Language Selection

புதிய கலாச்சாரம் 2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

 

 

பாட்னா எக்ஸ்பிரசில்

பாதுகாப்புடன் இறக்கப்படும் சுமைகளை

ஏக்கத்துடன் பார்த்தபடி

இடறி விழுந்து கால் உதறி நெளியும் முகங்கள்.

 

கோணியால் இறுக்கப்பட்ட பொதிகளில்

போய்ச் சேரும் முகவரி

தெளிவாய் இருக்கிறது.

 

தோலினால் போர்த்தப்பட்ட

தொழிலாளர்களின் உடம்பு

போய்ச்சேருமிடம் அறியாது

சுவரோரம் காத்துக் கிடக்குது.

 

வந்தவேகத்தில் அனைத்தையும்

வாரிப்போட்டது போல்

சென்ட்ரல் ஸ்டேசனுக்கு வெளியே

தலைகள் சரக்காய் குவிந்து கிடக்கிறது.

 

கூறுபோட்டு அனைத்துக் குரலையும் திரும்பவும்,

பேருந்துக் கொன்றாய் திணிப்பதைப் பார்க்கையில்,

துடுப்பென கைகளை விலக்கி

"ஒத்து... ஒத்து... அடுத்து

ஒரிசா புவனேஸ்வர் இரயில் வந்துருச்சு'  என

ஓடும் போர்ட்டர்களின் தீவிரத்தைப் பார்க்கையில்,

யாரிடம் கேட்பது என் சந்தேகத்தை

வந்தது சரக்கு ரயிலா? பயணிகள் இரயிலா?

 

• துரை.சண்முகம்