Language Selection

இரயாகரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலி அல்லாத அனைவரும் துரோகிகள், சமூக விரோதிகள். இதைத் தான் மாத்தையா சொன்னான் என்றால், புலிகள் தங்கள் பாசிச வரலாற்றை இப்படித்தான் தேசியமாக்கினர். தாம் அல்லாத மற்றவர்கள் மாற்றுக் கருத்தை வைத்திருப்பது முதல் ஆயுதம் வைத்திருக்கும் உரிமை அனைத்தையும், சமூக விரோத செயலாகவும், சட்டவிரோத செயலாகவும் கூறிய புலிகள், சில ஆயிரம் பேரைக் கொன்று ஒழித்தனர். இப்படி மக்கள் விரோத அரசியலை பாதுகாக்கவும், இதற்கு தலைமை தாங்கிய "மேதகு"வின் சர்வாதிகாரத்தை பாதுகாக்கும் அடிப்படையில், ஆயிரம் ஆயிரம் படுகொலைகளை புலிகள் செய்தனர்.

 

மக்கள் ஆயுதம் வைத்திருக்கவும், அதை கொண்டு மக்கள் தமக்காக போராடும்; உரிமையை மறுப்பது, சுரண்டும் வர்க்கத்தின் குணாம்சமாகும். மக்களுக்கு எதிரான குழு மட்டும் ஆயுதம் வைத்திருக்கும் உரிமையை, சட்டபூர்வமானதாக வரையறுப்பது மக்களை அடக்கியாள்பவர்களுக்கு மட்டுமேயான குறிப்பான குணாம்சமாகும். மக்களைச் சுரண்டி வாழ்பவர்களே சட்டவிரோதமான ஆயுதம் பற்றியும், ஆயுதம் வைத்திருக்கும் உரிமையை சுரண்டி வாழ்பவனுக்கு மட்டுமே உண்டு என்றும் கூறி, அதையே சட்டபூர்வமாக்குகின்றான்.

இதையே இனவெறி சிங்கள பாசிச அரசும், தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தும் உரிமையை மறுத்து அவதூறைச் செய்தது. புலிகள் போன்ற குறுந்தேசிய பாசிச குழுக்கள், தமது வர்க்க நலன்களில் நின்று மக்களை அடக்கியொடுக்கிய நிலையில் நின்று மக்களுக்கு இதை மறுத்தனர். இதற்கு மாறாக நாம் மக்களின் அடிப்படைக் கோரிக்கைக்காக போராட வேண்டிய வரலாற்றுக் கடமையில் ஈடுபட்டோம்;. புலிகளின் போராட்டத்துக்கு மாறாக எதைக் கோரினோம்;? நாங்கள் செய்த குற்றம் என்ன? புலிகளால் மறுக்கப்பட்டு, அடக்கப்பட்ட மக்களின் கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை கோரினோம். மக்கள் மீதான சுரண்டலை ஒழித்துக் கட்ட முனைந்தோம். தமிழ் பெண்கள் மீதான ஆணாதிக்கத்தை எதிர்த்தோம். தாழ்ந்த சாதித் தமிழர்களை உயர்சாதி தமிழர் அடக்கியொடுக்குவதை எதிர்த்துப் போராடினோம்.  மற்றைய இன மக்களுடன் ஐக்கியத்தைக் கோரினோம்;. பேரினவாத இனவொடுக்கு முறையை எதிர்த்து போராடக் கோரினோம்;. ஏகாதிபத்திய மறு காலனியாக்க முயற்சியை எதிர்த்துக் குரல் கொடுத்தோம். மக்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்கவும், அவர்களை ஸ்தாபனமயப்படுத்தவும், அதற்காக ஆயுதம் ஏந்தும் உரிமையை முன்வைத்து அவற்றைக் கோரினோம். அதை அமுல்படுத்தினோம். இதைத் தான் பாசிசப் புலிகள் சமூக விரோத செயல் என்றனர். தமக்கு எதிரான சதி என்றனர். தேச விடுதலைக்கு எதிராகச் செய்யும் துரோகம் என்றனர்.

இதைத்தான் அனைத்து அடக்கு முறையாளர்களும் தங்கள் சுரண்டும் வர்க்க நலன்களில் இருந்து செய்கின்றனர். தங்கள் பாட்டாளி வர்க்க விரோதத்துடன் இதை சட்ட விரோதமானதாகவும், பயங்கரவாதமாகவும் காட்டி அடக்கியொடுக்குகின்றனர். இதையே புலிகள் எம் மீது கையாண்டனர். மக்களின் அடிப்படையான ஜனநாயகக் கோரிக்கையை ஒடுக்குவதில், புலிகளின் குறுந்தேசியத்துக்கும், பேரினவாத சிங்கள அரசுக்கும் இடையில் வேறுபட்ட கொள்கையோ, நடைமுறையோ கிடையாது. இதில் ஒன்றுபட்டு நின்றனர்.

புலிகளின் மக்கள் விரோத பாசிசத்தை முறியடிக்கும் எமது போராட்டத்தில், எனக்கு முன் கைதானவர்கள் சிலரை, சமூகவிரோதிகள் என்று புலிகள் பகிரங்கமாக பல்கலைக்கழக மேடையில் அறிவித்தனர். அதை நான் அதே மேடையில் எப்படி என்று கேட்டு மறுத்தேன். இந்த ஜவரில் சிலர் எனது கைதுக்கு முன்பும் பின்புமாக விடுவிக்கப்பட்டதை பின்னால் அறிந்தேன்;. எனக்கு முதல் கைதானவரை மட்டும், நான் தப்பிய பின்பு, தவிர்க்க முடியாமல் விடுவித்தனர். புலியைப் பொறுத்தவரையில் "பல்கலைக்கழக மாணவர்களுக்கூடாக கேட்டுக் கொண்டதிற்கு இணங்க இவரின் உயிருக்கோ அல்லது இவரின் கல்விக்கோ எதுவித அச்சுறுத்தலாகவும் இருக்கமாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.|| என்கின்றார். ஆக "பல்கலைக்கழக மாணவர்களுக்கூடாக கேட்டுக் கொண்டதிற்கு இணங்க|| த்தான் உயிருக்கு உத்தரவாதம் தந்ததை ஒத்துக் கொண்டனர். இயல்பாக உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பது, இதன் பொருளாகும். இதை விட பாசிட்டுகள் எதைத்தான் நேர்மையாக வழங்கிவிட முடியும். 

நான் தப்பிய பின்பே இந்திய ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது. அன்று இந்திய இராணுவம் இலங்கையில் தனது ஆக்கிரமிப்பை நடத்தாமல் இருந்து இருந்தால், புலிகள் எந்த விதத்திலும் மேடைக்கு வந்து உயிருக்கு உத்தரவாதத்தை தந்திருக்க மாட்டார்கள். பல்கலைக்கழகம் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கின்ற நிலையில், இந்திய ஆக்கிரமிப்பு புலிகளின் குறுகிய பாசிச நலன்களை விட்டு வைத்திருக்காது. உண்மையில் புலிகள் தங்கள் நெருக்கடியில் இருந்து தப்பவே, "பல்கலைக்கழக மாணவர்களுக்கூடாக கேட்டுக் கொண்டதிற்கு இணங்க இவரின் உயிருக்கோ அல்லது இவரின் கல்விக்கோ எதுவித அச்சுறுத்தலாகவும் இருக்கமாட்டோம்|| என்ற இந்த நாடகத்தை அன்று புலிகள் ஆடினார்கள்;.

உண்மையில் 22ம் திகதி தலைமறைவு வாழ்க்கையில் இருந்து நான் பகிரங்கமாக வெளிப்படும் போது, இரகசியமாக மீண்டும் என்னைக் கடத்தி உடனடியாக கொன்றுவிடவே புலிகள் மீண்டும் திட்டமிட்டனர். தலைமறைவை நிரந்தர தலைமறைவாக்கிவிடவே முனைந்தனர். இதை நடைமுறைப்படுத்த பல்கலைக்கழகத்தைச் சுற்றியும், யாழ் பல்கலைக்கழகத்தை நோக்கி வரும் பல்வேறு வீதிகளில், மீளவும் என்னை இரகசியமாக கடத்திச் செல்ல பலரை நிறுத்தியிருந்தனர். இந்த மீள் கடத்தலைச் தேசிய விடுதலையின் பெயரில் செய்ய முயன்றனர். இந்த முயற்சியில் ஈடுபட்டவர்கள், தனிப்பட்ட ரீதியில் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். இவர்கள் இப்படி மீள இரகசியமாக கடத்தத் திட்டமிட்டதன் மூலம், எனது தலைமறைவு வாழ்க்கையை மக்களுக்கு முன் நிரந்தரமானதாக்கி என்னை அழித்தொழிக்க திட்டமிட்டனர். நான் தனிப்பட்ட வாகனங்கள் மூலம், பல்கலைக்கழகம் வந்து பகிரங்கமாவேன் என எதிர்பார்த்து காத்துக் கிடந்தனர். இதை நான் முன் கூட்டியே உணர்ந்ததால், மாற்று வழியைக் கையாண்டேன்;.

கடந்தகால போராட்டங்கள் மூலம், பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் என்னை நன்கு அறிந்தவர்கள். இந்த வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் நேரத்தை சரியாக கவனத்தில் கொண்டு, தனியார் பொது போக்குவரத்து பஸ்சில் மக்களுடன் மக்களாக சேர்ந்து யாழ் வந்தேன். மீண்டும் அங்கிருந்து பல்கலைக்கழக வீதி வழியாக செல்லும் தனியார் பொது போக்குவரத்து பஸ்சில் ஏறிக் கொண்டேன்;. பஸ்சில் வைத்து, பல பல்கலைக்கழக மாணவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டனர். நான் பல்கலைக்கழகம் அருகில் இறங்கியவுடன் பலர் என்னுடன் கதைக்க தொடங்கியது முதல், என்னுடன் ஒரு கூட்டமாக இணைந்து மாணவர்கள் பல்கலைக்கழகம் நோக்கி வந்தனர். இது புலிகளின் இரகசிய கடத்தல் மூலமான எனது தலைமறைவை நிரந்தரமாக்கி, கொன்று ஒழிப்பதை நேரடியாக முறியடித்தது.

அத்துடன் பல்கலைக்கழகம் சார்பாக பேசிய மாணவர்கள் முன், புலிகள் தாமே கடத்தியதாக ஒப்புக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் மீண்டும் நான் பகிரங்கமாக மாறுவதை தடுக்க புலிகள் எடுத்த முயற்சியை முறியடிக்க முடிந்தது. என்னை மீளக் கடத்தி, உண்மையில் தாம் கடத்தவில்லை என்று கூற முனைந்தனர்.  இது புலிகள் மேலான அவதூறு என்று கூறி, சவால் விடுவதை இது தகர்த்தது. இரண்டாம் முறை கடத்துவதன் மூலம், புலிகளின் தூய்மையைப் பற்றி பீற்றி, மக்களை மீளவும் மந்தைகளாக்க எடுத்த முயற்;சியும் கூட தகர்ந்து போனது. புலிகளின் வரலாறு, இது போன்ற பல மோசடி வரலாறுகளால் அலங்கரிக்கப்பட்டதுதான்.

நாசிச பாசிட்டான கிட்லர் தலைமை தாங்கிய ஏகாதிபத்திய ஜெர்மனியின் வரலாற்றில், பல பத்து லட்சம் மக்கள் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்யப்பட்டனர். மக்களின் விடுதலைக்காக செயற்பட்ட முன்னணியாளர்கள் பல பத்தாயிரம் பேர்களை, ஈவிரக்கமற்ற சித்திரவதைகள் மூலம் கொன்று ஒழித்தனர். இதை எல்லாம் மூடிமறைத்தபடிதான், பாரிய மக்கள் ஆதரவுடன் கவர்ச்சிகரமாக ஜெர்மனிய நாசிகள் பவனி வந்தார்கள்;.

இது போன்றதே புலிகளின் பாசிச வரலாறும்;. மக்கள் எதையும் புரிந்து கொள்ள முடியாத சிறையை தேசியமாக்கி, வாய் திறந்தால் மரணம் என்பதை தேசிய மொழியாக்கி, அதில் தேசிய வீரர்களானவர்கள் தான் புலிகள். ஜெர்மனிய பாசிட்டுகள் இனத் தூய்மை சார்ந்து இராணுவ வெறியை உயர்த்தி, அதை அரசியலாக்கி தங்கள் ஆக்கிரமிப்பை வெற்றியாக்கினர். இது போன்று புலிகள் குறுந்தேசிய இனவெறியை ஊட்டி, ஆயுதங்களை கவர்ச்சிகரமான தேசிய பொருளாக்கி, இராணுவ வெற்றிகளை கொண்டு மக்களை அரை முட்டாளாக்கினர். இந்த மந்தைக் குணம், மக்களின் தேசிய மொழியாகியது. மேய்ப்பவர்கள் எல்லாவற்றையும் சூறையாடினர். ஒருபுறம் இனவெறி பாசிச பேரினவாத சிங்கள அரசு தமிழ் மக்களின் அனைத்து அடையாளங்கள் மேலும், ஈவிரக்கமற்ற தங்கள் கொடூரங்களை ஜனநாயகமாக்கிய போது, புலிகள் அதையே அப்படியே மீளவும் கையாண்டனர். இதை மற்றைய இனத்தின் மேல் மட்டுமல்ல, சொந்த இனத்தின் மேலும் கூட கையாள்வதையே தேசியப் பண்பாடாக்கினர்.

புலிகள் என்னைக் கடத்தி சித்திரவதை செய்து கொன்று விட முயன்ற வரலாற்றில், இதை தெளிவாகவே மேலும் புரிந்து கொள்ளமுடியும். இது எனக்கு மட்டும் நடந்தவை அல்ல. என்னைவிட மிக மோசமான பல சித்திரவதைகளை அனுபவித்த, புலிகளின் வதைமுகாமில் சித்திரவதைக்குள்ளான அண்ணளவாக 5000 பேரின் கதையும் இந்த மனித அவலத்தை அம்பலப்படுத்துகின்றது. அத்துடன் வீதிகளில் உரிமை கோராத கோரக் கொலைகளின் கொடூரங்கள், இதை அம்பலம் செய்கின்றது. எனக்கு நடந்ததை விட, கொடூரமான சித்திரவதைகள் புலிகளின் வரலாற்றில் நிகழ்ந்தன. சிறையில் இருந்து தப்பியோடுவது கூட நிகழ்ந்தது. இதைத் தடுக்க, புலிகள் குதிக்கால் எலும்பு தெரிய கைதிகளின் தசை அறுக்கப்பட்ட நிலையில் தான், தப்பியோடுவதை தடுத்து அவர்களை சிறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர். இதே போல் இரண்டு கால்களும் நிரந்தரமாக இரும்பு விலங்கிட்டு ஒட்டப்பட்டது. "மேதகு" யார் என்ற அதிகாரப் போட்டியில் கைதான புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையாவின், இரண்டு கால்களும் பிரபாகரனின் நேரடி உத்தரவுக்கு இணங்க இரும்பு பிணைச்சல் கொண்டு நிரந்தரமாக  ஒட்டப்பட்டது. இது போன்று பலருக்கு, பல வருடங்கள் தொடர்ச்சியாக விலங்கிடப்பட்டது. சித்திரவதையில் கொன்று விடும் எல்லை வரை அது நிகழ்ந்தது. ஒவ்வொரு விரலாக ஒவ்வொரு எலும்பாக அடித்தே முறிக்கப்பட்டது, நொருக்கபட்டது, வெட்டப்பட்டது. கரும்புலிகளுக்கான பயிற்சி முறையில், கைதிகளை உயிருடன் கொல்லுதலை ஒரு பயிற்சியாக மாற்றி மனதை வக்கிரமாக்கினர். நிலத்துக்கு கீழ் ஆழமாக கிண்டிய குழிகளில், கைதிகள் கால் விலங்கிட்டு நிரந்தரமாகவே போடப்பட்டனர். மேல் இருந்தே அவர்கள் மேல், தேசிய வீரர்கள் மலம் முதல் மூத்திரம் வரை கழித்தனர். பாம்பைப் பிடித்து அவர்களின் குழிக்குள் போடுவது, தேசிய வீரர்களின் ரசனையான பொழுது போக்காகியது. ஒரு பொலித்தீன் பையுடன், ஒரு தடியுடன் ஆழ் குழிகளில் விடப்பட்டனர். மூடப்பட்ட குழி தகரத்தை தடிகொண்டு தட்டுவது தான், பாசிட்டுகளுடன் தொடர்பு கொள்ளும் ஒரேயொரு மொழியாகியது. புலிகளின் வதை முகாம் இப்படி பல வழிகளில் வக்கரித்துக் கிடந்தது. இப்படி வருடக் கணக்காக விடப்பட்டவர்களின் கதியை, புலிகளின் பாசிச நாகரீகம் பீற்றிப் போற்றியது.

கைதிகளை நடுக்காட்டில் மரத்தில் கட்டி, அவர்கள் மேல் தேனை ஊற்றி காட்டுத்தேனீக்கு பலியிட்டனர். இப்படி எத்தனை விதமான ரசனையான படுகொலை முறைகளும், சித்திரவதைகளும். இப்படி வக்கரித்துப் போனவர்களின் உணர்வு, வன்னி பெரும் பரப்பில் எப்படி பிரதிபலித்தது. மக்களின் வளர்ப்பு மிருகங்களில் ஒரு துடையை மட்டும் உயிருடன் வெட்டி எடுத்து, ரசித்து உண்டு விட்டு செல்வது பெருமைக்குரிய தேசிய வீரர்களின் சாதனையாகியது. இதைக் கேள்வி கேட்பது தேசத் துரோகமாகும். மிகுதி உடலுடன் வளர்ப்பு மிருகம் இறக்கும் குரூரத்தை ரசிப்பது, தேசிய பண்பாடாகும். இப்படி பற்பல கதைகள் உண்டு. இனி எனது சொந்த அனுபவத்தில் இருந்து பாசிசத்தை புரிந்து கொள்வோம்;.

தொடரும்

மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை – (புலிகளின் வதை முகாமில் நான் )

பாகம்- 1 

பாகம்- 2 & 3

பாகம்- 4 & 5

பாகம்- 6 & 7

பாகம்- 8 & 9

பாகம்- 10

பாகம்- 11

பாகம்- 12

பாகம்- 13

பாகம்- 14

பாகம்- 15

பாகம்- 16

பாகம்- 17

பாகம்- 18

பாகம்- 19

பாகம்- 20