின்றது. எனவே சாக்கடை நீர் கசுமாலங்களை அப்புறப்படுத்துங்கள். இதன் மூலம்தான் கொசுத் தொல்லை யும், தொற்று நோயையும் ஒழிக்க முடியும் என்றுதானே கூறுவான். இதை விட்டுவிட்டு கொய்னாவும், மருந்தும்தான் சாப்பிட வேண்டும் என்று கூறினால் டாக்டர்தான் பிழைப்பான்.

சும்மா பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் கூடாது என்று கொஞ்சம் பணத்தைப் பணக்காரனிடம் இருந்து வாங்கிக் கொடுத்தால், பணக்காரன் ஒழிந்து விடுவானா? இப்படிச் செய்தால் போதுமா? நீங்கள் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம் நிலைமை வாழ்வு எல்லாம் எதனைப் பொறுத்து இருக்கின்றன? நம் கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் நடப்பு இவற்றைத் தானே பொறுத்து இருக்கின்றன? நாம் ஏன் சூத்திரன்? நாம் ஏன் இழிமகன்? நாம் ஏன் படிக்கக் கூடாதவன்? நாம் ஏன் வீடு இல்லாமலும், நிலம் இல்லாமலும் இருக்கின்றோம். நாம் ஏன் நாள் முழுவதும் பாடுபட்டும் அரை வயிற்றுக் கஞ்சிக்கு வழியில்லாதவர்களாக இருக்கின்றோம். எல்லாம் நம் கடவுள், மதம், சாஸ்திரம் காரணமாகத்தானே?

சமுதாய சீர்த்திருத்தத்திற்கு வந்தவருக்கு எந்தவிதத் தொடர்பும் பற்றும் இருக்கக் கூடாது. கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் நடப்பு ஆகியவற்றில் பற்று இருக்கக் கூடாது. அது மட்டும் அல்ல. நாட்டுப் பற்று, மொழிப் பற்று முதலியனவும் இருக்கக் கூடாது. இந்தப் பற்றுகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் மனதில் புகுந்து இருந்தும், இவற்றால் ஒன்றுமே ஆகவில்லை என்றால், நாம் என்ன பண்ண வேண்டும்? இந்தப் பற்றுகளை எல்லாம் விட்டு நம் மனதைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டாமா?

அடுத்து, அரசியலில் என்னைத் தவிர சன்னிதானம் அவர்களைத் தவிர, மற்றவர்கள் எல்லாம் அரசியலில் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றீர்கள். நாட்டில் அரசன்தான் இல்லையே! பிறகு யாரைக் குற்றம் கூற அரசியல் என்று பெயர் வைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்? நமக்கு யார் ராஜா? தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், ஏழைகள், பிச்சைக்காரர்கள், தற்குறிகள் – இப்படி எல்லோரும்தானே ராஜா! இவர்களிடம் ஓட்டு வாங்கிக் கொண்டு வந்து வெற்றி பெற்றுத்தானே ஆள்கின்றார்கள். பிறகு எப்படி தப்பு கூற முடியும்?

அடுத்து சாதி. சாதி ஒழிப்புக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் பாடுபட்டுக் கொண்டு வருகின்றோம். காமராசர் தமது ஆட்சிக் காலத்தில் நடைமுறையில் சாதி ஒழியும்படியாகத் திட்டம் போட்டு அமல் நடத்தினாரே! இன்றும் திட்டம் போட்டுக் கொண்டு உள்ளார். தாழ்த்தப்பட்ட இனத்தில் வந்தவருக்குப் பெரிய உத்தியோகம் எல்லாம் கொடுக்கின்றார். ஜில்லா சூப்பிரண்டு வேலை கொடுக்கின்றார். பார்ப்பனருக்குச் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர் வேலை கொடுக்கின்றார். உயர் சாதிக்காரன் என்பதால் பார்ப்பன இன்ஸ்பெக்டர், தாழ்த்தப்பட்ட ஜில்லா சூப்பிரண்டை பறைய சூப்பிரண்டே என்றா கூப்பிடுவான்? பறைய சூப்பிரண்டைக் கண்டால் தொடை தட்டி, பார்ப்பான் சலாம் போட்டுத்தானே தீர வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கலெக்டர் வேலை கொடுக்க இருக்கின்றார். சேலத்தில் இன்று தாழ்த்தப்பட்டவர்தான் கலெக்டர். இப்படிப்பட்ட காரியங்களால்தான் சாதியை ஒழிக்க முடியுமே ஒழிய, ஒரு ஏக்கர், அரை ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுப்பதாலோ, வீடு கட்டிக்கொடுத்து விடுவதாலோ சாதி ஒழிந்துவிட ஏதுவாகாது.

11-1-1964

http://www.keetru.com/rebel/periyar/81.php

ஆதிதிராவிடர் மக்களும் மனிதர்களே; ஆயினும் சமூக வாழ்க்கையில் மிருகங்களை விடக் கேவலமாகத்தான் நடத்தப்படுகிறீர்கள். இதை நீங்களே ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். உங்களுள் சிலர் ராவ் பகதூர்களாகவும், ராவ் சாகிப்களாகவும், மோட்டார் வாகனங்களிலும், கோச்சுகளிலும் செல்லத்தக்க பணக்காரர்களாயும் இருக்கலாம். மற்றும் உங்களுள் ஞானமுள்ள அறிவாளிகளும், படிப்பாளிகளும் இருக்கலாம். எவ்வாறிருந்தாலும் அத்தகையவர்களையும் பிறந்த சாதியை ஒட்டித் தாழ்மையாகத்தான் கருதப்பட்டு வருகின்றீர்கள் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அது, சாதி வித்தியாசக் கொடுமையே ஆகும்.

ஒவ்வொருவரும், ‘நமக்கென்ன? நம் பிழைப்பிற்கு வழியைப் பார்ப்போம்' என்று இழிவிற்கு இடங்கொடுத்துக் கொண்டு போகும் வரை, சமூகம் ஒரு காலத்திலும் முன்னேறாது. சாதிக் கொடுமைகள் ஒருபோதும் ஒழிய மார்க்கம் ஏற்படாது என்பது திண்ணம். சாதிக் கொடுமைகளை ஒழித்து சமத்துவத்தினை நிலைநாட்டும் பொருட்டுத் தான், சுயமரியாதை இயக்கம் தோன்றியது. சுயமரியாதை இயக்கத்தினால் மக்களுக்கு யோசித்துப் பார்க்கும் தன்மையாவது வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகத்தில் அவன் உயர்ந்தவன் இவன் தாழ்ந்தவன் என்று பந்தயம் போட்டுக் கொண்டு, சாதி வித்தியாசக் கொடுமைகளை நிலைநாட்டி சமூக முன்னேற்றத்துக்கும், விடுதலைக்கும் தடையாயிருக்கும் எந்த சாஸ்திர புராணங்களையும் சுட்டெரிக்க, சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் தயாராய் இருக்கிறோம். மக்கள் முன்னேற்றத்தில் மதம் வந்து தடை செய்தால், அது எந்த மதமாயிருந் தாலும் அதனை ஒழித்துத்தான் ஆகவேண்டும்.

