Language Selection

சமூகவியலாளர்கள்

பிராமணீயத்தை ஒழிப்பது என்பதில் பார்ப்பனர்களை ஒழிப்பது என்பதும் அவர்களுக்குப் போகும் பிச்சைக் காசையும், பிச்சைச் சாமான்களையும் நிறுத்துவதும் என்பதே நமது கருத்து என்பதாகப் பலர் அபிப்பிராயப்படுவதாகக் கற்பனை செய்து கொண்டு பார்ப்பனரினால் வயிறு வளர்க்கும் சில பார்ப்பனரல்லாதாரும், சில பார்ப்பனரும், பார்ப்பனப் பத்திரிகைகளும், "பிராமணன்" என்கிற பார்ப்பன வருணா சிரம தர்ம பத்திரிகையும் கூச்சல் போடுகின்றதுகள்.

பிராமணீயத்தை ஒழிப்பது என்பதை நாம் எந்தக் கருத்தின் பேரில் தொடங்கினோம் என்றால் நம்மைவிடப் பார்ப்பனன் உயர்ந்தவன் என்று எண்ணுவதும், அவன் பிழைப்புக்காக ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கும் வஞ்சக சாஸ்திரங்களையும், பொய்ச் சுருதிகளையும், புரட்டு ஆகமங்களையும் நம்புகிற மூடநம்பிக்கையையும் நமது மனதை விட்டு அகற்றுவதும், நம்மை விடப் பஞ்சமன் என்பவன் தாழ்ந்தவன் என்று எண்ணுவதை ஒழிப்பதுமாகிய தத்துவத்தைத்தான் முதன்மையாகக் கருதித் தொடங்கினோமேயல்லாமல் வேறல்ல.

உதாரணமாக, பார்ப்பனனை நாம் ஏன் "சுவாமி" என்று கூப்பிட வேண்டும்? அவனைக் கண்டால் நாம்தான் முதலில் கும்பிட வேண்டும் என்னும் மனப்பான்மை நம்மிடத்தில் ஏன் இருக்க வேண்டும்? பார்ப்பனரும் ஏன் அதை எதிர்பார்க்க வேண்டும்? அவனுக்குப் பணம் கொடுப்பதும் சாப்பாடு போடுவதும் புண்ணியம் என்று ஏன் நாம் நினைக்க வேண்டும்? இது போன்ற பல உயர்வுகள் நம் போன்ற நம்மிலும் பல வழிகளில் தாழ்ந்தவனாயிருக்கிறவனுக்கு பார்ப்பனனாகப் பிறந்தான் என்கிற காரணத்திற்காக ஏன் கொடுக்க வேண்டும்?

அல்லாமலும் நம்மை விட எந்த விதத்திலும் தாழ்மையில்லாதவனையும் நம்மிலும் பல விதத்தில் உயர்குணங்கள் கொண்டவனையும் போலிப் பிறவிக் காரணமாக நாம் ஏன் தாழ்ந்தவன் என்று சொல்ல வேண்டும்? அவன் நம்மைக் கும்பிடும்படி ஏன் நாம் எதிர்பார்க்க வேண்டும்? ஒருவனை நாம் தொட்டால் தோஷம் என்று நாம் ஏன் நினைக்க வேண்டும்? ஆகிய இப்பேர்ப்பட்டதான அஞ்ஞானத்தை, மூட நம்பிக்கையை, கொடுமையை, அகம்பாவத்தை, கொலை பாதகத்தை, வஞ்சகத் தத்துவத்தை ஒழிப்பதல்லாமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர் மேல் துவேஷங் கொண்டு செய்வதல்ல என்பதை உறுதியாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

உதாரணமாக, பார்ப்பனனுக்கு பிச்சைக் கொடுப்பதை நாம் வேண்டாமென்று சொல்ல வரவில்லை. ஆனால் அவனுக்குக் கொடுப்பது புண்ணியம்; மோட்சத்திற்கு கொடுக்கும் விலை என்கிற மூடநம்பிக்கையின் பேரில் கொடுத்து ஏமாறாதீர்கள் என்று நாம் சொல்லுகிறோம். கஞ்சிக்கில்லாமல் கஷ்டப்படுகிறான், பாடுபட்டுத் தின்பதற்கு யோக்கியதை இல்லா நிலையில் இருக்கிறான் என்று காணப்பட்டால் கண்டிப்பாய் அவனுக்கு உதவ வேண்டியது மனித தர்மமென்றே சொல்லுவோம்.

இந்த நிலை "ராமணனிடம்' கண்டாலும் சரி 'பஞ்சமனிடம்' கண்டாலும் சரி உடனே உதவ வேண்டியது மனிதனின் ஆண்மையிலும் சுயமரியாதையிலும் பட்டதென்று கூடச் சொல்லுவோம். உப்பற்ற கஞ்சி கண்டு 8 நாள் ஆன மனிதன் தெருவில் உயிர் போகுந் தருவாயில் இருக்கும் போது "பாயாசத்திற்கு குங்குமப்" போதவில்லை; அக்காரவடிசிலுக்குப் பச்சைக் கற்பூரம் போதவில்லை என்ன சமாராதனை செய்து விட்டான் லோபிப் பயல்"என்று சொல்லுகிற காளைத் தடியர்களுக்கு சாப்பாடு போடுவது தர்மம் என்று எண்ணுகிற முட்டாள்தனத்தை விட வேண்டும் என்பதையும்தான் பிராமணீயத்தில் இருந்து விடுபட்டதென்று சொல்லுகிறோம்.

"ராமணன்' என்கிற ஒரு பத்திரிகை 'பஞ்சாங்கப்' பிராமணர் களை உண்மைப் பிராமணர்கள் தாழ்வாய்க் கருதுவதாகவும், அவர்களுக்கு அவ்விழிதொழில் கூடாதென்றும், அவர்கள் வேறு தொழிலில் பிரவேசிக்க வேண்டுமென்றே தான் விரும்புவதாகவும், ஜம்பமாய் எழுதிவிட்டுப் பார்ப்பனர் "இவ்விழிதொழில்"செய்வதற்குப் பார்ப்பனரல்லாதார் காரணஸ்தராயிருக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளும் 'தமிழ்நாடு' பத்திரிகை மீது சீறி விழுவதன் காரணம் இன்னதென்று தெரியவில்லை.

தவிர பார்ப்பனர்களில் இவ்விழி தொழிலில் ஜீவித்து வருபவர்கள் பதினாயிரத்திலொருவர்கூட இல்லை என்றும், மற்றவர்கள் எல்லாம் கெளரவமான தொழிலில் வாழ்கிறார்கள் என்றும் ஜம்பம் பேசிக் கொள்ளுகிறது. ஆனால் சிறீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளோ ஏதோ பதினாயிரத்தில் ஒருவர்தான் உத்தியோகம் காப்பி ஓட்டல் முதலிய இழி தொழில்களில் இருக்கிறார்கள்; மற்றவர்கள் எல்லாம் மகா பரிசுத்த பிராமணீயத் தொழிலாகிய பஞ்சாங்கத் தொழிலில் இருக்கிறார்கள்; அவர்களிடத்தில் பார்ப்பனரல் லாதாருக்குத் துவேஷம் ஏன் இருக்க வேண்டும்? என்று பேசியிருக்கிறார்.

ஆதலால், உத்தமமான தொழில் இன்னது, இழி தொழில் இன்னது என்பதுகளிலேயே இவ்விரு பார்ப்பனர்களுக்கும் வித்தியாசமிருப்பதால் நாம் இதில் கலந்து கொள்ள இஷ்டமில்லை. ஆனாலும் பதினாயிரத்தில் ஒருவன்தான் பஞ்சாங்கப் பிராமணன் என்பதை மாத்திரம் நாம் மறுக்கிறோம். இன்றைய தினம் உத்தியோக முறையில் உயர்ந்த ஸ்தானம் வகித்தும், மாதம் பதினாயிரம் இருபதினாயிரம் சம்பாதித்து வரும் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவரான சிறீமான்கள் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள், நரசிம்மேஸ்வர சர்மா அவர்கள், சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள், எஸ். சீனிவாசய்யங்கார் அவர்கள், டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரிகள், மகா மகாகனம் பட்டம் பெற்ற சிறீனிவாச சாஸ்திரிகள், சர். சிவசாமி அய்யர் அவர்கள் முதலியவர்கள் உட்பட அநேக சாதாரண உத்தியோகப் பிராமணர்களும், அரசியல் பிராமணர்களும், சன்னிதானங்கள், மடாதிபதிகள், மகந்துகள் என்று சொல்லத்தகுந்த பல வைதீகப் பிராமணர்களும், சிலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் சந்ததிகள், சிலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் பிள்ளைகள், பலர் பஞ்சாங்கப் பிராமணர்களின் சகோதரர்கள், பலர் உத்தியோகத்திலும், வைதீகத்திலும், பஞ்சாங்கத்திலுமாக மூன்றிலும் வயிறு வளர்க்கிறவர்கள் என்பதை மாத்திரம் தெரியப்படுத்திக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை."பிராமணன்" உண்மையிலேயே இந்த 'இழி தொழிலாகிய' பஞ்சாங்கத் தொழிலைச் செய்வதிலிருந்தும் மூட நம்பிக்கையில் பார்ப்பனரல்லாத மக்களை இறக்கி அவர்களால் வயிறு வளர்க்கும் தொழிலிலிருந்தும் "ராமணர்களை'க் கடைத் தேற்றி "ராமணன்' சொல்லுகிறபடி அவர்களை 'கெளரவமான' வாழ்க்கையில் நடக்கும்படி செய்யும் பிரசாரத்திற்கு நம்மையும் அழைத்தால் நாமும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறோம்.

நாம் பிராமணீயத்தை விட்டவர்கள் பெயர்களைப் போட்டு வருவது போலவே பஞ்சாங்கத் தொழிலாகிய 'இழிதொழிலை விட்ட பிராமணர்' பெயர்களையும் வாரா வாரம் "ராமணன்' பத்திரிகை கொண்டு வெளிவருவானானால் நாம் பிராமணனை மிகுதியும் போற்றுவோம்.அதில்லாமல் எழுத்தில் மாத்திரம் காட்டுவதில் என்ன பயன்? தாசிகளைக் கேட்டால்கூட அவர்கள் தங்கள் தொழில் இழி தொழிலென்று ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால் இருட்டானவுடன் தெருவில் நடப்பவனைப் பார்த்து கண்ணடிப்பதில் பின் வாங்குவதில்லை.

வக்கீல்களும் அது போலவே தங்கள் தொழிலை இழி தொழில் என்று ஒப்புக் கொள்ளுகிறார்கள். ஆனால் தாசிகள் புருஷர்களைத் தேடுவது போல் வாயிற்படியிலும் ரயில்வே பிளாட்பாரத்திலும் காத்திருந்து கட்சிக்காரர்களைத் தேடுவதில் குறைவில்லை. அதுபோல பிராமணனும் பஞ்சாங்கத் தொழில் இழி தொழில் என்று வாயில் ஒப்புக் கொண்டதைப் பற்றி நாம் மிகுதியும் சந்தோஷப்பட முடியவில்லை. அது காரியத்தில் காட்டி தனது சமூகத்தாருக்கு அத்தொழில் இல்லாமல் செய்ய பிரயத்தனப் படுவானானால் அத்தொழிலின் பலனாய் மூட நம்பிக்கையில் ஈடுபட்டுச் சுயமரியாதை இன்றிக் கிடக்கும் கோடிக் கணக்கான பார்ப்பனரல்லாத மக்களுக்குச் சுயமரியாதைக்கு வழிகாட்டின பலம் பார்ப்பனர்களுக்கு கிடைக்குமென்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.


(தந்தை பெரியார்- "குடி அரசு"- 19.09.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_06.html

பார்ப்பனனைக் காக்கவே மற்றவரைப் பிரித்தனர்!

எதற்காகப் பார்ப்பான் என்றும், சூத்திரர்கள் என்றும், அவர்ணஸ்தர்கள் என்றும் பிரித்தார்கள் என்றால் இவர்கள் ஒற்றுமையாக இருந்தால் தங்களுக்கு ஆபத்து என்று கருதியே பார்ப்பான் இப்படிப் பிரித்தார்கள். தமிழர்களுக்குள்ளாவே நான் மேல்ஜாதி, நீ கீழ்ஜாதி என்று சண்டை போட்டுக் கொண்டால் தம்மிடம் சண்டைக்கு வரமாட்டார்கள் என்பதாகக் கருதியே பார்ப்பான் இந்த மாதிரி சூழ்ச்சி செய்திருக்கிறான்.

 

பூணூல் போட்டவன் மேல் ஜாதியா?

மற்றபடி வைசியன் ஏது? சூத்திரன் ஏது? ஆசாரி பூணூல் போட்டுக் கொள்வதாலேயே தன்னை மேல்சாதி என்று கருதிக் கொண்டிருக்கிறான். அதுப்போல் தான் பார்ப்பனர் முதலியவர்களும். ஆந்திராவில் உள்ள நாயக்கர்களுக்குப் பூணூல் உண்டு.

 

எதற்காக?

தன்னை மேல் ஜாதி என்று மற்றவர்கள் நினைப்பதற்காகத் தான். புரோகிதன் எதற்கு? புரோகிதன் எதற்கு? புரோகிதன் என்றால் என்ன? என்பது முதலில் யோசிக்கத்தக்கதாகும். இன்று புரோகிதன் என்பவனுக்கு உள்ள லட்சணம் எல்லாம் முதலில் அவன் பெரிய சாதிக்காரனாக இருக்க வேண்டும். அவனுடைய நடத்தை, தன்மை முதலியவைகளைப் பற்றி நமக்குக் கவலையில்லை. பெரிதும் நமக்குத் தெரியாத மொழியில் அவனுக்குப் புரியாத சடங்குகளைச் செய்யச் சொல்லிப் பணம் வசுலித்துக் கொண்டு போகிறவனையே தான் இன்று புரோகிதன் என்கிறோம். மற்றும் அவன் காலில் நாமும், மணமக்களும் விழுந்து கும்பிடுகிறோம். அவனைச் சாமி என்று அழைக்கின்றோம்.

 

இவற்றைத் தவிரப் புரோகிதனுக்கு வேறு லட்சணம் சொல்லுங்கள் பார்க்கலாம்! அல்லது வேறு பயனையாவது சொல்லுங்கள் பார்க்கலாம்! இந்தப் புரோகிதன் நமக்கு எதற்கு என்று உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? அவன் நமது தமிழ் மக்கள் திருமணங்களில் எந்தக் காலத்தில் வந்து கலந்து கொண்டான் என்று உங்களுக்குள் யாருக்காவது தெரியுமா?

 

புரோகிதர் எதிர்ப்பு?

நாம் செய்த முதல் மாறுதல் நம் திருமணங்களில் புரோகிதமோ, பார்ப்பானோ இல்லை என்பதாகும். ஒருவரை மேலான பிறவி தாழ்ந்த பிறவி என்பதாக நாம் ஒப்புக் கொள்வதில்லை. அதற்காகப் பார்ப்பனத் துவேஷமோ, அவர்களிடத்தில் வெறுப்போ நாம் கொள்வதில்லை. நாம் கீழான சாதி என ஒப்புக்கொள்வதில்லை. அவ்வளவு தான்.

 

மேலும் கூட்டங்களில் நெய் விட்டு நெருப்பு உண்டாக்குவது போன்ற புரியாத சடங்குகளையும் செய்வதில்லை. இது நமக்கும் தெரியாத ஏதோ ஒரு பழக்கம். அது எப்பொழுது உண்டாயிற்று என்று நமக்கும் தெரியாது. அதைச் செய்கின்ற புரோகிதனுக்கும் தெரியாது. நாம் உஷ்ண நாட்டில் வாழ்வதால் குளிர்காய நெருப்பு அவசியமில்லை.

 

சாப்பாட்டுக்கு போட்டுக் கொள்ள வேண்டிய நெய்யை நெருப்பில் ஊற்றும் முட்டாள்தனத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்கிற முடிவிற்கு வந்து விட்டோம். அதுபோலவே வேறு பல காரியங்களையும் வெறுக்கின்றோம். ஏதோ காலத்திற்கு, உணர்ச்சிக்கு, பழக்கத்திற்கு அல்லாமல் இன்றும் ஆதாரத்தோடு இன்ன காரியம் செய்யப்பட்டது என்பதாக ஒன்றும் வரவில்லை. புராணத்தில் வேண்டுமானால் அதுமாதிரி இதுமாதிரி சொல்லியிருக்கிறது என்று சொல்வானே தவிர ஆதாரம் ஒன்றும் காட்டமுடியாது.

  

(தந்தை பெரியாரின் "வாழ்க்கைத் துணைநலம்" என்ற நூலில் இருந்து சில…)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_09.html

பார்ப்பனத் தோழர்களே!

நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன்.

இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந் தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத் தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

உண்மையிலேயே பார்ப்பனர்கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது.

நான் காங்கிரஸில் இருந்த காலத்தில் - அதாவது எனது நல்ல நடுத்தர வயதான 40-வது வயது காலத்தில் - நான் ஒரு சுயநலமும் எதிர்பாராமல், எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் (உயர்ந்த அந்தஸ்தில்) இருக்கும் போதே, பார்ப்பன சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன் என்பது எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தெரியும். நான் காங்கிரஸிலிருந்து பிரிந்ததே, பார்ப்பன வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுத்தான் பிரிந்தேனேயொழிய, மற்றபடி எந்தவிதமான சுயநலம் காரணமாகவும் பிரியவில்லை.

பிரிந்த பிறகு பார்ப்பன வெறுப்புணர்ச்சியோடு தொண்டாற்றுகிறேன் என்றால், அத்தொண்டில் எனக்குச் சுயநலம் என்ன இருக்கிறது? அல்லது எனது தொண்டில் நான் வெளிப்படையாகச் சொல்லுகின்ற கருத்தல்லாமல் வேறு உட்கருத்து என்ன இருக்கிறது? என்னைப் போலவே என் கருத்துகளுக்கெதிரான கொள்கைகளின் மீது உண்மையாகப் பாடுபடுகிற இராஜாஜி அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எப்படியோ நாங்கள் இரு பிளவாகப் பிளந்து ஒன்றுக் கொன்று ஒட்டமுடியாத அளவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.

எனக்கு, “நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்” என்கிற நம்பிக்கை உண்டு. இராஜாஜியோ, எப்படியோ யோசனையின்றி ஆத்திரப்பட்டுத் தவறான வழியில் இறங்கிவிட்டார். உண்மையிலேயே வருணாசிரம சாதி முறையைப் புதுப்பித்து நிலைநிறுத்துவது சாத்தியமாகுமா? காந்தி இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டார் என்றால், அது இன்றைக்கு 35- ஆண்டுகளுக்கு முந்திய காலம். இந்தக் காரணத்தினால் தான், அவர் கொல்லப்பட்டதற்குத் தமிழர்கள் அவ்வளவாக வருந்தவில்லை.

இன்றைய இராஜாஜியின் கருத்தை, என்னை அவர் காங்கிரஸில் இழுத்த காலத்தில் சொல்லியிருப்பாரேயானால், அவருக்கு ஏற்பட்ட பெருமையும், பதவி வாய்ப்பும், செல்வ வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்க முடியுமா? ஆகவே அவருடைய இன்றைய நிலைமை மக்களை ஏய்த்து வளர்த்தவர் என்றுதானே பொருள்? நான் அப்படியொன்றும் ஏய்க்கவில்லையே; உளறவும் இல்லையே? நான் - எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய 10- ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அல்லன்.

பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.

இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன். தாங்கள் அப்படி இல்லையென்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும். நம் நாடு இன்று அடைந்திருக்கிற இந்தப் போலி சுதந்திரம் என்பது ஒன்றைத் தவிர - மற்ற எல்லா வளர்ச்சிக்கும் பார்ப்பன சமுதாயம் எதிரியாக இருந்திருக்கிறது.

இதுமாத்திரம் அல்லாமல், நாட்டில் சமயம், தர்மம், நீதி, அரசியல் என்னும் பேரால் இருந்து வளர்ந்து வரும் எல்லாக் கேடுகளுக்கும் பார்ப்பன சமுதாயம் ஆதரவளித்தே வந்திருக்கிறது, வருகிறது. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்துத்தான் இந்த நாடும் இந்தச் சமுதாயமும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இனி வளர்ச்சியை மெதுவாக்கலாமே தவிர, யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைமையைக் காண்கிறேன்.

தந்தை பெரியார்.

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_6024.html

சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. இது, ஆங்கிலத்தில் உள்ள ‘சோஷலிசம்' என்னும் வார்த்தைக்கு தமிழ் மொழி பெயர்ப்பாகக் கையாளப்படுகிறது என்றாலும், சோஷலிசம் என்ற வார்த்தையே தேசத்துக்கு ஒருவிதமான அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகிறது. அனேகமாக அவ்வார்த்தை அந்தந்த தேச தகுதிக்கும், சவுகரியத்துக்கும், அரசாங்கத்துக்கும் தகுந்தபடிதான் பிரயோகிக்கப்படுகின்றது. சில இடங்களில் சட்டதிட்டங்களுக்கு மீறினதாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்கின்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகின்றது. இங்கு சமதர்மம் என்ற வார்த்தைக்கு, சமூகத் துறையிலும், பொருளாதாரத் துறையிலும், மக்கள் உயர்வு, தாழ்வு இல்லாமல் சமத்துவமாய் வாழ வேண்டும் என்பதையே சமதர்மம் என்று நான் கருத்துக் கொண்டு, சமதர்மம் என்கின்ற வார்த்தையை இங்கு பிரயோகிக்கின்றேன்.

ஏனெனில், மற்ற நாட்டில் சமூகத் துறையில் நம் நாட்டில் உள்ளது போன்ற பிறவி, உயர்வு, தாழ்வு பேதம் இல்லை. பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றன. நம் நாட்டுச் சமுதாய உயர்வு தாழ்வானது, பிறவியிலேயே வகுக்கப்பட்டு, அதை மதத்தோடு பொருத்தி, அதற்கு அரசியல் பாதுகாப்பளிக்கப்பட்டு இருந்து வருகிறது. அரசியலில் உள்ள பாதுகாப்பை உடைப்பது என்று முதலில் ஆரம்பித்தால், அதற்கு நம் நாட்டு மக்கள், அதுவும் பொருளாதாரத்தால் மிகவும் நொந்து ஏழ்மை நிலையில் இருக்கும் மத நம்பிக்கை கொண்ட பாமர மக்கள் என்பவர்களே சிறிதுகூட ஒப்பமாட்டார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல், அவர்களே நமக்கு எதிரிகளாயும் இருப்பார்கள்.

ஏனெனில், பிறவி காரணமாய் உள்ள உயர்வு தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு, அம்மதம் பாமர மக்கள் ரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும், அதுவே அரசியலுக்கு ஆதாரமாய் இருப்பதாலும், அதை மாற்றாமல், அதை மாற்றுவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல் மேல்நாட்டுச் சமதர்மம் பேசுவது, பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போலவே ஆகும். முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டு சமதர்மத்துக்கு முதற்படியாகும். நிற்க,

பொதுவாகவே சமதர்மம் என்பது எந்தக் கருத்தில் இருந்தாலும், சமுதாயம் முக்கியமானாலும், அதற்குக் கடவுள் உணர்ச்சி, மத நம்பிக்கை என்பவற்றின் எதிராகவே இருந்து வருகின்றன. சர்வதேச மதவாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும், மத நம்பிக்கையையும், சமதர்மத்திற்கு விரோதமானது என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால், எந்த சமதர்மவாதிக்கும் இதைப் பொறுத்தவரையில் அபிப்பிராய பேதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வேலை அபிப்பிராய பேதமில்லாமல் நடந்துதான் தீரும்.

நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து, மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்பதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாயிற்று. ஜாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால்தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும், சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய் காவலாய் இருந்து வந்திருக்கிறது.

இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதி பேதமே, பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் தராமல் அடக்கி வருகின்றதுடன் பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது. எந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள்களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும், நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகுசீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாட்டு மக்களுக்கு பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்பட்ட காரணம் எல்லாம், அவர்களின் பிறவியில் கீழ்மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும்.

நம் மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி, பொருளாதார சமதர்மம் சொன்னால்தான் உண்மையாகக் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது. ஆகவே, சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம், ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம், பொருளாதார சமதர்மத்துக்காகவே, பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கிறது என்றும், பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதாரமான மதத்தைப் பற்றியோ, மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப் பற்றியோ பேசினாலும், அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும், அதை நாத்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால்தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாத்திகர்களாகியே தீரவேண்டி இருக்கிறது.


(குடிஅரசு - 18.06.1949)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_14.html

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE