Language Selection

சமூகவியலாளர்கள்

நமது கட்சி ஓர் அலாதியான தன்மை கொண்டதாகும்; நம் கட்சியைப் போன்ற மற்றொரு கட்சி இந்தியாவிலேயே இல்லை என்று சொல்லலாம்! நம்மைத்தவிர மற்ற எவரும், எந்தக் கட்சியாரும் நம்மை எதிரிகளாகக் கொள்ளத்தக்க நிலையில் இருக்கிறோம்.

உதாரணமாக, நாம் ஒரு கட்சியார்தான் தேர்தலைப் பகிஷ்கரிக்கிறோம்; தேர்தலில் கலந்து கொள்ளாதே என்கிறோம். நம் கட்சியார் தான் சாமிகள், பூதங்கள், கோட்பாடுகள், மதப் பைத்தியங்கள், சாதித் தன்மைகள், சாஸ்திரங்கள், புராணங்கள், கடவுள்களின் திருவிளையாடல்கள், இராமாயணம், கீதைகள் ஆகியவைகளைக் கண்டித்துப் பேசுகிறோம். அனேகத்தை ‘கூடவே கூடாது’ என்று மறுத்தும், இழித்தும் பேசி பிரச்சாரம் செய்து, மாநாடுகள் கூட்டித் தீர்மானிக்கிறோம்.

இதை, இந்த இந்தியாவில் வேறு யார் செய்கிறார்கள்? நல்ல ஓர் அரசியலுக்கும், நல்ல ஓர் அறிவுத் தன்மைக்கும், மக்கள் ஒற்றுமைக்கும், நல்வாழ்வுக்கும் இந்தக் கொள்கைகள் சிறிதாவது அவசியம் என்று எந்த அரசியல், பொருளாதார இயல், சமய - சமுதாய இயல் கட்சியார் கருதுகிறார்கள்? நாம் ஏன் இப்படிக் கருதுகிறோம் என்றால், நாம் பொறுப்பை உணருகிறோம்; நம் மக்களை அவர்கள் விழுந்து கிடக்கும் குழியில் இருந்து மேலேற்ற இந்தக் கொள்கைகள் தாம் படிக்கட்டு - ஏணி என்று கருதுகிறோம். நாம் இந்த இழிநிலையில், அதாவது சாதியில் கீழாய், படிப்பில் தற்குறியாய், செல்வத்தில் தரித்திரர்களாய், தொழிலில் கூலியாய், ஆட்சியில் அடிமையாய் இருப்பதற்கு நம்மிடம் இன்றுள்ள மடமையும், மடமைக்கு ஆதாரமான மதத் தத்துவக் கொள்கை, மததர்மம், சாதி, சாதி வகுப்பு பேதம், கடவுள்கள், கடவுள் கதைகள், கல்வித் தன்மைகள் இவைகள் கொண்ட மக்களின் தேசீயம் முதலியவைகளேயாகும். ஆதலால், அடிப்படையாக - பயனுள்ளதான இந்த ஆக்க வேலை செய்ய முயற்சிக்கிறோம். இந்த நமது முயற்சிக்கு, இதனால் பாதிக்கப்படும் எவரும் எதிரிகளாய்த்தான் இருப்பார்கள். இவர்கள் யாவரும் நமக்கு எதிரிகள் என்றால் - இவர்களது கூட்டுறவால், ஆதரவால், ஒப்பந்தத்தால் அரசு செலுத்தி இவர்களுக்குப் பங்களிக்கும் அரசாங்கமும் நமக்கு எதிரியாய் இருப்பதில் அதிசயமென்ன இருக்க முடியும்?

இப்படி எல்லாம் இருந்தும், நாம் நம் முயற்சியில் மேலும் மேலும் ஊக்கம் ஏற்படத்தக்க நிலையில் இருக்கிறோம். நம் கொள்கைகள், திட்டங்கள் எல்லாம் இன்று மக்கள் சிந்தனைக்கு ஆட்பட்டவைகளாக ஆகி வருகின்றன.

(சென்னையில், 11-10-1945-ல் சொற்பொழிவு, ‘குடிஅரசு’, 27-10-1945)

திராவிட மக்களாகிய நாம் உழைக்க உழைக்க, அன்னியன் உழைப்பின் பயனை அனுபவித்து வருகிறான். இந்த நிலை மாறவேண்டுமானால், நாம் நம்மை, ‘திராவிடர்’ என்றும்; ‘இந்தியா’ ‘இந்தியர்’ ‘இந்து’ ஆகியவற்றிற்குச் சம்பந்தப்பட்டவரல்லர் என்றும் உறுதிசெய்து கொள்ள வேண்டும். இந்து என்ற வார்த்தை இந்த நாட்டின் எப்பகுதிக்கும் உரியதல்ல என்பது, பார்ப்பனர்களாலேயே உண்டாக்கப்பட்ட புராணங்கள், இதிகாசங்கள், கற்பனைகள் ஆகியவற்றிலும் அவ்வார்த்தை காணப்படாததிலிருந்து அறியலாம். நம் மக்களை நிலைத்த அடிமைகளாக இருக்கச் செய்யப்பட்ட சூழ்ச்சியே ‘இந்து’ என்பதாகும்.

