Language Selection

சமவுரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சமஉரிமை இயக்கத்தினர் இம்மாதம் 15ஆம் திகதி கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடாத்திய இனவாதத்திற்க்கும், மதவாதத்திற்கும், குலவாதத்திற்கும் எதிரான நாங்கள் மனிதர்கள் என்ற தலைப்பிலான கருத்தரங்கில்  கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வட இலங்கை முக்கியஸ்தர்   ஏ.எம்.சி.இக்பால் ஆற்றிய உரை!

ஜூன் 15 ஆம் திகதி பேருவளை, தர்காநகர், அளுத்கம, வெளிப்பனை போன்ற இடங்களில் பரம்பரை பரம்பரையாக வாழும் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டும் அவர்களது வீடுகளும் கடைகளும் கொள்ளையிடப்பட்டு எரியூட்டப்பட்டது. மூன்று பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டதுடன் நான்கு பேர் கொல்லப்பட்டுள்னர். சிறிய எண்ணிக்கையான அங்கத்தவர்களை கொண்ட பொதுபல சேனாவினர் மிகப்பெரிய கலவரத்தை பேருவளை பிரதேசத்தில் நடாத்தியுள்ளனர். L.T.T.E இயக்கத்தை தோற்கடித்த இந்த அரசுக்கோ, முப்டைகளுக்கோ அஞ்சாமல் இந்த வன்முறையை அரங்கேற்றிள்ளனர். இந்த வன்முறைக்கு காரணமானவர்களை கைது செய்யவோ தடுத்துவைக்கவோ இல்லை. அரசும், அரசபடைகளும் பொதுபலசேனா என்ற இயக்கத்துக்கு அஞ்சுகிறார்கள் போலும். இதுபெரும் ஆச்சரியத்துக்குரிய விடயமாகும்.

ஜனாதிபதியும், பாதுகாப்பு செயலாளரும் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் இந்த வன்முறை அரங்கேற்றப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் இந்த இனக்கலவரத்தை தடுத்து முஸ்லிம்களை பாதுகாப்தற்கு பதிலாக நடப்பவைகளை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தார். மறுபுறமாக ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி முஸ்லிம்களை பள்ளிவாசல்களுக்குள் கட்டுப்டுத்தி வன்முறையாளர்களை சுதந்திரமாக செயல்பட இடமளித்தார். இச் செயல்பாடானது 1983ஜூலை கலவரத்தை நினைவு கூறுகிறது. அச்சோக சம்பவம் நிகழும்போது ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் U.N.P அரசும் ஐந்து, ஆறுநாட்கள் கைகட்டி வாய் பொத்தி பார்த்துக்கொண்டிருந்தர். இதனையே பேருவளை சம்பவம் நினைவூட்டுகிறது.

பேருவளை சம்பவம்  ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் நாட்டில் இல்லாத போது நடந்ததாலும்  பிரதமரும் 100க்கும் மேற்பட்ட ஆளும்கட்சி உறுப்பினர்களும் பெரும் எண்ணிக்கையிலான அமைச்சர்களும் முப்படைகளின் தளபதிகளும் பொலிஸ் மா அதிபரும் நாட்டில் இருக்கையில் இக்கலவரம் நடந்துள்ளது. பொதுபல சேனா ஊர்வலம் போகவும் கூட்டம் நடாத்தவுமே தாம் அனுமதி வழங்கியதாகவும், ஆனால் கலவரம் ஏற்பட்டு ஆட்கள் கொலை செய்யப்பட்டு, வீடுகள் கடைகள் சூறையாடி எரியூட்டும் அளவிற்கு அழிவுகளை ஏற்படுத்துவார்கள் என நான் நினைக்கவில்லை என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பேருவளை பதட்டநிலையில் இருந்ததையும், பொதுபல சேனாவிற்கும் முஸ்லிம்மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை இருந்து வந்ததையும் சிலர் அவருக்கு தகவல் கொடுத்திருந்த நிலையிலும் அதுதொடர்பில் பொலிஸ் மா அதிபர் அலட்சியமாக இருந்துள்ளார், என்பதை அறியும்போது இதன் பின்னால் பெரிய திட்டம் இருந்துள்ளதோ? என சந்தேகிக்க வேண்டியுள்ளது. பொதுபல சேனாவினர் பேருளையில் மூட்டிய தீ நாடு பூராவும் பரவி 1983 ஜூலை கலவரம் போன்று நாட்டுக்கு பெரிய நாசத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தார்கள் போல் தெரிகிறது.

ஆனால் அவர்களது எண்ணத்தில் மண் விழுந்தது. பெரும்பான்மையான சிங்கள மக்கள் விழிப்படைந்து இந்த அராஜக நடவடிக்கையை எதிர்த்து நாடு பூராவும் முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பளித்தனர். சிங்கள மக்கள் மத்தியிலான புத்திஜீவிகள் பொதுபலசேனாவின் இன, மதவாத வன்முறையை எதிர்த்து பத்திரிகைகளில் கண்டன அறிக்கைகளை வெளியிட்டும், கூட்டங்கள், ஊர்வலங்களை நடாத்தியும் முஸ்லிம்களுக்கு தமது ஆதரவை தெரிவித்தனர். ஜூன் 18ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக சமஉரிமை இயக்கமும், முன்னிலை சோஸலிசக் கட்சியும் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிரான பொதுபல சேனாவின் வன்முறைகளை கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டத்தை நடாத்தினர். இன்று நாட்டு மக்கள் மத்தியில் இச்சம்பவத்தின் பின்னால் அரச உயர் பதவியில் உள்ளவர்கள் இருக்கின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கான காரணம் பொதுபல சேனாவுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பலநாட்கள் கழித்து கண்துடைப்புக்காக சிறு விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அது போலியானது என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

பொதுபல சேனா, ஹெல உறுமைய, இராவணா சக்தி போன்ற இயக்கங்கள் இந்தநாட்டில் பௌத்தத்திற்கு ஆபத்து ஏற்ப்பட்டுள்ளது அதை பாதுகாக்க யாருமில்லை நாம் பௌத்தத்தை பாதுகாக்கவே செயல்படுகிறோம் என கூறுகிறார்கள். இந்நாட்டில் எழுபத்திஐந்து (75%) விகிதமான மக்கள் சிங்கள பௌத்தர்கள். நாட்டின் அரச மொழி சிங்களம், அரச மதம் பௌத்தம் கடந்த 66வருடகாலமாக ஆட்சி செய்துவரும் அரசாங்கங்கள் எல்லாம் மல்வத்தை மகாநாயக்க தேரர்களின் ஆசியுடன்தான் ஆட்சி செய்து வருகிறார்கள். நாடு பூராவும் உள்ள பௌத்த விகாரைகளில் 10,000 க்கும் மேற்ப்பட்ட பௌத்த பிக்குகள் மக்களுக்கு தர்மஉபதேசம் செய்து வருகிறார்கள். பெரும்பான்மையான சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் பௌத்தர்களாகவே உள்ளனர். எனவே சிறு எண்ணிக்கையான உறுப்பினர்களை கொண்டுள்ள பொதுபல சேனா பௌத்தத்துக்கு ஆபத்து என கூறுவது கேலிக்கிடமானது. இதிலிருந்து விளங்கி கொள்ளக்கூடிய உண்மைதான் ஒருசிலரின் தனிப்பட்ட நலன்களுக்காக செயல்படும் நிறுவனமே பொதுபல சேனா என்பதாகும்.

U.N.P அரசு 1983 ஜூலை கலவரத்தை நடாத்தி L.T.T.E யை உருவாக்கியது பின்னர் அதனை அழிப்பதாக கூறிய U.N.P அரசு அதனை தனக்கெதிரான பெரும்சக்தியாக உருவாக்கியது. சிறிலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டரசாங்கம் L.T.T.E யை தோற்கடித்தாலும் தமிழர் பிரச்சினையை தீர்க்காமல் தனக்கெதிராக பெரும் பூதத்தை வளர்த்து வருகிறது. மறுபுறமாக பேருவளை, தர்க்காநகர், அளுத்கம, வெளிப்பன ஆகிய பிரதேசங்களில் முஸ்லீம்களுக்கெதிராக கொலை, கொள்ளை, எரியூட்டல் சம்பவங்களை திரைமறைவில்  ஊக்குவித்தன் மூலம் இந்த அரசு தனக்கு தானே புதைகுளியை தோண்டியுள்ளது.

இந் நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் இருபெரும் கட்சிகளும்  இந்நாட்டின் ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்க்கு பதிலாக, பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி அம்மக்கள் மத்தியில் மக்கள் இயக்கங்கள் எழுச்சிபெறும் போது ஆயூதப்படைகளை பயன்படுத்தி அடக்கி ஒடுக்குவதிலும் பார்க்க, இன, மத,சாதி மோதல்களை தூண்டிவிட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பி தமக்கு எதிராக எழுச்சிபெறும் மக்கள் போராட்டங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதே இவ் இருபெரிய கட்சிகளும் காலம் காலமாக கையாண்டு வரும் தந்திரோபாயமாகும். இந்த மரணப்பொறியில் இருந்து மீள்வது எதிர்க்கட்சியை ஆளும்கட்சியாக மாற்றுவதன் மூலம் சாத்தியமாகாது. 66வருடகாலமாக ஒடுக்கப்படும் ஏழை, எளிய மக்கள் இந்த யுக்தியை பயன்படுத்தி பலதடவைகள் ஆட்சிகளை மாற்றியுள்ளார்கள். சில சீர்திருத்தங்களும்  நடைபெற்றுள்ளது, சம்பள உயர்வு கிடைத்துள்ளது, அதேவேளை விலைவாசி அதிகரிக்கிறது. அதாவது வலதுகையால் கொடுப்பது இடதுகையால் பறிக்கப்படுவது நடக்கிறது. இந்த நிலைமைக்கு முடிவுகட்டுவதானால் தற்போதைய அரசியல் முறைமைக்கு (தற்போதைய சிஸ்ரம்) பதிலாக மக்கள் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வு காணக்கூடிய புதிய அரசியல் முறைமைக்காக  இன, மத, மொழி, குல பேதங்களுக்கு அப்பால் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராடுதை தவிரவேறு வழி இல்லை.