Language Selection

புதிய கலாச்சாரம் 2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

 

தனியே அழுது நிற்கும் குழந்தையிடம்

அக்கறையால் விசாரிக்கும் கூட்டத்தின் குறுக்கே,

என்னதென்று எவ்விதக் கேள்வியுமின்றி

"எக்ஸ் கியூஸ் மீ ! கொஞ்சம் வழி விடுறீங்களா?'

என்று தன்வழியே

விரைந்து செல்கிறது அந்தக் கால்கள்.

 

ஓடும் பேருந்தில் ஒருவருக்கொருவர்

கல்விக் கட்டணம் பற்றிக் காரசாரமாய் பேசிக்கொண்டிருக்க,

காது கொடுக்க பிடிக்காதது போல்

"எக்ஸ் கியூஸ் மீ ! கொஞ்சம் தள்ளிக்கிறீங்களா?'

என எட்டிப்போய்

காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு

கடுப்பாய்ப் பார்க்கிறது அந்த முகம்.

 

பெட்ரோல், டீசல்

விலை உயர்வுக்கெதிரான ஆர்பாட்டத்தை

தன்னை மறந்து கவனிக்கும் மக்களிடம்

"எக்ஸ் கியூஸ் மீ...! போங்க.. போங்க...!' என்று

விடாமல் ஹாரனை அடித்து விரட்டுகிறது அந்த வாய்.

 

அலுவலகம் கூட்டும் பெண்ணிடம்

"இதோ குப்பை..' என்று கச்சிதமாய்

தன் காலுக்கடியில் வேலை வாங்கிக் கொண்டு...

முடிவெட்டும் தொழிலாளியிடம்

முன்னும் பின்னும் கண்ணாடி பார்த்து

இம்மி பிசகாமல் வேலைத்தரத்தை உறுதி செய்து கொண்டு...

 

இப்படி... சகலத்திலும்

சமூக உழைப்பை அனுபவித்துக் கொண்டே,

நாட்டில் எது நடந்தாலும்

"நீ எதையாவது செஞ்சுக்க.. எனக்கு வழிய விடு...

என்று ஒதுங்கிச் செல்கிறது அந்த உருவம்.

 

தன்னலம் தவிர வேறு எந்தக் கருத்திலும்

பிடிபடாமல் நழுவிச் செல்லும்

இது எந்த வகை மிருகம்?

மிருகங்களின் நடத்தை

இவ்வளவு மோசமாய் இருப்பதில்லை... எனில் !

இது வேறு என்ன?

 

• துரை. சண்முகம்