Language Selection

சமூகவியலாளர்கள்

இரு கரையும் புரண்டோடும் வெள்ளப்பெருக்கு இடைமறித்துப் பலமாகத் தடுக்கப்படின், பின்னால் எதிர்த்துத் தாக்கி இருமருங்கிலும் உடைப்பெடுத்து நாலா பக்கங்களிலும் ஓடிச்சென்று சிதறுண்டு போதல் இயற்கை. அதுபோன்று இந்திய மக்களின் உள்ளத்தைக் கவர்ந்து நின்ற மாபெரும் இயக்கமாகிய ஒத்துழையாமை இயக்கம் இடையில் ஒடுக்கப்பட்டவுடன், தேசவிடுதலையொன்றிலேயே குறிக்கொண்டு நின்ற மக்கள் மனம் வேற்றுமையுற்று மிகச் சிறுசிறு விஷயங்களில் தம் மனத்தைச் செலுத்துவராயினர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் துரும்பென மதித்து உதறித் தள்ளியெறிந்த பட்டங்களிலும், பதவிகளிலும், அதிகாரங் களிலும் மீண்டும் மக்கள் மனம் வைப்பவராயினர். பொதுநல எண்ணம் குறைந்தது; தன்நலம் தலைதூக்கி நிற்க ஆரம்பித்து விட்டது; ஜாதிப்பற்று என்ற மாயையில் மக்கள் அழுந்துவராயினர். 'எனது கடமை, எனது கடமை' என்றதற்குப் பதிலாக 'எனது உரிமை, எனது உரிமை' என்ற முழக்கம் எங்கும் கேட்கிறது. ஒவ்வொரு ஜாதியினரும் தமது ஜாதியின் உரிமைகளுக்காகப் போராட முனைந்து நிற்கின்றனர்.

ஒவ்வொரு ஜாதியினரும் தமது முன்னேற்றத்திற்காக முற்பட்டு உழைத்தல் சாலவும் சிறந்ததே. தமது உழைப்பால் பிற ஜாதியினர்களின் உரிமைகள் எவ்வாற்றானும் பாதிக்கப்படாதிருத்தல் வேண்டும் என்ற எண்ணமின்றி எவர் எக்கேடு கெடினும் தாம் மட்டும் பல உரிமைகளைப் பெறவேண்டுமென்ற குறுகிய நோக்கம் இதுகாலை நாட்டில் தலைவிரித்தாடுகிறது. சிறந்த அறிவாளிகளும், உயர்ந்த தேசாபிமானிகளும் இக்குறுகிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஜாதிப்பற்று என்னும் மாயவலையில் சிக்கி உழலுகின்றார்கள்.

" நீ யாவன்?" என என்னை ஒருவன் கேட்பானாயின்" இந்தியன், இந்தியன், இந்தியனே" என்று முக்காலும் மொழிவேன் எனக் கூறிய திரு.மகமதலி ஜின்னாவுங்கூட ஜாதிப்பற்று என்ற மாயையில் பாவம்! அழுந்திவிட்டார். ஹிந்துக்களும், முஸ்லிம்களும் அரசினர் சட்டசபையில் பெறும் பிரதிநிதித்துவ தொகையை வரம்பறுத்து, சென்ற 1916- ஆம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதற்குத்தான் " லட்சுமணபுரி ஒப்பந்தம் " என்று பெயர். அவ்வொப்பந்தத்தை தமது ஜாதிக்கு சாதகமாக மாற்ற வேண்டுமென்று முஸ்லிம்கள் ஒரு பெரும் கிளர்ச்சி செய்து நிற்கின்றனர்.

ஜாதிமத பேதங்கடந்து சிறந்த தேசியவாதியாக இருந்து வந்த, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நாட்டின் நலனைக் கெடுப்பதாகும் என்ற கொள்கையைக் கொண்டிருந்த திரு. ஜின்னா நாட்டின் தற்கால நிலையில் தமது கொள்கைகளைச் சிறிது மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது என்று கூறி முஸ்லிம்களின் கிளர்ச்சிக்குத் துணைசெய்து வருகின்றார். ஜாதிப்பற்றின் வலிமையே வலிமை! இப்பெருஞ் சமூகத்தினரும் ஒருங்குகூடிச் செய்து கொண்ட ஒப்பந்தத்தைத் தக்ககாரணமின்றி மாற்றுதல் கூடாதென்றும், அவ்விதம் மாற்றுதல் அவசியமாயின் தமது ஜாதியினரின் உரிமைகள் எவ்வாற்றானும் பாதிக்கப்படக்கூடாதென்றும் இந்துக்கள் எதிர்வாதம் புரிந்து வருகின்றனர்.

இவ்விரு வாதங்களையும் முறையே ஆராய்ந்து முடிவுசெய்யக் கூடிய கூட்டமும், அரசியல் கட்சிகளின் ஒற்றுமைக் கூட்டம் போல் ஒன்றும் செய்யாமல் பயனில்வாதம் நிகழ்த்திக் கலைந்து விட்டது. தமிழ்நாட்டிலோ அரசியல் உலகத்தை ஜாதிச் சண்டை என்ற படலம் மூடிக் கொண்டிருக்கிறது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன் தோன்றி மக்களுக்குள் ஒற்றுமையைக் குலைத்து, வேற்றுமையை நாட்டி, தேசவிடுதலைக்குப் பதிலாக ஜாதிச்சண்டை மீண்டும் உயிர்த்தெழுந்து உறுமி நிற்கிறது. பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார், ஆரியர் - தமிழர் என்ற பிரிவுச் சொற்களே எங்கும் முழங்குகின்றன. சுதந்திர வீரர்கள் சுயராஜ்ய வீரர்களாக இலங்கிய நம்மவர் இதுகாலை ஜாதி வீரர்களாகக் கோலங்கொண்டு நிற்கிறார்கள்.

தலைவர்களின் சொற்பொழிவுகளிலும், தமிழ்ப் பத்திரிகைகளிலும் காங்கிரஸ் என்ற பேச்சைக் காணோம்! கதர் என்ற பேச்சைக் காணோம்! எல்லாம் ஜாதி மயமாகவே விளங்குகின்றன. "எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் இந்திய மக்கள்" என்ற உயரிய கொள்கை, சிறந்த எண்ணம் மக்களை விட்டு அகன்றோடிப் போய் விட்டது. பிறப்பால் உயர்வு, தாழ்வு என்ற கீழ் எண்ணம் நாட்டில் பரவிவிட்டது. எல்லோரும் ஒன்றென்று எண்ணி நாட்டின் நலத்திற்காக ஒன்றிய மனத்தினராய்த் தமிழ் மக்கள் உழைக்கும் நாள் எந்நாளோ? இதுகாறும் நாட்டின் அரசியல் நிலையைப் பற்றி பொதுநோக்காக ஆராய்ச்சி செய்தோம். இனி நாட்டின் கண்ணூள்ள பற்பல அரசியல் கட்சியினர்களைப் பற்றி சுருக்கமாக ஆராய்தல் செய்வோம்.

நமது நாட்டில் நடைபெற்றுவரும் ஆட்சிமுறையில் எவ்விதத் தொடர்பும் இன்றி, புறத்தே நின்று ஒத்துழையாமை செய்வதில் எவ்வித பயனுமில்லையெனக் கூறி, அரசினர் சட்டசபைகளில் நுழைந்து அங்கு ஒத்துழையாமையை நிகழ்த்தி ஆட்சிமுறை நடைபெறாவண்ணம் இடையறாது முட்டுக்கட்டை போட்டு, ஆட்சிமுறையை உடைத் தெறிதலே சாலவும் சிறந்ததெனக் கொண்டு காங்கிரஸ்வாதிகளில் ஒரு கூட்டத்தினர் "சுயராஜ்யக் கட்சி" என்ற ஒரு கட்சியைத் தோற்றுவித்தனர். மத்திய மாகாணம், வங்காளம் என்னும் இரண்டு இடங்கள் தவிர மற்றைய இடங்களில் சுயராஜ்யக் கட்சியினர் போதிய ஆதரவு பெறவில்லை. இடத்திற்கும், காலத்திற்கும் தமது கட்சியின் பலத்திற்கும் தக்கவாறு தமது கொள்கைகளையும் முறைகளையும் மாற்றிக்கொண்டே வரலாயினர். சட்டசபைகளில் முழு ஒத்துழையாமை, இடையறாமல் முட்டுக்கட்டை என்று கூறியது பேச்சளவிலே நின்றுவிட்டது.

இந்திய சட்டசபையில் தமது கட்சிக்குப் பலமின்மை கருதி சுயேச்சைவாதிகள் சிலரோடு ஒருவகை ஒப்பந்தம் செய்து கொண்டு முட்டுக்கட்டை முறையை ஓராண்டு கையாண்டு வந்தனர். அதுவும் ஒருசில காரியங்களில் மட்டுமே. ஓராண்டுக்குப் பின்னர் சுயேச்சை வாதிகள் சுயராஜ்யக் கட்சியினரைக் கைவிட்டு விட்டனர். பாவம்! தன்னந்தனியராய் எடுத்த காரியம் யாவினும் தோல்வி மேல் தோல்வியே பெற்று வந்தனர். இவர்கள் அரும்பாடுபட்டு அரிதிற் பெற்ற சில வெற்றிகளும் அரசப் பிரதிநிதியின் தனி அதிகாரி எனும் பொருளுக்கு இரையாயின. சட்டசபைகள் ஏற்படுத்தும் சிறு கமிட்டிகளில் பதவி பெறலாகாதென்று கொண்டிருந்த நோக்கம் வெறும் எழுத்தளவிலேயே நின்றுவிட்டது.

மத்திய மாகாணத்திலும் வங்காளத்திலும் சுயராஜ்யக் கட்சியினரின் முட்டுக்கட்டை ஒருவாறு நிறைவேறிற்றென்றே கூறுதல் வேண்டும். இருந்தாலும், ஏன்? மத்திய மாகாணத்தின் சட்டசபைத் தலைமையைப் பெற சுயராஜ்யக் கட்சியினர் முற்பட்டு, அதனையும் பெற்றுவிட்டனர். பதவிபெறுதல் கூடாது என்ற அவர்தம் கொள்கைக்கு வியாக்கியானம் போலும்!

சென்னை மாகாணத்தைப் பற்றியமட்டிலும் சுயராஜ்யக் கட்சியினரை பத்திரிகைகளிலும், பிரசங்க மேடைகளிலும் கண்டோமேயல்லாது சட்டசபையில் காணவே இல்லை. சென்னை சட்டசபையில் சுயராஜ்யக் கட்சியினரும் பிற கட்சியினரும் கையாண்டு வந்த முறைகளில் எவ்வித பேதமும் எமக்குப் புலனாகவில்லை. இதுபோன்ற மற்றைய மாகாண சட்டசபைகளிலும் சுயராஜ்யக் கட்சியினர் இருந்து வருகின்றனர் எனக் கூறுதல் மிகையாகாது. "சட்டசபைகளில் ஒத்துழையாமை நிகழ்த்துவோம்; முட்டுக்கட்டை போடுவோம்; ஆட்சிமுறையை அழிப்போம்" என்று சுயராஜ்யக் கட்சியினர் வீராவேசம் கொண்டு கூறிய முழக்கச் சொற்கள் பயனிலவாயின. பேச்சில் ஒத்துழையா வீரர்களாகவும், செய்கையில் ஒத்துழைப்பு வீரர்களாகவும் விளங்கி வருகின்றார்கள். அதுமட்டுமா? பேச்சிலுங்கூட அவ்வீரத்தன்மை ஒழிந்து வருகின்றது.

காந்தியடிகளுக்கும், சுயராஜ்யக் கட்சியினருக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஒழித்துவிட சுயராஜ்யக் கட்சியினர் முற்பட்டுவிட்டனர். அக்கட்சியினர்களுக்குள்ளேயே பற்பல மாறுபட்ட அபிப்பிராயங்கள் தோன்றிவிட்டன. தாஸர் ஒன்று கூறுகிறார். மகாராஷ்டிர சுயராஜ்யக் கட்சியினர் ஒன்று கூறுகின்றனர். நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்றி வைத்தல் வேண்டுமென திரு. தாஸர் கூறுகிறார். நூல் சந்தா தீர்மானத்தை எடுத்துவிட வேண்டுமென்றும், காந்தியடிகளை காங்கிரஸை விட்டு ஓட்டிவிட வேண்டுமென்றும் மகாராஷ்டிரத்தார் கூறுகின்றார்கள். இன்னும் சில நாட்களுக்குள் சுயராஜ்யக் கட்சியினர்களுக்குள்ளேயே பிளவு ஏற்படும் அறிகுறிகள் காணப்படுகின்றன.

திரு. தாஸர் இந்தியாவிலிருந்து கண் சிமிட்டுகிறார். திரு பர்க்கன் ஹெட் பிரபு இங்கிலாந்திலிருந்து கண் சிமிட்டுகிறார். யாரை யார் மயக்கப் போகிறார்களோ காலந்தான் காட்டும். 'தன்னைக் கண்டாரை மயக்கமுறச் செய்து கீழே வீழ்த்தும் கொல்லிப்பாவை'யென விளங்கும் அரசினர் சட்டசபைகளில் அடி வைத்தவர்களின் வழி இந்நிலையுறாது பின் எந்நிலையுறும்? சுருங்கக்கூறின் சுயராஜ்யக் கட்சியினர் தமது பண்டைக் கொள்கைகளைக் கைவிட்டு விட்டனர்; ஒத்துழைப்பாளர்களாயினார்கள். நிர்மாணத் திட்டத்திலும், காந்தியடிகளிடத்திலும் நம்பிக்கையிழந்தனர். அவர்களுக்குள்ளும் அபிப்பிராய பேதங்கள் தோன்றலாயின. பிளவு அதிவிரைவில் ஏற்படுதலுங்கூடும். சுயராஜ்யக் கட்சியினரின் தற்காலநிலை இதுவேயாகும்.

சிறீமதி அன்னி பெசண்டும் அவரது கூட்டத்தினரும் இந்திய அரசியல் உலகில் இதுகாலை மிக்க பாடுபட்டு வருகிறார்கள். "அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்" என்ற கொள்கையுடையவர்கள். இந்தியாவில் மட்டும் கிளர்ச்சி செய்தல் பலன் தராது என்றும், இந்திய அரசியல் கிளர்ச்சியை இங்கிலாந்திலும் நடத்துதல் வேண்டும் என்ற நோக்கமுடையவர்கள்.இந்திய மக்கள் உண்மையாகவே சுதந்திர தாகங்கொண்டுள்ளார்கள் என்று ஆங்கிலேயர்கள் அறிவார்களாயின் இந்தியாவின் ஆட்சி முறையில் இந்தியர்களுக்கு பெரும் பங்கு கொடுக்க ஆங்கிலேயர்களே முன்வருவார்களென்றும், இந்திய அரசியல் நிலையின் உண்மையையும் இந்திய மக்களின் உள்ளக்கிடக்கையையும் ஆங்கிலேயர் அறியாத குறையே அவர்கள் கண்மூடித்தனமாக இருப்பதற்குக் காரணமென்றும், ஆங்கிலேயர்களை வற்புறுத்தினால் அவ்வாறு அவர்கள் இணங்கமாட்டார்களென்றும், ஆகையால் உருப்படியான அரசியல் திட்டமொன்றைத் தயாரித்து ஆங்கில நாட்டுப் பாராளுமன்றத்தாரிடம் சமர்ப்பித்தல் வேண்டுமென்றும் இக்கூட்டத்தினர் கூறுகின்றனர்.

" இந்திய சுயஆட்சி மசோதா" ஒன்றினைத் தயாரித்து அதற்கு இந்திய மக்களின் ஆதரவைப் பெற இந்நாடு முழுவதும் சிறீமதி அன்னி பெசண்ட் சுற்றுப்பயணம் செய்து வருகின்றார். சிறீமான் வி.எஸ். சீனிவாச சாஸ்திரி போன்ற பெரியோர்களினுடையவும், மகாராஷ்டிர மாகாண மகாநாடு போன்றவைகளினுடையவும் ஆதரவைத் தமது மசோதாவிற்குப் பெற்றிருக்கின்றனர். இதுகாறும் வெளிவந்துள்ள இந்திய அரசியல் திட்டங்களைக் காட்டிலும் இவர் தயாரித்த மசோதா பெரிதும் முற்போக்குடையதாகவும், இந்திய மக்களுக்கு ஆட்சி முறையில் அதிக அதிகாரமும், பொறுப்பும், தரத்தக்கதாகவும் இருக்கிறதென்றே கூறவேண்டும். எனினும் இந்திய நாகரிகத்திற்கும் அரசியல் கொள்கைகளுக்கும் பெரிதும் மாறுபட்ட அம்சங்களைத் தன்னகத்துத் தாங்கி நிற்கிறது.

ஆங்கிலேயர்களை எந்நாளும் சார்ந்து இந்திய மக்கள் பிழைக்க வேண்டுமென்ற கொள்கையை இம்மசோதா ஒப்புக்கொண்டு நிற்கிறது. இந்தியாவிற்கு ஆங்கில நாட்டுத் தொடர்பு இன்றியமையாததென்று வலியுறுத்திக் கூறுகின்றது. இந்தியாவின் காவலன் (Qrbtlectlbr) ஆக ஆங்கிலமன்னன் இருந்தேயாக வேண்டுமாம். இந்தியாவின் மீது ஆணை செலுத்திவரும் ஆங்கில நாட்டு " பிரிவு கவுன்சி" லின் ஆதிக்கம் இம் மசோதாவினால் ஒழிந்தபாடில்லை. பிறநாட்டாரின் வியாபாரப் பெருக்கால் இந்தியக் கைத்தொழில்கள் நாசமாக்கப்படாமல், நமது தொழில்களைக் காப்பாற்றிக் கொள்ள காப்புவரி முதலானவை விதிக்கும் உரிமைகள் இம்மசோதாவில் காணப்படவில்லை.இதுகாலை நடைபெற்றுவரும் இந்திய அரசாங்கத்தார் கண்மூடித் தனமாகவும், தந்நலத்தைப் பேணியும், பெருக்கி வைத்திருக்கும் கடன்களையும் வேறுசில பொறுப்புகளையும் ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளுவனவற்றை ஏற்றுக்கொள்ளவும், ஏற்றுக்கொள்ள முடியாதனவற்றை தள்ளவும் இம்மசோதா இந்திய மக்களுக்கு உரிமை அளிக்கக் காணோம். இதுபோன்ற குறைகள் பலவும் இம்மசோதாவில் மல்கிக் கிடக்கின்றன.

ஆங்கில நாட்டுத் தொடர்பை எக்காலத்தும் இந்தியா விடக்கூடாதென்று அம்மையார் கூறுதல் இயல்பே. அவரும் ஒரு ஆங்கிலராதலின், செருப்புக்கடியின் துன்பத்தை செருப்பணிந்த வனன்றோ அறிவான்? ஆங்கில நாட்டுத் தொடர்பை அறுத்தெறிய வேண்டுமென்பது இந்தியர்களின் எண்ணமுமன்று. அத்தொடர்பு இரு நாட்டிற்கும் நன்மை பயப்பதாயின் யாவரே வேண்டாமெனக் கூறுவர்? அத்தொடர்பால் நமது நாட்டின் நலத்திற்குக் கேடு விளைவதாயின் நாம் தனித்து நிற்கும் உரிமை நமக்கு இல்லையா? என்பதே கேள்வி. இக்கேள்விகளுக்கு தக்க விடை இம்மசோதாவில் காணோம்.

நாட்டில் இன்னும் வேறுபல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அவைகள் தொகையில் சுருங்கினவாகவும் செல்வாக்கில் குறைந்தனவாகவும் வெறும் பெயரளவிலேயே நின்று விடுகின்றன. " கடப்பார் எவரோ கடுவினையை" என்ற கொள்கையையுடைவர்கள்; அதிகம் கேட்போம்; கொடுத்தால் அனுபவிப்போம்; சிறிது கொடுப்பினும் வந்தனம் கூறுவோம்; மேலும் மேலும் கேட்டுக் கொண்டேயிருத்தல் வேண்டும். அதுதான் நமது கடமையென்ற சித்தாந்தமுடையவர்கள். இவர்கள்தான் நிஷ்காமயாகம் யோகிகள் போலும்.இதுதான் இந்தியாவின் அரசியல் உலகம். இதுதான் நமது நாட்டின் அரசியல் நிலை.இத்தகைய காட்சியை வேறெந்நாட்டு அரசியல் உலகிலும் காண்பதரிது. இங்ஙனம் பலதிறப்பட்ட அரசியல் கொள்கைகளையுடைய கட்சிகளைக் கண்டு மக்கள் மனங்கலங்கி நிற்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை. அடுத்த கட்டுரையில் காந்தியுலகைப் பற்றியும் மக்கள் கடைப்பிடித்தொழுக வேண்டிய அரசியல் நெறியைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வோம்.

( தலையங்கம் : குடி அரசு 24 . 05 . 1925 )

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/ii.html

காந்தியடிகள் இந்திய அரசியல் உலகில் தலையிடுவதற்கு முன்னர் மேனாட்டு அரசியல் முறைப்பற்றி நமது நாட்டில் அரசியல் கிளர்ச்சி நடைபெற்று வந்தது. மேனாட்டு அரசியல் நூல்களைக் கற்று அந்நாட்டு ராஜதந்திரத்தில் மோகங்கொண்ட படித்த வகுப்பினர்களே நமது நாட்டின் அரசியல் துறையில் உழைத்து வந்தனர். ஆங்கில ஆட்சியில் நமது நாட்டின் பல வளங்களும் அழிந்து போயிற்று என்ற உண்மையை உணர்ந்தவர்கள்தாம். எனினும் நமது நாட்டின் விடுதலை ஆங்கிலேயர்களின் உள்ளங்கைக்குள் அடங்கிக்கிடக்கிறதென்ற கொள்கையுடையவராய் உழைத்து வந்தனர். தன்னம்பிக்கையும், தன் கையே தனக்குதவி என்ற சீரிய எண்ணமும் இலராய் ஆங்கிலேயர்களின் புன்சிரிப்பிலேயே தவழ்ந்து தேச விடுதலை வேண்டி நின்றனர்.

சுயராஜ்யம் ஆங்கிலேயர் கொடுக்க நாம் பெற வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்குள் மிக்கு இருந்தது. படித்த வகுப்பினர் ஆண்டுக்கு ஒரு முறை கூடும் கூட்டமே காங்கிரஸ் மகாசபையாக விளங்கி வந்தது. ஆங்கில அரசாங்கத்தாருக்கு "எமக்கு இன்ன குறை உளது. அதனை தயவு செய்து நீக்க வேண்டும்" என்று அடிமைக்குணம் அரும்பிய விண்ணப்பத் தீர்மானங்களும், வேண்டுகோள்களுமே காங்கிரஸ் மகாசபையில் செய்யப்பட்டு தாழ்மையுடன் அனுப்பப்பட்டுவந்தன.

