Language Selection

2019
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உனக்காகவும், உன் நன்மைக்காகவும் உழைப்பதாகவும் - குரல் கொடுப்பதாகவும் கூறிக் கொண்டும் - காட்டிக்கொண்டும், உன்னை பிறரிடம் இருந்து தனிமைப்பட்டு வாழக் கோருகின்ற பொறுக்கிகள் தான் சமூகவிரோதிகள்.

இந்த சமூக விரோதிகள் மானிடத்துக்கு கேடு விளைவிக்கும் வண்ணம், பிற சமூகத்துடன் கூடி உழைத்து வாழும் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து ஓடுக்குகின்றது. வதந்திகளை உருவாக்கி அதைப் பரப்புவது முதல் பொது இடத்தில் முஸ்லிம்களை சந்தேகத்துக்குரியவராக முன்னிறுத்தி தனிமைப்படுத்தி ஒடுக்குவதே, இவர்களின் நோக்காக இருக்கின்றது.


தனி அடையாளங்களுடன் ஓடுக்கி, ஓதுங்கி, தனித்து வாழ்வதற்குள் தள்ளி வைக்க, கூடி வாழ்கின்ற மனிதப் பண்பை இலக்கு வைத்து தாக்கி அழிக்கின்றது. குறிப்பாக முஸ்லிம் மக்களின் உழைப்பை இலக்கு வைத்து தாக்குகின்றது. இதன் மூலம் முஸ்லிம் மக்களை தனிமைப்படுத்தி ஒடுக்கவும், அதேநேரம் தன் சமூகத்தை அவர்களில் இருந்து ஒதுக்கியும், ஒடுங்கியும், தனிமைப்பட்டு வாழவும் கோருகின்றனர். இதுதான் இந்த சமூக விரோதிகளின் சிந்தனையாகவும், அரசியலாகவும் இருக்கின்றது.

தன் சமூகம் குறித்த அக்கறையில் இருந்தே இதை முன்வைப்பதாக காட்டிக் கொண்டு, தன் சமூகத்தை குறுகிய வட்டத்துக்குள் சிறைப்படக் கோருகின்றது. 1930 களில் யூதருக்கு எதிராக கிட்லரின் தலைமையிலான பாசிட்டுகளின் இன நிற வெறி நாசிசம் மூலம் முன்னெடுத்த அதே வக்கிரத்துக்கும், வன்முறைக்கும் நிகரானதே, இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக இவர்கள் முன்வைக்கும் வாதங்களும், வன்முறைகளும்.

 

முஸ்லிம் மக்கள் பிற மக்களுடன் கூடி உழைத்து வாழ்வது என்பது, தாங்கள் அல்லாத பிற சமூகத்துக்கு நஞ்சிடுவதற்காகவே என்று சித்தரிக்கின்ற அளவுக்கு, சமூக விரோதிகள் எல்லா சமூகத்திலும் புளுத்து வருகின்றனர்.

மனிதத்தையே தங்கள் கால்களால் மிதிக்கின்ற கேடுகெட்ட மனிதவிரோத நடத்தை என்பது பௌத்த பேரினவாதத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல. இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் பேசுகின்ற எல்லாத் தரப்புகளின் அரசியல் வக்கிரமாகவும் மாறி இருக்கின்றது. இந்த வெறிபிடித்த கூட்டத்தின் மனித வெறுப்பானது, இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு நிகரானது.

முஸ்லிம் மக்களின் வர்த்தகத்தை முடக்க விரும்பும் பிற வர்த்தக போட்டியாளார்கள், திறமை சார்ந்த முஸ்லிம் உழைப்பாளிகளின்; உழைப்பு மூலம் தன் போட்டியாளன் வெற்றி பெறுவதை தடுக்க… இப்படி பல்வேறு பின்னணியில், உழைக்கும் முஸ்லிம் மக்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். முஸ்லிம் வர்த்தக நிலையத்தை பகிஸ்கரிக்கவும், முஸ்லிம்களை உழைப்பில் இருந்து அகற்றவும், குடியிருப்புகளை மறுக்கவும், பொது இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கவும், பலவிதமான ஒடுக்குமுறைகளும், வன்முறைகளும் அரங்கேறுகின்றது.

இதன் பின்னால் இருப்பவர்கள் இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் பேசுகின்ற, தேர்தல் அரசியல் செய்கின்ற காப்பரேட் அரசியல்வாதிகளும், அவர்களை அண்டிப் பொறுக்கித் தின்னும் சமூக விரோதப் பொறுக்கிகளுமே இருக்கின்றனர்.

கருக்கலைப்பு முதல் கரு உருவாக முடியாத வண்ணம், தாங்கள் உண்ணும் உணவில் முஸ்லிம்கள் ஏதோ ஓன்றை மர்மமாக கலப்பதாக கூறுகின்ற ஆதாரமற்றதும், அறிவுக்கு முரணானதும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத விடையங்களை முன்வைத்து பரப்புவதென்பது, கூடி உழைத்து வாழும் மனித நாகரீகத்துக்கு எதிரான ஒரு பயங்கரவாதமாகும். இவர்கள் தான் சமூகத்துக்கு வேட்டு வைக்கும் பயங்கரவாதிகள், சமூகத்தை கூறுகூறாக பிரித்து தனிமைப்படுத்தும் சமூக விரோதிகள்.

தாங்கள் முற்போக்குகள், இடதுசாரிகள் என்று கூறிக்கொண்டு இனவாதம், மதவாதம், சாதியவாதம், பிரதேசவாதத்துடன் கூடி கும்மியடித்து வாக்கு போடுகின்ற கேடுகெட்ட மனித நடத்தைகளின் துணையுடன், இந்த சமூக விரோதிகள் செழித்து வாழ்கின்றனர். இதுதான் இன்றைய அரசியல் எதார்த்தமாகும்.