இலக்கியம், பஞ்ச காவியங்கள், நீதி நூல்கள் என்பனவெல்லாம் நம்முடையவை என்று நம் பண்டிதர்கள் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், அவற்றில்கூட ‘இந்தியா’ என்பதோ ‘இந்து’ என்பதோ, ‘இந்தியர்’ என்பதோ காணப்படவில்லை. 500 அல்லது 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட சரித்திரங்களிலெல்லாம் நம்மைக் குறித்துத் ‘திராவிடர்’ என்றே எழுதப்பட்டிருக்கிறது. திராவிடர், ஆரியர் என்ற இனங்களே ஆதியில் இந்தியாவில் இருந்தன என்பதாகச் சரித்திர சான்றுகள் கூறுகின்றன. தென் பாகத்தில் திராவிடர்களே பெருங்குடி மக்களாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வளவு தெளிவாக உள்ள இலட்சியத்தை நாம் மறந்துவிட்டோம்; அதுமட்டுமின்றி, எதிரிகளுடையதை நாம் ஏற்றுக் கொண்டோம். அதிலும், அவர்களுக்கு நாம் அடிமை என்பதை ஒப்புக் கொண்டோம். இக்குறைபாடு நீக்கப்படவே நம் மக்களுக்குள்ளே ‘இந்து’ என்னும் உணர்ச்சி மங்கி, திராவிடம் என்னும் உணர்ச்சி வேரூன்ற வேண்டும். இந்து, இந்தியா, இந்தியர் என்பவற்றை ஆரியம், ஆரிய நாடு, ஆரியர் என்றே நாம் கருதி ஒதுக்கவேண்டும்.

‘பார்ப்பனரல்லாதார்’ என்று நம்மை நாமே ஏன் கூறிக்கொள்ள வேண்டும்? நாம் திராவிடர்; நம் எதிரிகள் வேண்டுமானால் ‘திராவிடரல்லாதார்’ என்று சொல்லிக் கொள்ளட்டுமே! சென்னை மாகாணத்தை நாம் திராவிட நாடு என்று கூறி வருகிறோம். திராவிட நாட்டிலே நமக்கு மிகுந்த தொல்லை செய்துவரும் பழம் பண்டிதர்கள் இமயம் வரை நம்முடையதாயிற்றே என்று கூச்சலிடுவார்கள். இமயம் வரை ஆண்டதாகச் சொல்லப்படுவது ஒரு காலத்தில் இருந்திருந்தால் இருந்து போகட்டும்; அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. இப்போது இருப்பதையாவது நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?

தமிழர்களாகிய நாம், ‘திராவிட நாடு திராவிடருக்கே’ ஆக வேண்டுமென்பதில் முனைந்திருப்போம். சில நாட்களில் ஒரிசாக்காரன் தன்னையும் திராவிடன் என்றுணர்ந்து நம்முடன் சேர்வதாக இருந்தால் சேர்ந்து கொள்ளட்டும்; இல்லையேல், மலையாளி தன் இனம் திராவிட இனமல்ல என்பதாக அறிந்து, நம்முடைய கூட்டிலிருந்து விலகிவிட விரும்பினால் ஒதுங்கிப் போகட்டும்’.

- லால்குடியில், 23-5-1944-ல் சொற்பொழிவு, ‘குடிஅரசு’ 3-6-1944
http://www.keetru.com/rebel/periyar/60.php

இந்த நாட்டில் பல காலமாக ‘சமஸ்கிருதம்’ என்கின்ற ஒரு வடமொழியை (ஆரிய மொழியை) ஆரியர் இந்நாட்டில் புகுத்தி, அதற்குத் ‘தேவ பாஷை’ எனப் பெயரிட்டுக் கடவுள்கள் - தேவர்கள், சமயம், சாத்திரம் ஆகியவைகளுக்கு அதில் சொன்னால்தால் புரியும் - பயன்படும் என்று காட்டி, நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நாடு நம்முடைய நாடு; இந்நாட்டில் நாம் தமிழர்கள் 100-க்கு 97 பேர் வாழ்கிறோம். நமது நாட்டு மொழி தமிழ் மொழி. இந்த நிலையில் - நமது மொழிக்கும், நம் கலாச்சாரத்திற்கும், நம் பழக்க வழக்கங்களுக்கும் சம்பந்தமில்லாத - நம் நாட்டு மக்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு 3 பேராக உள்ள - இந்நாட்டிற்குப் பிழைக்க வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்களுடைய தாய்மொழியாக உள்ளதும், எழுத்தே இல்லாததுமான சமஸ்கிருதம் என்னும் மொழிக்கு இன்று இருந்து வரும் செல்வாக்கு, தமிழுக்கு உண்டா? இவ்வாரியர் புகுதலுக்குப் பின் இருந்திருக்கிறதா? இன்றைய இளைஞர்கள், வாலிபர்கள் பலருக்கு ஒரு முப்பது, நாற்பது வருடங்களுக்கு முந்திய நிலைமை எப்படி? தமிழுக்கு அப்பொழுது இருந்த மரியாதை, அந்தஸ்து என்ன? பார்ப்பன ‘மேலோர்’ மொழியாக - சமஸ்கிருதத்திற்கு இருந்த அந்தஸ்து என்ன? என்பது பற்றிய பல விஷயங்கள் தெரியுமா? தெரியாது என்றே நினைக்கின்றேன். சுமார் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு வேளை தெரியக்கூடும்.

முன்பெல்லாம் ஒரு காலேஜில் ஒரு சமஸ்கிருத புரொஃபசர் வாங்கும் சம்பளத்துக்கும், தமிழ்ப் பண்டிதர் (புரோஃபசர்) வாங்கும் சம்பளத்துக்கும் மலை அளவு வித்தியாசம் இருக்கச் செய்தது. அரசாங்கத்தில் சமஸ்கிருதம் படித்தவனுக்கு அவ்வளவு சலுகை! சமஸ்கிருத புரோஃபசருக்கு 350 ரூபாய் சம்பளம்! தமிழ்ப் பண்டிதருக்கு (புரோஃபசருக்கு) 75 ரூபாய்தான் சம்பளம். சமஸ்கிருத ஆசிரியருக்குப் பெயர் ‘புரோஃபசர்’; தமிழ் ஆசிரியருக்குப் பெயர் - ஆசிரியர்.

காலஞ்சென்ற பேராசிரியர் திரு.கா.நமச்சிவாய முதலியார் அவர்கள் பிரசிடென்ஸி காலேஜில் புரோஃபசராக இருந்தபோது வாங்கின சம்பளம் ரூபாய் 81 என்பதாகத்தான் ஞாபகம். அதே நேரத்தில் அங்கு சமஸ்கிருத புரோஃபசராக இருந்த திரு.குப்புசாமி சாஸ்திரி (என்ற ஞாபகம்) என்பவர் வாங்கின சம்பளம் சுமார் ரூ. 300க்கு மேல்! ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு.பனகல் இராஜா அவர்களே இதைக் கண்டு மனம் கொதித்து என்னிடத்தில் நேரில் சொல்லி, ‘நீங்கள் இதைக் கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள்’ என்றும் சொன்னார். அவர் சமஸ்கிருதம் படித்தவர்; புலமை வாய்ந்தவர் என்றபோதிலும் கூட அந்தமாதிரி அந்தஸ்திலும், சம்பளத்திலும் வேறுபடுத்திய கொடுமையைக் கண்டித்தார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன்மூலம் இவ்வேற்றுமையை ஒழித்தார். அன்று நாங்கள் போட்ட கூப்பாடும், ஜஸ்டிஸ் மந்திரி சபையின் உத்தரவும் இல்லாதிருந்தால் இன்றும் தமிழ்ப் பண்டிதர்கள் இதே நிலைமையில்தான் இருக்கக் கூடும்.

பிறகு, திரு. இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் 1937-ல் இந்தியைக் கொண்டு வந்ததன் உள்நோக்கமே சமஸ்கிருதத்துக்குச் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து வருவதைத் தடுத்து அதை உயர்த்தவும், அந்த சமஸ்கிருத எதிர்ப்பு உணர்ச்சியை அழிக்கவுமேயாகும். இதை அவர் வெளிப்படையாகவே பல கூட்டங்களில் பல சொற்பொழிவுகளின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். இதை நாம் இப்பொழுது விட்டால் நமது இனத்திற்கும், தன்மானத்திற்கும், உரிமைக்கும் பேராபத்து என்று கருதித்தான், ஆச்சாரியாரின் கட்டாய இந்தித் திணிப்பைப் பலமாக எதிர்த்துப் போராட்டம் துவக்கி சுமார் 2000 பேர்களைச் சிறைக்கு அனுப்பியதோடு, நானும் மூன்று ஆண்டு கடின காவல் தண்டனை பெற்றேன்.

இன்று தமிழ்நாட்டில் ‘சமஸ்கிருதம்’ என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா? எதற்காவது பயன்படுகிறதா? அதற்கும் நமக்கும் கடுகத்தனையாவது, ஒற்றுமை - பொருத்தம் எவ்வகையிலாவது இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் - தமிழர்கள் வாழ்வில், சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், விஞ்ஞானத்தில் மற்றும், ஏதாவது ஒரு காரியத்திற்கும் இந்த சமஸ்கிருதம் பயன்படுகிறதா? மற்றும், தமிழ் மக்கள் தமிழில் எவ்வளவுதான் மேதாவிகளாய் இருந்தாலும், அவர்களால் சமஸ்கிருதத்தைச் சரியானபடி உச்சரிக்க முடிகிறதா? தமிழர் யாராய் இருந்தாலும் சமஸ்கிருதம் உச்சரிப்பது என்றால் அது சிறிதாவது கஷ்டமானதும் சரிவர உச்சரிக்க முடியாததுமானதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் சீதோஷ்ண நிலைக்குப் பொருந்தாது உச்சரிப்பதனால் சரியானபடி உச்சரிக்க முடிவதில்லை; மனிதனின் சக்தியை அதிகம் பயன்படுத்தி ஆக வேண்டும். குளிர்நாட்டு மொழி, சமஸ்கிருதம்; ஆகவே, அது நமக்குப் பேச்சு வழக்குக்கு உதவாததாகும்.

ஒரு மொழியின் தேவை முக்கியத்துவமெல்லாம் அது பயன்படுகின்ற தன்மையைப் பொறுத்ததே ஆகும். அது எவ்வளவு பெரிய ‘இலக்கிய காவியங்களையும்’, ‘தெய்வீகத் தன்மையும்’ தன்னிடத்தே கொண்டது என்று சொல்லிக் கொள்ளப்படுவதனாலும் - அது மக்களது அன்றாட வாழ்க்கையில், அவர்களது அறிவை வளப்படுத்தும் தன்மையில் எந்த வகையில் உபயோகப்படும்படி இருக்கிறது என்பதையே அளவுகோலாகக் கொண்டு அளக்க வேண்டும்.

உதாரணமாக, இன்று இங்கிலீஷ் மொழி சிறந்த மொழி என்று பலராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றதென்றால், அது ‘புராதன மொழி’ என்பதோ அல்லது ‘தெய்வாம்சம் உள்ள மொழி’ என்பதோ அதற்குக் காரணம் அல்ல. அதனுடைய உலக உபயோகமும், அது உலக மக்களது அறிவை, வாழ்வை வளப்படுத்த உதவிய, உதவுகின்ற தன்மையையும் பொறுத்ததேயாகும்.

1. ஒருவன் ஆங்கில மொழியைச் சுலபமாகக் கற்றுக் கொள்ள முடியும்.
2. ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்பி வர இயலும்.
3. ஆங்கில மொழியானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, அது சுதந்திரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதாக ஒரு போதும் கிடையாது.

இம்மாதிரிக் காரணங்களால் அது சிறந்த மொழி என்று கருதப்படுகிறது. வெறும் அழகை மாத்திரம் வைத்துக் கொண்டு இப்படிச் சொல்லாமல், அதன் பயனைக் கணக்கிட்டுத்தான் அதனைப் பாராட்டித் தீரவேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.

இதற்குரிய யோக்கியதாம்சங்களில் ஏதாவது ஒன்றாவது நம் நாட்டில் உள்ள மொழிகளுக்கு இருக்கிறதா? அதிலும் குறிப்பாக - ‘தேவ பாஷை’யான சமஸ்கிருதத்துக்கு உண்டா? என்ற கேள்விக்கு இன்றல்ல - பல ஆண்டுகளுக்கு முன்பே, ‘இல்லை’ என்ற பதில் கிடைத்துவிட்டது. அது, ‘பேச்சு வழக்கு இல்லாத’ ஒரு பாஷை ஆகும். இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள சுமார் 40 கோடி மக்களில் எத்தனை பேர்களுக்கு சமஸ்கிருதம், ‘தாய்பாஷை’? எத்தனை பேர்கள் பேசுகிறார்கள்?

http://www.keetru.com/rebel/periyar/63.php

சாதி மதம் போகாமல் மூடப்பழக்க வழக்கங்களில் மாற்றம் செய்யச் சம்மதிக்கவில்லையானால், வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய முடியும்? விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ எப்படி ஏற்படுத்த முடியும்? ‘பிராமணன்', ‘சூத்திரன்', ‘பறையன்', ‘சண்டாளன்' என்கின்ற பெயர்களும், பிரிவுகளும் சாதி காரணம் மாத்திரமல்ல, மதம் காரணமாகவும் நிலவி வருகின்றன. பேத நிலைக்கு மதம் காரணம் மாத்திரமல்லாமல், கடவுள் காரணமாகவும் இருந்து வருவதாக இந்தியா பூராவும் உள்ள இந்து மக்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஜாதி பேத நிலைக்கு இந்து மதமும் மநுதரும சாஸ்திரமும் காரண பூதம் என்றாலும், அதற்கும் மேற்பட்டு கடவுளும் காரணமாய் இருந்து வருகிறது.

கடவுளுடைய முகம், தோள், தொடை, கால் ஆகியவற்றில் இருந்து நான்கு ஜாதிகள் தோன்றின என்பது, இந்து சனாதன மதக்காரர்கள் மாத்திரமன்றி, இந்து ஆஸ்திகக்காரர்கள் பெரும்பாலோரும் நம்புகின்ற கொள்கையாகும். பறையன், சக்கிலி, பள்ளன் முதலிய சூத்திரர்கள் அல்லாத ஜாதியார்கள் எதிலிருந்து பிறந்தார்கள் என்பதும், இந்தியா தவிர மற்ற தேசத்திலுள்ள மக்களான கிறிஸ்தவர், மகம்மதியர், பவுத்தர்கள் முதலிய 180 கோடி மக்கள் எதிலிருந்து, யாரால் பிறப்பிக்கப்பட்டார்கள்? என்ற கேள்விக்கு இடமாய் இருந்தாலும், இந்த நான்கு வர்ணத்தையும் மறுக்க எந்த ஓர் இந்துவும் துணிவதில்லை.

ஏதோ சீர்திருத்தக்காரர்கள் என்று கூறிக்கொண்ட சிலர், சூத்திரர் என்ற அவமானம் பொறுக்க மாட்டாதவர்களாய் நான்கு வர்ணத்தை ஒப்புக் கொள்ளாமல், தன் வரையில் கூறிக் கொண்டிருந்தார்களே தவிர, வெளியில் துணிவாக எதிர்க்கவில்லை. மறுபுறம் அக்கொள்கைக்கு அடிமைகளாகவே இருந்து வருகிறார்கள். எப்படி எனில், ராமாயணக் கதைக்கு வேறு வியாக்கியானம் செய்கின்றவர்களும், நல்லவர்களும்கூட, பாரதக் கதையில் வரும் பாத்திரங்களான ராமனையும், கிருஷ்ணனையும் தெய்வமாகக் கொண்டாடாமல் இருப்பதில்லை. பாரதக் கதையில் ஒரு சமயத்தில் வரும் சிறு சம்பவமான ‘கிருஷ்ணன் சம்பாஷனை' என்னும் கீதையை பிரமாதப்படுத்தி மதிக்கிறார்கள்.

கீதையை மறுக்க, இன்று இந்துக்களில் பதினாயிரத்தில் ஒருவனுக்குக்கூட தைரியம் வருமா என்பது சந்தேகம். கீதையில் கிருஷ்ணன், பேத நிலை உண்டாக்கும் வர்ண தருமத்துக்கு தானே காரணம் என்கிறான். ‘‘நான்கு வர்ணங்களை நான்தான் சிருஷ்டி செய்தேன்'' என்று சொன்னதாக வாசகம் இருக்கிறது. ஆகவே, கீதையை மத ஆதாரமாகக் கொண்டவன், சூத்திரப் பட்டம் ஒழிய வேண்டும் என்றோ, ஜாதிப் பிரிவு ஒழிய வேண்டும் என்றோ எப்படிச் சொல்ல முடியும்?

சாதிப் பிரிவுக்கும், அதனால் ஏற்படும் இழிவுக்கும், தரித்தரத்துக்கும், ஒற்றுமையின்மைக்கும், இந்து மதம், மநுதரும சாஸ்திரம், பாரத ராமாயணப் புராண இதிகாசம் என்பவற்றோடு மட்டுமன்றி ராமன், கிருஷ்ணன் முதலிய கடவுள்களும் காரணம் என்பதை உணருகின்றவன் எவனோ, அவனே வர்ண பேதத்தை பேத நிலையை ஒழிக்க நினைக்கவாவது யோக்கியடையவன் ஆவான். காங்கிரசுக்காரர்களே, பெரும்பாலோர் கீதை பாராயணம் செய்கின்றவர்கள். சாதியை ஆதரிக்கும் புராண நூல்களை நெருப்பிலிடவோ, கிருஷ்ணபகவானை மறுக்கவோ ஒப்புக்கொள்வதில்லை. நான்கு வர்ணம் கூடாது என்கிற ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள்கூட கீதையையும், கிருஷ்ணனையும் ஒழிக்க சம்மதிக்க மாட்டார்கள்.

நமது பிரச்சாரத்தின் பயனாய் ஓர் அளவுக்கு மநு (அ) தருமசாஸ்திரத்தின் மீது பலருக்கு வெறுப்பும், அலட்சியம் ஏற்பட்டிருக்கிறது. கிருஷ்ணன் மீது, கீதை மீது வெறுப்பு அலட்சியம் ஏற்படவில்லை, ஒழிக்கத் தைரியம் வருவதில்லை. இந்நாட்டில் பல ஆயிர வருஷங்களாகவே இந்த இழிவும் முட்டாள்தனமும், அயோக்கியத் தனமும் நிலவி வந்திருக்கிறது. திருவள்ளுவரின் குறளை மெச்சுகிறார்களே ஒழிய, காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர்விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள். இது, முட்டாள்தனமான காரியக்காரர்களிடம் மாத்திரம் இருப்பதாக நான் சொல்ல வரவில்லை. சைவன்களும், வைணவன்களும் கீதையை, கிருஷ்ணனை, பிரம்மாவை மறுக்கவே மாட்டார்கள்.

ஆனால், தங்களுக்குள் பேதம் இல்லை என்று வாயால் சொல்லுவார்கள். கபிலர் சொன்னவையும், சித்தர்கள் ஞானிகள் சொன்ன வாக்குகளும் பேச்சளவில் மாத்திரம் போற்றப்படுகின்றன. ஆனால், காரியத்தில் சிறிதுகூட லட்சியம் செய்யப்படுவதில்லை. இந்நிலையில் ஜாதி எப்படி ஒழியும்? பேத நிலை எப்படி மாறும் என்பதைச் சிந்தியுங்கள்.

நமக்கு இன்று வேண்டிய சுயாட்சி என்பதானது, ஜாதிக் கொடுமைகளையும், ஜாதிப் பிரிவுகளையும், உயர் ஜாதி சலுகைகளையும் ஒழிப்பதாகவும், அழிப்பதாகவும் இருக்கத்தக்கதாய் இருந்தால்தான் நல்லதாகும். இப்படிப்பட்ட பேத நிலை நீக்கும் ஆட்சியை ஆதரிப்பதற்கு, நமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. மனப்பூர்வமாக வரவேற்கவும் ஆசைப்படுகிறேன்.

'பெரியார் களஞ்சியம்': ஜாதி - தீண்டாமை பாகம் 11; பக்கம்: 35

http://www.keetru.com/rebel/periyar/62.php

தமிழர்கள் (திராவிடர்கள்) ஆகிய நமக்குள்ள ஆதரவற்ற நிலையையும், மானமற்ற நிலையையும், இழிவு நிலையையும் நிரந்தரப்படுத்தி சிறிதும் மாற்றம் அடைய முடியாமல் பாதுகாப்பதற்கு கோயில், மதம், மத நடப்புகளின் நிர்ப்பந்தம் ஆகியவை, எப்படி இருக்கின்றனவோ, அதுபோலவே இன்றைய நிலைமையில் இந்த அய்க்கோர்ட்டுகளும், வக்கீல்களும் இருந்து வருகின்றன. இவை இதுபோல் இருந்து வரும் வரையிலும், நம் நிலை ஒரு சிறிதும் மாறப்போவதில்லை என்பதோடு, நம் இழிநிலை வளர்ந்து கொண்டே வருகிறது! அய்க்கோர்ட் நீதிமன்றங்கள் - வக்கீல்கள் இந்த ஸ்தாபனங்கள் நம் பரம்பரை எதிரிகளான பார்ப்பனர் கையிலும், பார்ப்பனர் ஆதிக்கத்திலும் இருந்து வருவதால் நம்முடைய முயற்சிகள் எதுவும் பலன் தராமலே போகின்றன. ஆகையால் இந்த நிலையை மாற்றவேண்டும். முடியாவிட்டால் அழிக்க வேண்டும்.

சட்டம் நீதிக்கு ஏற்பட்டதல்ல. ஒரு கூட்டத்தின் பாதுகாப்புக்கு ஏற்பட்டது. ஆதலால் அதில் பரிகாரத்துக்கு மார்க்கம் காண முடியாது. நீண்ட நாளாகப் பார்ப்பன ஆதிக்கம், ஏகபோகமாய் எல்லாத் துறைகளிலும் இருந்து வந்ததனால் அவர்களது ஏகபோக உரிமைக்கு ஏற்றபடி சட்டம் செய்துகொண்டு அச்சட்டத்தைக் காட்டி நம்மைப் பார்ப்பனர்கள் இதுவரை அழுத்தியே வந்திருக்கிறார்கள் என்பது மாத்திரமல்லாமல், இன்னமும் அழுத்தவே துணிகிறார்கள் சட்டப்படி.

காலஞ்சென்ற பட்டேல் சொன்னார் “சட்டம் ஒரு கழுதை” என்று. அதாவது முன்னாலே போகிறவன் எப்போதும் தப்பித்துக் கொள்வான். பின்னாலே போகிறவனுக்குத்தான் உதை விழுந்து கொண்டிருக்கும். அதைப் பயன்படுத்தும் முறையிருக்கிறதே அது நமக்கு இன்னமும் கேடு உண்டாகிறத் தன்மையில்தான் உள்ளது.
சட்டத்தை எழுதினவன் பார்ப்பான். அந்த சட்டத்தை அமல் நடத்துகிறவன் பார்ப்பான். நிர்வாகத் துறையில், நீதித்துறையில் பார்ப்பனன் ஆதிக்கமே இருப்பதால் அது நமக்கு மேலும் மேலும் கேட்டையே அளித்து வருகிறது. கேடாகவே இருக்கிறது. அந்த வாய்ப்பால் நம் ஆட்கள் இரண்டொருவர் இருந்தாலும்கூட, அவர்கள் பார்ப்பனர்களுக்கு அடிமையாகவேதான் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் தங்கள் சுயநல வாழ்வு கெட்டுவிடும். அதனால் நம்மவர்களும் வாலை அடக்கிக்கொண்டு பார்ப்பனர்களுக்கு ஏற்றபடி நடந்து விடுகிறார்கள். அதற்காகத்தான் நாங்கள் பாடுபட வேண்டியிருக்கிறது. இந்த முயற்சியில் நமக்கு என்ன கேடு வருவதானாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் கேட்டை ஒழிக்க நாம் துணிந்து பாடுபட வேண்டியிருக்கிறது.

முதலாவது பார்ப்பானிடத்தில் பார்ப்பன இனக் கட்டுப்பாடு, இன உணர்ச்சி இருக்கிறது. நம்மிடத்திலே அது இல்லை. நம்மில் ஒவ்வொருவனும் அவனவன் குடும்பம், சொத்து, வருமானம், பதவி இதைப் பற்றிக் கவலைகொண்டு அலைவதைத்தவிர, நம் இன நலத்தில் லட்சியம் இல்லாமல் இருக்கிறான். இதை தெரிந்துதான், பார்ப்பான் எது செய்தாலும் கேட்க நாதியில்லை என்று கருதி, நம்மை ஒழித்துக் கட்ட வேண்டுமென்றே கருதிக் கொண்டு துணிந்து வேலை செய்கிறார்கள். அதை எதிர்க்க நம் கழகம் ஒன்றுதான் இருக்கிறது. மற்றவர்களால் இது மாதிரி காரியங்களில் பிரவேசிக்கிறது என்பது ரொம்ப கடினமான காரியமாகும்.

அய்க்கோர்ட் ஜட்ஜு என்றால், ரொம்பப் பெரிய மனுஷர்கள் என்று கருதுவதுண்டு. வெள்ளைக்காரன் இதனால்தான் ஜட்ஜை கடவுளுக்குச் சமமாக்கி (My lord) என்று அழைக்கிறான். நீதிபரிபாலனம் செய்வதில் “கடவுளுக்கு”ச் சமமானவர்கள் என்ற கருத்தில் அவன் வைத்திருந்தான். அந்த மாதிரி இடத்தில் எப்படி இருக்க வேண்டும்? காலித்தனமான கோர்ட்டுக்குத் தேவை இல்லாத வகையில் எல்லாம், ரொம்பக் காலித்தனமாக நடந்து கோர்ட்டின் பெருமையைக் கெடுத்து வருகிறார்கள். கோர்ட்டு இப்படியே இருக்குமானால் நம் கதி என்னாவது?

இந்த மாதிரியான பார்ப்பனர்களிடமல்லவா நம் தலையெழுத்து இருந்து வருகிறது? அதுவும் பார்ப்பானுக்கும் நமக்கும் எல்லாத் துறையிலும் பெரிய போராட்டம் நடக்கிற இந்த நேரத்திலே இப்படி என்றால், நாம் எப்படி இதை சகித்துக் கொள்ள முடியும்? அதிலும் நம்மவர்கள் மந்திரிகளாக வந்து நம் மக்களுக்கு நன்மை செய்து - பொது ஜன செல்வாக்குடன் மக்களிடம் நல்ல மதிப்போடு இருக்கிறார்கள் என்றவுடன், மறுபடியும் எங்கு இவர்கள் பதவிக்கு வந்து விடுவார்களோ என்று கருதி, அதை ஒழித்துக் கட்டுவதற்காக இப்படியெல்லாம் பார்ப்பனர்கள் பார்ப்பன வக்கீல்கள், நீதிபதிகள் செய்கிறார்கள் என்கிறபோது, நம்மை மீறி அடக்க முடியாத ஆத்திரம் வருகிறது. ஆகவேதான் ஆத்திரம் தீரப் பேசிவிட்டு இரண்டிலொன்று பார்த்து விடலாம் என்று தோன்றுகிறது.

கொஞ்ச நாளைக்கு முன்னால் டெல்லியில் ரயில்வே மந்திரி திரு.ஜகஜீவன்ராம் ரெயில்வே இலாகாவில் உத்தியோகத்திற்கு நியமனம் செய்வதில் எப்படித் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி ஒதுக்கப்படுகிறதோ, அதே தன்மையில் அவர்களுக்குப் புரோமோஷன் கொடுப்பதிலும் கூட அதே சலுகை காட்டப்படவேண்டும் என்று, இந்தியா பூராவுக்கும் ஒரு உத்தரவு போட்டார். நம்நாட்டுப் பார்ப்பனர் (திரு.ரெங்காச்சாரி) என்பவர் சென்னை அய்க்கோட்டில் கேசு போடச் செய்து அதை ஒரு பார்ப்பன ஜட்ஜ் விசாரித்து அந்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு எழுதி விட்டார். அதே மாதிரி இந்த ஊரில், கலெக்டராக ரொம்ப நல்ல பேருடன் இருந்த திரு.மலையப்பனைப் பற்றி எப்படி இரண்டு பார்ப்பன நீதிபதிகளும் தாறுமாறாக எழுதி, அவர் வளர்ச்சியைக் கெடுத்துவிட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். நேற்று நடை-பெற்ற திரு.அழகிரிசாமி (சர்க்கார் வக்கீல்) கேசிலே திரு.பாலகிருஷ்ணய்யர், திரு.ஜெகதீச அய்யர் தீர்ப்பு எழுதியது பற்றித்தான் இப்போது விவகாரம்.

சாதாரணமாக இந்த ஊரிலே நான் பிள்ளையார் பொம்மையை உடைச்சதுக்காக ஒரு ஆள் என்மீது கேசு போட்டார் அதுமுல்லே மாஜிஸ்திரேட் கோர்ட்டிலே தள்ளுபடியாச்சு, அதற்குப்பிறகு அப்பீலில்! சப்-ஜட்ஜ் கோர்ட்டிலும் தள்ளுபடி ஆச்சு. பிறகு ஜில்லா கோர்ட்டிலும் தள்ளுபடி ஆச்சு. அய்க்கோர்ட்டிலும் இதை விசாரித்த நீதிபதி இதைத் தள்ளிவிட்டார். இதற்கு அப்பீலுக்கும் அனுமதி மறுத்துவிட்டார். கடைசிக் கோர்ட்டான (டெல்லி) சுப்ரீம் கோர்ட்டுக்குப் போச்சு, அங்கே தீர்ப்பு சொல்லும் வாய்ப்பு பார்ப்பானுக்கு இருந்தது. உடனே கீழே 3-4 கோர்ட்டுகள் சொன்ன தீர்ப்புகள் தப்பு என்று சொல்லி, சட்டப்படிக் குற்றம் என்று தீர்ப்பு எழுதிவிட்டானே! சாதாரணமாக கீழே உள்ள கோர்ட்டிலே இப்படி இரண்டு, அப்படி இரண்டு என்று தீர்ப்பு சொல்லியிருந்தாலும் இப்படி சுப்ரீம் கோர்ட்டிலே தீர்ப்புச் சொல்லுவதில் கொஞ்சமாவது நியாயம் இருக்கமுடியும்? கீழே மூணு 4 கோர்ட்டிலே எழுதிய தீர்ப்பு என்னாவது? இந்தத் தீர்ப்பு எதுக்குப் பயன்படும்? நம்மமாதிரி காரியங்களைப் பண்ணுகிறவர்களை அடக்கத்தான் உதவுமே தவிர, பிள்ளையார் பொம்மையை உடைக்கிறவனையோ, சரஸ்வதி படத்தைக் கிழக்கிறவனையோ ஜெயிலில் போடுவதற்காக உதவும்? இப்படி அவன் கிட்டே பலம் இருக்கிறது. அதனால் நீதிமுறைக்கேட்டிற்கு இருக்கிறது காரணம் அமைப்பிலேயே கோளாறு காணப்படுகிறது.

http://www.keetru.com/rebel/periyar/64.php

சாதி ஒழிப்புத் தொடக்கம் - நடப்பு அதை ஒழிக்க வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் அம்பேத்கர் அவர்கள் நல்லவண்ணம் எழுதியிருக்கிறார்கள். முன்பு வடநாட்டின் பஞ்சாபில் சாதி ஒழிக்க ஓர் இயக்கம் ஏற்பாடு செய்தார்கள். அதைச் சாதி ஒழிக்கும் ஸ்தாபனம் என்று சொன்னார்கள். நன்கு வேலை செய்தார்கள். நம் பத்திரிகைகளை வாங்கி மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். நல்ல பகுத்தறிவுடன் கூடிய கார்ட்டூன்களைப் போட்டார்கள்; அதிலே என்னையும் உபதலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். நன்றாக நடந்து கொண்டிருந்தது. பிறகு பணக்காரர்கள் அதை விலைக்கு வாங்கி விட்டார்கள். அதற்கு உதவி செய்வதாகச் சொல்லி வந்தார்கள், விலைக்கு வாங்கினார்கள். இருந்தாலும், அதன் மூலம் சாதி ஒழிப்பு மாநாடு என்று கூட்டி, தலைமை வகிக்க அம்பேத்கரைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் சம்மதித்தார்கள்.

அவர்கள் அந்த மாநாட்டில் பேச சொற்பொழிவை எழுதினார்கள். அதைக் கண்டதும் ரொம்பத் திடுக்கிட்டு விட்டார்கள். மதம், சாஸ்திரம் ஒழிந்தால்தான் சாதி ஒழியும்; அதிலே ஒன்று இருந்தால் கூட சாதி ஒழியாது என்று சொல்லி இருக்கிறார். “மநு நீதி, சுருதி, மதம் இவற்றை முதலில் நீங்கள் ஒழித்தாக வேண்டும். அதைச் செய்யாமல் சாதியை ஒழிக்க முடியாது; இதுவே எனது உறுதியான அபிப்பிராயம்’ என்று எழுதியிருக்கிறார்கள். இதைப் பார்த்த உடனே அங்கே சாதியை ஒழிக்க வேண்டுமென்ற ஸ்தாபனத்தை ஏற்படுத்தியவர்கள், மத விரோதமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு அவரை அணுகியபோது, அவரும் “என்னைத் தலைமை தாங்கப் போடுவதால் என் கருத்தைச் சொன்னேன்’ என்றார். இந்தக் கருத்தை ஜீரணிக்க முடியாது என்று மாநாட்டினர் சொல்ல, “நீங்கள் வேண்டுமென்றால் இது தப்பு என்று தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளுங்கள்; உங்கள் மாநாட்டிற்குத் தலைமைப் பதவிக்காக என் கருத்துக்கு விரோதமாகப் பேச முடியாது’ என்று சொல்லிவிட்டார். அவர்கள் கெஞ்சியும் முடியவில்லை. அதனால் அவர்கள் அந்த மாநாட்டையே நிறுத்தி விட்டார்கள்.

கிராமங்களில் சாதி ஒழிய வேண்டுமென்றால் கணக்குப் பிள்ளை வேலையைப் பறையனுக்கு கொடுக்க வேண்டும்; மணியம் வேலையைப் பள்ளர், சக்கிலி ஆகியவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கணக்குப் பிள்ளையாகப் பார்ப்பானும் முதலியும், மணியமாகப் பிள்ளையும், கவுண்டனும் இருப்பதால் தான் அங்கே இருந்து சாதி உரிமை தோன்றுகிறது. ஆனதனாலே ஒரு திட்டம் போட வேண்டும். கணக்குப் பிள்ளை, மணியம் வேலைகளை அப்படி ஒதுக்கி வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் எப்படிச் சாதி உணர்ச்சி இருக்கும்? அதேமாதி கான்ஸ்டேபிள், எட்கான்ஸ்டேபிள், சப்இன்ஸ்பெக்டர் வேலைகளையும் பறையனுக்கு, பள்ளனுக்கு, சக்கிலிக்கு கொடுக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால், சமுதாயத்தில் சாதித் திமிர் ஒழிந்துவிடும்.

அப்படிக்கு இல்லாமல் சாதியே ஒழிய வேண்டுமென்று சொல்லும் வார்த்தையில் அர்த்தமில்லை. அவர்களுக்கு இன்று ஜட்ஜ் வேலை கொடுக்க வில்லையா? ஜில்லா கலெக்டர் வேலை கொடுக்க வில்லையா? மந்திரி வேலை கொடுக்கவில்லையா? அதில் எல்லாம் என்ன ஓட்டை கண்டார்கள்? ஏதோ பொறுக்கித் தின்கிற வேலையாக இருந்தாலும், அவர்கள் பொறுக்குவதை இவர்கள் பொறுக்கித் தின்றுவிட்டுப் போகிறார்கள். இதில் என்ன அதிகத் தவறு? சாதி ஒழிய வேண்டுமென்றால் அரசாங்கம் என்ன செய்தால் ஒழியுமோ, அதைத் துணிச்சலோடு செய்ய வேண்டும். கோயில் பூசாரி வேலையைக்கூட பறையனுக்கே கொடுக்க வேண்டும்; எவனாவது சாமி கும்பிட மாட்டேன் என்றால் கும்பிடாமல் போகட்டுமே.

நம் வளர்ச்சியைப் பெருக்க எது வந்தால் ஆகுமோ அதை எடுத்துக் கொள்ள வேண்டும். நம் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் ஒரு மொழி இருக்க வேண்டும். கடவுள் பேசும் மொழி என்று சொன்னால், அதைக் கேட்டு முட்டாளாகவே இருக்கிறானே! இதற்கு என்ன சமாதானம்? நம் உயர்ந்த மேதாவி - புலவன் எல்லாம் இலக்கியப் புராணங்களைப் படித்து முட்டாள்களாகத்தானே இருக்கிறார்கள். ராமாயணப் பிரச்சாரம் செய்கிறார்கள். புலவர்களுக்கு மானம், வெட்கம் கிடையாது. தங்கள் மணிபர்சு நிரம்ப வேண்டும் என்பதுதான். சாதி இருப்புக்குப் புலவர்களே காரணம்.

எந்த இலக்கியத்தை எடுத்துக் கொண்டாலும், கந்தன், ராமன், கிருஷ்ணன் முதலிய கதைகளை எடுத்துக் கொண்டாலும் எதில் சாதி ஒழிந்திருக்கிறது? நாயன்மார்கள், ஆழ்வார்கள், பரமஹம்சர்கள், மகாத்மாக்கள், வெங்காயம் இவர்கள் எல்லாம் இருந்தார்களே! எந்த ஆழ்வார், எந்த நாயன்மார், எந்த மகரிஷி சாதி ஒழிய வேண்டுமென்று சொன்னார்கள்? சாதி ஒழிய வேண்டும் என்று எழுதியதெல்லாம் குப்பைக்குப் போய் விட்டது. சாதி வேண்டும் என்பதெல்லாம் வெளியே தெரிகிறது; பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஆகவே, பகுத்தறிவு பலமடைய வேண்டும். ஆராய்ச்சி, அறிவு என்ன சொல்கிறது? அதற்கு என்ன அவசியம்? இந்தத் தலைமுறைக்கு முற்போக்கு அடைவோமா என்று சிந்தித்துப் பார்த்தால், தானாகவே வந்துவிடும். நான் சொன்னதையெல்லாம் நம்பி விடாதீர்கள். இதெல்லாம் ஒரு மனிதனின் கருத்து. இதையெல்லாம் நீங்கள் சிந்திக்க வேண்டும். அறிவுக்குத் தடையில்லாமல் சிந்திக்க வேண்டும். ஏதோ தோன்றியதெல்லாம் சரி என்று சொல்லவில்லை. இதை நீங்கள் சிந்தித்து விஷயங்களை அறிந்து நான் சொல்லியதில் எது சரி? எது தப்பு? என்று ஆராய்ந்து, எது சரியென்று படுகிறதோ அதைப் பற்றிச் சிந்தியுங்கள். அந்த உணர்ச்சி வந்தால்தான் எடுக்கும் காரியம் வெற்றி பெறும்.


வில்லிவாக்கத்தில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் 11.4.1964ல் ஆற்றிய உரை

 

http://www.keetru.com/rebel/periyar/65.php

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE