Language Selection

முன்னிலை சோஷலிஸக் கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நல்லாட்சி என்ற பெயரில் மைத்திரி - ரணில் அரசு பதவி ஏற்ற காலம் முதல் ஏகாதிபத்தியங்கள் மற்றும் பல்தேசிய கம்பனிகளின் கொள்ளைக்காக பல திட்டங்களை திரை மறைவில் நடைமுறைப்படுத்தி வந்தது. 2017ம் ஆண்டிற்க்கான பஜட்டானது; இந்த திரை மறைவு நிலையில் இருந்த நல்லாட்சி என்பது கொள்ளை ஆட்சி என்பதனையும், மக்களுக்கு குழிபறித்து சகலதையும் பறித்தெடுத்து நடுவீதிக்கு கொண்டு வந்து விடுவதற்க்கான சகல முன்னெடுப்புக்களையும் முன்னெடுத்திருக்கின்றது என்பதனை  தெளிவாக்கியுள்ளது.

இந்த 2017ம் ஆண்டிற்க்கான வரவுசெலவு திட்டமானது தொழிலாளர்கள் போராடிப்பெற்ற சகல உரிமைகளையும் பறித்தெடுத்து பன்னாட்டு கம்பனிகள் தொழிலாளர்களை அடிமைகளாக நடத்த வழி அமைத்துக் கொடுத்துள்ளது. கல்வி சுகாதாரங்களில் தனியார் மயமாக்கலுக்கு சகல வழிகளையும் திறந்து விட்டுள்ளது. தொழிலாளர்களின் ஓய்வு ஊதியத்திற்கு வேட்டு வைத்துள்ளது. மக்கள் மீது பாரிய வரிகளை ஏற்றி உள்ளதுடன் அபாண்ட அபதார கட்டணங்களை அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது. 

மொத்தத்தில் ஏகாதிபத்தியங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் இந்த நாட்டின் மூலவளங்கள், சுற்று சுழல், மனித உழைப்பு ஆகியவற்றை தங்கு தடை இன்றி கொள்ளை இட அத்திவாரம் அமைத்துக் கொடுத்துள்ளது. இலவச கல்வி மற்றும் மருத்துவத்திற்கு வேட்டு வைத்து தனியார்துறையினர், பன்னாட்டு நிறுவனங்கள் கல்வி, மருத்துவத்தில் கொள்ளையிட அனுமதித்திருக்கின்றது. 

நவதாராளவாதத்தை தங்கு தடையின்றி முன்னெடுப்பதற்காக ஏகாதிபத்தியங்கள், ஆளும் கட்சி முதல் எதிர்க்கட்சி வரை தமது பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் நிலையில் இந்த பஜட்டினை எதிர்த்து விவாதிக்க இன்று பாராளுமன்றத்தில் எந்தக் கட்சியும் கிடையாது. அவை விலைக்கு வாங்கப்பட்டு விட்டன. பொது மக்களோ தமக்கு முன்னால் விரிக்கப்பட்டுள்ள இந்த வலை குறித்து அறியாதவர்களாக, தமது அன்றாட பொருளாதார தேவைகளுக்காக  ஓடிக் கொண்ருக்கின்றனர்.

இந்நிலையில் முன்னிலை சோசலிச கட்சியானது, இன்று 2017ம் ஆண்டிற்கான பஜட்டின் அபாயம் குறித்து மக்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக துண்டுப்பிரசுரம் ஒன்றினை நாடு பரவலாக விநியோகித்ததுடன், கொழும்பு பெற்றாவில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டத்தையும் டீன்ஸ் வீதியிலுள்ள சமுதாயம் மற்றும் மத நிலையத்தில் கூட்டம் ஒன்றினையும் இன்று நடாத்தியுள்ளனர். இது இந்த வரவுசெலவு திட்டத்திற்கு எதிராக நடைபெறவுள்ள பல தொடர் போராட்டங்களின் முதல் நடவடிக்கை என்ற அறிவித்தலையும் விடுத்துள்ளனர்.