‘கடவுள் உன்னைப் பறையனாய்ப் படைத்தார். சுவாமி என்னைச் சூத்திரனாய்ப் படைத்தார். அவனைப் பார்ப்பனனாய்ப் படைத்தார்’ என்று கடவுள் மேல் பழிபோட்டு, கொடுமைகள் நிலைக்கச் செய்வதை விட்டுக் கொடுத்துக் கொண்டு, அக்கொடுமைகளுக்கு ஆதரவாயும் அக்கிரமங்களுக்கு அனுகூலமாயும் இருக்கும் கடவுளைதான் ஒழிக்க வேண்டும் என்கிறோம். கொடுமை செய்யும் மதத்தையும் சாஸ்திரத்தையும் – கடவுளையும் ஒழிப்பதற்குப் பயந்தோமானால் நாம் நிரந்தரமாய்ப் பறையனாயும், சூத்திரனாயும், தாழ்ந்தவனாயும் பல கொடுமைகளுக்கு உட்பட்டுக் கேவலமாகத்தான் இருக்க வேண்டும். நம்மை இத்தகைய கேவலமான நிலைமைக்குக் கொண்டு வந்த கடவுளும், மதமும் போகவேண்டியதுதான். இதை ஒளித்துப் பேசுவதில் பயனில்லை.

நமது பெரியார்கள் சொல்லியவை கணக்காக வாயளவில் பாராயணம் செய்யப்படுகின்றனவே அன்றி, செய்கையில் அதனால் ஒரு பலனும் ஏற்பட்டதாய்த் தெரியவில்லை. இன்றைக்கும் சாதிக் கொடுமையினால், இவன் இந்தத் தெருவில் வந்தால் தீட்டுப் பட்டுவிடும்; அவன் அந்தத் தெருவில் போனால் சாமி செத்துவிடுமென்ற அநியாயங்கள்தான் தலைவிரித்தாடுகின்றன. ஒருவர், ‘ஆதிதிராவிடர்கள் இழிவுபடுத்தப்படுகின்றனரா? இல்லை இல்லை. நந்தனாரை நாங்கள் அறுபத்து நாயன்மார்களுள் ஒருவராகப் பூசித்து வரவில்லையா?’ என்று வாய் வேதாந்தம் பேசுகின்றார். ‘பறையனாய் இருந்த நந்தனார் திருநாளைப் போவார் ஆகிவிடவில்லையா? அப்படியிருக்க புராணத்தை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்?’ என்கிறான்.

அந்த அறிவாளி அந்த நந்தனுடைய பின் சந்ததியினராகிய பேரப் பிள்ளைகளை, அந்த திருநாளைப் போவாராகிய நந்தன் இருக்கும் இடத்தைக்கூட ஏன் பார்க்க விடுவதில்லை? அப்படிக் கேட்டால் அந்த நந்தன் வேறு ஜென்மம், இவர்கள் வேறு’ என்று பல புராணப் புரட்டுகள் பேசுகின்றார்கள். ஆலயங்களின் பெயரால் செய்யப்படும் அக்கிரமங்களுக்கும், கொடுமைகளுக்கும் எல்லையில்லை. உதாரணமாய், மதுரை மீனாட்சி கோயிலை எடுத்துக் கொள்வோம்.

அக்கோயிலின் ஒரு கோபுர வாசலுக்குக் குறைந்தது அரை மைலுக்கு அதிகமான தூரமிருக்கும். இவ்வழி சாதாரண ரஸ்தாவைவிட அகன்று வண்டிகள் தாராளமாய்ப் போய் வரத்தக்கதாய் இருக்கின்றது. இவ்வழியாகப் பிற மதத்தினரான முஸ்லிம் மக்களும், கிறித்துவர்களும் மிதியடி போட்டுக் கொண்டு துவஸ்தம்பம் வரையிலும் தாராளமாகப் போக அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இந்துக்களாகிய நாடார்கள் என்னும் வகுப்பாரும், மற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பாரும் மட்டிலும், அந்தக் கோயில் மதில் சுவர் அருகில் வந்தாலும் சாமி செத்துப் போகும் என்கிறார்கள். அது சாமியா? போக்கிரித்தனமா? நம்முடைய உதவி வேண்டும்போது, இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்று நம்மையும் சேர்த்துப் பேசுவதும், நம் சுதந்திரத்தையும், உரிமையையும் கேட்டால் சாமி செத்துப் போகும் என்பதும் என்ன அயோக்கியத்தனம்?

(3.8.1929 அன்று கண்ணப்பர் வாசக சாலை திறப்பு விழாவில் பெரியார் ஆற்றிய உரை)

http://www.keetru.com/rebel/periyar/82.php

இந்நாட்டில் இன்று எங்கே பார்த்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகள் கூட்டி, தாழ்த்தப்பட்ட மக்கள் குறைகளைப் பற்றி பேசப்படுகின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் சுதந்திரம் பெற வேண்டும் என்றும், சுயமரியாதை பெற வேண்டும் என்றும், இந்த 10, 18 வருஷகாலமாகத்தான் வெளிப்படையாகவும் தைரியமாகவும் கிளர்ச்சி செய்ய சந்தர்ப்பமும் சவுகரியமும் பெற்றிருக்கிறார்கள் என்பதோடு, உங்களுக்கே இந்த உணர்ச்சியும் இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. தமிழ் அரசர்கள், மூவேந்தர்கள் முதலியவர்களுடைய ஆட்சிக் காலத்திலும் நீங்கள் மிகக் கேவலமாகவே உயிர் வாழ்ந்ததாகத்தான் காணக்கிடக்கிறது. இந்து அரசர்கள் அல்லாத முகமதியர் அரசர்கள், கிறிஸ்துவர் அரசர்கள் ஆகியவர்கள் ஆட்சிக்காலமே - உங்களை ஓரளவுக்காவது மனிதர்களாக நடத்தப்பட்டதாகச் சரித்திரமும் பிரத்தியட்ச அனுபவமும் காணப்படுகின்றன.

மற்ற காரியங்களில் பிரிட்டிஷ் அரசாங்கம் எப்படி நடந்து கொண்டு வந்தது என்றாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களாகிய உங்களைப் பொறுத்தமட்டில் யோக்கியமாகவும் கூடிய அளவுக்கு நீதியாகவும் ஆட்சி புரிந்திருக்கிறது என்று தைரியமாய்ச் சொல்லுவேன். இன்று தாலுக்கா போர்டு, ஜில்லா போர்டு, பஞ்சாயத்து சபை, சட்டசபை, இந்திய சட்டசபை ஆகியவைகளில் உங்களுக்கு ஸ்தானம் அளித்து பெரிய சாஸ்திரிகள், கனபாடிகள், சங்கராச்சாரிய சுவாமிகள், ராஜாக்கள், ஜமீன்தார்கள் என்பவர்களுக்குச் சமமாய் நடத்துகிறார்கள். ஆனால், ராமராஜ்யத்தில் இந்தச் சபைகளுக்கு கக்கூஸ் வாரவோ, பங்கா போடவோகூட உங்களை அனுமதிக்க மாட்டார்கள்.

இப்படி பிரிட்டிஷ் அரசாங்கம் உங்களைப் பொறுத்தவரை, எவ்வளவோ நன்மை செய்து வந்திருப்பதோடு உங்களுக்கு ஒரு மந்திரி ஸ்தானமும் கிடைக்கும்படியான அளவுக்குச் சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி சீர்திருத்தம் வழங்கி இருக்கிறது. நான் ஏதோ ராஜவிஸ்வாச உபன்னியாசம் செய்வதாய் ‘தேசாபிமான வீரர்'களுக்குத் தோன்றலாம். பிரிட்டிஷ் அரசாங்கம் மாத்திரமே அல்லாமல், உலகில் உள்ள அரசாங்கங்கள் எல்லாமே ஒழிந்துபோக வேண்டும் என்கின்ற ஆசையுள்ளவன் நான். ராஜாக்கள் என்பவர்களே இன்றைய உலகுக்கு அவசியமில்லாதவர்கள் என்றும், பொதுஜனங்களுடைய சுயமரியாதைக்குக் கேடானவர்கள் என்றும் கருதியும் சொல்லியும் எழுதியும் வருகின்றவன் நான்.

இன்று உங்கள் மக்களுக்கு இருக்கும் தரித்திரமும் கொடுமையும் சேர்ந்து, இந்த ராமராஜ்ஜியத்தை ஆதரிக்கச் செய்கின்றது. ஏன், உங்களைவிட பெரிய ஜாதி என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனரல்லாத மேல் ஜாதி இந்துக்கள் என்பவர்களுடைய வயிற்றுப் பசியான தங்களுடைய சூத்திரப்பட்டம், இந்த ராமராஜ்ஜியத்தில் ஒழியாது என்று தெரிந்திருந்தும் - எத்தனை பேர் இன்று அதை ஆதரிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, உங்களில் சிலர் ஆதரிப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை.

இவ்வளவு தூரம் நான் இவற்றை விவரித்துச் சொல்லக் காரணம், இன்றுள்ள உங்கள் குறைகள், இழிவுகள் நீங்கி மனிதத்தன்மை பெறுவதற்கு நீங்கள் பிரிட்டிஷ் ஆட்சியைத்தான் நம்ப வேண்டுமென்றும், அது உள்ள காலத்திலேயே உங்கள் குறைகளை, இழிவுகளை நிவர்த்தி செய்து கொள்ள முயல வேண்டும் என்றும், அரசாங்கத்துக்கு விரோதமாகப் பேசவோ, மக்களுக்குள் விரோத உணர்ச்சி ஏற்படச் செய்கின்றதோ, அரசாங்கத்தோடு போர் புரிவதாகவோ சொல்லிக் கொள்ளுகின்ற கட்சியிலோ, கூட்டத்திலோ நீங்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றும் சொல்லுவதற்காகவே இவற்றைச் சொல்லுகிறேன்.

நீங்கள் எல்லோரும் அப்படிச் செய்யவில்லையா என்றும் மற்றும் எத்தனையோ பேர் அந்தப்படி அரசாங்கத்துக்கு விரோதமாய் நடந்து கொண்டு வாழவில்லையா என்றும் கேட்பீர்கள். அவர்கள் நிலை வேறு; உங்கள் நிலை வேறு; அவர்களில் சிலர் இன்று மதத்தில் கீழாக மதிக்கப்பட்டாலும் பழக்க வழக்கத்தில் பலர் சமமாக மதிக்கப்படுகிறார்கள். கல்வியில் சிறிது முன்னணிக்கு வந்து விட்டார்கள். பார்ப்பனர்கள் சங்கதியோ கேட்க வேண்டியதில்லை. பாடுபடாமல் வாழ்க்கை நடத்தும் யோக்கியதையை அவர்கள் அடைந்து விட்டார்கள்.

இது மாத்திரமல்லாமல், அவர்கள் மதத்துக்கும் பழக்க வழக்கத்துக்கும் விரோதமாக அரசாங்கம் சில சீர்திருத்தங்களைச் செய்ய முற்படுவதாலும், அதனால் பார்ப்பன ஆதிக்கத்துக்குப் பங்கம் வரும்போல் இருப்பதாலும், அச்சீர்திருத்தங்களைச் செய்யவொட்டாமலும், செய்துவிட்டால் - அது அமலில் நடத்தப்படாமலும் இருப்பதற்கு ஆக வேண்டியாவது, அரசாங்கத்தை வழிமறிப்பதற்காக - அரசாங்கத்துக்குத் தொல்லை விளைவிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஆதலால், அவர்களுடன் நீங்கள் சேரக் கூடாது என்று சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன்.

((29.9.1935 அன்று ராசிபுரம் தாழ்த்தப்பட்ட மக்கள் மாநாட்டில் ஆற்றிய உரை))

http://www.keetru.com/rebel/periyar/83.php

நான் சொல்வதற்கு முன்பு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வது என்ன வென்றால், நான் சொல்வதை நம்பாதீர்கள்; அதன் படி நடக்க வேண்டுமென்று உடனே இறங்கிவிடாதீர்கள்; என்ன செய்ய வேண்டுமென்றால் சொல்லுவதைச் சிந்திக்க வேண்டும். சரியா, தப்பா என்று ஆராய வேண்டும். உங்களுக்கு எது சரி என்று பட்டதோ அதை ஒத்துக் கொள்ள வேண்டும் மற்றும் எந்தக் காரியம் செய்ய வேண்டும் என்று தோன்று கிறதோ அதைச் செய்ய வேண்டும். நாங்கள் சொன்னோம். நான் சொன்னேன் என்பதற்காக ஒன்றையும், எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

ஏன் சிந்திக்க வேண்டும்?

ஏன் என்பதை வலியுறுத்தி முதலில் சொல்லுகிறேன். நாங்கள் பகுத்தறிவுப் பிரசாரம் செய்து மக்களையெல்லாம் பகுத்தறிவுடையவர்களாக ஆக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள். நாங்கள் சொல்லுவதைக் கேளுங்கள் என்றால் என்ன அர்த்தம்? நாங்கள் ஒன்றும் மூட நம்பிக்கைப் பிரசாரகர்கள் அல்ல; கடவுளைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ, சாஸ்திரம் சம்பிராதாயங்களைப் பற்றியோ, கடவுளுடைய பிள்ளை, அவதாரம், குமாரர், தூதர் என்று சொல்லுகிறவர்கள் சொல்லுவதைப் போல் நாங்கள் ஒன்றும் சொல்லுவது இல்லை. நாங்கள் சொல்லுகிறோம்.

எங்கள் புத்திக்கு எட்டியதைச் சொல்லுகிறோம். எங்களைப் போலவே உங்களுக்கும் புத்தி இருக்கிறது. உங்கள் புத்திக்கு அது படுகிறதா? சரி என்று தோன்றுகிறதா? என்று சிந்தியுங்கள். இந்த உணர்ச்சி வந்து இருந்தால் மக்களுக்கு வேறு ஒன்றுமே தேவையில்லை. உணர்ந்திருப்பார்கள்.

சொந்தப் புத்தி!

இதே மாதிரி உணர்ச்சி மக்களுக்கு ஏற்பட இடமில்லாமலும் ஏற்பட விடாமலும் நாங்கள் சொல்லுவதைக் கேளுங்கள். எனக்குக் கடவுள் சொன்னார்; நான் கடவுள் அவதாரம்; நான் கடவுளாக இருக்க வேண்டும்’’ என்று இப்படி எல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றி அவர்கள் அவரவர்களின் கருத்தைப் புகுத்திய தன் பயனால் உங்களுக்குச் சொந்தப் புத்தியைப் பயன்படுத்த வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இன்றைக்கல்ல நேற்றைக்கல்ல; 2000, 3000 வருஷங்களாக இப்படி, மனிதன் என்பவன் அருமையான அறிவைப் படைத்தவன்; அப்படிப்பட்டவன் இன்றைக்குத்தான் பகுத் தறிவைப் பயன்படுத்து என்று கேட்டுக் கொள்ள வேண்டியவனாக ஆகி இருக்கிறான். பகுத்தறிவாளர் கழகம் இன்றைக்கு ஆரம்பமாகிறது. பகுத்தறிவாளர் கழகம் ஆரம்பமாகிறது என்று சொன்னால் மனிதர்களுடைய கழகம் இன்று ஆரம்பமாகிறது என்று அர்த்தம். மனிதர்கள் என்பவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என் பதைப் பற்றி இன்றைக்குப் பேசப்படுகிறது.

மனிதனும் மிருகமும்!

பகுத்தறிவு சிந்தனையே இல்லாதவர்களுக்கு மிருகம் என்றுதான் பெயர். ஏன்? அறிவிலே பகுத்தறிவு இல்லாத ஜீவன் மிருகம், பகுத்தறிவுடையவன் மனிதன். அறிவிலே பிரிவுபட்டிருக்கிறபடி ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு, நாலறிவு, அய்ந்தறிவு, ஆறறிவு என்பது புல்பூண்டுகளையெல்லாம் ஓரறிவு என்று சொல்லலாம். அதற்கு ஒன்றும் தெரியாது. உண்ண வேண்டியது தான். பூச்சிப் புழுக்கள் அப்புறம் மூன்றறிவு என்பார்கள். குணம் கொஞ்சம் கொஞ்சம் மாறும். சிலதுக்கு நாலு அறிவு இருக்கும். சிலதுக்கு அஞ்சு அறிவு இருக்கும்.

ஆனால் சிந்தித்துச் செயல்படுவது என்பது ஆறாவது அறிவு. அது மனிதனுக்குத்தான் அதிசயமான காரியங்கள் செய்யக்கூடிய ஜீவன்கள் உண்டு. நம்மால் செய்ய முடியாத காரியங்கள் எல்லாம் சில ஜீவன்கள் செய்யும். ஒரு எறும்பை எடுத்துக் கொண்டால், நமக்குத் தெரியாத வாசனை அதற்குத் தெரியும். ஒரு குருவியை எடுத்துக் கொண்டால், நம்மால் பறக்க முடியாமல் இருக்கும்போது அது பறக்கும். ஒரு குரங்கை எடுத்துக்கொண்டால் நாம் தாவமுடியாத அளவுக்குத் தாவும். யானையை அடிக்கும் சிங்கம். இப்படி இந்த மாதிரி மனிதனுக்கு மேற்பட்ட, மனிதனால் முடியாத சில விஷயங்கள் மற்ற அறிவுள்ளவைகளுக்கு உண்டு. சிந்தித்து, வளர்ச்சிக்கேற்ற வண்ணம் தன்னுடைய வாழ்வு நிறைவு பெறும் வண்ணம் பயன்படுத்துகிற அளவு மனித னுக்குத்தான் உண்டு. வேறு யாருக்குமே இல்லை.

மதியை இழந்த மனிதன்!

அப்படிப்பட்ட மனிதன் மதியை இழந்துவிட்டான். அதைப் பயன்படுத்தாமல் போய்விட்டான். பல காலங்களில், அதனால் மனிதன் வளர்ச்சியடையவில்லை. ஆனால் மனிதன் நம் நாட்டைப் பொறுத்தவரையிலும் மான உணர்ச்சியைப்பற்றிக்கூட லட்சியம் பண்ண முடியவில்லை. சாதாரணமாக நாம் பகுத்தறிவுடையவர்கள். உலகத்தை எல்லாம் கூட தெரிந்திருக்கிறோம். பார்க்கிறோம். செய்தி எல்லாம் வருகிறது. நாம் மாறவில்லை.

நாம் சூத்திரர்களா?

நமக்குப் பெயர் சூத்திரன், நாம் என்றால் - சூத்திரன் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன்; எப்படி என்றால், சாத்திரப்படி! யாரோ சொன்னாங்கன்னா என்றால், கடவுள் சொன்னார். இதை எல்லாம் நம்புவதன் மூலம் மானம் ஈனம் எல்லாம் இழந்துவிட்டு நம்முடைய வளர்ச்சியைப் பாழாக்கிவிட்டோம்; வயிற்றுப் பிழைப்பைத்தான் பிரமாதமாக எண்ணி விட்டோம். அது மிருகங்களுக்குத் தான் உண்டு. நாம் அதைத் தான் பின்பற்றி வந்திருக்கிறோம். இது வரைக்கும் முன்னால் பேசிய நண்பர் கூட சொன்னார்.

சிந்தனையும் பகுத்தறிவும்!

இந்த நாட்டில் எவனுமே பகுத்தறிவைப் பற்றிப் பேசவே இல்லை. இன்றைய தினம் வரைக்கும். யாராவது பேசினார்களென்றால் 3000, 2000 வருடங்களுக்கு முன்னே அதுவும் அந்தக் காலத்துப் பகுத்தறிவுதான். அதுவும் இன்றைக்குச் சரியானபடி பின்பற்றுவது இல்லை. வேறு யாரும் இவைகளைப்பற்றிச் சிந்திக்கவும் இல்லை. ஏன் அப்படி ஆகிவிட்டது என்றால் அவைகள் பகுத்தறிவுக்கு விரோதமான கொள்கைகள், செயல்கள், கடவுள்! அவர் உண்டாக்கினார்; அவர்தான் சக்தி உடையவர்; அவர் இப்படிச் சொன்னார்; அப்படிப் பண்ணினார்! அவருடைய மகன் இப்படிச் சொன்னார்; அவருடைய தூதன் இப்படிச் சொன்னார்.

அவருடைய அவதாரம் அப்படிச் சொன்னது! இந்த மாதிரி புத்திகளைக் கொண்டு வந்து மக்களுக்கிடையே புகுத்தியதால் இவனுடைய அறிவுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. அவர்களே எல்லாம் சொல்லிவிட்டார். அந்தப்படியே நடந்தால் போதும்; அதனாலே மனி தன் வளர்வதற்கு வாய்ப்பில்லை. எப்படி வாய்ப்பில்லை என்று கேட்பீர்கள். பகுத் றிவைப் பயன்படுத்த முன் வந்தவர்கள் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக் றார்கள்! மற்ற நாட்டார் இன்றைய தினம் ஆகாயத்தில் 2 லட்சத்து 30,000 மைல் தாண்டி சந்திர மண்டலம் என்ற ஒரு உலகத்திலே உலாவிவிட்டு வருகிறார்கள். மணிக்கு 5000 மைல் 6000 மைல் பறக்கிறார்கள். இதில் எதைப் பண்றான் நம்மவன்?

ரிஷிகள், முல்லாக்கள், பாதிரிகள்

நமக்கு நண்பர்கள், கட்டுப்பட்டு நடக்கவேண்டியவர்கள், அறிவைச் சொல்பவர்கள் என்று ஆயிரக்கணக்கான தலைவர்கள், ஆயிரக்கணக்கான ரிஷிகள்; ஆயிரக்கணக்கான முல்லாக்கள்; ஆயிரக்கணக்கான பாதிரிகள்; ஆயிரக்கணக்கான பண்டார சன்னிதிகள் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர மதங்கள் இருந்தும் நாம் அடைந்த பயன் என்ன? ஒன்றும் முடியவில்லையே! காரணம் மனுஷன் தோன்றி எத்தனை வருஷங்கள் இருக்கும்! நம்மாலே கணக்கு எடுக்க முடியவில்லை. எவனோ ஆராய்ச்சிக்காரன் கணக்கெடுக்கிறான்; ஒருத் ன் லட்சம் வருஷங்கள் என்கிறான். ஒருத்தன் 18 லட்சம் வருஷங்கள் என்கிறான்.

அதற்கு முன்னே “உலகம் என்றைக்குத் தோன்றியதோ அன்றே மனிதன் தோன்றி னான்’’ என்கிறான். கடவுள் உண்டாக்கினான் என்கி றான். அன்று முதல் இன்று வரைக்கும் கண்ட பலன் என்ன? சாதாரணமாக ஒரு 100, 105 வருஷத்திலே உலகம் எவ்வளவு மாறியிருக்கிறது. நம் நாட்டிலேயே எவ்வளவு வளர்ச்சிக்கான சாதனங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 100, 105 வருஷத்திலேயே இவ்வளவு வளர்ச்சியிருந்தால் மனுஷன் தோன்றிய லட்சக்கணக்கான வருஷத்திலே அல்லது 3000, 4000 வருஷத்திலே எவ்வளவு வளர்ந்திருக்க வேண்டும்? ஏன் வளரவில்லை? நம்ம நாட்டில் என்ன கடவுள் இல்லை? பல்லாயிரக்கணக்கான கடவுள்கள் இருக்கின்றன. மகான்கள் இல்லையா?

மூடநம்பிக்கை!

ஏராளமான மகான்கள், நினைச்சவனெல்லாம் சாமியார்; நினைச்சவன் எல்லாம் மகாத்மா; நினைச்சவனெல்லாம் அந்த பக்தன்; இந்தப் பக்தன். இத்தனை பேர் இருந்தும் ஒரு சாதனை கூட நம்மால் ஏற்பட்டது என்று சொல்ல முடியவில்லையே! அவதாரங்களும், அதிசயங்களும் நாம் இன்றைக்கு அனுபவிக்கின்ற அதிசயமான பொருளெல்லாம் மற்றவன் செய்து நாம் அனுபவிக்கிறோம். உங்க கடவுள் மகனும் பொறந்தான்; கடவுள் தூதன் பொறந்தான்; கடவுள் அவதாரங்கள் ஒரு வண்டி பொறந்தார்கள்; தினமும் மாட்டு ரிஷி களென்றும், முனிவர்கள் என்றும் நினைச்சா சாபம் கொடுக்கிறவனும் நினைச்சா மலையைத் தூக்கி மலை மேல் போடறவனும், எவ்வளவு அற்புதமான மனிதர்களெல்லாம் தோன்றினார்கள்! அப்பொழுதும் ஒரு அற்புதம் கூட இன்னும் நடக்கவில்லையே.

அறிவின் மேன்மை!

நெருப்புக் குச்சிகூட வெள்ளைக்காரன் வாரதிருந்தால் நமக்கு வந்திருக்குமா? இருட்டில்தான் உட்கார்ந்திருப்போம். சிக்கிமுக்கிக் கல்லில்தானே நம்ம வாழ்வு இருக்கும். பூமியில் எருமையில் ஏறி சவாரி செய்து வந்தவனுக்கு ஆகாசக் கப்பல் வந்தாச்சு. இதெல்லாம் எப்படி வந்தது? தொழுதா வருமா? ஜபம் பண்ணினா வருமா? இல்லை. யாகம் பண்ணினா வருமா? இல்லை, கடவுளே என்று சொன்னா வருமா? ஆகவே மனிதன் மனிதனாக இருந்து அதனாலே அடைய வேண்டிய காரியங்களைச் செய்து, கொள்ள முடியாமல், கடவுள், மதம், சா° திரம், வேதம், தர்மம், பெரிய வர்கள், மகான்கள், இந்த மாதிரியான முட்டாள்தனமான பேச்சுகளுக்கெல்லாம் நாம் காது கொடுத்து இன்றைய தினம் நாம் மிருகமாக இருக்கிறோம் எப்படீன்னு கேட்பீங்க!

மூட நம்பிக்கையும், முட்டுக்கட்டையும்!

எனக்கு முன்னால் பேசிய தோழர்கள் எல்லாம் சொன்னார்கள் - “நமக்கு எங்கே அய்யா அறிவு இருக்கிறது?’’ எதை எடுத்தாலும் சாஸ்திரம், சம்பிரதாயம், முன்னோர்கள் சொன்னது, வேதத்தில் சொன்னது என்று அது எவன் சொன்னானோ என்பதைப்பற்றியெல்லாம் கவலையே இல்லை! நண்பர்கள் சொன்னார்கள், பூனை குறுக்கே போனால் உட்கார்ந்துக்குவான், அப்புறம் போகலாமென்று ஏன்டான்னா, சகுனம் சரியா இல்லை என்பான். காக்கா கத்துதுன்னா வெளியே போகக்கூடாதுன்னு உட்கார்ந்துக்குவான். குளிச்சிப் போட்டு வெளியே போகலாம் என்பான். முன்னெச்சரிக்கையாக ஒருத்தனையும் தொடமாட்டான். கட்டின வேட்டியோட குளிப்பான்.

மனுஷன்தான், மாடல்ல இதெல்லாம் செய்கிறவன்? என்ன இருக்கிறது! மற்றும் இந்தக் கிழமையாகாது. அந்தக் கிழமையாகாது; இந்த நேரம் தப்பு; இது நல்ல நேரம் என்பதெல்லாம் எதுல சேர்ந்தது? அறிவைப் பற்றிப் பேசறதுக்கே ஆள் இல்லை. அறிவின் பயனை, அதன் பலனைப்பற்றி எடுத்துச் சொல்ல துணிவு எவனுக்கும் வரவில்லை. இது பெரிய காட்டுமிராண்டி நாடு, நாம் அப்படியே இருக்கிறோம். இதுதான் சொல்ல முடியும்.

அன்னியராட்சி!

இப்பத்தான் நல்ல வாய்ப்பா நம்ம நாட்டுக்கு அன்னியன் வந்தான். சில மாறுதலைப் பண்ணினான். அவனை நம்ம மதத்துக்கு விரோதி என்று விரட்டி அடிச்சிட்டாங்க. அப்புறம் வெள்ளைக்காரன் வந்தான்; அவன் பல மாறுதல்களை உண்டு பண்ணினான். அவனையும், மதத்திலே பிரவேசித்தான். சாத்திரத்திலே பிரவேசித்தான். அதுலே அப்படி இப்படின்னு அவனை ரகளை பண்ணினாங்க; அதோட நின்னு போச்சே தவிர அதுக்கு மேலே ஏறலே; நம்ம நாட்டில் இதுவரைக்கும் அவன் இல்லாதிருந்தால் ரொம்பப் பின்னேறி இருப்போம்.

அதிலே ஒன்றும் ஆட்சேபனை இல்லை. அவனாலே அமைப்பு கெட்டுப் போகுதுன்னு மக்களை ஏமாற்றிப் பிழைக்கிற அயோக்கியர்கள். அவன் இருந்தால் நாம், வாழ முடியாதென்று அவனுக்கு மோசமெல்லாம் பண்ணினாங்க. அப்புறம் எவனுமே தோணல்ல! துணிஞ்சு நாங்கதான் தோன்றினோம். துணிஞ்சு தோன்றினோம். இருக்கிற கொடுமையைப் பார்த்து அரசியலின் பெயராலே மதத்தின் பெயராலே மக்களுக்குச் செய்யும் கொடுமையைப்பார்த்து நம்ம மக்களுக்குப் புத்தி இல்லாமல் அவர்கள் மடையர்களாக இருக்கிறதைப் பார்த்து, இதற்கு ஒரு பரிகாரம் பண்ண வேண்டும். இந்த முயற்சியைப் பண்றவன் தான் மனுஷன். மத்த முயற்சி பண்றவனெல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காரன் அப்படீன்னு முடிவு பண்ணி நாங்கள்தான் ஆரம்பிச்சோம்.

சுயமரியாதை இயக்கம்!

என்ன ஆரம்பிச்சோம்? சுயமரியாதை இயக்கம் என்றுதான். மனுஷனுக்கு மானம் என்கிற உணர்ச்சி ஊட்ட வேண்டுமென்று! எத்தனையோ பேர் எல்லாம் எங்களோட சண்டை போட்டாங்க; சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தபோது ஒரு பெரிய மந்திரியே என்னிடம் வந்து, “என்னையா சுயமரியாதைன்னா நமக்கெல்லாம் மானமில்லை, மரியாதை இல்லை என்றா அர்த்தம்? இந்தப் பேரே வெட்கக்கேடா இருக்குது! எவனாவது கேட்டா கேலி செய்யமாட்டானா?’’ அப்படி என்று என்னை வந்து கேட்டார். அப்புறம் திருப்பிச் சொன்னேன்; “வருத்தமாக இருக்குது எங்களுக்கு, தயவு செய்து சொல்லுங்க. நீங்க யாரு? எனக்குத் தெரியணும்’’ “என்னத்துக்காகக் கேட்கிறீர்’’ என்றார். கேட்கிறேன்,

சமுதாயத்திலே நீங்க யாரு? எத்தனாவது? உங்க அந்தஸ்து என்ன? உங்க தொழில் என்ன? ‘ரெட்டியாருன்’’னாரு, “மந்திரியா இருந்தா என்ன? நீங்க யாரு? ரெட்டியாருங்கறது. சும்மா நாம் வெச்ச பேரு. நாம் ஏற்படுத்திக்கிட்ட பேரு. சும்மா கவுண்டன், செட்டியார் இந்த மாதிரியெல்லாம். பொதுவாக சாஸ்திரப்படி, சம்பிரதாயப்படி, மதப்படி, சமயத்துப்படி, நீங்க யாரு? எத்தனையாவது ஜாதி?’’

அவர் ஒன்றும் பேச முடியவில்லை. சிரிச்சிட்டாரு. “சிரிக்காதீங்க! நீங்க எத்தனாவது ஜாதி?’’ 4-ஆவது ஜாதிதானே; அது சாத்திரப்படி நீண்ட நாளாக இருக்குது.’’ நாமெல்லாம் அந்த நீண்ட நாளாக இருக்கறதைத்தான் ஒழிக்கணும்னுதான், உங்களுக்கு மானம் வரவேண்டுமென்று தான் இதை நாங்க ஆரம்பித்தோம்.

மேல்ஜாதியும், கீழ்ச் ஜாதியும்!

“அப்படீன்னா உங்க ஜாதி என்ன?’’ “சூத்திரன்’’, சூத்திரன்னா என்ன? “பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன்.’’ எத்தனாவது ஜாதி, 4-ஆவது ஜாதி உங்களுடையது! நீங்க பி.ஏ., பி.எல்., படிச்சீங்க. நீங்க மூன்று வருஷம் மந்திரியாப் பார்த்துட்டீங்க! இப்ப மறுபடியும் மந்திரியா இருக்கீங்க! நீங்க மந்திரிப் பதவியில் இருந்தும் இப்ப சூத்திரன், தேவடியா மகன்! ஆனா, உங்ககிட்டே பிச்சை எடுக்கிறவன், உங்களுக்கு வேணும்னாலும் கூட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கிறவன், அவன் தன்னை மேல் ஜாதிங்கறான். நீங்களும் அவனை மேல் ஜாதின்னு ஒத்துக்கறீங்க! நீங்க அவன் காலில் விழுகறீங்க! அவன் காலைக் கழுவித் தண்ணீரைக் குடிக்கிறீங்க?’’ இதற்குப் பதில் இதைத்தான் சொன்னார்.

அதனால்தான் இவ்வளவு கடுமையான முயற்சி நாம் செய்யவேண்டி இருக்கிறது. இன்று ஏற்பட்ட புண்ணா இருந்தா ஒரு கட்டுப்போட்டால் போதும், வெகு நாளா ஏற்பட்ட புண்ணு! நாத்தமும் எடுத்து புழுத்தும் போயிருக்கிறது! அந்தப் புண்ணை அறுத்துத்தானே ஆகணும். அதனால்தான் ரொம்ப நாளாச்சுங்கறதுனால இப்ப அறுக்க ஆரம்பிச்சிருக்கோம்’’, அப்படின்னு சொல்லி அந்த மாநாட்டை நடத்தினோம்.

சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள்

அப்ப அதுக்கு என்ன கொள்கை? சுயமரியாதை இயக்கம் - அது என்ன? மனிதனுடைய வாழ்வு இழிவாப் போனது எந்தக் காரணத்தினால், கடவுளால் ஏற்பட் டது. எந்தக் கடவுளால்? அந்தக் கடவுளை ஒழிக்கணும். மதத்தினால் ஏற்பட்டது; அதனால் மதத்தை ஒழி! காங்கிரசினால் ஏற்பட்டது; அதனால் காங்கிரசை ஒழி! காந்தியினாலே; காந்தியை ஒழி! பார்ப்பானாலே பார்ப்பானை ஒழி!

இந்த அய்ந்தையும் ஒழிக்கிறதுதான் சுயமரியாதைச் இயக்கத்தின் கொள்கை. சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை - கடவுள், மதம், காங்கிரசு, காந்தி, பார்ப்பான் இவங்களை ஒழிக்கிறது. இவங்கள்ளாம் சுயமரியாதை இயக்கத்துக்குக் கேடான கொள்கைப் பிரச்சாரம் பண்ணி மக்களுக்குள்ளே புகுத்தி, மக்களுடைய ரத்தத்திலே புகுத்தி வச்சுட்டாங்க! ரத்தத்தோட கலக்கி வச்சுட்டாங்க!

அதை ஒழிக்கணும்னா இந்த அய்ந்தையும் ஒழிச்சாலொழிய முடியாது. இதிலொன்றறும் அரசியலைப் பத்தி பேசணும்னு அல்ல. அரசியலே இங்கே வரக் கூடாதுதான். ஆனால், அது இந்தக் காரியத்திற்குத் தேவைங்கறதுனாலே அதைப்பற்றி நான் எடுத்துச் சொல்கிறேன். காங்கிரசினுடைய கொள்கை காந்தியைக் காப்பாத்ணும், மதத் தைக் காப்பாத்தணும், ஜாதியைக் காப்பாத்தணும், அந்தஸ்தைக் காப்பாத்தணும், இன்றைக்கு அதனுடைய கொள்கை அதுதான். அதுக்கு முந்திப் பிடிச்சுவச்சாங்க காந்தியை!

அந்த ஆளு ஒரு களிமண் மூளைக்காரன்! அவன் என்னமோ சாமி, பூதம், பக்தி, அது, இது என்று பேசினதுனாலே பிடிச்சுவச்சுட்டாங்க. அவனை மகாத்மான்’னு! அவனும் பயித்தியக்காரனுக்குக்கள் ஊத்துனாப்போல என்னேரம் பார்த்தாலும் கடவுள், கடவுள்’’ என்று, “இராமன், சா°திரம், வர்ணாசிரமம், இந்துமதம்’’ அப்படின்னு பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சான்.

அவன் பிரச்சாரத்துக்கு நல்ல பலம் இருந்தது. பார்ப்பான்கிட்டதான் எல்லாப் பத்திரிகையும் நம்மாள்கிட்டே ஒன்றும் இல்லை. அவங்க பேரைச் சொன்னாலே ஜனங்களெல்லாம் கும்பிடற அளவுக்குப் பிரச்சாரமாயிருக்கு! அதனாலே அவனை ஒழிக்கணும்னு ஆரம்பிச்சோம். கடவுள், மதம் ஒழிக்கணும், வர்ணாசிரமத்தைப் பிரச் சாரம் பண்ணின காந்தியை ஒழிக்கணும். இதை எல்லாம் காப்பாத்தறதுக்காக அடிப் படைச் சட்டம் வச்சுக்கிட்டிருக்கிற ஆட்சி செய்கிற அரசாங்கத்தை ஒழிக்கணும்; இதுக்கெல்லாம் கர்த்தாவாக இருக்கிற பார்ப்பானை ஒழிக்கணும், அதன்படிதான் நடந்து வருகின்றது.

நாளுக்கு நாள். காரணம், அதையே எடுத்துக்காட்றேன். நான் சொல்றேன் கேளுன்னு அல்ல! அந்தப் புத்தகத்திலே இருக்கு. இந்த வேதத்திலே இருக்கு. அந்த சாஸ்திரத்திலே இருக்குன்னு அல்ல, எனக்குத் தோணுது என் அறிவுக்குத் தோணுது. அது மாதிரி உன் அறிவுக்குத் தோன்றினா ஒத்துக்க; இல்லாட்டி வேண்டாம். நான் ஒண்ணும் உங்களைக் கட்டாயப்படுத்துவதாக நினைக்கவேண்டாம்! உங்களை ஏய்க்கறதாக நினைக்கவேண்டாம்! உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்! உங்களுக்கு இவ்வளவு சக்தியுண்டு! உங்களால் இந்தக் காரியம் செய்ய முடியும்! இந்தப் பாவிக் கடவுள், மதம், சா°திரங்களாலோ, மற்ற உபதேசம் செய்யறதாலோ பார்ப்பான்களினாலோ நம்ம சக்தி இந்த மாதிரி அடிமையாச்சு!

இதைத்தான் சொல்றோம். மாத்தியாகணும் என்று; மாறாது இருக்கிற ஆளுக உலகத்திலே நாம் தான்! மற்றவன் எல்லாம் மாறிவிட்டான். நாம்தான் இன்னும் மாறவில்லை.

பகுத்தறிவுக் கழகம்

நம்ம நாட்டுக்கு இப்ப வேண்டியிருக்குத் தீவிரமான கொள்கைகள்! பகுத்தறிவுவைப்பற்றிய கொள்கைகள்! அந்தக் கொள்கைகளைப் பிரச்சாரப்படுத்த முயற்சி பண்றோம். ஆகவேதான் பகுத்தறிவுக் கழகம் வைக்கிறோம். இது இதுக்கு விரோதமோ, அதுக்கு விரோதமோ அப்படியாகுமோ, இப்படியாகுமோ? என்று யாராவது சொல்லக் கூடும்! எதுக்கு விரோதமாக இருந்தாலும் நியாயத்துக்கு விரோதமல்ல!

நாம் பகுத்தறிவுக் கழகம் என்று ஏன் சொல்கிறோம்! உன் அறிவைக் கொண்டு சிந்தனை பண்ணிப்பாரு! அதுதான் பொருத்தம் என்று சொல்கிறோம்! மிருகத்தோடு சேர்ந்த மத்த பசங்க என்ன பண்ணுறாங்க? வர்ணாசிரம தர்ம சபைன்னு வைக்கிறாங்க! சாதியைக் காப்பாத்தற சபையென்றும் வைக்கிறாங்க! சனாதன தர்மசபையென்கிறான். சாதியைக் காப்பாத்த வேண்டும். முன்னோர்கள் சொன்னதைக் காப்பாத்த வேணு மென்கிறான்.

கடவுள் கதை என்கிறானே! ராமன் இப்படிப் பண்ணினான்; கிருஷ்ணன் இப்படிப் பண்ணினான் என்று இதையெல்லாம் சொல்ல அவனுக்கு உரிமை இருக்கிறது! எதைப் பார்த்துச் சொல்றேன்னா ஆதாரத்தைப் பார்த்துச் சொல்றேன். உன் புத்தி என்னடான்னா? புத்தியை உபயோகப்படுத்தக் கூடாது; மதம், கடவுள், சாஸ்திரம் முன்னோர்கள், பெரியோர்கள், மதத் தலைவர்கள் இவர்கள் சொன்ன காரியத்துக்குப் புத்தியை உபயோகப்படுத்தக் கூடாது - படுத்தினா அவர்களுக்கு விரோதம்; மதத்துக்கு விரோதம் என் மனம் புண்ணாகுது என்பானுக.

இவனும் இவன் மதமும் இவன் மதத்தலைவனோ, வெங்காயமோ மனம் புண்ணாகுமோ? நாசமாகப் போகட்டும்! என் கதி என்னாகிறது? நான் எத்தனை நாளைக்குச் சூத்திரனாக இருக்கிறது? நான் எத்தனை நாளைக்கு அறிவை இழந்து, கண்டவன் சொன்னதைக் கேட்டுவிட்டுத் தலை வணங்கி, கும்பிட்டுக்கிட்டு இருக்கிறது? மத்தவன் ஆகாயத்தில் பறக்கிறான்; நாம் இங்கே பார்ப்பான் காலைக் கழுவித் தண்ணியைக் குடிக்கணுமா? அதனாலே உன் புண்ணில் புழுக்கட்டும், எங்கதி எனக்கல்ல; என்னை விடவா உன் மனசு பெரிசு? என் மானத்தைவிடவா உன் மனசு பெரிசு? ஆனதனாலே நம்ம கடமையை நாம் செய்யவேணும். ஆபத்து வரும்; பயப்படாதீங்க. வந்தா என்ன?

நாளைக்குச் சாகிறவன் இன்றைக்கே சாகிறான். கஷ்டம் வரும். இந்த மாதிரி தான் இந்த நாட்டிலேயே மாறுதலே ஏற்படாமல் இருக்கும்படியாகச் செய்ததுக்குக் காரணம் எல்லாம் பலாத்காரம்; படிச்சவன் எல்லாம் அயோக்கியப் பயலாக இருந்தது; காலிப்பசங்கள் எல்லாம் சேர்ந்து மதத்தைக் காப்பாத்தணும்னு பலாத்காரம் பண்ணியது தான் காரணம். இல்லாட்டி, இதெல்லாம் மாறி இருக்குமோ! ஏதாவது ஒண்ணு சொன்னால் கிருத்துவன் வந்தர்றான் சண்டைக்கு. ஏன் என் மதத்தைத் தாக்கு கிறேன்னு? நாசமா போன்னு விட்டுட்டா? இன்னொன்று சொன்னா முஸ்லிம் வந்துடுறான் சண்டைக்கு; ஏன் எங்க மதத்தை இந்த மாதிரி சொல்றேன்னு. இரண்டு பேரும் தொலைஞ்சு, நாசமாகுன்னு விட்டுவிட்டு நம் மதத்தைப்பற்றிப் பேச ஆரம்பிச்சா பார்ப்பான் மட்டும் ரகளை பண்ண மாட்டான்.