இந்திய அரசாங்க ஊழியம் இந்தியமயமாக்கப்படின் அதுவே தேசவிடுதலையெனக் கருதி உத்தியோகங்கள் பெறப்பட்டுவந்தன. படித்த வகுப்பினரே இந்திய மக்கள் என்றும், சென்னை, பம்பாய், கல்கத்தா போன்ற பட்டினங்களே இந்தியாவென்றும் கருதி அரசியல் துறையில் உழைத்து வந்தனர். ஆங்கிலரின் மனப்பான்மையை உள்ளபடி ஒருவரும் அறிந்தவர்களில்லை. அறிந்த ஒருசிலரும் அதற்கேற்ப தக்க முறைகளை மக்களுக்கு காட்டத் துணிந்து முன் வந்தார்களில்லை.

ஆங்கிலர்களின் உண்மையான மனப்பான்மையை உள்ளபடி அறிந்தவர் உத்தமர் காந்தியடிகளேயாவார். ஆங்கில ராஜதந்திரிகள் போன்ற நிபுணர்களை இவ்வுலகில் எங்கும் காண்டல் அரிது என்றும், அவர்களை அம்முறை கொண்டே வெல்லுதல் அரிது என்றும் இந்திய மக்களுக்கு எடுத்துக் காட்டினார். சுயராஜ்யம் வேண்டி ஆங்கிலர்களிடத்து அடிபணிந்து நிற்பது இழிவு என்றும், சுயராஜ்யம் என்பது ஒருவர் கொடுக்க ஒருவர் பெற்று அனுபவிக்கும் பொருள் அல்லவென்றும், நாமாகவே அடைந்த சுயராஜ்யமே நிலைத்து நிற்கும் என்றும் காந்தியடிகள்
மக்களுக்கு எடுத்தோதினார்.

சுயநலமும், லாபமும் கருதியே ஆங்கிலேயர்கள் இந்நாட்டில் அரசு செலுத்தி வருகிறார்கள் ஆதலின் அவர்களாகவே மனமிரங்கி இந்தியாவிற்கு சுயராஜ்யம் அளிப்பார்களென எதிர்பார்ப்பது பகற்கனவேயாகும். தற்கொலை செய்துகொள்ள விரும்பும் மனிதன் ஒருவனையேனும் இவ்வுலகில் காண்டல் அரிது. நமது நாட்டின் மக்கள் திரண்ட செல்வம் அடைந்து இன்பம் நுகர்வதற்கு கருவியாக அமைந்திருக்கும் இந்தியாவை விட்டுச் செல்லவும் ஆங்கிலர் ஒருப்படுவாரா?

ஆகையினால் அவர்பால் உதவியை எதிர்பார்ப்பது இந்தியரின் தன்மதிப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் பெரிதோர் குறைவு என்று இடித்துக் கூறினார். நூற்றைம்பது ஆண்டுகளாக இந்தியர்களை அடக்கி, ஒடுக்கி அடிமைக்குழியில் வீழ்த்தின இந்திய ஆங்கில அரசாங்கத்தோடு ஒத்துழையாமையைக் கைக்கொள்வதே சுயராஜ்யம் பெறும் வழியென ஓர்ந்து இந்திய மக்களுக்கு அரிய உபதேசம் செய்தனர். காங்கிரஸ் மகாசபை படித்த வகுப்பினர் கூட்டமாக விளங்காமல் உண்மையான இந்திய மக்களின் பிரதிநிதி சபையாகத் திகழல் வேண்டுமானால் இந்தியமக்கள் அனைவரும் அதில் சேர்ந்து கலந்து உழைத்தல் வேண்டுமென வழிகள் வகுத்தனர்.

தேசமும், தேச உரிமையும் இன்னதென்றறியாது கிணற்றுத் தவளையென வாளாக் கிடந்த இந்திய மக்களைத் தட்டி எழுப்பி தேச விடுதலையில் ஆர்வங்கொண்டு உழைக்கும்படிச் செய்தனர். இந்தியாவிற்கு சுயராஜ்யம் வேண்டுவது பல்லாயிரக்கணக்கான ஏழை இந்திய மக்கள் விடுதலை பெறவே என்ற உண்மையைக் கண்டு, இதுகாறும் இந்திய மக்களைப் புறக்கணித்து நடைபெற்றுவந்த இந்திய அரசியல் நெறியை மாற்றி படித்த வகுப்பினருக்கும் பாமர மக்களுக்கும் நெருங்கிய தொடர்பை உண்டாக்கி வைத்தனர்.

இந்தியா என்பது படித்த வகுப்பினரும் பட்டினங்களும் அல்ல; ஏழு லட்சம் கிராமங்களும் அங்கு வாழ்ந்து வரும் முப்பது கோடி மக்களுமேயாவர். சுயராஜ்யம் படித்த வகுப்பினருக்கு மட்டுமல்ல; உத்தியோகங்களை இந்தியமயமாக்குவதும் சுயராஜ்யமாகாது, வறுமைக்கும், பிணிகளுக்கும், பஞ்சத்திற்கும் அகால மரணத்திற்கும் ஆளாகி எலும்பும் தோலுமாக அலைந்து திரியும் எண்ணற்ற கிராமவாசிகள் நன்னிலையடைந்து உண்ண உணவிற்கும் உடுக்கத் துணிக்கும் வாடி நிற்காமல் நிமிர்ந்த தலையினராய் ஏறுபோல் நடையினராய் வாழ்ந்து இன்பம் நுகரச் செய்வதே சுயராஜ்யமாகும்.

நமது கிராம வாழ்க்கை மீண்டும் பழைய நன்னிலைமை அடைந்தால் அல்லாது சுயராஜ்யம் பெறமுடியாது என்பது காந்தியடிகளின் முடிந்த கொள்கை. இவ்வாக்க வேலைக்கு இந்திய அரசாங்கம் உதவிபுரியுமென எதிர்பார்த்தால் வீணே கிராம வாழ்க்கையைக் குலைத்து, கிராம வாசிகளின் கைத்தொழிலைத் தொலைத்து, அதன்மேலேயே இவ்வர சாங்கம் கட்டப்பட்டிருக்கிறது என்ற உண்மையைக் காந்தியடிகள் கண்டார்.

இவைகளை எல்லாம் நன்றாய் ஆராய்ந்த பின்னரே தேசம் விடுதலை பெற வேண்டுமானால், சுயராஜ்யம் அடையவிரும்பினால் ஆக்க முறைகளையும் அழிவு முறைகளையும் இந்திய மக்கள் ஒருங்கே கைக்கொண்டு உழைக்க வேண்டுமெனக் கூறினார். அப்பெரியாரின் கொள்கையைக் காங்கிரஸ் மகாசபையும் ஏற்றுக்கொண்டு ஒழுகியது. அழிவுமுறை எனப்படுவது இந்நாட்டில் ஆங்கில அரசாங்கம் நடைபெறுவதற்கு உதவியாக இருப்பவைகளோடு மக்கள் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் ஒதுங்கி நிற்பது ஆகும். ஆக்க முறையாவது சுயராஜ்யத்தை நல்குவதான நிர்மாண வேலைகளை நிறைவேற்றி வைப்பது ஆகும்.

அரசாங்கத்தார் அளிக்கும் பட்டங்களையும், கவுரவப் பதவிகளையும் துறத்தல், சட்டசபைகளை விட்டு விலகல், அரசாங்கப் பாடசாலைகளையும் நீதி மன்றங்களையும் விலக்குதல் ஆகிய இவைகளே அழிவு முறைகளாம். அவ்வரசாங்கத்தாரின் அட்டூழியங்களினால் நசுக்கப்பட்டு இறந்துபோன குடிசைத் தொழிலாகிய இராட்டினத்தில் நூல் நூற்று கைத்தறியால் நெசவு நெய்தல், உயிர்ப்பித்தல், இருபெரும் வகுப்பினராகிய இந்துக்களும், முஸ்லிம்களும் எவ்வித வேற்றுமையுமின்றி நட்புரிமை பூண்டு உடன்பிறந்தார் களைப்போல ஒன்றி வாழ்தல், இந்து சமயத்தின் நற்பெயரைக் கெடுப்பதும், கேவலம் மனித உரிமையை மறுப்பதும் ஆகிய தீண்டாமை என்னும் கொடிய வழக்கத்தை ஒழித்தல் ஆகிய இவைகளே ஆக்கமுறைகளாகும்.

பற்பல காரணங்களினால் காந்தியடிகள் கோலிய அழிவுமுறைகள் மக்களால் கைவிடப்பட்டு வருகின்றன. ஆக்கமுறைகளும்கூட புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இவ்விரு முறைகளே இந்தியாவிற்கு சுயராஜ்யம் தரவல்லது. வேறு எம்முறையும் தராது என்பது உறுதி. ஆங்கிலர்களின் ராஜதந்திரத்தின் முன் நம்மவர் தந்திரம் ஒருக்காலும் தலைதூக்காது. காலத்திற்கேற்ற பேச்சும், வாக்குறுதியைக் காக்கும் குணமின்மையும், வஞ்சகமும், பொய்க்கோட்டையும் பொதிந்துகிடக்கும் ஆங்கில ராஜதந்திரத்தின் வலிமையை பாவம்! ஏழை இந்தியர் அறிய முடியுமோ? சட்டசபை சென்றவர்களின் கதி என்னவாயிற்று? "பழைய கருப்பனே கருப்பன்" என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.

ஆங்கில நாட்டுத் தொழிலாளர் கட்சியினரை எதிர்பார்த்து நின்றவர்களின் கதிஎன்ன? ஏமாற்றமல்லாது வேறுண்டோ? விளங்கும் தீண்டாமையை ஒழித்து மக்கள் ஒற்றுமையாக வாழவும் பாடுபடுதல் அரசியல் முறையின் பாற்பட்டதாகாதோ? சுயராஜ்யம் எனின் இதுபோன்று நடைபெறும் ஆட்சிமுறையைத் திருத்தியோ ஒழித்தோ மக்கள் பிறப்புரிமை களைப்பெற்று எல்லாத் துறைகளிலும் முன்னேற்றமெய்தி வாழ்வதுதானே. இதுபோழ்து நடைபெறும் ஆட்சிமுறையின் அடிப்படைகளாக இருக்கும் நாட்டின் செல்வத்தை கொள்ளை கொள்ளும் வியாபாரம், பிரித்தாளுதல் ஆகியவைகளை ஒழிக்கும் முறைகள் அரசியல் முறைகள் அல்லவெனின் பின் எதுதான் அரசியல் முறையோ?

தமிழ் மக்களே! பட்ட வேட்டையிலும், பதவி மோகத்திலும் அமிழ்ந்து அலைந்து திரிவோர்களின் மயக்க வார்த்தைகளில் ஈடுபட்டு ஏமாந்து போகாதீர்கள். கதர், இந்து - முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழித்தல் ஆகிய இம்மூன்றுமே சுயராஜ்யம் நல்கும். இதுவே எனது சித்தாந்தம் எனக் காந்தியடிகள் கூறும் அரிய மொழிகளை ஆழ்ந்து ஆராய்ந்து உண்மையைக் கண்டு தேறி, காந்தியடிகள் வழிநின்று தேசவிடுதலைக்காக உழைப்பீர்களாக!


(தலையங்கம் : குடி அரசு 31. 05.1925 )

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/iii.html

இன்றையத் தினம் நாம் இங்கு பகுத்தறிவாளர் கழகத்தினைத் துவக்கி வைக்கிறோம் என்றால், அதன் பொருள் மனிதர்கள் கழகத்தினைத் துவக்கி வைக்கிறோம் என்பதே ஆகும். பகுத்தறிவாளர் கழகம் என்றால் மனிதர்கள் கழகம் என்று பெயர். பகுத்தறிவு இருந்தும் அதைப் பயன்படுத்தாத காரணத்தால் இதுவரை வெறும் மனிதர்களாக வாழ்ந்து வந்தோம். இனி இக்கழகத்தின் மூலமாகத் தான் பகுத்தறிவாளர்களாக வாழப் போகிறோம்.

மனிதன் தோன்றிய காலம் சரியாகத் தெரியவில்லை என்றாலும், ஒரு 5- ஆயிரம் வருட சரித்திரம் தெரிகிறது. இந்த 5 - ஆயிரம் வருடமாக அறிவு இருந்தும். மாறிக் கொள்ளக் கூடிய நிலை இருந்தும் மனிதன் 5 - ஆயிரம் வருடங்களாகப் பல மதங்கள், பல ஜாதிகளாகப் பகுக்கப்பட்டிருக்கின்றான். இது பகுத்தறிவுள்ள தன்மையா என்று சிந்திக்க வேண்டும். பொதுவாக மனிதன் ஒரு கடவுள் இருக்கிறார் என்கிறான். ஆனால் பல கடவுள்களை வணங்குபவனாக இருக்கிறான்.

மனிதன் கட்டுப்பட்டு நடக்க மதம் என்கின்றான். ஆனால் அது ஒரு மதமாக இல்லை. ஒரே கொள்கையுடையதாகவும் இல்லை. பல மதங்களைச் சார்ந்தவனாகவும் இருக்கின்றான். இதன் காரணமாக மனிதன் வளர்ச்சியடையாமல் போய்விட்டான். சாதாரணமாக இந்த இரு நூறு ஆண்டுகளில் மனிதன் பெற்றிருக்கிற வளர்ச்சியினை ஏன் இதற்கு முன் பெறவில்லை. இன்றுள்ள அறிவுதானே அன்றுமிருந்தது. அன்று முடியாதது இன்று எப்படி முடிகிறது? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதனின் சராசரி ஆயுள் அய்ந்து வயதாக இருந்தது. இன்றைய தினம் மனிதனின் சராசரி வயது என்ன என்றால், நம் நாட்டில் 50, வெளிநாடுகளில் 70. இன்னும் 10, 20 - ஆண்டுகளில் 70 ஆண்டுகள் சராசரியாக வாழ்வோம். வெளிநாட்டானின் சராசரி வயது 100 ஆக இருக்கும். 2000 - ஆண்டுகளுக்கு முன் கடவுள், மதம், மதத்தலைவர்கள், வள்ளுவன் எல்லாமிருந்தும் அன்று ஏன் மனிதனின் சராசரி வயது அய்ந்தாக இருக்க வேண்டும்?

அன்று உலக ஜனத்தொகையே 20 - கோடிதான். கி.பி.1465 - இல் உலக ஜனத்தொகை 45 - கோடி. 1650 -இல் 47 - கோடி; 1800 -இல் 70 - கோடியாயிற்று. கிட்டத்தட்ட 135 - வருடத்தில் 23 - கோடி பேர்தான் அதிகமானார்கள். 1900 -த்தில் 165 - கோடி; 1914 - க்கும் 1954 -க்கும் இடையில் 40 - வருடத்தில் உலக ஜனத்தொகை 320 - கோடி ஆயிற்று. இந்த 40 - ஆண்டுகளில் மனிதன் தன் அறிவைப் பயன்படுத்தி இருக்கின்றான்.

மனிதனின் அறிவு வளர்ச்சியடைந்துள்ளது. இந்தப் போக்குப் போனால் வெளிநாட்டு மக்கள் சராசரி 100 - ஆண்டுகள் வாழ்வார்கள். எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால், மனிதன் தன் பகுத்தறிவைப் பயன்படுத்தியதால் வளர்ந்திருக்கின்றான் என்பதற்கே. வள்ளுவன் காலத்தில் 100 -க்கு ஒருவன் கூடப் படித்தவன் இருக்கமாட்டான்.

நம் நாட்டை எடுத்துக் கொண்டால் 1920 -இல் நாம் 100 -க்கு 5 - பேர்தான் படித்திருந்தோம். வெளிநாட்டான் 100 -க்கு 60, 65 - பேர்தான் படித்திருந்தான். இப்போது நம்மவன் 100 - க்கு 50 - க்கு மேல் படித்திருக்கிறான். வெளிநாட்டான் 100 - க்கு 94, 97 - பேர் படித்திருக்கிறான். நமக்கும் அறிவிருக்கிறது மற்றவனுக்கும் அறிவிருக்கிறது; இருந்தும் நம்நாட்டில் நாம் 100 - க்கு 97 - பேராக இருக்கிறவர்கள் கீழ்ச் சாதியாகவும், 100 -க்கு 3 - பேராக இருக்கிறவன் உயர்ந்த சாதியாகவும் இருக்கிறான் என்றால், இதற்குக் காரணம் என்ன? 100 - க்கு 97 - பேராக இருக்கிற இந்நாட்டு மக்கள் ஏன் கீழ் மக்களாகவும், சூத்திரர்களாகவும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாகவும் இருக்க வேண்டும்?

நம் தாய்மார்கள் ஏன் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக இருக்க வேண்டும்? இத்தனை ஆண்டு காலம் இருந்து அடைந்த பலன் என்ன? என்பதைச் சிந்திப்பதோடு இதற்குக் காரணம் என்ன என்று சிந்திக்க வேண்டாமா? இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம் என்று தெரியும் போது அவற்றை அழித்து ஒழிக்க வேண்டாமா? என்று கேட்கிறேன்.வள்ளுவன் பெரியவன். அவன் பார்ப்பானை ஒத்துக் கொள்கிறான். பார்ப்பானின் நடப்புகளை, சாஸ்திரங்களை ஒத்துக் கொள்கின்றான். அவன் வாழ்ந்த காலம் 2000 - ஆண்டுகளுக்கு முந்தியது. அப்போதிருந்த அறிவு அவ்வளவு தான். அந்த அறிவு இன்றைக்குப் பயன்படாது.

இராமலிங்கம் சொன்னார் என்றால், அதுவும் வைதீகக் கருத்துத்தான். பல மூடநம்பிக்கைகள் நிரம்பி இருக்கின்றன. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் கடவுளைக் குறிப்பிட்டே பாடியிருக்கிறார். நான் எந்த இலக்கியத்தையும் தொட்டவனல்ல. என் அறிவைக் கொண்டு சிந்தித்ததைச் சொல்கின்றேன். எவன் மீது பற்றுக் கொண்டாலும் அவன் பின்னால் தான் செல்லத் தோன்றுமே தவிர, அவன் தன் சொந்த அறிவுப்படி செல்லத் தோன்றாது. மனிதன் மாறுதலுக்கு ஆளாக வேண்டும். மாறுதல் என்றால் சிந்தனைக்கு ஆளாக வேண்டும். சிந்தனை என்றால் பற்றற்றுச் சிந்திக்க வேண்டும். இந்தியாவை எடுத்துக் கொண்டால் பகுத்தறிவுவாதி என்று யாரைச் சொல்வது? வள்ளுவனைப் பின்பற்றினால், இன்னொருவனைப் பின்பற்றினால் பகுத்தறிவுவாதியாக முடியுமா?


(02.12.1970 அன்று சேலத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு - ‘விடுதலை’, 15.03.1971)
http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_23.html

நான் ஒரு பிறவித் தொண்டன்;

தொண்டிலேயே தான்

எனது உற்சாகமும், ஆசையும்

இருந்து வருகிறது.

தலைமைத் தன்மை எனக்குத் தெரியாது.

தலைவனாக இருப்பது என்பது,

எனக்கு இஷ்டமில்லாததும்

எனக்குத் தொல்லையானதுமான காரியம்.

ஏதோ சில நெருக்கடியை உத்தேசித்தும்,

எனது உண்மைத் தோழரும்

கூட்டுப் பொறுப்பாளருமான சிலரின்

அபிப்பிராயத்தையும், வேண்டுகோளையும்

மறுக்க முடியாமலும், தலைமைப் பதவியை

ஏற்றுக் கொண்டிருக்கிறேனேயொழிய,

இதில் எனக்கு மனச் சாந்தியோ,

உற்சாகமோ இல்லை.

இருந்தாலும் என் இயற்கைக்கும்,

சக்திக்கும் தக்கபடி

நான் நடந்து வருகிறேன் என்றாலும்,

அதன் மூலம் எல்லோரையும்

திருப்தி செய்ய முடியவில்லை.

 

(சென்னை கன்னிமரா ஒட்டலில் 06.10.1940 - இல் சொற்பொழிவு,

குடிஅரசு, 13.10.1940)
http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_24.html

தன்னையும் திராவிடன் என்று கூறிக் கொண்டு ஒரு பார்ப்பான் முன் வருவானானால், உடனே, ‘நீ திராவிடனா? திராவிடனுக்கு ஏது பூணூல்? அதை முதலில் கத்தரித்துக் கொள்!’ என்போம். அதற்கும் துணிவானானால், ‘திராவிடரில் ஏது நாலு சாதி? நீ பிராமணன் அல்ல; இந்துவல்ல என்பதை ஒப்புக் கொள்’ என்று கூறுவோம். அதற்கு எந்தப் பார்ப்பானும் உடன்படமாட்டான். அதற்கும் உடன்பட்டு அவன் திராவிடனாக ஒப்புக் கொண்டால், பிறகு நமக்கு அவனைப் பற்றிக் கவலை ஏது? சாதி வேறுபாடுகள், உயர்வு தாழ்வுகள் ஒழிய வேண்டும் என்பது தானே நமது ஆசை. சாதியைக் கைவிட்டு, சாதி ஆசாரத்தைக் கைவிட்டு, ‘அனைவரும் ஒன்றே’ என்ற கொள்கையை ஏற்க முன்வரும் பார்ப்பானை - நாம் ஏன் ஒதுக்கப் போகிறோம். தமிழர் என்று கூறுபவர்கள் இவ்வித நிபந்தனையின் மீது பார்ப்பனர்களைத் தம் கழகத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்களா? இல்லையே! சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற தமிழர் மாநாட்டிற்குத் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் தானே வரவேற்புக் கமிட்டித் தலைவர் மற்றும் இரண்டு மூன்று அய்யர்கள் தம் பூணூல் - பூச்சுகளுடனேயே தமிழர் கூட்டத்தில் ‘தாமும் தமிழர்கள்’ என்று கலந்து கொண்டார்களே? அப்படித் தானே நடக்கும்?... வேற்றுமையில்லாத மனித சமுதாயம் வேண்டுமென்பதுதான் நமது குறிக்கோளே ஒழிய, வேற்றுமை பாராட்டி யாரையேனும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதல்ல நமது குறிக்கோள். இதை நீங்கள் பெரிதும் மாணவ, மாணவிகளான நீங்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.


(சிதம்பரத்தில், 29.09.1948-ல் சொற்பொழிவு ‘விடுதலை’ 05.10.1948)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_29.html

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE