Language Selection

சமூகவியலாளர்கள்

எந்த விஷயத்துக்கும் கொள்கைகளுடன் அனுபவ ஞானமும் இருந்தால்தான் அதை மனிதத்தன்மை என்று சொல்லலாமே ஒழிய, மற்றபடி அனுபவ சாத்தியத்துக்கு இணங்காத கொள்கைகள் எதுவானாலும் அதைப் புஸ்தகப் பூச்சி என்றுதான் சொல்ல வேண்டும்; அல்லது வெறும் அபிப்பிராயத்துக்கு மாத்திரம் பெறுமானவர்களே ஒழிய, காரியத்திற்குப் பெறுமானவர்கள் அல்ல என்று சொல்ல வேண்டும்.

வெளிப்படையாய் நாம் பேசுவதானால், அம்பேத்கரும், அவரைப் பின்பற்றுவோரும் நாஸ்திகர்களாவதற்கும், மதமில்லாதவர்கள் ஆவதற்கும் இஷ்டமில்லாமல், அவர்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக முகமதியராகி விடலாம் என்று அவர்கள் கருதினால், அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபனை என்ன என்று கேட்கின்றோம்.

முகமதிய மதத்தில் பல கெடுதிகள் இருக்கலாம்; கோஷம் இருக்கலாம்; கடவுள் இருக்கலாம்; மூடநம்பிக்கை இருக்கலாம்; மதச் சின்னம், மதச் சடங்கு இருக்கலாம்; சமதர்மமில்லாமலும் இருக்கலாம். இதெல்லாம் யாருக்குக் கூடாது? சுயமரியாதைக்காரருக்கு கூடாததாய் இருக்கலாம். மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; மூடநம்பிக்கை அனுஷ்டிக்காதவர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; மதவேஷமும் பயனற்ற சடங்கும் வேண்டாதவருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; நாஸ்திகர்களுக்கும், பகுத்தறிவுவாதிகளுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; சமதர்மவாதிகளுக்கும், பொதுவுடைமைக்காரர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்.

ஆனால், தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற ஒதுக்கப்பட்டிருக்கின்ற, தாழ்த்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு, நாயிலும், மலத்திலும், புழுத்த விஷக்கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம் தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக்கொண்டிருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா இல்லையா என்று கேட்கின்றோம்.

ஏனெனில், அவன் கிறிஸ்தவனாகி, கிறிஸ்தவப் பறையன், கிறிஸ்தவச் சக்கிலி, கிறிஸ்தவ பிள்ளை, கிறிஸ்தவ நாய்க்கன் என்று தீண்டாதவனாகவே இருப்பதைவிட, பறத்துலுக்கன் என்றோ, சக்கிலிய முகமதியன் என்றோ, தீய முஸ்லிம் என்றோ அழைக்க இடமில்லாமலும் அழைக்கப்படாமலும் இருக்கும்படியான நிலையிலும் மற்றசமூகக்காரர்களோ மதக்காரர்களோ அவ்வளவு சுலபமாக இழிவுபடுத்தவோ, கொடுமையாய் நடத்தவோ முடியாத சுயமரியாதை அனுபவமும் உள்ள நிலையிலும் இருக்கும் ஒரு மதத்திற்கு, "எப்படியாவது தீண்டாமையை ஒழித்துக் கொள்ள வேண்டும்'' என்கின்றவன் போனால், இதில் சுயமரியாதைக்காரனுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கின்றோம். அன்றியும், "சரி, எப்படியாவது சீக்கிரத்தில் தீண்டாமையை ஒழித்துக் கொள்'' என்று சொல்வதிலும் என்ன தப்பு என்றும் கேட்கின்றோம்.