அவனோட வைப்பாட்டி மகன்னு நினைச்சுக்கிட்டு, சாம்பலை அடிச்சிக்கிட்டு நாமம் போட்டுக்கிட்டு “சிவசிவ ராமா ராமா’’ னுட்டு உளறுகிறானே. அந்தப் பயல்தான் நம்ம கிட்டே சண்டைக்கு வருவான். இப்பக்கூட கேசைப் பத்தி ஒண்ணும் சொல்லலே நடப்புப்பத்தி சொல்றேன். சேலத்திலே இராமனைச் செருப்பாலே அடிச்சுட்டேன்னு பார்ப்பான் எவனும் பிராது போடல்ல. நம்மவன்தான் பிராது போட்டிருக்கிறான். “அவன் இராமனைச் செருப்பாலே அடிச்சான்! அந்த மாதிரி பண்ணுனா என் மனசு புண்ணாகுது!’’ அப்படிப் போட்டு இருக்கிறான்.

இப்ப சம்மன் வந்திருக்கிறது. பேப்பரிலே பார்த்திருக்கலாம். பெலமா அறுத்தாதானே அது அறும்; அது சொத்தை வச்சிட்டுதே, புழுத்துகிட்டே போகுதே; அதனாலேதான் அடியில் இருந்து ஆரம்பிக்கிறான். அந்த மாதிரி சொன்னால் ஒழிய மாறாது! ஆகவேதான் இந்த இயக்கம் ஆரம்பித்ததற்குக் காரணமும் இன்னும் சில தன்மைகளும், கொள்கைகளும் இதுதான். மதத்தை ஒத்துக்கிட்டா நான் மேல் சாதி, கீழ்ச் சாதின்னு ஏத்துக்கத்தானே வேணும்!

நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்! அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா, கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆக ணும்! சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்! யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா? கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்! கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ!

 

http://www.keetru.com/anaruna/nov07/periyar.php

தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை அதாவது விளக்குகளை வரிசையாக வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயரில் பண்டிகை நாட்களில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை தினத்தை, நரக சதுர்த்தசி என்றும் சொல்வதுண்டு. இதற்குக் காரணம், நரகாசுரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்டநாள் என்பதாலும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாசமானது என்றாலும் ஆரியர்களின் இழிநிலைக்கும், தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்காக அதைவும் ஆரியப் புராணப்படியே சற்றுச் சுருக்கமாக விளக்குவோம்.

இரண்யாட்சன் என்ற இராட்சதன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு சமுத்ச்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம். மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத்திரத்திலிருந்து வெளியாக்கி, பூமியைப் பிடுங்குவதற்காகப் பன்றி உருவமெடுத்துப் போய் இராட்சதனைப் பிடித்துப் பூமியைப் பிடுங்கி விரித்து விட்டுவிட்டாராம். அந்தச் சமயத்தில் அந்தப் பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பிக் கலந்தாளாம்.

அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக்குத்தான் நரகாசுரன் என்று பெயராம். இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம். மற்றும் அவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணு இடத்தில் முறையிட்டார்களாம்.

விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் அவனைக் கொன்றாராம். நரகாசுரன், தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டுக் கொண்டானாம். அதற்காக விஷ்ணு அந்த நாளை உலகம் கொண்டாடும் படி செய்தாராம். இது தான் தீபாவளியாம்!

தோழர்களே, ஆரியரின் கதை சோடிக்கும் சின்னப் புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில் பூமியை இராட்சதன் பாயாகச் சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான். சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்துகொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதன் மேல் இருந்திருக்கும். கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகாசுரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா? அப்படித்தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவஉரு எடுக்காமல், மலம் சாப்பிடும் ஜீவஉரு எடுப்பானேன்?

அந்த அழகைப் பார்த்துப் பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டாள் என்றால் பூமிதேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது? நம் பாரதத் தாயின் கற்புக்கும் காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லுவது. அவளுடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்களாக இருந்திருக்க வேண்டும். பூமிதேவியும், சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரததேவியும், அரபிக்கடலும், வங்காளக்குடாக் கடலுந்தானா இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இவற்றையெல்லாந் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள், தமிழர்களைத் தாசிமக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்னென்னவோ சொல்வதில் உண்மை இருக்கிறது என்று தானே அர்த்தமாகும்? அப்படித்தானே அன்னிய மக்கள் நினைப்பார்கள்?

ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டிருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய்க் கவனித்துப் பார்த்து, பண்டிகை கொண்டாடாமல் இருந்து, மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா?

இந்தி ஆரிய மொழி என்றும், ஆரியப் புராணங்களைத் தமிழர்களுக்குப் படிப்பித்து ஆரியக் கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிகத்தை நிலைநாட்டவே இந்தியை ஆரியர்கள் கட்டாயமாய்ப் புகுத்துகிறார்கள் என்றும் சொல்லிக் கொள்வது உண்மையானால் அதற்காகத் தமிழ்மக்கள் அதிருப்தியும் மனவேதனையும் படுவது உண்மையானால் தமிழ்மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடலாமா?

(குடிஅரசு கட்டுரை: 31.10.1937)

***

அக்கிராசனர் அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!

தீபாவளிப் பண்டிகை என்று கஷ்டமும், நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வந்துபோகின்றது. அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று கேட்கிறேன். தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும். அதாவது விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விஷ்ணு கடவுள் நரகாசுரனைக் கொன்றராம். இதைக் கொண்டாடுவதற்காகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.

சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியுள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள். விஷ்ணுக் கடவுள் பூமியைப் புணரமுடியுமா என்றாவது, பூமியைப் புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள். இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ்வளவு நஷ்டம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாத்தனம், எவ்வளவு பிரயாசை என்பவைகளை நம் மக்கள் நினைப்பதேயில்லை. அப்பண்டிகையைக் கொண்டாட ஒவ்வொருவனும் தேவைக்குமேல் செலவுசெய்து துன்பப்படுகிறான். தன்னிடம் இல்லாவிட்டாலும், கடன் வாங்கியாவது. கடன் என்றால் ஒன்றுக்கு ஒன்றரைப் பங்கு வட்டி ஏற்பட்டுவிடுகின்றது.

பட்டாசு கொளுத்துவது எவ்வளவு துன்பம் என்றும், இதனால் பலவித அபாயங்கள் தோன்றி உபாதைகள் ஏற்பட்டு விடுவதும், துணியில் நெருப்புப் பிடித்து உயிர்போவதாலும், பட்டாசு சுடும்போது திடீரென்று வெடிப்பதால் உடல் கருகி, கண், மூக்கு, கை, கால் ஊனம் வருவதும் அல்லாமல், இந்தப்பண்டிகை கொண்டாடுவதற்கு அறிகுறியாக எவ்வளவு பேர்கள் சாராயம் குடித்து மயங்கித் தெருவில் விழுந்து புரண்டு மானம் கெடுவதும், மேலும் இதற்காக இனாம் என்று எத்தனை பாமரர் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்துப் பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களினால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், எவ்வளவு அறிவு செலவாகின்றது என்றும் எண்ணிப் பாருங்கள். இவைகளை எந்த இந்தியப் பொருளாதார தேசிய நிபுணர்களாவது கவனித்தார்களா என்று கேட்கிறேன்.

(ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் சொற்பொழிவு 'குடிஅரசு' 20.10.1929)
http://www.keetru.com/rebel/periyar/85.php

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE