1989 ஜேவிபி அழித்தொழிப்பிற்கு பின்னர் ஜேவிபியை மறுபடியும் கட்டியமைத்தவர்களில் ஒருவரும், குமார் குணரத்தினத்தின் துணைவியாரும் ஆன "சம்பா சோமரத்ன" அவர்கள் நாட்டு மக்களிற்கு எழுதிய பகிரங்க கடிதம் இது.
மௌனம் பிற்போக்குவாதிகளுக்கே சேவை செய்கிறது. எனவே, மௌனத்தை கலைக்கும் வேளை வந்து விட்டது வாய் சவாடல்களுக்கும், கயிறிழுத்தல்களுக்கும் மத்தியில் உண்மையை அறிந்து கொள்ளும் உரிமையை திறந்துவிட வேண்டும். இறுதி முடிவு மக்களிடமே உள்ளது.
இன்று அதிகாரமும், அகங்காரமும் தலைக்கேறி; சிறு கட்சிகள் தமக்கு சவாலாக இல்லையென வாய்ச்சவாடல் விடும் ஜேவிபியை பார்த்து இலங்கை இடதுசாரிய வரலாற்றை மீண்டும் கற்க வாருங்களென அழைப்பு விடுக்க வேண்டியுள்ளது. 60களில் ஜாம்பாவான்களாக இருந்த பழைய இடதுசாரியத்தின் முன்னால், சேறு பூசல்களையும் அவதூறுகளையும் தோற்கடித்து வர்க்க ஒத்துழைப்பிற்கு எதிராக, இதேபோன்று சிறு எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் ரோஹன விஜேவீர ஜேவிபியை உருவாக்கினார். சரியான வர்க்க அரசியலை கட்சியின் அரசியலாக தேர்ந்தெடுத்தார். பாட்டாளிகள் தமது உரிமைகளை வெல்வதற்கு போராடுவதைத் தவிர வேறு வழி கிடையாதென்பதையும், உரிமைகளை வெள்ளித் தட்டில் வைத்து முதலாளிகள் தரமாட்டார்கள் என்பதையும் வர்க்கத்திற்கு உணர்த்தினார். வர்க்க ஒத்துழைப்பு மற்றும் மறுசீரமைப்புவாதம் என்பது பாட்டாளி வர்க்கத்திற்கு அழிவைத் தரக்கூடிய, எதிரிக்கு சேவை செய்பவையாகும் என துணிந்து அச்சமின்றி வர்க்கத்தை அறிவுறுத்தியமையால்தான், 80களில் நடந்த கொடூர அடக்குமுறையின் முன்னால் கூட கட்சியால் தளராது செயற்பட முடிந்தது.