நமக்குக் கடிதம் எழுதின நண்பர், "இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது; இஸ்லாம் மதத்தில் பார்க்காமை இருக்கிறது; பெண்களுக்கு உறை போட்டு மூடிவைத்து இருக்கிறார்கள்'' என்று எழுதி இருக்கிறார். அது (உறை போட்டு வைத்திருப்பது) உண்மை என்றும், தவறானது என்றுமே வைத்துக் கொள்ளுவோம். இது, பெண்ணுரிமை பேணுவோர்கள் கவனிக்க வேண்டிய காரியமே ஒழிய, தீண்டாமை விலக்கு மாத்திரம் வேண்டும் என்று கருதுகின்றவர்கள் யோசிக்க வேண்டிய காரியம் அல்ல என்பது நமது அபிப்பிராயம்.

இந்து மதம் சீர்திருத்தம் அடைந்து வருகிறது என்றும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும், சில மூடர்களும், சூழ்ச்சிக்காரர்களும் சொல்லுகிறார்கள். அதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்து மதம் சீர்திருத்தமடைந்து வரவில்லை; இந்து மதம் ஒழிந்து வருகின்றது என்றுதான் சொல்லுவோம். இந்து மதத்தில் சீர்திருத்தத்திற்கு இடமில்லை; அதைச் சீர்திருத்தம் செய்ய யாருக்கும் அதிகாரமும் இல்லை. இந்து மத ஆதாரங்கள் என்பவை அம்மத வேதம், சாஸ்திரம், புராணம் என்று சொல்லப்படுபவைகளைப் பொறுத்ததே ஒழிய, சாமிகள் என்றும், மகாத்மாக்கள் என்றும், தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொள்ளும் சில விளம்பரப் பிரியர்களைப் பொறுத்தது அல்ல.

இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு அனுகூலம் செய்ய, சில தீவிர சுயமரியாதைக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகின்றவர்கள், அம்பேத்கர் வேறு மதத்துக்குப் போவதை அனுமதிக்கக் கூடாது என்றால் அது நியாயமாகுமா? அல்லது ஒன்றும் பேசாமல் சும்மா இரு என்பதுதான் நியாயமாகுமா? ஆதலால், அம்பேத்கருடைய முடிவை நாம் மனமார ஆதரிப்பதுடன், அம்முடிவுப்படி சரியான செயலுக்கு நம்மாலான உதவியளிக்க வேண்டியதும் ஒவ்வொரு சுயமரியாதைக்காரருடையவும் கடமையாகும் என்பது நமது அபிப்பிராயம்.

(17.11.1935 "குடி அரசு' இதழில் எழுதிய தலையங்கம்)

http://www.keetru.com/rebel/periyar/6.php

‏இந்திய நாடு எவ்விதமான வளத்திலும் குறைந்தது அல்ல. இந்தியாவில் ராஜாக்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள், ஆச்சாரிய பீடங்கள், கோடீஸ்வரர்கள் மற்ற நாட்டிலுள்ளவர்களுக்குக் குறையாமல் உள்ளார்கள். விவசாயத் துறையிலும் ஏராளமான பூமிகள் இருப்பதும், அவற்றிற்கு அனுகூலமாக நீர் வசதிகள் இருப்பதும், ஒவ்வொரு மிராசுதார்கள் 1000 ஏக்கர், பதினாயிரம் ஏக்கர், சிலர் லட்சம் ஏக்கர் நிலங்களை உடையவர்களாக இருப்பதும், விவசாயம் செய்யப்பட வேண்டிய பூமிகள் இன்னும் எவ்வளவோ இருப்பதுமான நாடாக உள்ளது.

இப்படிப்பட்ட பல்வளமும் பொருந்திய இந்திய நாடு ஏன் தரித்திரமான நாடு என்றும், அடிமையான நாடு என்றும், ஏழைகள் பெருத்த நாடு என்றும் சொல்லப்பட்டு வருகின்றது? முதலாவது, மேற்கண்ட வளமுள்ள செல்வம் எல்லா மக்களும் அடையத்தக்க மாதிரியான சமூக அமைப்பு இல்லாமல் செல்வங்கள் சில வகுப்பு மக்களுக்கே உரியவையாகவும் அனுபவிக்கத் தக்கவையாகவுமான சமூக அமைப்பு முக்கிய காரணமாகும்.

அதாவது, வருணாசிரம தருமப்படி இன்ன இன்ன வகுப்புக்கு இன்ன இன்ன தொழில், இன்ன இன்ன உரிமை என்பதான திட்டமே, நாட்டின் செல்வம் எல்லோருக்கும் பரவுவதற்கில்லாமல் தடைபடுத்திக் கொண்டிருக்கிறது என்பது முதல் காரணம். வெள்ளைக்கார அரசாங்கத்தின் பயனாய் இந்த தர்மங்கள் சிறிது சிறிது மாற்றமடைந்து ஏதோ நூற்றில் ஒருவர், ஆயிரத்தில் ஒருவர் செல்வவான்கள் ஆகவும், வருணமுறை தவறிப் பணம் சம்பாதிக்க உரிமை உடையவர்களாகவும் ஆனாலும்கூட, அந்தப் பணமானது மநுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல் அதாவது, ‘சூத்திரன் செல்வத்தைப் பிராமணன் எந்தவிதத்திலானாலும் கொள்ளை அடிக்கலாம்' என்கின்ற தர்மப்படி, சூத்திரன் செல்வத்தைக் கொள்ளை கொள்ளவே ஸ்தலம், கோவில், குளம், புண்ணியம், பாவம், சடங்கு முதலிய காரியங்களின் மூலம் கொள்ளை அடிக்கப்பட்டு விடுகின்றன.

இந்தக் காரணத்தாலேயே சூத்திரர்களில் 100க்கு 75 பேர்கள் கடன்காரர்களாகவே இருக்க நேரிட்டு இருக்கின்றது. மேலும், நமது மக்களின் மதத் தத்துவமே இவ்வுலக வாழ்க்கை "பொய்' என்பதும் "மாயை' என்பதும்; செல்வத்தை மோட்சத்தில் இடம்பிடித்து வைக்கவும், அடுத்த ஜன்மத்தில் நல்ல பிறவியாய் பிறக்க ஏற்பாடு செய்துகொள்ளவும் செலவழிக்க வேண்டும் என்கின்றதுமான எண்ணங்கள், செல்வங்களைப் பாழாக்கி விடுகின்றன.

அன்றியும், பாடுபடுகின்ற மக்களுக்குத் தங்கள் மதக் கடமை, சாதிக் கடமை என்பது மாத்திரமல்லாமல் முன் ஜென்மக் கர்மத்தின் பயன் என்றும் எண்ணும் எண்ணங்களே புகுத்தப்பட்டு, தங்கள் கஷ்டங்களையும் தரித்திர நிலைமையையும் உணராமல் இருந்து வருகின்ற குணமும் தகுந்த பயனை அடைய முடியாமல் செய்து விடுகின்றன.

சாதாரணமாக, சென்னை மாகாணத்தின் சர்க்காரார் வரி எவ்வளவு இருக்குமோ, அதில் 4இல் 1 பங்குக்குக் குறையாமல் இம்மாகாணத்தில் வரும்படி வரத்தக்க சொத்துகள் கொண்ட தர்ம ஸ்தாபனங்கள் இருக்கின்றன. அவற்றின் மற்ற செலவுகளுக்கென்று நமது மக்களால் செய்யப்படும் செலவுகளின் மொத்தம், நாம் செலுத்தும் வரித் தொகைக்குக் குறையாதென்றே சொல்லலாம். இவை இந்த நாட்டு மக்களுக்குப் பயன்படாததோடு வீண் செலவினமாகவே ஏற்பட்டுவிடுகின்றன.

