Language Selection

சமூகவியலாளர்கள்

தற்கால ஆசிரியர்கள், தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியர் தொழிலை ஒரு புனிதமான கடமையென்பதாகக் கருதி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாலும், அத்தொழிலுக்குரிய கடமைகளைச் சரியானபடி உணர்ந்து நடப்பதற்கில்லாத நிலையில் இருந்து கொண்டு, அத்தொழிலைத் தங்கள் வயிற்றுப்பாட்டிற்கு நடத்தி வருவதே வழக்கமாய் இருக்கிறது. ஆசிரியர்கள் இம்மாதிரி மகாநாடுகள் கூடிப் போசுவதும், தீர்மானிப்பதும், தங்களுக்குச் சில சவுகரியத்தை உண்டாக்கிக் கொள்ளவும், தங்கள் சம்பளத்தை அதிகப்படுத்திக் கொள்ளவுமேயல்லாமல் தங்களால் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளவோ, தேச முன்னேற்றத்திற்கு அனுகூலமான கல்வியைப் போதிக்கும் சக்தியை அடையவோ ஒரு பிரயத்தனமும் செய்ததாக நான் அறியவே இல்லை.

முதலாவது, நீங்கள் படித்த கல்வியும் நீங்கள் கற்றுக் கொடுக்கப்போகும் கல்வியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஓர் ஆதாரமாகக் கருதிக் கற்கவும், கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல், மக்கள் அறிவுத் தத்துவத்திற்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பலனையும் அளிக்க முடியாததாய் இருக்கிறது என்பது நீங்கள் அறிந்த விஷயமேதான். ஆரம்பக் கல்வி முதல் உயர்தரக் கல்வி, சகலகலா கல்வி என்பது வரையிலும் கவனித்தால், தற்காலம் அடிமைத் தன்மையையும், சுயமரியாதையற்ற தன்மையையும் உண்டாக்கிக் கொடுமையான ஆட்சிமுறை கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு உதவிசெய்து, வயிறு வளர்க்கும் தேசத் துரோகிகளை உற்பத்தி செய்யும் எந்திரங்களாகத்தானே இருக்கிறதேயல்லாமல் வேறென்ன இருக்கிறது?

நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள், அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களேயாவார்கள். அக்குழந்தைகளுக்கு 6, 7 வயது வரையிலும் தாய்மார்களேதான் உபாத்தியாயர்களாக இருக்கிறார்கள். எனவே, இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டி இருக்கிறது. ஆனால், அப்போர்ப்பட்ட ஆரம்ப ஆசிரியர்களாகிய பெண்களோ நமது நாட்டில் பிள்ளை பெறும் எந்திரங்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஏதாவது அறிவுண்டாக நாம் இடங்கொடுத்தாலல்லவா, பிள்ளைகளுக்கு அறிவுண்டாக்க அவர்களால் முடியும்?

நீங்கள் முதலில் மக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; மக்களிடத்தில் அன்பு இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். இவைகளில் ஏதாவது உங்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகிறதா? என்பதை உங்கள் மனதையே கையை வைத்துக் கேட்டுப் பாருங்கள். நீங்கள் மாத்திரமல்ல, உங்களைவிடப் பெரிய சகலகலா வல்லபர்களிடத்தில் படித்து, எம்.ஏ., டாக்டர் முதலிய பட்டங்கள் பெற்ற பையன்களும், தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில் பணத்தைக் கொடுத்து அவன் காலில் விழுந்து கும்பிடுகிறான்; தன் தேசத்தையும், மக்களையும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப்பதில் போட்டிப் போடுகிறான்.

வண்ணான், அம்பட்டன், தச்சன், கொல்லன், சக்கிலி முதலியோர் எப்படித் தங்கள் தங்கள் தொழிலைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்களோ, அப்படியே தற்காலம் பி.ஏ., எம்.ஏ., என்ற படித்தவர்கள் என்போர்களும் அந்தப் பாடத்தைக் கற்றவர்களாவார்கள். வண்ணானுக்கு எப்படி சரித்திர பாடம் தெரியாதோ, அப்படியே பி.ஏ. படித்தவர்களுக்கு வெளுக்குந் தொழில் தெரியாது. அம்பட்டனுக்கு எப்படிப் பூகோளப் பாடம் தெரியாதோ, அப்படியே எம்.ஏ. படித்தவனுக்குப் பிறருக்குச் சவரம் செய்யத் தெரியாது. சக்கிலிக்கு எப்படி இலக்கண இலக்கியங்களும் வேத வியாக்கியானங்களும் தெரியாதோ, அப்படியே வித்வான்களுக்கும் சாஸ்திரிகளுக்கும் செருப்புத் தைக்கத் தெரியாது.

ஆகவே வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியோர்களைவிட பி.ஏ., எம்.ஏ., வித்வான், சாஸ்திரி முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர்; அறிவாளிகளுமல்லர்; உலகத்திற்கு அனுகூலமானவர்களுமல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில்தானே தவிர, அறிவாகாது. இவ்வளவும் படித்தவர்கள் முட்டாள்களாகவும், சுயநலக்காரர்களாகவும், சுயமரியாதையற்றவர்களாகவும் இருக்கலாம். இவ்வளவும் படிக்காதவர்கள் பரோபகாரிகளாகவும், அறிவாளிகளாகவும், சுயமரியாதையுள்ளவர்களாகவும் இருக்கலாம். நமது நாட்டின் கேட்டிற்கும் நிலைமைக்கும் முதல் காரணம், தற்காலக் கல்வி முறை என்பதே எனது அபிப்ராயம்.

எனவே, இவை ஒவ்வொன்றையும் இன்னமும் கிளற, கிளற மிகவும் மோசமாகவேதான் வந்து கொண்டிருக்கும். இம் மகாநாட்டைப் பொறுத்த வரையிலும், இதிலேற்பட்டிருக்கிற சில தீர்மானங்களைப் பொறுத்த வரையிலும் உங்களுக்கிருக்கும் கஷ்டங்களையும், குறைகளையும் அறிந்து நான் மிகவும் அனுதாபப் படுகிறேன். உங்களுக்கு இன்னும் சம்பளம், மரியாதை முதலியன உயர வேண்டுமென்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அதற்காக நீங்கள் செய்யும் கிளர்ச்சிகளில் கலந்து கொள்ள எனக்கும் ஆசையிருக்கிறது. ஆனால், அந்நோக்கங்களையும் கிளர்ச்சிகளையும் உங்கள் சுய நன்மைக்கு மாத்திரமென்றில்லாமல், நமது மக்களின் உண்மையான ஆரம்ப ஆசிரியராய் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன்.


(24.4.1927இல் போளூரில் நடைபெற்ற ஆரம்ப ஆசிரியர்கள் மாநாட்டில் ஆற்றிய உரை.)

http://www.keetru.com/rebel/periyar/54.php

தோழர்களே!

“மகாமகம் என்றால் என்ன? என்பதைச் சற்று விசாரித்துப் பாருங்கள். இதை அறிவதற்காக நாம் ஆவல்பட்டு தேடினோம், கும்பகோண ஸ்தலபுராணம் என்பதில் இருப்பதாக அறிந்தோம், அதை வரவழைத்துப் பார்த்தோம். அதில் உள்ளதை வெளியிடுகின்றோம்.

“கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய ஒன்பது நதிகளும் ஒன்பது கன்னிகைகளாக வெளிவந்து வெள்ளியங்கிரிக்குச் சென்று பரம சிவனை அடைந்து, “உலகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் எவ்வளவோ கொடியதாகிய பாவங்களைச் செய்துவிட்டு எங்களிடத்தில் வந்து ஸ்நானம் செய்து அவர்களது பாவங்களை எங்களுக்குக் கொடுத்துத் தீர்த்துக் கொண்டு போய்விடுகிறார்கள். அந்தப் பாவங்களையெல்லாம் பெற்றுக் கொண்ட நாங்கள் எப்படி அவற்றைப் போக்கிக் கொள்ளுவது” என்று கேட்டார்கள். அதற்குப் பரமசிவனார், “கும்பகோணத்திலே, தென் கிழக்கிலே ஒரு தீர்த்தம் உண்டு. 12 வருஷத்துக்கு ஒருமுறை மாசிமாதம் மகாமகம் நாளன்று அதில் குளிப்பீர்களானால், உங்கள் பாவங்கள் தொலைந்து போகும்” என்று சொன்னார். அதற்கு 9 கன்னிகைகளும் “கும்பகோணம் எங்கே இருக்கின்றது” என்று கேட்டார்கள். அதற்குப் பரமசிவனார் அந்த 9 கன்னிகைகளையும் பார்த்து, “நீங்கள் காசிக்குப் போயிருங்கள், அங்கிருந்து நான் விஸ்வேஸ்வரன் என்னும் பெயருடன் உங்களைக் கும்பகோணத்திற்கு அழைத்துப் போகிறேன்” என்று சொன்னார். அந்தப்படியே கன்னிகைகள் காசிக்குப் போயிருந்தார்கள்.

பரமசிவனார் அவர்களைக் காசியிலிருந்து கும்பகோணத்துக்கு அழைத்துச் சென்று, மகாமக குளத்தைக் காட்டிக் குளிக்க வைத்தார். பிறகு சிவபெருமானும் அந்தக் கன்னிகைகளும் கும்பகோணத்திலேயே கோவில் கொண்டுவிட்டனர்.” ஆதலால் இதில் அந்தக் காலத்தில் குளித்தவர்களுக்குச் சர்வ பாவமும் தொலைந்து சர்வ மங்களமும் உண்டாகும்” என்று கண்டிருக்கின்றது.

தோழர்களே!

இதுதான் கும்பகோண ஸ்தல மகத்துவமும், தீர்த்த மகத்துவமும், கோயில் மகத்துவமும் ஆகும். இதற்கு அப்புறம் அந்தக் குளத்தில் எப்படிக் குளிப்பது, அதற்காகப் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனப் பெண்களுக்கும் எப்படி, எவ்வளவு பணம் கொடுக்க வேண்டியது என்கின்ற விஷயங்களும், எந்தெந்த இடத்தில் குளிப்பது, எந்தெந்தச் சாமியை எப்படி எப்படிக் கும்பிடுவது என்கின்ற விஷயமும் இருக்கின்றது.

இந்தக் கதையை ஆதாரமாக வைத்த இந்த மகாமக உற்சவத்திற்காக எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள், எவ்வளவு விளம்பரங்கள், எவ்வளவு பணச் செலவுகள், எவ்வளவு கஷ்டங்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். இந்துக்கள் மடையர்கள், அஞ்ஞானிகள், மூடர்கள் என்று ஒருவன் சொன்னால், உடனே கோபப்பட்டுக் கொள்ளத்தான் கற்றுக் கொடுக்கப்பட்டு இருக்கின்றோமே அல்லாமல் அறிவைக் கொண்டு பார்க்கின்றோமா?

இந்தக் கும்பகோணத்துக்கும், அங்குள்ள மாமாங்கக் குளத்திற்கும் உள்ள அநேக சாக்கடைகளிலும், பட்டிக்காடுகளிலும், குப்பை மேடுகளிலும் உள்ள குழவிக் கற்களுக்கும், நீரோடைகளுக்கும், குளங்களுக்கும் குட்டைகளுக்குமெல்லாம் புராணங்களும் கதை ஆதாரங்களும் அய்தீகங்களும் இருந்து வருகின்றன. பொதுவாக இது போன்ற எந்தக் காரியங்களுக்கும் விசேஷம் என்பதெல்லாம் இரண்டே இரண்டு வாக்கியங்களில்தான் அடங்கி இருக்கின்றன. அதாவது,

1. சர்வ பாபங்களும் நிவர்த்தியாகிவிடும்.

2. வேண்டியதெல்லாம் அடையலாம் என்கின்றவையேயாகும்.

இந்த இரண்டு காரியங்களும் யோக்கியமான காரியங்களாயிருக்குமா? என்பதை யோசித்துப் பாருங்கள். மனிதன் செய்த பாவம் போகுமா?

மனிதன் செய்கின்ற பாவமெல்லாம் இந்த மாதிரியான காரியங்களால் தீர்ந்து போவதாயிருந்தால், உலகத்தில் எந்த மனிதனாவது பாவகாரியங்களைச் செய்யத் தவறுவானா? தயங்குவானா? என்று யோசித்துப் பாருங்கள்.

மனிதனுக்கு வேண்டிய, அவன் ஆசைப்படும்படியான காரியங்கள் எல்லாம் இந்த மாதிரியான சிறு காரியங்களால் கைகூடிவிடுவதாய் இருந்தால், மனிதனுடைய முயற்சி, நடத்தை, ஒழுக்கம் என்பவற்றுக்கெல்லாம் அவசியமும், நிபந்தனையும், வரையறையும் எதற்காக வேண்டும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.

நிற்க, பாவமுள்ள மனிதர்கள் நதிகளில் ஸ்நானம் செய்ததால் நதிகளுக்கு அந்தப் பாவங்கள் ஒட்டிக் கொண்டது என்பதில் ஏதாவது அறிவோ, உண்மையோ இருக்க முடியுமா? அந்த நதிகள் அந்தப் பாவத்தைத் தொலைக்க மற்றொரு தீர்த்தத்தில் போய்க் குளிப்பது என்று மகாமக தீர்த்தத்துக்கு வந்து குளிப்பதனால், இதில் ஏதாவது புத்தி இருக்கின்றதா? நாணயம் இருக்கின்றதா? என்று யோசித்துப் பாருங்கள். இத்தனை பாவங்களையும் ஏற்றுக் கொண்ட மகாமகத் தெப்பக்குளம் அதன் பாவத்தைத் தீர்க்க எந்த உருவெடுத்து எந்தக் குளத்தில் போய்க் குளிப்பது என்பதையும், பிறகு அந்தக் குளம் வேறு எந்தக் குளத்துக்குப் போய்ப் பாவத்தைத் தீர்த்துக் கொள்ளும் என்பதையும் யோசித்தால், கடுகளவு அறிவுள்ளவனாவது இதை ஏற்க முடியுமா என்று பாருங்கள். இதையெல்லாம் கவனித்தால் மதத்தின் பேரால், பாவபுண்ணியத்தின் பேரால், கடவுள் பேரால், தீர்த்தம், தலம், மூர்த்தி என்னும் பெயர்களால், மக்கள் எவ்வளவு தூரம் ஏய்க்கப்பட்டுக், கடையர்கள், மடையர்கள் ஆக்கப்படுகின்றார்கள் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.

மற்றும், அந்தப் புராணத்திலேயே இந்த மகாமகக் குளத்துக்குள் வடக்குப் பாகத்தில் 7 தீர்த்தங்கள் இருப்பதாகவும், கிழக்குப் பாகத்தில் 4 தீர்த்தங்கள் இருப்பதாகவும், நடுமத்தியில் (66,00,00,000) அறுபத்தாறு கோடி தீர்த்தம் இருப்பதாகவும் இந்த மகாமக குளத்தில் முழுகினால் இத்தனை தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்குமென்றும் எழுதி, அந்தப்படி ஒரு சித்திரமும் வரையப்பட்டிருக்கின்றது. இது எவ்வளவு பரிகசிக்கத்தக்க விஷயம் என்று பாருங்கள். இதை எழுதினவன் எவ்வளவு அயோக்கியன் அல்லது எவ்வளவு மூடன் என்பதன்று இப்போதைய நமது கேள்வி. மற்றென்னவென்றால், இதைப் படித்துப் பார்த்து இதன்படி நடப்பார்கள் என்று நம்பிய மக்களை இவன் எவ்வளவு முட்டாளாகவும், அடிவண்டலாகவும் கருதி இருக்க வேண்டும் என்பதுதான் நமது கேள்வியாகும்.

தீர்த்தம் என்றாலும், நதி என்றாலும், குளம் என்றாலும் என்ன என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். நதி என்றால் மழை பெய்வதால் ஏற்படும் வெள்ளங்கள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து, மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் ஓடை அல்லது நீர்ப்போக்காகும். குளம் என்றால் இந்த மாதிரி ஓடையில் இருந்து வழிவைத்துத் தண்ணீர் நிரப்புவதோ, மழை வெள்ளத்தால் ஊரில் உள்ள அசுத்தங்களையும், கசுமாலங்களையும் அடித்துக் கொண்டு வந்து குளத்தில் விழுந்து தேங்கியிருப்பதோதான். மற்ற இட்டித் தீர்த்தங்கள் என்பதும் கிணற்றுக்குள் நீர் ஊற்றம்போன்ற ஊற்றேயாகும். இந்தத் தண்ணீர்களுக்கு எல்லாம் அந்தந்த இடத்தை அனுசரித்த குணங்களேதாம் உண்டு. மற்றபடி அவற்றில் ஒரு மனிதன் செய்யும் பாவம் என்பதைப் போக்கவோ, அவன் ஆசைப்பட்டதைக் கொடுக்கவோ ஆன சக்திகள் எப்படி இருக்கக்கூடும் என்பது ஒரு மனிதனுக்குத் தெரியாதா என்றுதான் கேட்கின்றோம்.

மாமாங்கக் குளம் என்றால் என்ன?

மாமாங்கக் குளம் என்பது மேல்கண்ட மாதிரியான ஒரு சாதாரண தெப்பக்குளம். மகாமகச் சமயத்தில் அதில் உள்ள தண்ணீர் அவ்வளவையும் இறைத்துவிட்டு வெறும் அடி வண்டலையும், சேற்றையும் மாத்திரம் மீதி வைத்து அதிலும் கந்தகப் பொடியைக் கலக்கி விடுவார்கள். அந்தச் சேறானது கறுப்புக் களிமண்போல் இருக்கும். அந்தக் குளத்தின் விஸ்தீரணமோ சுமார் 500 அடி சதுரம் இருக்கலாம். அடி மட்டம் சுமார் 200 அடி சதுரம் இருக்கலாம். இதில் இலட்சம் பேர்கள் குளிப்பது என்றால் எப்படிச் சாத்தியமாகும்? அந்தக் குளத்தில் இறங்கி அந்தச் சேற்றில் கொஞ்சம் எடுத்துச் சரீரத்தில் பூசிக்கொள்ள வேண்டியதுதான். பிறகு இந்த அசிங்கம் போவதற்கு வேறு குளத்தில் குளிக்க வேண்டியதுதான். இதுதான் வழக்கமாம். ஒரு கிறிஸ்தவரோ, ஒரு மகமதியரோ இந்தப் படிச் செய்தால், அதை நாம் பார்க்க நேர்ந்தால் அப்போது நாம் என்ன என்று சொல்லுவோம்.


(1935-இல் ‘குடிஅரசு’ இதழில் எழுதியது)
http://www.keetru.com/rebel/periyar/55.php

‘பொங்கல்’ என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே உரியதாகும்.

நமது மற்ற பண்டிகைகள் என்பவை எல்லாம் ஆரிய மத சம்பந்தமான கதைகளை அடிப் படையாகக் கொண்டு, பார்ப்பனரால் கற்பனை செய்தவைகளேயாகும். இது விவசாயிகளுக்கு உரிய பண்டிகை ஆனதினால் தான், முதல் நாள் தானியம் சமைக்கும் பண்டிகையும், அடுத்த நாள் விவசாயிகளுக்கு முக்கியமான இன்றியமையாததான கால்நடை ஜீவன்களைப் பாராட்டும் மாட்டுப் பொங்கல் என்கின்ற நிகழ்ச்சியையும் ஒரு பண்டிகையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த நிகழ்ச்சிகளுக்குப் பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல் பண்டிகை என்று பெயர் வழங்கப்பட்டு வருகிறது.

இதைப் பார்ப்பனர்கள், தங்கள் ஜாதி நலத்துக்கு ஏற்ற வண்ணம் திருத்தி கற்பனை செய்து இதை ‘சங்கராந்திப் பண்டிகை’ என்று ஆக்கி இதில் பல மூடநம்பிக்கைகளைப் புகுத்திவிட்டார்கள்.

இந்தப் பொங்கல் நாளைக் கெட்ட நாளாக ஆக்க, அந்த நாளில் ‘துஷ்ட தேவதை’யின் மூதேவி மக்களைப் பற்றுவதாகவும், அதற்குப் பரிகாரம் செய்வதுதான் பொங்கல் முதலிய காரியங்கள் என்றும், அன்று மூதேவி நமது வீட்டிற்குள் புகாமல் இருப்பதற்கு நமது வீட்டுக் கூரைகளில் ஆவாரம்பூ, பூளைப்பூ, வேப்பிலை ஆகிய மூன்றையும் சொருகி வைத்தால், மூதேவி வராது, உள்ளே நுழையாது என்றும் மற்றும் பல முட்டாள்தனமான கருத்துக்களைக் கற்பனை செய்து மக்களை அறிவிலிகளாக ஆக்கிவிட்டார்கள்.

மற்றும் இப்பண்டிகைக்குப் போகிப் பண்டிகை என்று சொல்லப்படுகின்றது. இந்த ‘போகி’ என்னும் சொல்லுக்குப் போகப் போக்கியங்களை அனுபவித்தல் என்பது பொருள் இதற்கும் விளைந்த பண்டங்களை அனுபவித்தல் என்பதுதான் தத்துவம். இந்தக் கருத்துக் கொண்டே போகிப் பண்டிகை என்பதையும் பார்ப்பனர் தங்கள் ஜாதி நலனுக்கு ஏற்பக் கற்பனைக் கதைகளை உண்டாக்கி இந்திரனுக்கும், கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பொறாமை விரோத சம்பவம் ஒன்று செய்து, அதற்குப் பரிகாரமாகக் கொண்டாடுவது என்றும் ஆக்கி விட்டார்கள்.

இவையெல்லாம் மகா மகாப் புரட்டுகளாகும். எப்படியெனில், கிருஷ்ணனையும், இந்திரனையும் இவர்கள் யார், எப்போது இருந்தார்கள், இவர்களுக்கு ஏன் சண்டை வந்தது, இவர்கள் எவ்வளவு அற்பர்கள் என்றெல்லாம் பகுத்தறிவுப் பார்வையில் பார்த்தால், இதன் புரட்டு வெளியாகும், எனவே, பொங்கல் என்பது தமிழர்க்கே உரியதல்லாமல், பார்ப்பனர்க்கு இதில் ஏதும் சம்பந்தமில்லை.

இந்தப் பொங்கல் பண்டிகை என்பதற்குச் சரியான பொருள் அறுவடைப் பண்டிகை என்பதாகும். இவற்றில் கன்னிப் பொங்கல் என்ற ஒரு நிகழ்ச்சியும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது, யாவரும் அறிந்ததே. இந்தக் கன்னிப் பொங்கல் என்பது, சிறு பெண் அதாவது பூப்படையாத, கல்யாணமில்லாத, கலவி அறியாத பெண் என்பவர்கள் சமையல் செய்து பழகுவதற்கு ஆக அவர்களையே கொண்டு சமையல் செய்யப்படுவதாகும். இதில் பெரிய பெண்கள், அந்தச் சிறு பெண்களுக்கு சமையல் முறையை சொல்லிக் கொடுப்பார்கள்.

ஆகவே இந்த நிகழ்ச்சிகளுக் குத்தான் பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப் பொங்கல் விழா என்பதாகும். இது முழுக்க முழுக்க தமிழர்களுக்கே உரிய தமிழ(பார்ப்பன ரல்லாதார் பண்டிகையாகும். எப்படியெனில், பார்ப்பான் கலப்பையைத் தொட்டால் பாவம் என்பது அவனது தர்மம். நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படியிருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும், தாங்கள் மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல் வாழும் சுக ஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத ஆராய்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்யவேண்டும் என்பதே அவர்களுடைய பிறவி புத்தியானதால் அதற்கேற்ப உலக நட்பைத் திருப்பிப் பாதுகாத்து வைக்கிறார்கள்.

பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு, மனிதர்களாக நாம் வாழ வேண்டுமானால், பொங்கல் பண்டிகை என்பதை முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உணவு அருந்துவதையும், மனைவி மக்கள் முதியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும் கொண்டு நம்மால் கூடிய அளவு மற்றவர்களுக்கு உதவி, அவர்களுடன் குலாவுவதான காரியங்களையும் செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும்.

மற்றபடியாக, மதச் சார்பாக உண்டாக்கப்பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும், பெரிதும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர்விற்கும், நம் மடமைக்கும், காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத்தக்கதாகவே இருந்து வருவதால், பயனளித்து வருவதால், அறிவுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடாமலிருந்து தங்களை மானமும், அறிவுமுள்ள மக்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மானமும் அறிவுமே மனிதர்க் கழகு!
(‘விடுதலை’ - 14-1-1972)
http://www.keetru.com/rebel/periyar/57.php

இந்த நாட்டில் இன்று இரண்டே ஜாதிகள் சாஸ்திரத்தில் சட்டத்தில் இருந்து வருகின்றன அவை: 1. "பிராமண' சாதி 2. "சூத்திர' சாதி. அதாவது மேல் சாதி; கீழ் சாதி; மற்றும் நாட்டு மக்களில் ஜாதிகள் என்று சொல்லப்படுபவை எல்லாம், அந்த இரு ஜாதிகளின் அதாவது "பிராமண ஜாதி', "சூத்திர ஜாதி' என்பதன் உட்பிவுகள் தானே அல்லாமல் தனிப் பிறவி ஜாதிகள் அல்ல. எனவே, இன்று ஒழிக்கப்பட வேண்டிய ஜாதிகள், மேற்கண்ட"பிராமணன்' "சூத்திரன்' எனப்பட்ட ஜாதிகளே ஆகும்.

அதாவது, மொத்த ஜனத் தொகையில் 100க்கு 3 பேர்களே உள்ள ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஏக போகமாய் 100க்கு 75க்கும் மேற்பட்ட பதவிகளில் இருந்து வரவும், மற்ற இடைநிலைப் பதவிகளிலும் "பிராமணர்' 100க்கு 50க்கு மேல் அனுபவித்து வரவுமான தன்மையை ஏற்படுத்திக் கொண்டு, 100க்கு 97 விகிதம் உள்ள "சூத்திரர்'கள் இத்துறைகளில் தலை எடுக்கவிடாமல் அழுத்தி வரப்படுகிறது. இந்தப்படியான சமூகக் குறையையும், வாழ்க்கை முறையையும் சரி நிலை, சரி பங்கு அடைய முடியாத தடைகளையும் ஒழிப்பதன் மூலமே ஜாதிக் கேட்டைப் பெருமளவு ஒழிக்க முடியும்.

இதற்கு அரசாங்க, அரசியல் கிளர்ச்சி என்பதன் மூலம் செய்யப்பட வேண்டிய காரியம் ஏதாவது இருக்கிறதா என்றால், ஒரே ஒரு காயம்தான் உண்டு. அதாவது, இரண்டு ஜாதி மக்களுக்கும் உத்தியோகம், பதவி, ஆட்சித் தலைமை ஆகியவைகளில் ஜனத்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ற விகிதப்படி, ஜாதிவாரி உரிமை அளித்து, அந்தப்படி அந்தந்த ஜாதியை அமர்த்துதல். இந்த இரண்டு காயம் செய்வதற்கு மக்கள் சட்ட சபைக்கோ, பார்லிமெண்டுக்கோ போவதால் சாதிக்கக் கூடியதாகிவிடாது.

""இந்தக் காயங்களில் ஜாதி ஒழிந்துவிடுமோ' என்று தங்களை அறிவாளிகள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் கேட்கலாம். அப்படிப்பட்டவர்களை நான் கேட்பதாவது: "தம்பீ! ஜாதி ஒழிக்கப்பட வேண்டியது முக்கியம், முதலாவதுமான காரியம் என்று நீ நினைக்கிறாயா?'' என்பதுதான். "ஆம் நினைக்கிறேன்' என்றால், "அதற்காக இதுவரை நீ செய்தது என்ன? அதற்கு ருஜு (சாட்சியம்) என்ன? அதனால் ஏற்பட்ட பலன் என்ன?' என்பதே எனது தாழ்மையான அடுத்த கேள்வியாகும். "அதற்காக நான் பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து, பாடுபட்டு சட்ட சபைக்குப் போனேன், பார்லிமெண்டுக்குப் போனேன்'' என்று நீ சொல்லக்கூடும்.

சரி, நீ போனாய், அங்கு போய் ஜாதியை ஒழிக்க நீ என்ன செய்தாய்? கேள்வி கேட்டாயா? மசோதா கொண்டு போனாயா? ""கேள்வி கேட்டேன், மசோதா கொண்டு போகவில்லை'' என்றுதான் நீ சொல்லக்கூடும்; என்றாலும், இரண்டும் உன்னால் ஆகக்கூடிய காரியமல்ல. ஏன் என்றால் சட்டசபையில் ஜாதிப் பேச்சுக்கே இடமில்லை. ஆதலால் அங்குக் கேட்டிருக்க முடியாது. பிறகு, இதற்கு நீ என்ன செய்தாய்? செய்யப் போகிறாய்? சொல்லு தம்பீ! நான் சொல்லட்டுமா? அன்று முதல் இன்றுவரை அந்தப் பேச்சையே பேசக்கூடாது என்று கருதி மறந்தே விட்டாய் அவ்வளவுதான்.

"அந்தப் பேச்சு' என்பதற்கு ஒரு கதை உண்டு. அதாவது: ஒருவன் காலையில் வெளிக்குப் போகக் குளத்து மேட்டுக்குப் போகிறவன் புகையிலைச் சுருட்டு வாங்க ஒரு கடைக்குப் போனான். சுருட்டை வாங்கிக் கொண்டு, காசு கொடுக்கத் தனது முடிச்சை அவிழ்த்துக் கொண்டே அந்தக் கடைக்காரனைப் பார்த்து "என்ன அய்யா, இந்தச் சுருட்டு பத்துமா? அதாவது நெருப்புப் பிடிக்குமா?'' என்று கேட்டான். அதற்கு அந்தக் கடைக்காரன், ""நம்ப கடையில் மாத்திரம் அந்தப் பேச்சை பேசக்கூடாது தெரியுமா?'' என்று பெருமிதமாய்ப் பதில் சொன்னான். சுருட்டு வாங்கியவன், ""கடைக்காரன் இவ்வளவு உறுதியாய்ச் சொல்லுகிறானே, சுருட்டு நல்லதாகத்தான் இருக்கும்'' என்ற மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டு போய்க் குளத்தங்கரையில் நின்று கொண்டு சுருட்டைப் பற்ற வைக்க, ஒரு பெட்டி நெருப்புக் குச்சியை உரைத்து உரைத்துச் சுருட்டுக்கு நெருப்புப் பற்றவைக்கப் பார்த்தான்.

சுருட்டுக் கருகிக் கருகிக் குறைகிறதே ஒழிய நெருப்புப் பற்றவே இல்லை. உடனே சுருட்டு வாங்கியவன் ஆத்திரத்தோடும், கோபத்தோடும் கடைக்காரனிடம் வந்து "என்னய்யா! உன் சுருட்டு அரைப் பெட்டி நெருப்புக் குச்சிக் கிழித்தும் பத்தவே இல்லையே? எல்லாம் கருகிப் போச்சே இதுதான் யோக்கியமா? என்று கேட்டான். அதற்கு அந்தக் கடைக்காரனுக்கு அதற்குமேல் ஆத்திரம் கோபம் வந்து, ""அட மடையா! நான் தான் நீ காசு கொடுக்கிறதற்கு முன்னமேயே அந்தப் பேச்சே இங்குப் பேசக்கூடாது'' என்று சொன்னேனே; அப்புறம் தானே நீ காசு கொடுத்தே? இப்ப வந்து இது யோக்கியமா? என்று கேட்கரையே; உனக்குக் கொஞ்சமாவது புத்தி இருக்கிறதா?'' என்று கேட்டான்.

உடனே சுருட்டு வாங்கினவன், ""சரி! சரி! அதிகமாகப் பேசாதே! உன் கடையிலே வந்து நான் சுருட்டு வாங்கினேனே; என்னைப் போடவேண்டும் பழைய செருப்பாலே'' என்று சொல்லிக் கொண்டு, குளத்துக்குச் சுருட்டுப் பற்றவைத்துக் கொண்டு போகிறவர்களை எல்லாம் நிறுத்தி, நிறுத்தி, அவர்கள் சுருட்டில் தன் சுருட்டை ஒட்டவைத்துப் பற்ற வைத்துக் கொள்ளுகிறவன் போல் பாவனைக் காட்டி, அவர்கள் சுருட்டுப் புகையை எல்லாம் இவன் சுருட்டு மூலம் இழுத்துவிட்டு, தனக்கு வெளிக்குப் போகும் உணர்ச்சி வந்த பிறகு வெளிக்கும் போனான்'' என்று ஒரு கதை உண்டு. அதுபோல் சட்டசபையில் போய் சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்றால் சட்டசபைக்காரன் (கடைக்காரன்) "உனக்குப் புத்தி இல்லையா?'' என்கிறான்.

.ஆகவே, என்னைப் போல் புரட்சி, கிளர்ச்சி செய்து, அதனால் மாள உனக்குத் துணிவில்லை. ஆனால், முதலாவது எதிரியோடு சேராதே! எதிரியைக் கவிழ்க்கப் பாடுபடு! இரண்டாவது, காமராசர் ஆட்சிக்கு ஊக்கம் ஏற்படும்படி உற்சாகப்படுத்து; முட்டுக்கட்டை போடாதே! எதிரிகளுக்கு இடம் கொடுத்து வாழ நினையாதே! இந்த அளவுக்கு நீயும் மற்றத் தமிழர்களும் உணர்ந்தால் போதும் என்பதோடு, மற்றக் காயங்களை உடல் பொருள் "ஆவி'யைக் கொடுக்கும் அளவுக்கு நாங்கள் (திராவிடர் கழகத்தார்) பார்த்துக் கொள்ளுகிறோம்.

(13.12.1960 அன்று 'விடுதலை'யில் எழுதிய தலையங்கம்)

http://www.keetru.com/rebel/periyar/58.php

இந்திய நாட்டில், பெரும்பாலும் உலகத்தின் வேறு எங்கும் இல்லாததும், மனிதத்தன்மைக்கும் நியாயத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாததுமான கொடுமைகள் பல இருந்து வந்தாலும் - அவற்றுள் அவசரமாய்த் தீர்க்கப்பட வேண்டியதும், இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் அல்லரென்பதையும், மனிதத் தன்மையும் நாகரிகமுடையவுமான சமூகம் எனவும் உலகத்தாரால் மதிக்கப்பட வேண்டியதற்குச் செய்ய வேண்டியதும் - மற்றும் உலகத்திலுள்ள பெரும்பான்மையான நாட்டார்களைப்போலவே அன்னிய நாட்டினர்களின் உதவியின்றித் தங்கள் நாட்டைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், ஆட்சி நிர்வாகம் செய்யவும் தகுதியுடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானாலும் - முதலாவதாய்ச் செய்யப்பட வேண்டிய காரியம் இரண்டு உண்டு என்று உறுதியாய்க் கூறுவோம்.

அவைகளில் முதலாவது எதுவென்றால், இந்திய மக்களிலேயே பலகோடி ஜனசங்கியை உள்ள பல சமூகங்களைப் பிறவியிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து, அவர்களைப் பகுத்தறிவற்ற மிருகங்களிலும் கேவலமாகவும், உணர்ச்சியற்ற பூச்சி புழுக்களிலும் இழிவாகவும் நடத்துவதை ஒழிக்க வேண்டியதாகும்.

இரண்டாவதானது எதுவென்றால், பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்தையே அடியோடு, பிறவியில் சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும், ஆண்களுக்கு அடிமையாக இருக்கக் கடவுளாலேயே சிருஷ்டிக்கப் பட்டவர்கள் என்றும் கற்பித்து, அவர்களை நகரும் பிணங்களாக நடத்துவதை ஒழிக்க வேண்டியதாகும். ஆகவே, மேற்கண்ட இந்த இரண்டு காரியங்களும் - எந்தக் காரணத்தை முன்னிட்டும் - இந்தியாவில் இனி அரை நிமிடம்கூட இருக்கவிடக் கூடாதவைகளாகும்.

இந்தக் காரணத்தாலேதான், நாம் மேற்கண்ட இரண்டு கொடுமைகளும் அழிக்கப்படாமல் - இந்தியாவுக்குப் பூரண சுதந்திரம் கேட்பதோ, இந்தியாவின் பாதுகாப்பையும் ஆட்சி நிர்வாகத்தையும் இந்திய மக்கள் “நாங்களே பார்த்துக் கொள்ளுகிறோம்” என்று சொல்லுவதோ, மற்றும் இந்தியாவுக்கு அன்னியருடைய சம்பந்தமே சிறிதும் வேண்டாம் என்று சொல்லுவதோ - ஆகிய காரியங்கள் முடியாதென்றும், அவை சுத்த அறியாமைத்தனமான தென்றும், இல்லாவிட்டால் - சுயநல சூழ்ச்சியே கொண்ட நாணயத் தவறான காரியமாகுமென்றும் சொல்லி வருகிறோம் என்பதோடு - இப்படிச் சொல்லும் விஷயத்தில் நமக்குப் பயமோ, சந்தேகமோ கிடையாது என்றும் சொல்லுவோம். ஆதலால்தான், இவ்வித முட்டாள்தனமானதும், சூழ்ச்சியானதுமான முயற்சிகளை நாம் எதிர்க்க வேண்டியவர்களா யிருக்கின்றோம்.

தீண்டாமை என்னும் விஷயத்திலிருக்கும் கொடுமையும் மூடத்தனமும் மூர்க்கத்தனமும் யோசித்துப் பார்த்தால், அதை மன்னிக்கவோ, அலட்சியமாய்க் கருதவோ, ‘நாளை பார்த்துக் கொள்ளலாம்; இப்போது அதற்கென்ன அவசியம், அவசரம்’ என்று காலந் தள்ளவோ சிறிதும் மனம் இடம் தருவதில்லை. ஒருவன், அதாவது பிறரைத் தீண்டாதார் எனக் கருதிக் கொடுமைப்படுத்துகின்றவர்களை அத்தீண்டாதார்களுக்கு இருக்கும் உண்மையான கஷ்டத்தை உணரச் செய்ய வேண்டுமானால், இப்போதைய வெள்ளைக்கார அரசாங்கத்தின் கீழ் அனுபவிக்கும் கொடுமைகள் போதாது என்றும், சிறிதும் சுதந்திரமும் சமத்துவமும் அற்றதும், சதா இராணுவச் சட்டம் அமலில் இருப்பதுமான ஏதாவது ஒரு கொடுங்கோல் ஆட்சி இருந்தால் தான், இம்மாதிரி கொடுமைப்படுத்துகின்ற மக்களுக்கு உணர்ச்சி வந்து, புத்தி வருமென்றும் நமக்குச் சிற்சில சமயங்களில் தோன்றுவதுமுண்டு.

ஆனால், இந்தியாவை இம்மாதிரி மூர்க்கத்தனமும் நாணயக் குறைவும் மாத்திரம் சூழ்ந்து கொண்டிருக்காமல், மூடத்தனமும் சேர்ந்து கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதால், இன்னமும் எவ்வளவு இழிவும், கொடுமையும் ஏற்பட்டாலும் இம்மாதிரியான மக்களுக்கு உண்மையான துன்பத்தை உணரத்தக்க நிலைமை வருவது கஷ்டமாக இருக்கும். என்றாலும், இந்நிலை மாறுதலடையக் கூடும் என்ற உறுதியை உண்டாக்கத்தக்க நம்பிக்கை கொள்வதற்கு இடமில்லாமல் போகவில்லை.

இனி, பெண்கள் விஷயத்தில் அவர்களுடைய சுதந்திரத்தையும் உணர்ச்சியையும் கட்டிப் போட்டிருக்கும் கொடுமையானது - இது போலவே, இந்தியர்களுக்குச் சுதந்திர உணர்ச்சியே இல்லை என்பதைக் காட்டவும், அவர்கள் அடிமைகளின் குழந்தைகள் என்பதை ஒப்புக்கொள்ளவும் ஆதாரமானதென்றுதான் சொல்லவேண்டும்.

எப்படியெனில், இவ்விரண்டைப் பற்றி இந்திய விடுதலைவாதிகள், சுதந்திரவாதிகள், சுயேச்சைவாதிகள், தேசியவாதிகள், மக்கள் நல உரிமைவாதிகள் என்கின்ற கூட்டத்தார்களுக்குச் சிறிதும் உண்மையான கவலை இல்லாவிட்டாலும், மேற்கண்ட கூட்டத்தார்களில் 100-க்கு 90 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் சுயநலங் கொண்ட நாணயமற்றவர்களாகவே காணப்படினும் - இவர்களது முயற்சி இல்லாமலும் சிலசமயங்களில் மேற்கண்ட சுயநல சூழ்ச்சிவாதிகளின் எதிர்ப்பிற்கும், இடைஞ்சலுக்கும் இடையிலும் வேறு ஒரு வழியில் கொடுமைகள் அனுபவிக்கும் மேற்கண்ட இரு வகையாருக்கும் விமோசனம் ஏற்படுவதற்கு அறிகுறிகள் ஆங்காங்கு காணப்படுகின்றதைப் பார்க்கச் சிறிது மகிழ்ச்சி அடைகின்றோம்.

('பகுத்தறிவு’ - 1938)

http://www.keetru.com/rebel/periyar/59.php

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE