Language Selection

புதிய கலாச்சாரம்

இந்திய அரசின் இராணுவம் எல்லைகளில் நுழைந்ததன் விளைவாக ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டைகளினதும், இயந்திர துப்பாக்கிகளினதும் பேரொலிகளைக் கேட்டவுடன், தெலுங்கானா மக்கள் முழுமையும் மாபெரும் போராட்டத்திற்குத் தயாராயினர். கடந்த 3 வருடங்களாக மக்களுக்கு மனிதத் தன்மையற்ற, இழிந்த, கொடிய செயல்களைச் செய்த ரஜாக்கர் குண்டர்களின் மையங்களைத் தாக்கினர். எல்லா இடத்திலிருந்தும் மக்கள் போராட்டத்திற்குக் கிளம்பினர். இலட்சக்கணக்கான மக்கள் ரஜாக்கர் குண்டர்களின் மீது பழிக்குப் பழி தீர்த்துக் கொள்வதற்காக முன்வந்தனர். ரஜாக்கர் குண்டர்களின் மையங்களை சுற்றி வளைத்து நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆயுதங்களை பறித்தனர். எதிர்த்தவர்களையெல்லாம் மக்கள் அழித்தனர். சரணடைந்தவர்களை மக்கள் மன்னித்தனர். ஆட்களை உயிருடன் கொளுத்துதல், கொல்லுதல் — இவை சுரண்டல் வர்க்கங்கள் மேற்கொண்ட போர்முறை; சரண்டைந்த எதிரிகளுக்கு மன்னிப்பை அளித்தல் — இவை சுரண்டப்பட்ட வர்க்கங்கள் மேற்கொண்ட போர்முறை.

1948க்குள்ளாக, தெலுங்கானா மக்கள் இயக்கமானது மிக உயர்நிலையை அடைந்தது; அது பல புதிய இடங்களுக்கும் பரவியது. இயக்கமானது நலகொண்டா, வாரங்கல், கம்மம் ஆகிய பகுதிகளில் மிகப் பெரிய அளவில் பரவியது. இயக்கம் ஏற்கனவே மேடக் மாவட்டத்தின் ஒரு பகுதியில் நுழைந்து விட்டது. தெலுங்கானா மக்கள் உறுதியாக நின்றனர். நிஜாமினுடைய ரஜாக்கர் குண்டர்களை அவர்கள் துரத்தி அடித்தனர். நிஜாம் இராணுவமும், ஆயுதந்தாங்கிய ரஜாக்கர்களும் எதிர்த்து நிற்க முடியாமல் ஓடினர். ஆயிரக்கணக்கான கிராமங்கள் விடுவிக்கப்பட்டன. பரந்த அளவில் நிஜாமின் ஆட்சி அழிக்கப்பட்டது.

"வெட்டிச் சாக்கிரி'' ஒழிப்பு மற்றும் வரி கொடா இயக்கமானது, தானியப் பங்கீடு இயக்கம் நிலப்பங்கீடுக்கான இயக்கமாக வளர்ந்தது. பன்சார், பன்சாரி நிலங்களில் இலட்சக்கணக்கான ஏக்கர்கள் மக்களுக்குப் பங்கீடு செய்யப்பட்டன. நிலப்பிரபுக்களால் பலாத்காரமாக ஆக்கிரமித்துக் கொள்ளப்பட்ட நிலங்களை மக்கள் திரும்பவும் எடுத்துக் கொண்டனர். நிலப்பிரபுக்களின் நிலங்களுக்கு ஓர் உச்சவரம்பு ஏற்படுத்தப்பட்டது. மேலதிகமான எல்லா நிலங்களும் பங்கிடப்பட்டன.

இராணுவத்தின் கண்காணிப்புப் பலமாக இருந்த நிலையிலும், கிராமங்களைப் போலீசு, ரஜாக்கர் குண்டர்கள் சூறையாடுவது அதிக அளவில் நடந்து கொண்டிருந்த நிலையிலும், மக்கள் திரள் திரளாகக் கொலை செய்யப்பட்ட நிலையிலும் கூட, இம் மாபெரும் இயக்கம் புதிய புதிய இடங்களுக்குப் பரவிச் சென்றது. இது எவ்வாறு சாத்தியமானது?

நிஜாம் அரசின் போலீசும், இராணுவமும், ஆயுதந்தரித்த ரஜாக்கர் குண்டர்களும் மக்களைக் கொல்வதற்காக கிராமங்களில் வெறித்தனமாக செயல்பட்டனர். கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் மக்கள் வீசியெறியப்பட்டனர். மக்கள் தங்களுடைய சவக்குழிகளைத் தாங்களாகவே தோண்டச் செய்யுமாறு பலாத்காரப்படுத்தப்பட்டனர். பின்னர், அதில் புதைக்கப்பட்டனர்.

இந்தப் போராட்டங்களுக்கிடையில் நிஜாம் நவாப், காங்கிரசு அரசாங்கத்துடன் ஒரு சமரசத்திற்கு வந்தான். ஒரு வருடத்திற்கு சுதந்திரமாக இருப்பதற்கு அவனது ஆட்சிக்கு அனுமதி கிடைத்தது. இவ்வகையாக, காங்கிரசு அரசாங்கம் தெலுங்கானா மக்களுக்குத் துரோகம் செய்தது. இந்தச் சமரசத்தினால் நிஜாம் நவாப் திரும்பவும் தெலுங்கானா மக்களின் போராட்டத்தை கொடூரமாக அடக்குவதற்கு ஆரம்பித்தான். மாநில காங்கிரசு ஏற்கனவே போராட்டத்திற்கு வருந்தி விலகிவிட்டது. இதன்மூலம் மாநிலக் காங்கிரசு அதிகாரபூர்வமாக வெள்ளைக் கொடியை உயர்த்தியது. இதன் வழியாக காங்கிரசு அரசாங்கமும், மாநில காங்கிரசும் தெலுங்கானா மக்களின் போராட்டத்தை அடக்குவதற்கு நவாப்பிற்கு மறைமுகமாக உதவின. மக்களின் இயக்கம் நசுக்கப்படுமென்று அவர்கள் வீணான கனவு கண்டனர். ஆனால் முடிவுகள் இதற்கு எதிராக அமைந்தன.

ஆயுதம் தாங்கிய ரஜாக்கர் குண்டர்கள், போலீசு, இராணுவம் ஆகியவை தினந்தோறும் கிராமங்களின் மீது படையெடுத்தனர். வீடுகளை எரித்தனர். வீடுகளைச் சூறையாடுதல், பெண்களைக் கெடுத்தல், மக்களைச் சித்திரவதை செய்தல் ஆகிய குற்றங்கள் தினந்தோறும் ஏதாவதொரு கிராமத்தில் இடம் பெற்றன. எதிரிகளின் இத்தகைய தாக்குதல்களை எதிர்த்து வெற்றிபெற, நன்கு தேர்ந்த படையில்லாமல் சாத்தியப்படாது என்பதை மக்கள் உணர்ந்தனர்.

ரஜாக்கர் குண்டர்கள், போலீசு, இராணுவம் ஆகியவைகளை எதிர்ப்பதற்கு தடி, ஈட்டி, மிளகாய்ப் பொடி ஆகியவை போதுமானதாக இருக்கவில்லை. நவீன ஆயுதங்களின் தேவையை மக்கள் உணர்ந்தனர். இதற்கான முயற்சிகளை மக்களே மேற்கொண்டனர். கட்சிக்கும், ஆந்திர மகாசபைக்கும் மக்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு தங்களுடைய துப்பாக்கிகள், கத்திகள், ஈட்டிகள் போன்றவற்றைத் தந்தனர். நிலப்பிரபுக்களிடமிருந்து துப்பாக்கிகளை மக்களே பறித்துக் கொண்டனர்.
கிராமங்களின் தற்காப்பும், ஆயுதங்களைச் சேகரிப்பதும் உடனுக்குடன் நடந்தேறின. தானிய வரியைக் கொடுக்க மறுப்பதும், வரிகொடா இயக்கமும், நில வினியோகமும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தன. மக்களின் எதிரிகள், அவர்களின் குற்றங்களுக்கேற்றவாறு தண்டிக்கப்பட்டனர்.

நிஜாம் நவாபின் ஆட்சியும் சுரண்டலும், கிராமங்களிலுள்ள நிலப்பிரபுத்துவத்தின் அடிப்படையில் அமைந்தவையே. ஆனால் உணர்வுகளை அடைந்த மக்கள், இடி போன்ற தாக்குதல்களை தொடுத்து கிராம மட்டங்களில் எங்கும் நிலப்பிரபுத்துவத்தை அழிக்க ஆரம்பித்தனர். வளரும் மக்கள் இயக்கத்தை அடக்குவதன் பொருட்டும், சுரண்டலைப் பாதுகாப்பதன் பொருட்டும் நிஜாம் நவாப் முசுலிம் மக்களிடையே வகுப்புவாதக் கொள்கையை வேகமாகப் பரப்பினான். காஸிம் ராஸ்வியின் தலைமையின் கீழ் முசுலிம் குண்டர்களை ஆயுதம் தரிக்கச் செய்து கிராமங்களைத் தாக்க அனுப்பினான்.

1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதியன்று பிரிட்டிசு ஏகாதிபத்தியம் காங்கிரஸ் தலைமையுடன் சமரசம் செய்து கொண்டது. இவ்வாறு பிரிட்டிசு ஏகாதிபத்தியம் பின்னணிக்குச் சென்று விட்டது; அதே சமயத்தில் பெருமுதலாளிகளும், பெரிய நிலப்பிரபுக்களும் அடங்கிய காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. மற்ற எல்லா அரசுகளும் இந்திய யூனியனுடன் சேர்ந்து கொள்ள ஒத்துக் கொண்டாலும் காசுமீர், நிஜாம் ஆகிய அரசுகள் இந்திய யூனியனுடன் சேர மறுத்துவிட்டன.

நிஜாம் மாநில அரசு வளர்ந்து வரும் மக்கள் இயக்கத்தை நசுக்க மாநிலம் முழுவதும் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தியது. பல கிராமங்களில் இராணுவ முகாம்கள் நிறுவப்பட்டன. கிராமங்களில் மாதக்கணக்கில் தாக்குதல் தொடுத்து கிராம மக்களை சித்திரவதை செய்யத் தொடங்கினர். ஆந்திர மகாசபையிலிருந்து மக்களை விலகச் சொல்லிக் கட்டாயப்படுத்தினர்.

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE