Language Selection

இரயாகரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் நடந்த ஊழல், இலஞ்சம், அதிகார துஸ்பிரயோகம், மோசடி, கட்டைப்பஞ்சாயத்துடன்.. கூடிய சமூக விரோதக் குற்றங்களை, நீதிமன்ற தீர்ப்பு ஒன்று அம்பலமாக்கி இருக்கின்றது. வெளியாகியுள்ள தீர்ப்பு "தமிழ் தேசிய" ஊடகங்களாலும், நவதாராளவாத சக்திகளாலும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.     

அதேநேரம் அண்மையில் தங்களை புனிதர்களாக காட்டி ஊழல் எதிர்ப்பு கூச்சல் போட்ட, "தமிழ் தேசிய" பிழைப்புவாதிகள் கூட்டுக் களவாணிகளாக இருப்பதால், மூடிமறைப்பதில் கூட்டுச் சேர்ந்துள்ளனர். சுண்ணாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்துள்ளது என்பதை உறுதி செய்துள்ள நீதிமன்றத் தீர்ப்பை, "தமிழ் தேசியம்" மக்கள் முன் இருட்டடிப்பு செய்துள்ளது.  இந்த பின்னணியில் "நீரில் எரியும் நிலம் - சுன்னாகம் நீர் மாசு இரகசியங்கள்" என்ற வீடியோ வெளியாகி இருக்கின்றது. இந்தக் காணொளி ஒட்டுமொத்த சதிகாரர்களின் சதிகளை, ஆதாரபூர்வமாக அம்பலமாக்கி இருக்கின்றது. 

 

"தமிழனின் ஆட்சி தமிழனுக்கு" சமூக நீதியையும் வளத்தையும் அள்ளித்தரும் என்று கூறி சாமியாடும் இனவாதம், எவ்வளவு பொய்யானது புரட்டுத்தனமானது என்பதை "நீரில் எரியும் நிலம் - சுன்னாகம் நீர் மாசு இரகசியங்கள்"  

https://www.youtube.com/watch?v=J1F8NfDxXp0 ) அம்பலமாகும் வண்ணம் துணிச்சலுடன் வெளிவந்திருக்கின்றது. 

"தமிழ் தேசிய இனவாத அரசியல்" முதல் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வரை எப்படிப்பட்ட மக்கள் விரோதிகள் என்பதற்கு மற்றொரு ஆதாரமாகவே, நீதிமன்ற தீர்ப்பு காணப்படுகின்றது.

"தமிழனின் ஆட்சி" யாழ் வெள்ளாளிய சாதியாதிக்க ஆட்சி தான் என்பது அரசியல்ரீதியாக அம்பலமாகி வந்த நிலையில், இந்தத் தமிழன் ஆட்சி அது மட்டுமல்;ல நவதாராளவாத மூலதனத்தின் எடுபிடிகளின், கைக்கூலிகளின் ஆட்சி என்பதை இந்தச் சம்பவம் நிறுவுகின்றது. 

நவதாராளவாத அரசியல் முடிவிற்காக நிபுணர் குழுக்களை அமைப்பது, தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வருமாறு நிபுணர் குழுக்களை விரிவாக்குவது, இலஞ்சம் கொடுப்பது, பதவி கொடுப்பது, வெளிநாட்டுக்கு அனுப்புவது… என்று "தமிழ்தேசிய" நவதாராளவாத பொறுக்கிகளின் வெட்டுமுகத்தை, இந்த வீடியோ மூலம் காண முடியும்;. 

இதுபோன்று மற்றொரு ஒலிவிடியோ வெளிவந்திருக்கின்றது. பிரபாகரன் போன்று வேசம் போட்டுக் கொண்டு "தமிழ் தேசியம்" பேசும் சிறிதரன் போன்றோர், ஊடகங்கள் கட்டுப்படுத்தும் ஒலி வீடியோ 

https://www.youtube.com/watch?v=-y-C5VcSHBw )  மூலம், தாங்கள் எப்படிப்பட்ட சாதிய இன வெறியர்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றனர். "தமிழ் தேசியம்" இனவாதம் மூலம் கிடைக்கும் அதிகாரத்தைக்கொண்டு, ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகள் மீது கையாளும் ஒடுக்குமுறையை அம்பலமாக்குகின்றது.

தமிழன் தன்னைத்தான் ஆள்வதன் மூலம் "நல்லாட்சி" கிடைக்கும் என்று கூறும் "தமிழ் தேசியத்தின்" மொத்;த அகராதியை அம்பலமாக்குகின்றது. தமிழன் தன்னைத்தான் ஆள்கின்ற போது இலஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகங்கள், கட்டைப்; பஞ்சாயத்துக்கள், அடாவடித்தனங்கள், அரசியல் செல்வாக்கு மூலம் காரியம் சாதித்தல்.. என்று எதுவும் இருக்காது என்பது கற்பனையானதாகும். மறுபக்கத்தில் இவை பொய்யானதும் புரட்டுத்தனமானதுமாகும். 

தேர்தல் முறை மூலம் நேர்மையானதும், உண்மையானதுமான தமிழ் மக்களின்; "ஜனநாயக"  ஆட்சியாக தமிழன் ஆட்சி இருக்கும், அதற்கான அதிகாரம் வேண்டும் என்று கூறுவது அரசியல் மோசடியாகும். வேறு சிலர் தேர்தல் வழிக்கு பதில், பிரபாகரனின் மரணதண்டனை வடிவிலான சர்வாதிகார ஆட்சிமுறையிலான தமிழன் ஆட்சியில், இதுபோன்றவை இருக்காது என்கின்றனர். பிரபாகரன் ஆசியுடன் தேசியத்தின் பெயரில் மக்களை ஒடுக்கி கொழுத்தவர்கள் தான், பிரபாகரனை பலிபீடத்துக்கு வழிநடத்;திச் சென்று பலியிட்டனர் என்பது எமது வரலாறு.             

ஒடுக்கும் வர்க்கம் முன்வைக்கும் "தமிழ்தேசிய" நவதாராளவாத தமிழனின் ஆட்சி என்பது, அது எந்த வடிவில் இருந்தாலும் அது மக்களை ஒடுக்கி கொழுக்கின்ற வர்க்கத்தின் எடுபிடியாக தான் செயற்படும்;.     

சுண்ணாகம் நிலத்தின் கீழ், எண்ணையை மூலதனம் கழிவாக விடவேயில்லை என்று நிறுவ, அது கிணற்றில் ஊறவில்லை என்று கூறுகின்ற புரட்டில், "தமிழ்தேசியம்", "தமிழன் ஆட்சி"… என்ற பெயரில் இயங்குகின்ற அனைத்து கட்சிகளினதும், படித்த நிபுணர்களாக காட்டிக் கொள்ளும் மேதைகளும் நடத்திய கூட்டு ஏமாற்றை, வீடியோ ஆதாரபூர்வமாக அம்பலமாக்குகின்றது. இலஞ்ச பணத்துக்கும், வெளிநாட்டு சுற்றுலாவுக்கும், பட்டம் பதவிகளுக்கும், அதிகாரத்துக்கும்… எதையும் காட்டிக் கொடுக்கவும், விற்கவும் செய்தனர் என்பதே உண்மை. சுண்ணாகம் நிலத்தடி நீரில் எண்ணை இல்லை என்று நிறுவ நடத்திய தொடரான மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு, இனவாதம் மூலம் "தமிழ் தேசியம்" பேசும் அனைத்துத் தரப்பும் ஒன்றுபட்டு நின்றதை இந்த வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடியும்.                

தமிழ் இனவாத "தேசியம்" மூலம் கிடைக்கும் சுகபோக வாழ்க்கையை பங்குபோட்டுக் கொள்ள நடக்கும் போராட்டமே, "தமிழ்" அரசியலாக நடந்து வருகின்றது. தேர்தல் மூலம் சுகபோக பதவிகளைப் பெற்றுள்ளவர்கள் முதல், அடுத்த தேர்தல் மூலம் தாங்களும் சுகபோகங்களை அடைவதற்காக கூத்தாடுகின்ற கூத்தாடிகள் வரை, முன்வைக்கும் தமிழ் "இனவாத" அரசியல் என்பது, நவதாராளவாத எடுபிடித்தனத்தை தாண்டி வேறு ஏதுமல்ல என்பதே உண்மை. இந்த நவதாராளவாத அரசியலை தோற்கடிக்காத வரை, ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மீட்சி என்ற பேச்சுக்கு இடமில்லை.