Language Selection

2020
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொரோனா உலகெங்கும் பரவிய வடிவம், செல்வ அடுக்குகளின் மேல் இருந்தவர்கள் மூலம் நடந்தேறியது. செல்வ மேல் அடுக்கில் இருந்து கீழாக பயணிக்க தொடங்கிய கொரோனா லைரஸ்சுக்கு தெரியாது, மருத்துவம் பணம் உள்ளவனுக்கு மட்டும்தான் இருந்தது என்ற உண்மை. அனைவருக்கும் மருத்துவமில்லை என்ற எதார்த்தம், பணமுள்ளவனின் மருத்துவ அடித்தளத்தையே தகர்த்துவிட்டது. பணம் உள்ளவன், இல்லாதவன் என்று எந்தப் பாகுபாடுமின்றி, மருத்துவ உலகை புரட்டிப்போட்டு இருக்கின்றது.

அந்தளவுக்கு இயற்கை பணத்துக்கு கட்டுப்பட்டதோ, உட்பட்டதே அல்ல. ஆனால் உலகமயமாதல் அனைத்தையும் பணத்துக்கு உட்பட்டதாக்கியதன் விளைவு, இன்றைய பொது அவலமாக வருகின்றது. இயற்கையில் உருவான வைரஸ்சை சமூகமாக போராடித்தான் எதிர்கொள்ள முடியும், தனிமனிதனாக அல்ல. இயற்கை அந்தளவுக்கு வீரியம் மிக்கது.

இயற்கையில் உருவான ஒரு மனிதனின் இதயம் ஒரு நாளுக்கு 1,03,689 முறை துடிக்கிறது. ரத்தமோ ஒரு நாளில் 27,03,69,792 கிலோ மீற்றர் பயணம் செய்கிறது. 70,00,000 மூளைச் செல்கள் தொடர்ந்து கற்றுக் கொள்கின்றது. 438 கன அடி காற்றை உள்ளே இழுக்கிறது. 23,000 தடவை சுவாசிக்க முடிகின்றது. 750 தசைகளை அசைக்க முடிகின்றது. இந்த இயற்கையின் ஆற்றல் மேலான மனிதக் குரங்கின் பரிணாமமும், உழைப்பின் ஆற்றல் மனிதனாக பரிணாமமடைந்த போது, உயிரியல் ரீதியாக தன்னை தகவமைத்துக் கொள்கின்றது. இதுதான் இயற்கையின் ஆற்றல். இயற்கை தொடர்ந்து இயங்கிக் கொண்டும், தன்னை மாற்றிக் கொண்டும் இருப்பது போல், இந்த இயற்கையில் மனிதனும் தன்னை தகமைத்துக் கொண்டு இருக்கின்றான். இவை அனைத்தும் இயற்கையின் போக்கில் நிகழ்கின்றது.

மனித சிந்தனையும், செயலும் இயற்கையை மிஞ்ச முடியாது. இயற்கையின் போக்கில் வெற்றி கொண்டு வாழ முடியும். இது தான் இயற்கை விதி.

இயற்கை மனிதனை விட பிரமாண்டமானது. இயற்கையும் தன்னை மாற்றிக் கொண்டு, தன்னைத்தான் புதுப்பித்துக் கொண்டு இருக்கின்றது. மனித அறிவால் முன்கூட்டியே இயற்கையை, தன் அறிவுக்குள் அடக்கியோ, முடக்கியோ விட முடியாது. இப்படி இருக்க இந்த பூமியையும், அதில் உள்ள இயற்கையையும் விற்றுவிடுகின்ற தனியுடமையானது, எல்லா மனிதர்களும், பிற உயிரினங்களும் வாழ்வதற்கு எதையும் விட்டுவிடவில்லை.

மனித அறியாமையையும், மனித அவலத்தையும் பார்த்த செவ்விந்திய தலைவர்கள் ஒருவர்; 200 வருடங்களுக்கு முன் கூறினான் "எங்களுக்கு இதுவரை தெரியும் பூமி மனிதனுக்கு சொந்தமல்ல. மனிதன் தான் பூமிக்குச் சொந்தமானவன். ஒரு குடும்பத்தின் ரத்தத்தை போல அனைத்து பொருட்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. பூமியிலுள்ள உயிரினச் சங்கிலி வலையை மனிதன் நெய்யவில்லை. அவன் அதில் ஒரு நூல் அவ்வளவே." எவ்வளவு பெரிய உண்மை. எமது தனியுடமை சிந்தனைமுறையால் ஜீரணிக்க முடியாத, மிகப்பெரிய உண்மை.

தனியுடமையை நவீன அறிவியலாக கொண்ட சமூகம், இந்த உண்மையை மறுக்கின்றது. பூமி மனிதனுக்கு சொந்தமானது என்றும், அது தனியுடமையிலானது என்றும், அதனை தனது தனியுரிமையாக்கும் உரிமை தனது "ஜனநாயக" உரிமை என்றும் மார்பு தட்டுகின்றது. இதையே நாடுகளின் சட்டங்கள், சமூக ஒழுங்குகள், அரசுகள் என்று எல்லாவற்றையும் தனிச் சொத்துடமை என்ற வரம்புக்குள் குறுக்கி விடுகின்றது. இயற்கையில் உள்ள அனைத்தையும், வரைமுறையின்றி சூறையாடுகின்றது. வரைமுறையின்றி நுகர்ந்து, அதையே கழிவுகளாக மாற்றி பூமியில் குவிக்கின்றது. பூமியை ஒரு சிலர் தனது தனிச்சொத்துடமையாக்கி குவிக்கும் வரைமுறையற்ற செயலை நியாயப்படுத்தவும் தொடரவும், மீள் பயன்பாடு - சுழற்சி என்று நவீன முகமூடியைப் போட்டுக் கொள்கின்றது. தொடர்ந்து இயற்கையை அங்குலம் அங்குலமாக விற்று பணத்தைக் குவிக்கின்றது. சிலர் பணத்தைக் குவிப்பதையே, மனித நுகர்வாக வக்கிரமடைகின்றது. இதற்கு எல்லையோ, வரம்போ கிடையாது.

சூழல் அழிகின்றது. பிற உயிரினங்கள் உயிர் வாழ முடியாது மடிந்து போகின்றது. நீர் சந்தைப் பொருளாகிவிட்டது. உணவு வியாபாரப் பண்டமாகிவிட்டது. மருத்துவம் பணமுள்ளவனின் உடைமையாகிவிட்டது. பிற உயிர்கள் உயிர்வாழும் இயற்கையை மறுக்கும் தனியுடமை தான், பணமில்லாத மனிதன் உயிர் வாழ முடியாத பூமியாக்கிவிட்டான்.

கொரோனா வைரஸ் தனியுடமையால் சிதைந்து போன மருத்துவத்தின் மேல் வெற்றி கொண்டு, மனிதர்களைக் கொன்று வருகின்றது. மனித உழைப்பை நிறுத்துமாறு நிர்ப்பந்தித்து இருக்கின்றது.

உழைப்பின் ஆற்றலைக் கொண்டு இயற்கையை தன் தேவைக்கு ஏற்ப மாற்றி வாழ்ந்த மனிதன், கொரோனா வைரஸ்சால் நிலை தடுமாறுகின்றான். எந்த உழைப்பு நவீன மனிதனை உருவாக்கியதோ, அந்த உழைப்பு நிறுத்தப்பட்டு இருக்கின்றது. எந்த மனித உழைப்பைத் திருடி உலகை தமதாக்கினரோ, அந்த திருட்டை தொடருவதற்காக உழைப்பை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. இந்த உழைப்புத் திருட்டை, இதனால் குவித்த தனியுடமையை பாதுகாக்க உருவான அரசுகள், பதகளித்துப் போய் நிற்கின்றது.

இயற்கையில் தோன்றிய வைரஸ் உலகைக் கட்டுப்படுத்துகின்ற அதிசயம். அதை எதிர் கொள்ளமுடியாது, தனியார்மயமான நவீன அறிவியல் திணறுகின்றது. வைரஸ் மனிதனைக் கொல்லுகின்ற வேகத்தைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் முடியாத தனியுடமையிலான மருத்துவமுறை பதகளித்து திணறுகின்றது. தனியுடமையாகிவிட்ட மருத்துவத்தால் மனித பிணங்களை எண்ணுவதையே செய்ய முடிகின்றது.

உலகமயமாதால் நவீன மருத்துவ கண்டுபிடிப்புகளை சந்தை மூலம் பெறுமதியற்றதாக்கியதால், அதை மக்களுக்கு பயன்படுத்த முடியாத மருத்துவமாகிவிட்டது. இன்று கொஞ்சமாவது மக்களுக்கு ஆறுதல் கொடுப்பது தனியுடமையல்ல - மனிதனிடம் எஞ்சிக் கிடந்த – கிடக்கின்ற சமூகக் கூறுதான்.

முன்னாள் சோசலிச நாடுகள் தனியுடமையான போதும், அது விட்டுச் சென்ற சமூக அடிப்படைகள் உலகுக்கு மூச்சைக் கொடுக்கின்றது. கொரொனா தோன்றிய இடத்தில் அதைக் கட்டுப்படுத்திய சீனா, தனது பிற பிரதேசங்களுக்கு பரவி விடமால் தடுக்க எடுத்த முயற்சியை அலட்சியப்படுத்திய நாடுகள் - இன்று தங்கள் சொந்த விதியை தேர்ந்தெடுத்து நிற்கின்றனர்.

இன்று சீனா மருத்துவ ரீதியாக கைகொடுக்கா விட்டால், கற்பனை பண்ண முடியாத மனித அவலத்தை உலகமயமாதல் மனிதகுலத்துக்கு தந்திருக்கும் என்ற உண்மையை எம்முன் கற்றுக்கொண்டு போராடக் கோருகின்றது. சீனாவில் கொரொனா தோன்றாது மேற்கில் இருந்து தோன்றியிருந்தால், இதன் இன்றைய விளைவு எண்ணிப் பார்க்க முடியாத மிகப் பிரமாண்டமானதாக இருந்திருக்கும் என்பதை நாம் மறக்க முடியாது. உலகமயமாதல் மருத்துவக் கொள்கைதான், எதை மக்களுக்கு எப்படி கொடுப்பது என்பதைத் தீர்மானிக்கின்றது. அது பணம் என்ற ஒற்றை அளவுகோலை மட்டுமே கொண்டது.

மக்கள் நலத்தை முன்வைக்காத நவீன அறிவியல் மற்றும் மருத்துவம், செல்வ அடுக்குகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்திருக்கின்றது. இங்கு மருத்துவமானது பொது நோயை எதிர்கொள்ளும் சமூக ஆற்றலை அழித்துவிட்டது. இன்று அதன் அடித்தளங்கள் எல்லாம் இடிந்து வீழ்ந்து கொண்டு இருக்கின்றது.

இரண்டாம் உலக யுத்தத்தை நடத்திய பாசிட்டுகள் மற்றும் முதலாளிகளிடமிருத்து உலகை பாதுகாக்க சோசலிச நாடுகளும், சோசலிச உணர்வு கொண்ட மக்களும் தான் போராடினார்கள். இன்று முன்னாள் சோசலிச நாடுகளில் எஞ்சியுள்ள சமூகக் கூறுகளும், உலகெங்கும் சமூக எண்ணம் கொண்ட மனிதர்களும் தான், கொரோனா வைரஸ்சுக்கு எதிரான போராட்டத்தை தலைமைதாங்கி நடத்துகின்றனர்.

தன்னலம் கொண்ட தனியுடமையோ, அந்த சிந்தனையைக் கொண்ட மனிதர்களோ, பணத்துக்காக மருத்துவமுறைக்கு வந்த வைத்தியர்களோ அல்ல. பணமோ, பணத்தைக் கறக்க தனியுடமையான வைத்தியசாலைகளோ அல்ல.

மரணத்தைக் கண்டு தப்பியோடாது சக மனிதனின் உயிரைக் காப்பாற்ற சமூக உணர்வுடன் போராடும் மனிதம் தான், எம்முன்னுள்ள ஒரே நம்பிக்கை. இது தான் மனிதனின் போராட்ட வரலாறுகளும் கூட.