Language Selection

சமூகவியலாளர்கள்

எனக்கு, "ஏதாவது எழுதலாமா" என்ற உணர்ச்சி வந்தது. உடனே, "என்ன எழுதலாம்?" என்று யோசித்தேன். காகிதம், பேனா எடுத்து எழுத ஆரம்பித்தேன்'' ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன்?'' என்பது பற்றி எழுதத் தோன்றிற்று."ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன்?'' என்று எழுதுகின்ற நான், "நான், ஏன் காங்கிரசில் சேர்ந்தேன்?" என்பதைத் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். அதற்கு முன், எனது சரித்திரத்தையும் ஒரு சிறிது எடுத்துக் காட்டுவது அவசியமாகும்.

 

நான் 1879-ல் பிறந்தவன். 1887 வரையில், நான் ஒரு வீட்டுக்கு - குழந்தைப் பருவத்திலேயே - சுவீகாரமாய், வாய்ப் பேச்சில் கொடுக்கப்பட்டு, அங்கு வளர்ந்து வந்தவன். காரணம் என்னவென்றால், என் தமயனார் பெரியவர்; அவர் காயலாக் குழந்தை; தபசு செய்து வரம் இருந்து பெற்ற பிள்ளை; அதைக் காப்பாற்ற, என்னைச் சுவீகாரம் கொடுத்துவிட்டார்கள்.என்னை சுவீகாரம் பெற்றவள், என் தகப்பனாருக்கு - சிறிய தகப்பனார் மனைவி; சிறிது பூமியும், ஒரு வீடும், கொஞ்சம் பணமும் உடையவள்; அன்றியும், அவள் ஒரு விதவை. அந்த அம்மாள் என்னை வெகு செல்லமாய் வளர்த்து வந்தாள்.நான், சிறிது `சுறுசுறுப்பான சுபாவமுள்ள' சிறுவன்; அதோடு வேடிக்கையாக, மற்றவர்கள் சிரிக்கும் படி பேசுகிறவன். சிரிக்கும் படி பேசுவது இரண்டு விதம். ஒன்று பேச்சில் வேடிக்கை, அதிசயக் கருத்து இருந்து சிரிக்கப்படுவது ஒருவிதம்; மற்றொன்று மானாவமானமில்லாமல் சங்கதிகளை கீழ்த்தரத்தில் பேசுவதில் சிரிக்க நேருவது மற்றொரு விதம்.நான் அதிகமாக, வேடிக்கைக் குறும்புத்தனமாய் சங்கதி பேசுவது வழக்கம், ஆதலால், அது இரண்டாம் தரத்தைச் சேர்ந்தது. வெகு தாராளமாக, கொச்சையாக சங்கதிகளை, பச்சையாகப் பிரயோகம் செய்யும் பழக்கம் என்னிடம் உண்டு. இதை ரசிக்கிறவர்களே கூட்டமாக என் சுவீகார வீட்டில் காணப்படுவார்கள்.

 

சுவீகாரத்தாய் என்னை அடக்கினாலும், மற்றவர்கள், `சிறு குழந்தைகள், அப்படித்தான் இருக்கும்; அடிக்காதே' என்பார்கள். நான் செல்லமாக வளர்க்கப்படுகிறேன். ஆதலால், அதிகமாக அடிக்கமாட்டார்கள்.என்னைப் பார்க்க என் தகப்பனார் அடிக்கடி வீட்டிற்கு வருவார். அவரிடம் இதைச் சொல்லுவார்கள். அவருக்கு கோபமும் சிரிப்பும் வரும். ஏனென்றால், என் பேச்சு ஆபாசமாயிருந்தாலும், அதில் சிறிது அதிசயம், அர்த்தபுஷ்டி, என்பதும் இருக்குமாம். அதனால், உள்ளே சிரித்துக் கொண்டே என்னைக் கண்டித்துவிட்டுப் போய் விடுவார்.

இந்த நிலையில் என்னை படிக்கப் போட்ட பள்ளிக் கூடம், ஒரு ஓலைச்சாலைக் குடிசு. 16 - அடி நீளம், 8 - அடி அகலம் இருக்கும். அதில் சுமார் 50- பிள்ளைகள் படிப்பார்கள். 5- வயது முதல் 13- வயது வரை வயதுள்ளார்கள். வீட்டில் காலித்தனம், தெருவில் வம்பளப்பு - கலகம், பள்ளியில் சுட்டித் தனம், வளர்ப்பில் செல்லம் (செல்வம்) இவைகளால் நான் கற்றது, வாயாடித் தனம்தான் என்று சொல்வார்கள்.இந்த வாயாடித்தனம், வெட்கமில்லாமல் - பயம் இல்லாமல் - செல்லவழி கிடைத்து விட்டால், அது எங்கு போய் நிற்கும்? சொல்ல வேண்டுமா? என் தமையனார் நல்ல வளப்பம் பெற்று, உடல் நலம் அடைந்த உடன் என் தாயார் பிடிவாதத்தால், என் சுவீகாரம் ரத்தாக்கப்பட்டு, நான் தகப்பனார் வீட்டிற்கே அழைத்துக் கொள்ளப்பட்டு - அங்கு சென்றதும் இரண்டொரு வருடம் முனிசிபல் ஆரம்பப் பள்ளியில் படிக்க வைக்கப்பட்டு - அங்கும் வாத்தியாரால் என்னை வைத்து சமாளிக்க முடியாமல் - நாலாவது வகுப்பு `ப்ரைமரி பரிஷை' அதாவது, ஒரு ரூபாய் பணம் கட்டி, அம்மை குத்திக் கொண்டு பரீட்சை எழுதுவது, பெரிதும் சிலேட்டிலேயே, பரீட்சை எழுதிக் காட்ட வேண்டும்.இந்த பரீட்சை பாசானால் கணக்குமணியம், அட்டெண்டர் முதலிய வேலைக்குப் போகலாம்.

 

நான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்ததால் அங்கு எனக்கு செவுடிப் (தமிழ்க் கணக்கு) பாடமிருந்தாலும் முனிசி பாலிடி பள்ளியில் 4-வது பரீட்சை பாசாகி விட்டதாலும், வாத்தியாருக்கு என்னைப் பள்ளியில் வைத்து சமாளிக்க முடியாமற் போனதாலும், என் தகப்பனாருக்கு, என்னை மேலும் படிக்க வைக்க முடியாமல், `இதுவே போதும்' என்று கருதி எனது 10 - அல்லது 11- வது வயதில் பள்ளியை நிறுத்தி, தன் மண்டிக் கடைக்கு - மூட்டைகளுக்கு விலாசம் போடவும் வண்டிச் சரக்குகளுக்கு விலை ஏலம் கூறவுமான வேலையில் போட்டு விட்டார்கள்.

 

எங்கள் கடைக்கு, அந்தக் காலத்தில் "குறைந்தது தினம் 50 வண்டி சரக்குகளுக்கு குறையாமல் 100 -வண்டி வரையில், மஞ்சள், மிளகாய், தானியப்பயிர் வகைகள், எண்ணெய், கைராட்டை நூல் வெல்லம், கருப்புக் கட்டி, (பனை வெல்லம்), முதலியவைகள் வரும்.இந்த வண்டிகளுக்கு வண்டிக்கு இரண்டு பேருக்குக் குறையாமல் வருவார்கள். வியாபாரத்திற்கு, வாங்குவதற்கும் பலர் வருவார்கள். எனக்கு இந்த வெளியூரிலிருந்து வருகிறவர்களிடம் பேசுவதும், அவர்களுக்கு வேண்டிய சில்லரைச் சவுகரியம் செய்து கொடுப்பதும் எனது வேலையாக இருந்தது.

 

நான் மண்டி முதலாளி மகன் ஆகிவிட்டதால், என்னிடம் அவர்களுக்கு ஒரு பற்றுதல் ஏற்படுவது இயற்கை; ஆதலால், நேரப்போக்காகவும் இருந்ததால் அங்கும் பேச்சு வளர்ச்சியடைய ஆரம்பித்து விட்டது. இந்தப் பேச்சு வளர்ச்சியடைய, அடைய, தர்க்கவாதமும் கூடவே வளர்ச்சியடைய ஆரம்பித்து விட்டது.`இயற்கை வாயாடிக்கு சிறிது சட்ட ஞானமும் இருந்தால், அவன்தான் கெட்டிக்கார வக்கீல்' என்று சொல்லப்படுவது வழக்கம். அதிலும், கொஞ்சம் பகுத்தறிவு உணர்ச்சியிருந்தால், உண்மையிலேயே கெட்டிக் காரனாவான். யோக்கியமானவனா, அயோக்கிய மானவரை என்பது வேறு விஷயம்; அவன் நிச்சயமாக கெட்டிக்காரப் பேச்சாளியாவான்.எனக்கு, எப்படியோ பேசுவதில் ஆசை ஏற்பட்டு, இந்தப்படி கெட்டிக்காரப் பேச்சாளியாக நான் ஆக வேண்டுமென்பதற்காக, `வேண்டுமென்றே' குயுக்தி, தர்க்கம், மனதறிந்து எதிர்ப்புப் பேசுவது இந்த மாதிரியாக பேச ஆரம்பித்து, பிறகு இப்படிப் பேசுவது என்பது எனக்குச் சுபாவமாக ஆகிவிட்டது.

 

எங்கள் கடையில் நான் இப்படிப் பேசுவது தவிர, எங்கள் வீடு அந்தக் காலத்தில் அதாவது 1890-ல் சிறிது பணக்கார வீடு என்று ஆகி இருந்ததாலும், வைணவ மத விசுவாசமுள்ள பாகவதர் வீடாகவும் இருந்ததால், கோயில், உற்சவம் முதலியவைகளில் சிறிது சிரத்தை எடுத்து செலவு செய்யும் வீடாகவும் இருந்ததால், சதா சந்நியாசிகள், மதபக்தர்கள், பாகவதர்கள், புராணீகர்கள். வித்வான்கள், சொந்தமாக வந்து பயன்பெற்றுப் போகவும், 4 நாள் 8 நாள் தங்கிப் போகவுமான வீடாகவும் ஆகிவிட்டதால், இவர்களிடமும் வம்பளத்தல், தர்க்கம் பேசுதல், ஆகிய வசதி அதிகமாகி விட்டது.

 

எனவே கடையில் கிராமத்தாருடனும், சந்தை வியாபாரிகளிடமும் பேசுவது மாத்திரமல்லாமல், வீட்டில் மத பக்தர்கள், வித்வான்களிடமும் பேசுவதுமாக நேரிட்டு விட்டதால் பின் கண்ட இவர்களிடம் பேசுவது மத எதிர்ப்பு, சாஸ்திர எதிர்ப்பு, புராண எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு என்கிற அளவுக்குப் போய்விட்டது.இதுவே, என்னை சாதி, மதம், கடவுள் என்கின்ற விஷயங்களில் நல்ல முடிவு ஏற்படும்படி செய்துவிட்டது. இதன் காரணமாக எனக்குப் பார்ப்பனீயத்தில் ஒரு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. பார்ப்பனர் உயர் வாழ்வில் எனக்கொரு பொறாமையும் ஏற்பட்டு விட்டது; என்றாலும், பார்ப்பனருடன் நெருங்கிப் பழகுவதில் சிறிதும் எனக்கு அசௌகர்யமோ, பார்ப்பனர் என்னைப்பற்றி தவறாக நினைக்கும் தன்மையோ ஏற்பட்டதில்லை என்றே சொல்வேன். சாதாரணமாக எனக்கு 1900 - த்திலேயே ‘பார்ப்பனர்-தமிழர்' என்ற உணர்ச்சியுண்டு. பேசும் போது, இந்தப் பிரிவு எனக்கு அடிக்கடி ஏற்படும்; என்றாலும், நான் பார்ப்பனருக்கு நல்ல பிள்ளையாகவே இருந்தேன். என் தகப்பனார், பார்ப்பனருக்கு ரொம்பவும் தர்மம் செய்வார்; அடிக்கடி சமாராதனை செய்வார். இது எனக்கு வருத்தமாக இருக்குமென்றாலும், பார்ப்பனர்கள் நான் பேசுவதைக் குற்றமாக எண்ணமாட்டார்கள்.

 

(தந்தை பெரியார் - நூல்: "தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை" பக்கம் 1-4 )

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_15.html

உங்களுடைய சங்கத்தின் ஐந்தாவது நோக்கம் மததர்ம பரிபாலனங்களை ஒழுங்காக நடைபெறச் செய்தல் என்பது. இது தற்காலம் நாடார் சமூகத்திற்கு மாத்திரமல்லாமல் ஹிந்து மதத்திற்கே இந்தியாவிற்கே ஏன் உலகத்திற்கே மிகவும் அவசியமானது. கடவுள் என்றால் என்ன? குறிப்பாகவும் சிறப்பாகவும் கடவுள் என்பது என்ன என்பதைப் பற்றியும், மதம் என்பது என்ன என்பதைப் பற்றியும், தர்மம் என்பது என்ன என்பதைப் பற்றியும், பரிபாலனம் என்பது என்ன என்பதைப் பற்றியும் ஹிந்துக்கள் என்போர்களில் ஆயிரத்திற் கொருவருக்குக் கூட குறைந்த அளவு ஞானமுமில்லாமலே இருக்கிறது. இதைப்போல ஒரு பெரிய ஜன சமூகத்திற்கு கேடான காரியம் வேறெதுவும் இல்லை. நம்மில் அநேகர் கடவுள் என்றால் என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

கடவுள் நம்மைப் போல் மனித உருவத்தில் இருப்பதாயும், அதற்கு பெண்டாட்டி, பிள்ளை, தாய் , தகப்பன், வீடு வாசல், சொத்து சுகம் உண்டென்றும்; அதற்கும் கல்யாணம் , ருது, சாந்தி, படுக்கை, வீடு, சீமந்தம், பிள்ளைப்பேறு உண்டென்றும் இப்படி ஆயிரக்கணக்கான கடவுள் ஆயிரக்கணக்கான பெயரினால் இருக்கிறதாகவும் அதற்கு அபிஷேகமோ, பூஜையோ, தீபாராதனையோ, உற்சவமோ செய்வதுதான் பக்தி என்பதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஹிந்து மதம் எது? அதுபோலவே மதம் என்பதையும் நெற்றியில் நாமமோ, விபூதியோ, கோபியோ, சந்தனமோ பூசுவதுதான் ஹிந்துமதம் என்றும், ஒருவரை ஒருவர் தாழ்ந்த ஜாதி உயர்ந்த ஜாதி என்று சொல்லுவதைத் தான் ஹிந்து மதம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி சுவாமிகளுக்கு கோயில் கட்டுவதையும், உற்சவம் நடத்துவிப்பதையும், இந்த உற்சவத்திற்கு வரும் ஜனங்களுக்கு மடம் கட்டுவதும், சத்திரம் கட்டுவதும், சாப்பாடு போடுவதும் தர்மம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வித காரியத்தை பிரசாரம் செய்வதையும் இவ்வித காரியங்களை நிர்வகிப்பதையும் இதற்காகப் பொது ஜனங்கள் பொருளை சிலவு செய்வதையும் பரிபாலனம் என்று நினைக்கிறார்கள்.

 

கடவுளும், மதமும் ஹிந்து சமூகத்திற்கு அடிப்படையான குற்றம் அதாவது அஸ்திவாரத்திலேயே பலவீனம், நாம் கடவுளையும் மதத்தையும் அறிந்திருக்கும் பான்மையே தான். இந்தப் பான்மையுள்ள சமூகம் உருப்படியாவதற்கு மார்க்கமேயில்லை. தொட்டதற்கெல்லாம் 'கடவுள் செயல்' என்பதும் நமது தேவைகளையெல்லாம் நமது பிரயத்தனமில்லாமல், கடவுளை ஏமாற்றி அடைந்துவிடலாம் என்கிற பேராசைப் பயித்தியமும் நம்மைவிட்டு நீங்க வேண்டும். கடவுள் கை, கால், கண், மூக்குடன் மனிதர்களைப்போல் எங்கேயோ ஓரிடத்தில் இருக் கிறார், அவரை நினைத்தாலோ, பணிந்தாலோ, தேங்காய் பழம் உடைத்து பொங்கல் வைத்து பூஜை செய்தாலோ, பூசாரிக்குப் பணம் கொடுத்தாலோ மனிதனாய்ப் பிறந்ததற்கு செய்ய வேண்டிய கடன் தீர்ந்துவிட்டது, மனிதன் செய்யும் தப்பிதம் எல்லாம் தீர்ந்து விட்டது என்று எண்ணுகிற எண்ணத்தைப்போல் ஒரு முட்டாள்தனமான எண்ணம் வேறொன்றுமேயில்லை. மனிதர்கள் இவ்வளவு அக்கிரமங்கள் செய்யக் காரணமே, கடவுளை சரியானபடி உணராததும் உணர்ந்திருப்பதாய் நினைக்கும் பலர், கடவுளை வணங்கி மன்னிப்புக் கேட் டால் மன்னித்துவிடுவார் என்கிற நம்பிக்கையும்தான்.

 

கடவுள் ஒருவர் இருக்கிறார், அவர் எல்லாவற்றையும் அறிந்துகொண்டு இருக்கிறார் என்று எண்ணுகிற மக்களிலேயே 1000-தில் ஒருவன் கூட கடவுள் கட்டளைக்குப் பயந்து நடப்பது அருமையாய்த்தான் இருக்கிறது. இவற்றிற்குக் காரணம் இயற்கைக்கு விரோதமான கட்டளைகளையும் உண்மையான கடவுள் தன்மையையும் அறியாததேதான். கடவுளின் கட்டளை எது? கடவுள் கட்டளை என்று சொல்லுவது ஒவ்வொரு தேசத்திற்கும் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு விதமாக இருந்து வருவதை நாம் காண்கிறோம். இவைகளை எப்படி கடவுள் கட்டளையாக மதிக்கப்படும். அதுபோலவே பாவ புண்ணியம் என்பது தேசத்திற்கு ஒரு விதமாகவும் மதத்திற்கொருவிதமாகவும் ஜாதிக்கொரு விதமாகவும்தான் கருதப்படுகிறது. நமது கலியாணங்களிலேயே மதத்திற்கு மதம் வித்தியாசம், ஜாதிக்கு ஜாதி வித்தியாசம். சிலர் தனது சிறிய தகப்பனார், பெரிய தகப்பனார் புத்திரியை மணக் கிறார்கள்; சிலர் அத்தை மாமன் புத்திரியை மணக்கிறார்கள்; சிலர் யாரையும் மணக்கிறார்கள்.

 

ஆகார விஷயத்திலோ சிலர் பசுவை உண்ணுவது பாவம் என்கிறார்கள்; சிலர் பன்றியை உண்பது பாவம் என்கிறார்கள்; சிலர் கோழியை உண்பது பாவம் என்கிறார்கள்; ஜெந்துக்களிலேயே சிலர் பசுவை அடித்து துன்புறுத்தி வேலை வாங்கலாம், ஆனால் பாம்பை அடிப்பது பாவம் என்கிறார்கள்; சிலர் எந்த ஜீவனையும் வதைக்கக் கூடாது என்கிறார்கள்; சிலர் எல்லா ஜீவனும் மனிதன் தன் இஷ்டம்போல் அநுபவிப்பதற்குத்தான் படைக் கப்பட்டது என்கிறார்கள். இந்த நிலையில் எது உண்மை? எது கடவுள் கட்டளை? எது பாவம்? என்று எப்படி உணர முடியும். இவற்றைப்பற்றி எவராவது ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் உடனே அவரை நாஸ்திகர் என்று சொல்லுவதும், இதெல்லாம் உனக்கு எதற்காக வேண்டும்? பெரியவர்கள் சொன்னபடியும் நடந்தபடியும் நடக்கவேண்டியதுதானே என்றும் சொல்லிவிடுவார்கள்.

 

பெரியவர்கள் யார்? என்று யோசிக்கப்போனால் அதிலிருக்கும் கஷ்டத்திற்கு அளவே இல்லை. அன்றியும் அவர்கள் சொன்னதையும் நடந்ததையும் கவனிக்கப் போனால் அதிலுள்ள கஷ்டத்திற்கும் வியவகாரத்திற்கும் முடிவேயில்லை. உதாரணமாக சிலர் 'வேதம்' என்று ஒன்றைச் சொல்லி அதன்படி எல்லோரும் நடக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அதில் என்ன சொல்லி யிருக்கிறது நான் பார்க்கலாமா என்றால், அது கடவுளால் சொல்லப் பட்டது; அதை நீ பார்ப்பது பாவம்; நான் சொல்லுவதைத்தான் நம்ப வேண்டும் என்பார்கள். உலகத்தில் எத்தனைக் கடவுள் இருப்பார்கள். ஒரு கடவுள் தானே! அவர் சொல்லியிருப்பாரானால் அது உலகத்திற்கெல்லாம் ஒப்புக் கொள்ளப்பட்டதாயிருக்க வேண்டாமா?

 

அப்படியானால், கிருஸ்து, மகம்மது முதலிய மதங்களும் இந்தியா, தவிர மற்ற தேசங்களும் இதை ஒப்புக் கொள்ளும்படி கடவுள் ஏன் செய்யவில்லை? ஆனதனால் இது கடவுள் சொன்னார் என்பது பொய் என்று யாராவது சொன்னால் உடனே அவனை 'வேதப் பிரஷ்டன்' என்று சொல்லிவிடுவார்கள். இம்மாதிரி மூடுமந்திர மானதும் இயற்கைக்கும் அநுபவத்திற்கும் நாணயத்திற்கும் விரோதமானதுமான கொள்கைகள் நமது நாட்டில் ஹிந்து மதத்தின் பெயரால் இருந்துகொண்டு ஒரு பெருஞ் சமூகத்தையே தேய்ந்து போகும்படி செய்வதோடு இதன் பரிபாலனம் என்னும் பெயரால் தேசத்தின் நேரமும் அறிவும் பொருளும் அளவற்று அநாவசியமாய்ச் சிலவாகியும் வருகிறது. மதத்திற்கொரு கடவுளா? மதத்திற்கொரு கடவுளா? ஜாதிக்கொரு கடவுளா? மதத்திற்கொரு புண்ணிய பாவமா? கடவுளுக்கும் மோட்சத்திற்கும் நரகத்திற்கும் வேறு ஒரு உலகமிருக்கிறதா? ஒருக்காலும் இருக்கவே முடியாது. பெரியவர்கள் கோவிலில் சுவாமி கும்பிடும்போது கட்கத்திலிருக்கும் குழந்தை எப்படி ஒன்றும் அறியாமலும், மனதில் ஒன்றும் நினைக்காமலும் தானும் கைகூப்பி கும்பிடுகிறதோ, அதுபோலவே நமக்கும் தெய்வம்-மதம்-தர்மம் என்கிற சொற்கள் மற்றவர்கள் சொல்லுவதைக்கேட்டு அர்த்தமில்லாமல் நமக்குள் பதிந்துவிட்டன.

 

இது போலவே பக்தி- தொண்டு - அஹிம்சை என்னும் பதங்களும் அர்த்தமில்லாமலே வழங்கப்படுகின்றன. யோசித்துப் பார்ப்போமேயானால் நம்மிடையில் உள்ள மக்களிடம் காட்டும் அன்புதான் நாம் பக்தி செய்யத்தக்க கடவுள் ; அவர்களுக்குச் செய்யும் தொண்டுதான் கடவுள் தொண்டு; அம்மக்களின் விடுதலை தான் மோட்சம்; அச்ஜீவன்களிடம் கருணை காட்டுவதும் அவைகள் வேதனைப்படாமலிருப்பதும்தான் அஹிம்சை. அஹிம்சை எது? மாமிசம் சாப்பிடுவதில்லை என்பது மாத்திரமே அஹிம்சை யாகாது. பகுத்தறிவுள்ள மக்களை கஷ்டப்படுத்தாமல், அவர்கள் மனவேதனை அடையச் செய்யாமல் இருப்பதும், அவர்களுடைய கஷ்டத்தையும் அடிமைத் தனத்தையும் நீக்க உழைப்பதும்தான் அஹிம்சையாகும். மாட்டு மாமிசம் சாப்பிடாமலிருந்து விட்டு, மாட்டை வண்டியில் கட்டி சுமக்கமாட்டாத பாரம் வைத்து தினம் கஷ்டப்படுத்துவது ஒருக்காலும் அஹிம்சையாகாது.

 

இப்படியே ஒவ்வொரு விஷயத்திலும் மற்றொரு ஜீவனுக்கு உபத்திரவமும் கொடுமையும் செய்யாமலிருப்பதுதான் அஹிம்சை. ஆச்சாரம் மனிதனுக்கு மனிதன் பார்ப்பது பாவம், தெருவில் நடப்பது பாவம் என்று சொல்லிக் கொண்டும் பட்டை நாமம் போட்டுக் கொண்டும் பஞ்ச கச்சம் வைத்து வேஷ்டி கட்டிக்கொண்டும் வாயால் 'ராம் ராம்' என்று ஜபித்துக் கொண்டும் இருந்தால் அது ஆச்சாரமும் பக்தியுமாய்விடுமா? சத்திரமும், சாப்பாடும் நம்மைச் சுற்றி கோடிக்கணக்கான மக்கள் குடியிருக்க நிழல் இல்லாமலும் இரண்டு நாளைக்கு ஒருவேளை கூட சாப்பிட சக்தியில்லாமல் தரித்திரத்தால் வாடிக் கொண்டிருக்கும் போது சோம்பேறிகளும், விபசாரிகளும் தங்கும்படி மடங்களும் சத்திரங்களும் கட்டுவதும், வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு பிபாயசத்திற்கு குங்குமப் "போட வில்லை", 'பொங்கலுக்குப் பாதாம் பருப்பு போதவில்லை' என்று சொல்லிவிட்டுப் போகும் தடியர்களுக்கு பொங்கிப் போடுவதும், சமாராதனை செய்வதும் தர்மமாகுமா? இவைகளை உணராமல் சுயநலக்காரர்கள் தங்கள் நன்மைக்கு எழுதி வைத்திருக்கும் ஆபாசக் களஞ்சியங்களை நம்பிக்கொண்டு நமது பொருள், நேரம், அறிவு முதலியவற்றை வீணே பாழாக்குகிறோம்.

 

ஆச்சாரியார் கொடுமை இவற்றை ஹிந்துக்கள் என்போர்களோ ஹிந்து மத ஆச்சாரியார்கள் என்போர்களோ சிறிதும் கவலையற்று தங்களது வாழ்வுக்கு இதைத் தொழிலாய் வைத்துக்கொண்டு காலங்கழித்து வருகிறார்கள். இப்படி நடந்து வருவது சில தனிப்பட்ட நபர்களுக்கும் சில தனிப் பட்ட வகுப்புகளுக்கும் அநுகூலமாயிருப்பதால் இவ்வாபாசங்களை வெளியார் அறியாமலிருப்பதற்கு அவ்வகுப்பாரின் கட்டுப்பாடான சூழ்ச்சியும் மற்ற வகுப்பாரின் அறியாமையும் உதவி செய்து வருகிறது. நமது சென்னை மாகாணத்தில் மாத்திரம் ஹிந்து மத சம்மந்தமான சடங்குகள் பெயராலும், மதப் பெயராலும், தெய்வங்கள் பெயராலும் வருஷம் 1- க்கு 10 கோடி ரூ- க்கு அதிகமாக சிலவாகி வருகிறது என்று சொல்லுவது அதிகமாகாது. அதாவது எவ்வளவு யாத்திரஸ்தலம், எவ்வளவு வேண்டுதல் ஸ்தலம், எவ்வளவு உற்சவ ஸ்தலம், எவ்வளவு மதச்சடங்குகள் இவைகளுக் கேற்படும் சிலவு, மெனக்கேடு இவைகளைக் கணக்குப் பார்த்தால் எவ்வளவு 10 கோடி ரூபாயாகும்? இதனால் என்ன பலனை அடைகிறார்கள்? மனதில் ஏற்படும் ஒரு குருட்டு நம்பிக்கையாலும் இதனால் லாபமடையும் வகுப்பார்களால் ஏமாற்றப்படுவதாலும் தானே நமது மக்கள் இவ்வித கஷ்ட நஷ்ட மெனக்கேடுகளுக்கு கட்டுப்பட வேண்டியிருக்கிறது. அல்லாமலும் இதனால் எவ்வளவு அடிமைப் புத்தி வளர்கிறது?

 

மத தர்ம பரிபாலனம் இவ்விஷயங்களையெல்லாம் ஒழுங்குபடுத்தவும் இம்மாதிரி கஷ்ட நஷ்ட மெனக்கேடுகள் ஏற்படாமலும் அவை உண்மையில் பலனளிக்கத்தக்க வழியில் உபயோகப்படவும் வேண்டிய முயற்சிகள் எடுத்துக் கொள்வதுதான் மத தர்ம பரிபாலனங்களை ஒழுங்காக நடைபெறச் செய்தல் என்பது. இவற்றை உத்தேசித்தே ஹிந்துமத பரிபாலன சட்டம் என்று சென்னை சட்டசபையில் ஒரு சட்டம் கூட நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும் அச்சட்டம் பண சம்பந்தமான வரவுசிலவுகளை தணிக்கை பார்க்கக் கூடியதாய் இருக்கிறதே தவிர நான் மேலே சொல்லியுள்ள குற்றங்களை நிவர்த்தி செய்யத்தக்கது என்று சொல்லமுடியாது. ஆனாலும் இவ்வளவாவது எவ்வளவோ சூழ்ச்சிக்கிடையில் நிறைவேற்றி முடித்தவர்களின் வீரத்தைப் போற்றாமலிருக்க முடியாது. ஆனாலும் இன்னமும் அச்சட்டத்தை ஒழிப்பதற்கு அதனால் இப்போது கொள்ளையடிக்க முடியாத ஒரு வகுப்பாரால் எவ்வளவோ காரியங்கள் நடைபெற்று வருகின்றன.

 

சிறீமான்கள் ந. சீனிவாசய்யங்கார், இ. ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள் 'சுயராஜ்யக் கட்சி' பெயரைச் சொல்லிக் கொண்டு கள்ளு நிறுத்துவதென்பதைச் சொல்லிக்கொண்டும் சட்டசபைக்கு ஆள் பிடிப்பதும் அவர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுப்பதும் இதே கருத்தைக் கொண்டுதான். நமது மதத்தின் பெயரால் நமது மக்களிடமிருந்து கோடிக்கணக்காய் வசூலாகும் பணத்திற்கு கணக்குக் கேட்பது கூட நமது ஐயங்கார் - ஆச்சாரியார் கூட்டங்களுக்கு கஷ்டமாய் இருப்பதன் காரணம் என்னவென்பதை ஊன்றிக் கவனித்தால் யாவருக்கும் அதன் இரகசியம் விளங்கும். ஆதலால் தர்ம பரிபாலன மென்பது ஒவ்வொரு மனிதனும் கவலையெடுத்துக் கொண்டு அது பிரயோஜனப் படத்தக்க வழியில் உழைக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் முக்கியமான கடமை. அப்பேர்ப்பட்ட கடமையை நீங்கள் ஐந்தாவது கொள்கையாக வைத்திருப்பதைப் பற்றி நான் மிகுதியும் போற்றுகிறேன். ஆகவே, உங்கள் சங்கம் நீடூழி வாழ்ந்து அதன் கொள்கைகள் பூராவும் நிறைவேறி தங்கள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் தக்க பலனையளிக்க எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகிறேன்.

 

(ஏழாயிரம் பண்ணையில் 16.05.1926 -ந் தேதி நடைபெற்ற பாலிய நாடார் சங்கத்தின் இரண்டாவது ஆண்டு கொண்டாட்ட சொற்பொழிவு- தொடர்ச்சி) (குடிஅரசு-30.05.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_17.html

கோவை சிறீமான் வெங்கிட்டரமணய்யங்கார் தர்மத்தின் இரகசியம் 'குடி அரசில் வெளியானதினால் சிறீமான் ஐயங்கார் முதல் பல பிராமணர்களுக்கும், அவரது தர்மத்தில் பங்கு கொண்ட - கொள்ள இருக்கும் சில பிராமணரல்லாத பத்திராதிபர்கள், பிரசாரகர்கள் என்போருக்கும் ஆத்திரங் கிளம்பிவிட்டது. தர்மத்தைப் பற்றி நமக்கு பொறாமையா? யார் தர்மம் செய்வதாயிருந்தாலும், அது என்ன தர்மமாயிருந்தாலும், பொதுவாக உண்மைத் தர்மம் என்றாலே அதை வரவேற்பார்களே தவிர எவரும் அதை வெறுக்கமாட்டார்கள். ஆனால் பொது ஜனங்களை ஏமாற்றச் செய்யும் ஒரு சூழ்ச்சிக்கு தர்மம் என்று பெயர் கொடுப்பதனால் அறிவுள்ளவன் - யோக்கியன் பொது ஜனங்கள் ஏமாறும்படி பார்த்துக் கொண்டிருக்கவேமாட்டான். அப்படிப் பார்த்துக் கொண்டிருப்பவன் கோழையும் சுயநல வாதியுமே ஆவான்.

 

கோவை ஜில்லாவில் உண்மையான தர்மம் செய்த பிரபுக்களில்லாமலில்லை. உதாரணமாக, கோவைக்கடுத்த பீளமேடு என்னும் ஊரில் சிறீமான்கள் பி.எஸ். கோவிந்தசாமி நாயுடு அன் சன்ஸ் என்கிற பிரபல நாயுடு கனவான்கள் குடும்பம் இருந்து வருகிறது. அவர்கள் தக்க செல்வமுள்ளவர்கள். 20 - லட்ச ரூபாய் மூலதனமுள்ள ஒரு பெரிய நூல் மில்லை நிர்வகித்து வருகிறார்கள். இவர்கள் பொதுஜன உபகாரத்தில் இறங்கினார்கள். 30,40 - ஆயிரம் ரூபாய் சிலவில் ஒரு பெரிய பள்ளிக்கூடம் கட்டினார்கள். அதற்கு பதினாயிரக்கணக்கான பூமி விட்டார்கள். மாணவர்களுக்கு விடுதி (ஹாஸ்டல்) ஏற்படுத்தினார்கள். இளைஞர்கள் விவசாயமும் கைத்தொழிலும் கற்க ஒரு தொழிற்சாலை யேற்பாடு செய்தார்கள். இதற்காக தங்கள் குடும்ப சொத்தில் ஒரு பாகத்தையும் தங்களுக்கு மில்லில் வரும் வருஷவாரி வரும்படியில் ஒரு பாகத்தையும் இத்தர்மத்திற்கு எழுதி வைத்தார்கள்.

 

இப்பொழுதும் கோயமுத்தூருக்கு யார் போனாலும் இவற்றைத் தெரிந்து கொள்ளலாம். இதில் இரகசியம் ஒன்றுமில்லை. இந்த தர்மம் தாலுகா, ஜில்லா போர்டு எலெக்ஷனுக்காகவோ சட்டசபை எலெக்ஷனுக்காகவோ அவர்கள் செய்யவில்லை. இத்தர்மம் செய்ததைக் கூலி கொடுத்து ஆள் வைத்து விளம்பரப்படுத்தவில்லை. அவர்களது தர்மமும் தானாகவே வருஷக் கணக்காய் நாளுக்கு நாள் விருத்தியாகிக் கொண்டே வருகிறது.

 

சமீபத்தில் சென்னிமலை வேட்டுவபாளையம் பூசாரி என்கிற ஒரு பக்தர் பதினாயிரக்கணக்கான ரூபாய் பெறுமான சொத்தை தர்ம சாஸனம் எழுதி அந்நியர் கையிலேயே ஒப்புவித்து விட்டார். அதற்கு ஒரு விளம்பரமும் அவர் செய்யவேயில்லை. இவற்றைவிட வெகு சமீபத்திலுள்ள கொடுமுடியில் சிறீமான் பெரியண்ணஞ் செட்டியார் என்கிற ஒரு கனவான் சில நாட்களுக்கு முன் 15,000 - ரூபாய் பெறுமானமுள்ள பூமியும், 8,000 - ரூபாய்க்கு கட்டடமும் கட்டிக் கொடுத்து, இப்போது மறுபடியும் 50,000 - ரூபாய்க்கு மேல் பெறும்படியான சொத்துக்களை கொடுமுடி சங்கர வித்தியாசாலை என்கிற பள்ளிக்கூடத்திற்கு செட்டில்மெண்ட் மூலம் எழுதி வைத்து சுவாதீனமும் செய்து விட்டார். மேற்கொண்டு ரொக்கப் பணமாக 12,000 - ரூபாய் ஸ்கூல் பண்டுக்குக் கொடுத்துமிருக்கிறார். இவர் எவ்வித திறப்பு விழாவும் அங்குரார்ப்பண விழாவும் செய்யவில்லை. விளம்பரமும் செய்யவில்லை. பத்திரிகைக்காரருக்குப் பணங்கொடுத்துப் போடச் சொல்லவுமில்லை.

 

மகாத்மா காந்தி, பண்டித நேரு, சிறீமதி சரோஜனி முதலிய பெரியோர்களுக்குத் தனது தர்மப் பெருமையை எழுதவுமில்லை. இப்படியெல்லாமிருக்க, கேவலம் ஒரு சட்டசபை ஓட்டுப் பெற எதிர் அபேட்சகரைத் தோற்கடிக்க இவ்வளவு தந்திரங்களும் மந்திரங்களும் செய்தால் செய்தவர் மிகப் பெரியவராய்ப் போய் விடுகிறார். அதை வெளியில் எடுத்துச் சொல்லுபவர்கள் அயோக்கியர்களாய்ப் போய்விடுகிறார்கள் என்றால் மக்கள் நிலையை என்ன வென்று சொல்லுவது. சிறீமான் ஐயங்காரைப்போல் தைரியமாய் தர்ம விளம்பரம் செய்ய எவராவது பின் வாங்கினால் அவர்கள் தோல்வியுற வேண்டியதா? இந்த தைரியத்திற்காக மாத்திரம் ஐயங்கார் வெற்றியுற வேண்டியதா? சட்டசபை மெம்பராவதற்கு இந்த தைரியம்தானா யோக்கியதை? சிறீமான் ஐயங்கார் இவ்வளவு விளம்பரம் ஏன் செய்ய வேண்டும்? இவரும் இரண்டு தடவை-ஆறு வருஷகாலம் சட்டசபைப் பதவியை அடைந்து அநுபவித்தாய் விட்டது; இனி வேறொருவர் தான் அநுபவிக்கட்டுமே; யார் வீட்டு சொத்து. இந்த ஜில்லாவில் 60,000 - ஓட்டர்கள் இருந்தால் சுமார் 3,000 - ஓட்டர்கள்கூட பிராமணர்கள் இருக்க மாட்டார்கள். 57,000 - பிராமணரல்லாத ஓட்டர்கள் இருக்கும் ஒரு ஸ்தானத்திற்கு 3,000 - ஓட்டுள்ள பிராமணர் எத்தனை தடவை அந்தப் பதவியை அநுபவிப்பது? ஆறு வருஷம் பார்த்தது போதுமென்று இவர் ஏன் கெளரவமாய் விலகிவிடக் கூடாது?

 

கோயமுத்தூர் ஜில்லாவில் சட்டசபைப் பதவியை அநுபவிக்க இவரைவிட வேறு நபர்கள் இல்லையா? கேவலம் இந்தப் பதவி பெற இவ்வளவு தந்திரம் செய்து 57,000 - பேரையும் ஏமாற்றி சட்டசபைக்குப் போகிறவர், போனபின் இவரால் ஜனங்கள் என்ன பலன் அடைய முடியும்? இம்மாதிரி பேராசையுள்ளவர்கள் எவ்வளவு காலத்திற்கு ஜனங்களை ஏமாற்ற முடியும்? சிறீமான் ஐயங்கார் விளம்பரமும் வெற்றியும் ஏதாவது சாமார்த்தியத்தையும், சக்தியையும், தேச பக்தியையும், நாணயத்தையும், தகுதியையும் பொறுத்திருக்கிறதா?

 

சிறீமான் ஐயங்கார் பணத்தையும், தந்திரத்தையும், விளம்பரத்தையும், பிராமணரல்லாதார் சமூகத் துரோகத்தையும் அவர்களது முட்டாள்தனத்தையும்தானே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இதை உத்தேசித்துத்தானே அநுபவசாலிகள், அரசியலில் பணத் திமிரும், தந்திரமும், சூழ்ச்சி விளம்பரமும், சமூகத் துரோகமும், அறியாமை யால் நேரும் நஷ்டமும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட வேண்டும் என்று கதறுகிறார் கள். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டிருந்தால் சிறீமான் ஐயங் கார் 6 - வருஷம் அநுபவித்துவிட்டு இன்னும் 3 - வருஷத்திற்கு இவ்வளவு விளம்பரம் செய்வாரா?

 

முதலாவது, ஒரு வருஷத்திற்கா வது இவருக்கு முறை வருமா? 30 - ஆயிரம் அல்லது 50- ஆயிரம் சிலவு செய்தாலும் கிடைத்து விடுமா? 2 - லட்சமல்ல 10 -லட்சம் என்று தர்ம விளம்பரம் செய்தாலும் ஆகிவிடுமா? கோயமுத்தூர் ஜில்லாவானது தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஜில்லா. சிறீமான் ஐயங்காரைப் போல் எத்தனையோ பணக்காரரும், பட்டக்காரரும், ஜமீன்தாரரும், சக்தியுள்ளவர்களும், அவரைவிட தகுதியும் உரிமையு முள்ளவர்களுமிருக்க ஐயங்காரே அடிக்கடி வரவேண்டுமென்பது "வேதக் கட்டளையா, சாஸ்திர சம்மதமா? மனுதர்மமா" இந்த ஒரு சிறு பதவியே பிராமணரல்லாதார் 100-க்கு 97 - பேர் உள்ள சமூகத்தை இவ்வளவு மோசம் செய்யுமானால் இன்னும் பெரிய பதவிகள் - சுயராஜ்யப் பரிபாலனம் போன்ற ராஜா மந்திரிப் பதவிகள் - இன்னும் எவ்வளவு மோசத்தை விளைவிக்காது? தவிரவும் இந்த நியாயமான சங்கதியை நாம் எழுதும் போதே சிறீமான் ஐயங்காருக்கும், அவரது சிஷ்யக் கோடிகளுக்கும், சிப்பந்தி கோடிகளுக்கும் இவ்வளவு ஆத்திரமும் கோபமும் மனவருத்தமும் வருமானால், தமிழ்நாட்டிற்கே ஏன் இந்தியா தேசத்திற்கே ராகு கேதுகள் போல் இருக்கும் பிராமணப் பத்திரிகைகளும், பிராமணப் பிரசாரகர்களும், அவர்களால் ஆட்கொள் ளப்பட்ட பிராமணரல்லாத பிரசாரகர்களும் உண்மைக்கு விரோதமாய் இரவும் பகலும் பிராமணரல்லாதார் மீது பொய்யும், பித்தலாட்டங் களும் சொல்லி விஷமப் பிரசாரம் செய்கின்றார்களே அதனால் பிராமணரல்லாதார்களுக்கு எவ்வளவு சங்கடமும், ஆத்திரமும், கோபமும் வராது?

 

'குடிஅரசு' போன்ற பத்திரிகையாவது சுமார் 10 - பிராமண சந்தாதாரர்களைக்கூட உடைத்தானதாயிருக்காது. அதிலும் 7 - பேர் கெளரவ சந்தாதாரர்களாயிருப்பார்கள். 'சுயராஜ்யா', 'சுதேச மித்திரன்' போன்ற பத்திரிகைகள் பிராமணரல்லாதார் பணத்திலேயே நடக்கிறது. பிராமணரல்லாதார் தங்கள் பணத்தையே கொடுத்து தங்கள் சமூகத்தையே பாழாக்குவதற்கு உடந்தையாயிருப்பது போல் அவைகளுக்கு சந்தாதாரர்களாயிருக்கிறார்கள். இதைக் கேட்பவர்களுக்கு எவ்வளவு மனவேதனை ஏற்படும். ஒவ்வொரு நாளும் இந்தப் பிராமணரல்லாதார்களைப்பற்றி எழுதும் பொய்யும் புளுகும் கணக்கு வழக்கில்லை. அதைக் கவனிக்கவோ, திருத்தவோ, கோபப்படவோ, ஆத்திரப்படவோ ஆளில்லை. 'குடிஅரசு' உண்மையை- தன் மனதிற்கு உண்மையென்று பட்டதை எழுதினால் இதற்கு இவ்வளவு அடா துடியா? சிறீமான் ஐயங்காருக்குத்தான் பணமிருக்கிறது; பத்திரிகைகள் இருக்கின்றன; பணம் வாங்கிக் கொண்டு பேசவும் எழுதவும் ஆளுகள் இருக்கிறார்கள். இதனால் எவ்வளவு அக்கிரமம் செய்தாலும் தாராளமாய்ப் பெரிய மனிதராய் விடுகிறார். இவைகள் இல்லாதவர்கள் கதி என்ன ஆவது? எவ்வளவு யோக்கியர்களாயிருந்தாலும் தேசபக்தர்களாயிருந்தாலும் அவர்கள் யோக்கியதை வெளிவருவதற்கில்லை. வெளிவராவிட்டாலும் அவசியமில்லை. அவர்களுடைய தொண்டு தேசத்திற்குப் பிரயோஜனமில்லாததோடு அயோக்கியர்கள் செய்கையும் அயோக்கியத்தனமும் உலகத்தில் மதிக்கப்பட்டு மலிந்து போகிறதே என்பதுதான் நமது உண்மையான சங்கடம். அல்லாமலும் தென்னாட்டில் தென்னாட்டாரின் பிரதிநிதிகள் சிறீமான்கள் சென்னை ஏ. ரெங்கசாமி ஐயங்கார், எஸ்.சீனிவாசய்யங்கார், எஸ். சத்தியமூர்த்தி ஐயர், எம்.கே.ஆச்சாரியார், கோவை சி.வி. வெங்கிட்டரமணய் யங்கார், கும்பகோணம் சக்ரவர்த்தி ஐயங்கார் ஆகிய இவர்கள்தானா? இவர்களைவிட யோக்கியர்களும் தேச பக்தர்களும் வேறு எவரும் நமது நாட்டில் இல்லையா? இவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பேசுகிறவர்களும் எழுதுகிறவர்களுந்தானா பிதேசத் தொண்டர், பிதேச பக்தர். இவர்களுக்கு எப்படி இந்தப் பதவி வந்தது? பணமும் பத்திரிகையும் தங்கள் கைவசமிருப்பதோடு யோக்கியமற்ற வழியில் சிலவிடுவதும் எழுதுவதுமான குணத்தினால்தானா அல்லவா?

 

தமிழ்நாட்டின் சார்பாக சபர்மதி ராஜி ஒப்பந்தத்திற்குப் போயிருப்பவர்கள் எத்தனை பேர்? சிறீமான்கள் சீனிவாசய்யங்கார், ரெங்கசாமி ஐயங்கார், சத்தியமூர்த்தி ஐயர் ஆகிய இவர்கள் செய்துவரும் ராஜியை ஒப்புக் கொள்ளவாவது இவர்களை யோக்கியர்கள் என்று சொல்லவாவது தமிழ் நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள். இவர்களைத் தலைவர்கள் என்று சொல்லும் நமது சிறீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியாரையே சத்தியமாய்க் கேட்போம். இவர்கள் தலைவர்களா? இவர்களை யோக்கியர்கள் என்று அவர் கருதுகிறாரா? இவர்கள் சொற்படி நடக்க தயாராயிருக்கிறாரா? ஒன்றிற்குமில்லை. இப்படியிருக்க இவர்கள் எப்படித் தலைவர்கள் ஆகி றார்கள்? பணமும் ஆளும் பத்திரிகையும்தான் காரணம்.

 

அநேக யோக்கியர்களும் உண்மை தேசபக்தர்களும் அவர்களது இன்றியமை யாத தொண்டும் தேசத்திற்கு உபயோகப்படாமல் ஏன் மறைந்து கிடக்கிறது. பணமும், ஆளும், பத்திரிகையும் இல்லாததால்தான். ஆதலால் பாமர ஜனங்கள், ஓட்டர்கள் இவ்விளம்பரங்களை நம்பி ஏமாறாமலும் அநாவசியமாய் அந்நியரை வைகிறார்கள் என்று நினைத்து நம்மீது அவசரப்பட்டு ஆத்திரப்படாமலும் உண்மையை அறியும்படி வேண்டுகிறோம்.

 

(தந்தை பெரியார் - 'குடிஅரசு' -09.05.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_18.html

"சுதேசமித்திரன்" என்னும் பிராமணப் பத்திரிகை ஆதி திராவிடர்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியார் ஒன்றும் செய்யவில்லை என்றும், தங்கள் கூட்டத்தார் ஆதி திராவிடர்களுக்கு சுவர்க்க வாசலை திறந்து விடப்போவதாகவும், இனியாவது தங்களை வந்து சரணடையும்படி உபதேசிக்கிறது. ஜஸ்டிஸ் கட்சியார் ஆதி திராவிடர்களுக்கு நன்மை செய்தார்களோ, இல்லையோ? அதைப் பற்றி அதிக கவலை வேண்டாம். அது ஆதி திராவிடர்களுக்கே தெரியும். ஆனால் காங்கிரசின் ஆதிக்கத்தை அடைந்த சுயராஜ்யக் கட்சியார் ஆதி திராவிடர்களுக்கு என்ன நன்மை செய்தார்கள்? என்ன பதவி கொடுத் தார்கள்? என்ன உத்தியோகம் தந்தார்கள்? இந்தியா சட்டசபைக்கு ஒரு ஆதி திராவிடரை நிறுத்தினார்களா? நிறுத்த ஆளில்லாமல் திண்டாடும் சென்னை சட்டசபைக்கு ஒரு ஆதி திராவிடரையாவது நிறுத்தினார்களா? சென்னை கார்ப்பரேஷன் கவுன்சிலுக்கு ஆதி திராவிட வகுப்பில் பிறந்த ஒருவரையாவது நிறுத்தினார்களா? வேறு வகையில் இவர்கள் மட்டிலும் என்ன சாதித்து விட்டார்கள்?

 

ஒரு சமயம் ஆதி திராவிடர்களில் எவராவது; ஒருவருக்கு அதுவும் தன்னோடு கூடத் தன்னைத் தலைவர் என்று சொல்லித் திரிய - அதுவும் வீட்டில் பட்டினி, சுத்தமாய் செலவுக்கில்லை என்று கேட்கும்போதும் - நீ கொடுக்கிறாயா ஜஸ்டிஸ் கட்சியில் சேரட்டுமா என்று மிரட்டும் போதும் ஒன்றோ இரண்டோ ரூபாய்கள் பிச்சை போடுவதுபோல் கொடுத்துக்கொண்டு வந்திருக்கிறதைத் தவிர வேறென்ன செய்திருக்கிறார்கள்? அல்லது ஆதி திராவிடர்களுக்கு வகுப்புவாரி உரிமை வாங்கித் தர சம்மதிக்கிறார்களா?

 

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்று சொன்னாலே சொல்பவனை, "ஜஸ்டீஸ் கட்சியில் சேர்ந்து விட்டான், பாவி, துரோகி" என்று சொல்லுகிறார்கள். இவர்களை நம்பி என்ன பலனை அடைய முடியும்? காஞ்சீவரத்தில் கூடிய பிராமணரல்லாதார்களாவது எல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து ஏகமனதாய் ஆதி திராவிடர்களுக்கு, அவர்கள் எண்ணிக்கைக்குத் தகுந்த அளவுக்கு மேலாகக் கூட சட்டசபை, கார்ப்பரேஷன், உத்தியோகம், பதவி எல்லாவற்றிலும் பிரதிநிதித்துவம் கொடுப்பதாய்த் தீர்மானித்தார்களே; அதைக் கெடுத்தவர்கள் யார்? சுயராஜ்யக் கட்சியின் "மாபெரும் தலைவரான" சிறீமான் சீனிவாசய்யங் காரும் "காந்தி சிஷ்யரும் ஒப்பற்ற தலைவருமான" சிறீ மான் சி.ராஜ கோபாலாச்சாரியாரும் கூட சதியாலோசனை செய்து சிறீமான் கலியாணசுந்தர முதலியாரையும் கெடுத்து இத்தீர்மானம் காங்கிரஸ் மகாநாட்டிற்கே கொண்டுவரக் கூடாது என்று தடுத்துவிட்டார்கள். தீர்மானம் கொண்டுவரக்கூட சம்மதிக்காத காங்கிரஸ் தலைவரும் தீர்மானத்தை நிறைவேற்ற சம்மதிப்பார்களா? என்பது ஆதி திராவிடர்களுக்குத் தெரிய முடியாமல் போகாது.

 

ஜஸ்டிஸ் கட்சியாராவது ஆதி திராவிடர்கள் கேட்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சரியானதென்றும், அதற்காக தாங்கள் போராடியும், அதை தங்கள் கட்சியின் முக்கியக் கொள்கையாகவும் வைத்திருக்கிறார்கள். அவர்கள் கூச்சல் போட்டதன் பலனாய்த்தான் சிறீமான்கள் எம்.சி.ராஜா, வீரய்யன் முதலிய மணிகள் ஆதி திராவிட வகுப்பில் இருக்கிறார்கள் என்றாவது பிறத்தியாருக்குத் தெரியும்படியாய் இருக்கிறது. அது இல்லாவிட்டால் இவர்களுக்கு சட்டசபை ஏது? கான்பரன்ஸ் ஏது? தீர்மானம் ஏது? "எங்கள் கட்சியில் வந்து சேருங்கள், நாங்கள் சாதித்து விடுகிறோம்" என்று பிராமணர்கள் கூப்பிடுவது ஏது? சிறீமான் சீனிவாசய்யங்கார் பணம் ஒன்றிரண்டு ரூபாய்கூட ஆதி திராவிடர்களுக்காவது கிடைப்பதேது?

 

(குடிஅரசு-23.05.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_19.html

வினா : ஆசிரமம் என்றால் என்ன?

விடை : காந்தர்வ விவாஹமும் ராட்சச விவாஹமும் நடக்குமிடங்கள்.

வினா : சுயராஜ்யம் என்றால் என்ன?

விடை : பிராமணர்கள் உத்தியோகமும், பதவியும், அதிகாரமும் பெறுவது தான் சுயராஜ்யம்.

வினா : பிராமணரல்லாதார்களுக்கு உத்தியோகமும், பதவியும், அதிகாரமும் வந்தால் அதற்குப் பெயரென்ன?

விடை : அது அதிகார வர்க்கத்தின் ஆட்சி அல்லது அந்நிய ஆட்சி.

வினா : தேச சேவை யென்றால் என்ன?

விடை : பிராமணர்கள் பின்னால் திரிந்து கொண்டு ஜஸ்டிஸ் கட்சியைத் திட்டுவது போல் பிராமணரல்லாதாரைத் திட்டுவதும், பிராமணர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களை 'தலைவர்', 'தமிழ்நாட்டுக் கர்ணன்','கலியுகக் கர்ணன்', 'மகாத்மாவின் சிஷ்யர்' என்று சொல்லி பிராமணரல்லாதாரை வஞ்சித்து பிராமணர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுப்பதுதான் தேச சேவை ஆகும்.

வினா : தேசத் துரோகம் என்றால் என்ன?

விடை : பிராமணரல்லாதார் நன்மையைப் பற்றிப் பேசுவதும், எழுதுவதும் தேசத் துரோகமாகும்.

வினா : பிராயச்சித்தமில்லாத, மன்னிக்க முடியாத தேசத் துரோகம் என்றால் என்ன?

விடை : பிராமணர்களுடைய சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும், அயோக்கியத்தனங்களையும் வெளியிலெடுத்துச் சொல்லுவதும், எழுதுவதும் மன்னிக்க முடியாத துரோகமாகும்.

வினா : மதுவிலக்குப் பிரசாரம் என்றால் என்ன?

விடை : தான் மதுவருந்திக் கொண்டும், தனது மரத்தில் கள்ளுமுட்டி கட்டித் தொங்கவிட்டுக் கொண்டும், தனது பத்திரிகைகளில் ஒவ்வொரு மனிதனும் வீட்டில் சாராயம் வைத்திருக்க வேண்டுமென்று எழுதிக் கொண்டும், தன்னை சட்டசபைக்கு அனுப்பினால் மதுவை ஒழித்துவிடுகிறேன் என்று சொல்லுவதும், இப்படிப்பட்டவர்களுக்கு ஓட்டுக் கொடுங்கள் என்று சொல்லுவதும் மதுவிலக்குப் பிரசாரமாகும்.

வினா : சரியான ஜனப்பிரதிநிதி சபை என்றால் என்ன?

விடை : எல்லோரும் பிராமணர்களாய் அமர்ந்திருப்பதுதான் சரியான ஜனப்பிரதிநிதி சபையாகும்.

வினா : அடுத்தபடியான ஜனப்பிரதிநிதி சபை என்றால் என்ன?

விடை : பிராமணர்களும், அவர் சொல்படி கேட்கும் பிராமணரல்லாதார்களும் அமர்ந்திருப்பது இரண்டாந்தர ஜனப்பிரதிநிதி சபையாகும்.

வினா : ஜனப்பிரதிநிதி இல்லாத சபை என்றால் என்ன?

விடை : பிராமணர்கள் மெஜாரிட்டியாய் இல்லாத சபை எவ்விதத்திலும் ஜனப்பிரதிநிதி சபையாகமாட்டாது.

வினா : புத்தியுள்ள ஜனங்கள் என்றால் யார்?

விடை : பிராமணர்கள் வண்டி வண்டியாய் பொய்யும், புளுகும் அளந்தாலும் அதையெல்லாம் கேட்டுக்கொண்டு சரி சரியென்று பேசாமல் இருப்பவர்கள் புத்தியுள்ள ஜனங்கள்.

வினா : குழப்பக்காரர்கள், காலிகள் என்றால் யார்?

விடை : பிராமணர்கள் வண்டி வண்டியாய் பொய்யையும், புளுகையும் அளக்கும்போது குறுக்கே யாராவது கேள்வி கேட்டால் அவர்கள் காலிகள், குழப்பக்காரர்கள் ஆகிவிடுவார்கள்.

வினா : தேசீயப் பத்திரிகை என்றால் என்ன?

விடை : பிராமணர்களின் படம் போட்டுக்கொண்டும், பிராமணர்களைத் தலைவர் என்றும், பிராமணர்கள் கட்சிக்கு ஓட்டு கொடுங்கள் என்றும், பிராமணர்களைப் புகழ்ந்து எழுதிக்கொண்டும், தேவஸ்தான சட்டத்தையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் கண்டித்துக் கொண்டும் அல்லது அதைப் பற்றி பேசாமல் வாயை மூடிக்கொண்டும் இருக்கிற பத்திரிகைகள்தான் தேசீயப் பத்திரிகைகள் ஆகும்.

வினா : தேசத்துரோகப் பத்திரிகை என்றால் என்ன?

விடை : பிராமணர்களின் தந்திரங்களை எடுத்து எழுதுவதும், பிராமணரல்லாதார்களின் பெருமையைப் பற்றி எழுதுவதும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும், தேவஸ்தான சட்டத்தையும் ஆதரித்து எழுதுவதுமான பத்திரிகைகள் தேசத் துரோகமான பத்திரிகைகள் ஆகும்.

 

(குடிஅரசு-02.05.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_20.html

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE