Language Selection

புதிய கலாச்சாரக் கவிதைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times




தேர்தல் காலங்களில்
சூறாவளிச் சுற்றுப் பயணம்
..
சூறாவளி ஓய்ந்தபின்
வாக்காளர்களின்
பிணங்களின் மீதும்
வாக்குறுதி வழங்க
இன்னொரு பயணம்.
..
உங்கள்
ஒரு சொட்டு கண்ணீர்கூட
வெள்ள அபாயத்தை
அதிகரிக்கக் கூடும்
..
உங்களால் சாவதைவிடவும்
உங்களால் வாழ்வது கொடிது.
..
விதைக்க அகழந்த மண்ணையும்
வேரிலேயே பொத்திவைத்து
வியர்வையில் குளிர்விக்கும்
எங்கள் மேல்
எப்படி வந்தது இயற்கையில் சீற்றம்?
..
மாங்குரோவ் காடுகளை
நீங்கள் மேய்ந்தபோது
அறியவில்லை நாங்கள் -
..
உங்கள் வங்கிக் கணக்கில்
வலுவாக மையம் கொண்டுருக்கும்
மூலதனம்
வங்காள விரிகுடாவிலிருந்து
எங்களைக் காவு கொள்ளும் என்பதை.
..
காற்றுக்கு
உயிர்களை சுவாசிக்கவும்
தண்ணீருக்கு
இரத்தத்தைக் குடிக்கவும்
பயிற்றுவித்தது யார்-
நீங்கள்தானே?
..
புவி ஈர்ப்பு விசைகூடப்
பொதுவாக இல்லாத
நாடு இது - விளங்கிக் கொண்டோம்.
..தண்ணீர் வடிய வடிய
ஊற்றெடுக்கும் பிணங்களின்
விழிகளில் இருக்கிறது
எங்கள் வெள்ளை அறிக்கை.
..எஙக்ள் சாவுக்கு
என்ன விடை?
..
தூரத்திலிருந்து பார்ப்பவர்கள்
முணுமுணுக்கிறார்கள் -
"உலகம் அழியப் போகிறது"
..உண்மைதான்
உஙக்ள் உலகம் அழியத்தான் போகிறது.
..
துரை. சண்முகம்
டிசம்பர் 1999 புதிய கலாச்சாரம்