அன்றியும் தர்ம ஸ்தாபனங்களில் வரும்படி இல்லாமல் வெறும் முடக்கமாய் இருக்கும் சொத்துகள் தங்கம், வெள்ளி, கல் நகைகள், இடங்கள் முதலியன கோடிக்கணக்கான ரூபாய் வரும்படி வரக்கூடிய அளவு உள்ள சொத்துகள் யாதொரு பிரயோசனம் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன.

இவ்வளவும் தவிர, இந்திய மக்களின் வருமானம் என்பதே அவர்கள் தங்களது தொழில் முறைகளைச் சிறிதும் மாற்றிக் கொள்ளாததால் பிரயாசை அதிகமும், சாமான் யோக்கியதைக் குறைவும், உற்பத்திக் குறைவும் இதனால் வரும்படி குறைந்ததுமாக இருப்பதுடன், மனிதனுடைய தேவைக்கும், போக போக்கியங்களுக்கும் வேண்டியவைகளுக்கெல்லாம் ஏழை முதல் செல்வவான், மகாராஜாக்கள் வரை, வெளிநாட்டுப் பொருள்களையே உபயோகிக்க வேண்டியவர்களாகி, அதன் மூலம் செல்வம் ஏராளமாய் வெளியில் போய் விடுவதால், ஒருவித நஷ்டத்தையும் அடைய வேண்டியதாக ஏற்பட்டு விடுகின்றது.

இந்தியாவின் பொருளாதாரத் துறையைச் சீர்படுத்துவதற்கு முதலாவது, வருணாசிரம முறை ஒழிய வேண்டும்; இரண்டாவது, மதசம்பந்தமான எண்ணங்கள் அகற்றப்பட வேண்டும்; இன்றாவது கோவில், குளம், சடங்கு, சாத்தான் ‘சனி விலக்கு' ஆகிய எண்ணங்கள் அழிக்கப்பட வேண்டும். பிறகு அரசன், ஜமீன்தாரன் முதலிய தத்துவங்கள் அழிக்கப்பட்டாக வேண்டும்.

பொருளாதாரத் துறையில் இந்திய நாடு முற்போக்கடைய வேண்டுமானால், அதன் அஸ்திவாரமான காரணங்களையெல்லாம் கவனிக்காமல், மக்களுடைய மதியீனத்தையும் பகுத்தறிவற்றத் தன்மையையும் ஆதரவாய் உபயோகித்துக் கொண்டு, வெளிநாட்டுத் துணியை மறியல் செய்வதாலும், கதரை வாங்கிக் கட்டுவதாலும், கள்ளுக் கடைகளை மூடி விடுவதாலும், பொருளாதாரத் துறையை சரிப்படுத்திவிடலாம் என்று சொல்லுவது ஒரு நாளும் நாணயமானதும், அறிவுடைமையானதோ, காரியத்தில் பயன் கொடுக்கக் கூடியதோ என்பதாகச் சொல்லிவிட முடியாது.

(‘குடி அரசு' இதழில் 13.9.1931 அன்று எழுதிய தலையங்கம்)

http://www.keetru.com/rebel/periyar/7.php

நம் நாட்டு மாணவர்கள் கல்விப் படிப்பினால் எந்தவிதமான பகுத்தறிவையும் எதையும் ஆராய்ந்து அறியும்படியான தன்மையையும் அடைய முடிவதில்லை. அவர்கள் படிக்கின்ற படிப்பினால் பிற்கால வாழ்க்கையைத் தரித்திரமின்றி நடத்த வேண்டும். அதற்காக, ஏதாவது உத்தியோகத் துறையிலோ, வேறு பணம் சம்பாதிக்கின்ற வழியிலோ பயன்பட வேண்டும் என்பதற்காகவே படிக்கிறார்கள். பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைக்கு அறிவு வளர வேண்டும் என்ற காரணத்திற்காகப் பள்ளிக்கு அனுப்புவதில்லை; படித்துப் பட்டம் பெற்று வந்ததும் ஜீவனத்துக்கு வேண்டிய முறையில் எங்காவது உத்தியோகம் கிடைக்குமா என்ற நோக்கத்தோடேயே பெற்றோர்கள் முயற்சிக்கிறார்கள்.

ஆகையால், அவர்கள் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் கூறுகின்ற ஒவ்வொன்றையும் அப்படியே மனப்பாடம் செய்து, அதையே பிறகு அவர்கள் கேட்கும்பொழுது சொல்லுவதாலும், எழுதுவதாலும் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். இந்த முறையில் ஒரு மாணவன் எவ்வித உயர்ந்த பட்டத்தை அடைந்த படிப்பாளி என்று கூறப்பட்டாலும், அவனுக்குப் போதிய பொது அறிவும், உலகியலில் தகுந்த ஞானமும் அடைந்தவனாகக் கருதப்பட மாட்டான். ஆசிரியர் சொல்லுவதைத்தான் கேட்க வேண்டும்; புத்தகத்திலுள்ளதைத்தான் மனப்பாடம் செய்து திரும்பவும் ஒப்புவிக்க வேண்டும் என்பது, நம் நாட்டுக் கல்வி முறை. இக்கல்வி முறையினால் மாணவர்களுக்கு அறிவு புகட்டப்படுவதால் அவர்கள் பிற்காலப் பழக்க வழக்கங்களுக்கும், நல்லொழுக்கத்திற்கும் தகுதியுடையவர்களõக ஆகமாட்டார்கள்.

ஆனால், பலர் பலவிதமாக அறிவு, ஞானம் என்பதைக் கருதுகிறார்கள். பெரும்பாலோர் ஞானம் என்பதும், அறிவு என்பதும் கடவுளைக் காண்கிறதும், மோட்சத்தை அடைவதும்தான் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் குழந்தையிலிருந்தே நம் பிள்ளைகளுக்கு ஊட்டப்பட்டு வருவதால், மேன்மேலும் ஒரு மாணவன் தெளிவற்றவனாகவே ஆக்கப்படுகிறான். பொதுவாகவே மாணவன் அதற்கு இடம் கொடுக்காமல் தன்னை இன்னான் என்றுணர்ந்து "நம் பருவம் எதையும் அறிந்து கொள்ளுகின்றதும், தெரியாதவைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறதுமான மாணவப் பருவம்' என்பதை உணர வேண்டும். இவ்வித எண்ணமுள்ள மாணவன்தான் பிற்காலத்தில் எதையும் அறிந்த அறிவாளியாக விளங்க முடியும்.

மேல்நாட்டு மாணவர்கள் எல்லோரும் இவ்வித எண்ணம் கொண்டவர்களாக இருப்பதாலும், அவர்களுக்கு இந்தப்படியே பயிற்சி அளிப்பதாலும்தான் அவர்கள் எதையும் ஆராயும் தன்மையுள்ளவர்களாகவும், மென்மேலும் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு இது ஏன்? எப்படி? எதற்காக? இதனால் என்ன செய்ய முடியும்? என்று இப்படிப் பலவிதமான கேள்விகளுக்குப் பதில் தெரிந்து கொண்டே பார்த்ததால் இன்றைக்கு அவர்கள் அறிவாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும் விளங்குகிறார்கள். மற்றும் பல பொது விஷயங்களிலும் நம் நாட்டு மக்களைப் போல் இல்லாது, எவ்விடத்திலும் பிறருடன் நன்முறையில் பழகுகிறார்கள். ஆனால், நம் நாட்டு மாணவர்களுக்குப் பொது அறிவைப் புகட்டுவதற்கு வேண்டிய சாதனங்கள் ஒன்றும் இல்லாததாலும், நம் நாட்டுக் கல்வி முறையில் இவை கற்பிக்கப்படாததாலும் அவர்கள் வயதுவந்தவர்களானதும் பொது இடங்களிலும், உலகத்தோடும் நன்முறையில் பழகுவது கிடையாது. புகைவண்டி நிலையம் சென்றால், எவன் ஒருவன் முதலில் டிக்கட் வாங்குகிறானோ, அவன்தான் சமர்த்தன் என்று புகழப்படுகிறான். புதிய சினிமா இன்றுதான் முதலில் வெளியிடப்படுகிறது என்றால் அன்றைக்கு படத்திற்கு முதல் டிக்கட் வாங்குகிறவன் அதிபராக்கிரம புத்திசாலி என்று போற்றப்படுகிறான். ஏதாவது ஒரு உண்மையை மறைக்க ஆயிரம் பொய்களைக் கூறித் தப்பித்துக் கொண்டால் அவன் அறிவிற் சிறந்தவன்; அவன் கூறியது பொய்யானாலும் தன் புத்தியின் யூகத்தால், வெகு சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டான் என்றுதான் கூறுவர்.

நன்னடத்தை என்பது என்னவென்று பார்த்தால் ஒரு மனிதனிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்களோ, நீங்கள் மகிழ்ச்சியடையவும், திருப்தியடையவும் அவன் என்ன செய்யவேண்டுமோ, அதே முறையில் நீங்களும் பிறரிடம் பழகும்போது அவர்களுக்கு மகிழ்ச்சியையும், திருப்தியையும் உண்டாக்கும்படியான வழியில் நடந்து கொள்வதாகும். உங்களிடம் ஒருவர் நடந்து கொள்வதிலிருந்து உங்களுக்குக் கஷ்டத்தையும், மனக்கலக்கத்தையும் அதிருப்தியையும் உண்டாக்குகிற முறைகள் எவை எவையென்று தோன்றுகிறதோ, அவையவைகளை விட்டுவிட வேண்டும். இது ஒரு சுலபமான கருத்து. இதை யாவரும் கைக்கொள்ளுவதால் நல்லறிவும், பொது அறிவும் அடைந்தவர்களாகலாம்.


(7.11.1954 அன்று திருச்சியில் ஆற்றிய சொற்பொழிவு ‘விடுதலை' 12.11.1954)

http://www.keetru.com/rebel/periyar/8.php

சாதியைக் காப்பாற்றும் பலசாதி அபிமானிகளே! ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள், 4,000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு சாதியும், மற்றொரு சாதியும் மாறிமாறிக் கலந்ததால் ஏற்பட்டது என்று குறித்தும், அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது, தங்களை ‘வேளாளர்' என்று சொல்லுபவர்களில் ஒரு சிலர் மேற்படி சாதிக் கிரமத்தை அதாவது ‘ஆதிசாதி' என்பவைகளான பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக் கொண்டு தங்களை மாத்திரம் ‘சற்சூத்திரர்' என்று அழைத்துக் கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக் கிரம வார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொள்கின்றனர்.

அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்கு ஆகப் பிரித்து அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்தனவென்றும், அவற்றிலும் தாங்கள் நாலாம் சாதி என்றும், ஒரு கற்பனையைக் கற்பித்துக் கொண்டு அப்படிப்பட்டவர்களான தாங்கள் நால்வருக்கும் தொண்டு செய்ய அடிமையாய் இருக்க வேறு பல சாதிகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள்தான் "பள்ளு, பறை பதினெட்டுச் சாதிகள்' என்பது என்றும் ஒரு புதிய ஏற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில் திருப்தி அடைந்து வருகிறார்கள்.

அந்தப்படிக் கூறப்படும் "பள்ளு, பறை பதினெண் குடிமக்கள்' என்பவர்களைக் குறிக்கும் முறையில் பணி செய்யும் பதினெண்வகைச் சாதியார் என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் இலை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணெய் வாணிகன், ஒச்சன், கல்தச்சன், கன்னான், குயவன், கொல்லன், கோயிற்குடியன், தச்சன், தட்டõன், நாவிதன், பள்ளி, பறையன், பாணன், பூமாலைக்காரன், வண்ணான், வலையன் என்று அகராதியில் உள்ளது.

ஆனால், இதே பதினெண் மக்களை "அபிதான÷காசம்' என்னும் ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படி குறிக்கின்றது என்னவெனில் ஏவலாள்களாக சிவிகையர், குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர், திமிலர், கரையார், சான்றார், சாலியர், எண்ணெய் வாணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர் எனப் பதினெண் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.

மற்றபடி, இவற்றிற்கு எவ்வித தத்துவார்த்தம் சொல்லுவதானாலும் அதை ­டர்கள் முன்னால் மாத்திரம் சொல்லிக் கொள்ளக்கூடுமே தவிர, சாதிக்கும் சாதியைக் கற்பித்த மதத்திற்கும், இவ்விரண்டிற்கும் ஆதாரமான வேதம், சாஸ்திரம், தர்மம் என்று சொல்லப்பட்ட ஆதார நூல்களில் இருக்கும் உண்மைகளுக்கும் எவ்வித ஆட்சேபணையும் எவ்வித தத்துவார்த்தமும் சொல்ல முடியாது என்பதையும் யாதொரு பதிலும் சொல்லாமல், பேசாமல் இழிவை ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டியதாகும்.

இவை ஒருபுறமிருக்க, இந்தச் சாதிக் கிரமத்தில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் யோக்கியதைகளையும் உரிமைகளையும் பார்ப்போமானால், கடுகளவு பகுத்தறிவோ, மானமோ இருக்கின்ற மனிதர்கள் ஒரு காலமும் தங்கள் சாதிப்பேரைச் சொல்லிக் கொள்ள முடியாதபடியும், அதைக் கனவிலும் நினைக்கமுடியாத படியும் இருப்பதை நன்றாய் உணரலாம்.

எந்தக் காரணத்தாலோ இந்துமத தர்மத்தை கடைப்பிடித்துத் தீர வேண்டியதல்லாத ஓர் ஆட்சி, இந்த நாட்டுக்கு ஏற்பட்டதன் பலனால் நம்மில் சிலராவது இந்தத் தர்மங்கள் முழுவதும் வலியுறுத்தப்படாமல் இருக்க முடிகின்றது. ஆனால், இந்த நிலையாலும் நாம் மறுபடி நமது சாதியையும் மதத்தையும் காப்பாற்றும் கவலைகொண்டு, ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்கு என்று மதத்தையும் சாதியையும் சொல்லி அவற்றை நிலைநிறுத்திக் கொண்டே போவோமானால், பின்னால் நமது நிலை என்னாகும் என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இந்துக்கள் என்பவர்களுக்குள் சாதிப் பிரிவு இருக்கும்வரை உயர்வு தாழ்வு போகாது என்பது கண்டிப்பாகும்.

இந்தியாவில் இந்துக்களில் 1000க்கு 999 பேருக்குக் குறையாமல் சாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டுமென்ற எண்ணமில்லாதவர்களாய் இருப்பதோடு, ஒவ்வொருவரும் மேல்சாதி ஆகவேண்டுமென்று ஆசைப்படுபவராகவும் தனக்குக் கீழ் பல சாதிகள் இருக்க வேண்டுமென்ற உணர்ச்சி உள்ளவர்களாகவுமே இருக்கின்றார்கள். இன்றைய தினம் இந்த நிலையில் இருக்கும் பல சவுகரியங்களை ஒழித்துவிட்டு, வருணாசிரமக் கொள்கையும், சாதி ஆதிக்கமும் உடையவர்களான மக்களிடம் ஆட்சி வந்துவிட்டால், பிறகு எவ்விதத்திலும் சாதிக் கொடுமைகள் ஒழியாது.

(‘குடி அரசு' தலையங்கம் 30.11.1930)

http://www.keetru.com/rebel/periyar/9.php

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும். இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.

ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.

(சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று ஆற்றிய உரை. ‘குடி அரசு' 2.8.1931)

http://www.keetru.com/rebel/periyar/10.php

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE