Language Selection

புதியபூமி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பெண் ஆளுமைகள் பற்றிய விழிப்புணர்வுகள் பரிமாணங்கள், தெரிவுகள், சுயங்கள், நிலைப்பாடுகள் என்பன சமகாலத்தில் பெண் உயர்ச்சிக்கும் பெண் பற்றிய பதிவுகளுக்கும் மிகவும் அவசியமானவைகளாக கருதப்படுகின்றன. பெண் ஆளுமைகள் மேலோங்கியிருப்பதும் பெண்களின் உயர்வும் சமத்துவமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டதாகக் காணப்படுகின்றன.

 

ஆண்டாண்டு காலமாகப் பெண்ஆளுமைகள் விழிப்புறும் தோரணையிலும் சமூகத்தில் பெண்ணின் வகிபாகம் ஸ்திரப்படுவதன் தேவையும் அவற்றை தூண்டி விடக்கூடிய கூர்மையும் அழுத்தமாகப் பேசப்படுவதற்கும் செயற்படுத்துவற்குமே மார்ச் 8ம் திகதியில் பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டுமென்பதும் நாம் சிந்திக்கப்பட வேண்டிய விடயமாக காணப்படுகின்றன.

ஆளுமை என்பது பற்றிப் பேச முற்படும் அநேகர் ஆண் மையப்படுத்தப்பட்ட ஆளுமைகளையே உலகுக்கு எடுத்துக் காட்டிக் கொண்டிருப்பது சாதாரணாமாகி
விட்டிருக்கின்றது. ஆளுமைகள் ஆண்களை மையப்படுத்தி தொழுது கொண்டிருப்பதும் பெண் ஆளுமைகளைக் குறைபாடு உள்ளவையாகக் கருதுவதும்
கணக்கிலெடுக்காமலிருப்பதும் மலிவாக எண்ணுவதும் அவற்றின் கூர்மையை மறைக்க நினைப்பதும் ஒழுக்கம் என்ற உள்ளுருவத்திலும் “கற்பு” என்கின்ற மாயைக்குள் அமுக்கி அவற்றை எழ விடாமல் செய்வதும் ஆளுமையை மனித வர்க்கத்தின் ஒரு சாராருக்கெதிராக்கிப் பார்ப்பது அறிவியலின் சிறுமையாகவே காணப்படுகின்றது.


ஆண் ஆளுமைகள் எடுத்துக்காட்டுகளாகவும் எடுகோள்களாகவும் உயர்ந்த உதாரணங்களாகவும் சரித்திரங்களாகவும் பதியப்பட்டிருப்பதும் அதே விதமான பெண் ஆளுமைகள் காணாமல் போயிருப்பதும் அவற்றை தரிசிக்க நூல்களைத் தேடித் தேடி வசனங்களில் வாழ்க்கையை தேடுவதும் வழக்கமாகிவிட்டிருக்கின்றது. அதற்கான காரணம் என்ன? பெண் ஆளுமைகள் உலக வளர்ச்சியி;லும் வரலாற்றிலும் மனித வர்க்கத்தை கூர்மைப்படுத்துவதிலும் பங்களிப்புச் செய்யவில்லையா?


சரித்திரங்களும் சமயங்களும் விஸ்தரித்துக் காட்டியது போல் பெண் பலவீனமான பண்டம் என்பதாலா? ஆண்மீக திடம் அமைக்கப்பட்டதும் ராட்சியங்கள் கவிழ்க்கப்பட்டதும் பெண் என்கின்ற பிரமையினாலா? இது சிந்திக்கவேண்டிய அறிவியலாக காணப்படுகின்றது.


அறிவியல் சிந்தனைக்கும் உயிரியல் ஒருமைப்பாட்டிலும் இரு வேறு உயிர்களின் உள்ளார்ந்த திறன்கள் ஆளுமைகள் ஆற்றல்கள் அறிவு நுண்மதி மேலும் உயிரியல் ரீதியான கட்டமைவுகள் என்பன எவ்விதத்திலும் பிரித்துப் போட்டு உயர்வு தாழ்வு வலிமை பலவீனம் காண்பதற்காக கட்டமைப்பக்கப்பட்டிருக்க முடியாது. சமுகத்
தேவைப்பாட்டுக்கேற்ப உடலின் உறுப்புக்கள் இயல்பூக்கங்கள் என்பன வித்தியாசப்பட்டிருக்க வேண்டியது தேவை கருதியே. அத்தேவைகளும் உயிரியல் அம்சங்களும் ஆண்களைவிட அசாதாரணமான பிறப்பாக அவளை காட்டுவதை மறுதலித்தும் எதிர்த்தும் அது சார்ந்த விடயங்களை சமயம், கலாசாரம், பண்பாடு என்ற கருவிகளின் துணைக்கொண்டு பெண் குறைவாக மதிக்கப்படுவதனையும் ஆண் ஆளுமைகளே உயர்வாகப் பேசப்படுவதையும் காணலாம்.

"பெண் ஆளுமைகளை ஸ்திரப்படுத்துவது என்பது ஆண் சார்ந்த ஆளுமைகள் வீழ்த்துவது அல்ல. அல்லது ஆணுக்கெதிரான ஆளுமைப் பரிமாணங்களை ஸ்திரப்படுத்துவதுமல்ல. பெண் விடுதலை என்பது தன்முன்னால் உள்ளத் தடைகளை “அறிவு பூர்வமாக” உடைத்தெறிந்து தனக்குள் சரியான முற்போக்குதனமான அறிவு சார்ந்த கூர்மையான ஆளுமைகளை ஆக்கிக்கொள்ள வேண்டும்."


எனவே பெண் வளர்ச்சி பற்றிய வரலாறுகள் சிந்திக்கப்படுமிடத்து அதன் எதிரியாக தனித்து ஆண் என்ற எதிர்ப்பாலுக்கு உரியதாக மட்டும் மட்டுப்படுத்ததாது சமூகம்
சார்ந்த பெண் ஆளுமைகளை வெகுவாகக் குறைக்கும் எல்லா காரணிகளையும் கண்டுகொள்ளவேண்டியத் தேவைப்பாடும் ஒரு மாக்சியப் பார்வைக்கே உண்டு.

இன்று மனித குலத்தின் வர்க்க விடுதலைப் பற்றியத்தேவை உணரப்பட்டு வருகின்ற நிலையில் “பெண் விடுதலை” என்பது ஆழமாகப் பேசப்படவேண்டிய ஒன்றாகும். ஏனெனில் சமுகத்தின் விடுதலைக்கும் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் இருபாலாரினதும் இணையற்ற உழைப்பும் அறிவுப் பரிமாணங்களும் அவசியமானவைகளாக கருதப்படுகின்றது. பெண் ஆளுமைகள் உயர்வாக கருதப்படாத சமுகத்தில் உயரிய அந்தஸ்த்து ஆண் சார்ந்ததகவும் ஆணை மையப்படுத்தியதாகவும் தொடர்ச்சியாக இருப்பதுடன் அங்குள்ள நடைமுறைகள்
அனைத்தும் ஆண் ஆளுமைக்குரியனவாக மேலும் மேலும் கட்டமைக்கப்படுவது இயல்பானதாகும். எனவே உயரிய சமூக விடுதலை அல்லது மனிதகுல விடுதலை பற்றிப்பேசும் போது பெண் விடுதலை சார்ந்த யதார்த்தவாதத்தினை பேசவேண்டிய தேவைப்பாட்டுக்குள் ஆட்பட்டிருக்கின்றோம். தீட்சணயமான பார்வைகளும் தூர
நோக்குகளுமே சமூக அமைப்பியலை மாற்றக்கூடியனவாகவும் மறுமலர்ச்சி கொண்டதாகவும் ஜனநாயக பண்புகளை ஒரு முகப்படுத்துவனவாகவும் காணப்படுகின்றன.


எனவே தூர நோக்கை பெற்றிருப்பதும் தீட்சன்யத்தை தரிசிப்பதும் பெண் ஆளுமை விஸ்தரிப்பில் அவசியமானவைகளாகும். அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக மதங்கள் கூறுவதுபோலவும் மறுமைகளை நம்பி கருத்து முதல்வாதக் கருவிகளுக்கு முதன்மை கொடுப்பது அறிவுபூர்வமானதுமல்ல, ஆக்கப்ப+ர்வமானதுமல்ல. அவற்றுக்காக போராட வேண்டும் என்றத் தேவைப்பாடு உலகை வென்று தரப் புறப்பட்டுள்ள பலரின் நம்பிக்கையாகவும் நடைமுறையாகவும் காணப்படுகின்றது. பெண் ஆளுமைகள் வெல்லப்படுவதற்கும்
பேசப்படுவதற்கும் அவற்றின் எழுச்சிகள் கூர்மைப்படல் வேண்டும். அவை ஆணுக்கு எதிரானதாக மட்டும் மட்டுப்படுத்தாமல் இருப்பதுடன் உண்மையான பெண் விடுதலையை மையப்படுத்தியதாக அமைதல் வேண்டும்.


செயற்பாட்டுத் திறனுடைய பெண் ஆளுமைகள் எழுச்சியுற முடியாமைக்கும் வெளிப்படுத்தப்பட இயலாமைக்கும் சமுக அரசியல் பொருளாதார காரணிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றமை வெளிப்படையானதாகும். சமுகக் கட்டமைப்புகளின் மாற்றம் என்பது பெண் ஆளுமைகள் எழுச்சியுறுவதிலும் தங்கியுள்ளது. சமுகக் கட்டமைப்பில் பெண் சம்பந்தமான பதிவுகள் உயர்வாக இல்லாத ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவிப் பார்க்க வேண்டிய தேவைப்பாடு அதிகமாக காணப்படுகின்றது. கலை, கலாச்சாரம், பண்பாடு, உணவு முறைகள், குடும்ப அமைப்புக்கள், திருமணம், பாலியல், பொறுப்புக்கள், உடை சார்ந்த தெரிவுச் சுதந்திரம், உளம் சார்ந்த தெளிவு, ஒழுக்கம், தான் என்கின்ற சுயம், இயலும் என்கின்ற திடம் என்பவற்றின் வெளிப்பாடுகள் பெண் ஆளுமைகளை உயர்த்தும் அடிப்படையானக் காரணிகளாகும். அதனை பெண்கள் கையிலெடுக்கும் போது அதற்கு ஆண்கள் பக்கபலமாக இருப்பது அவசியமானதாகும்.


பெண் அரசியலில் தன் ஆளுமைகளை விஸ்தரிப்பதற்கு அவளின் அரசியல் ஞானமும் அனுபவமும் அறிவும் ஆழ்ந்த சிந்தனையும் அவசியமா கின்றது. அரசியல் கொள்கை கோட்பாடுகள் யாவும் மனிதகுல விருத்திக்கு மேம்படுத்தக் கூடியனவாகவும் அவற்றை சரியான அறிவு சார்ந்த சமூக அமைப்புகளுக்குள் தத்துவார்த்த ரீதியான சிந்தனைக்குள் சரியான தூர நோக்கு கொண்டதாக அமைத்துக் கொள்வது அவசியமாகும். அரசியல் என்பது அனுதினம் பேசப்படும் மிக முக்கியமான பொருள் என்பதனை எளிமையோடு உணர்ந்துகொள்வதும் அவசியமாகின்றது. அது சார்ந்து பேசப்படும் பொழுது பழமைவாதப் போக்கை வெறுப்பதும் எதிர்ப்பதும் அவசியமாகின்றது. புதுமைச் சிந்தனைகள் புரட்சிகரமான கருத்துக்கள் மாற்றம் என்பவற்றை தனக்குள்ள ஆளுமைகளால் அசைக்கச் செய்தல் அவசியமாகும். எதிர்த்தல் என்பதனையும் வெளிப்படுத்தல் என்பதனையும் துணிவோடு செயற்படுத்தும் ஆளுமைத்திறன் அவசியமாதாகும்.


பெண் தன் ஆளுமைகளைக் கூர்மைப்படுத்துவதிலும் வெளிப்படுத்துவதும் நிலைக்கச் செய்வதும் அது சம்பந்தமாக உலகைப் பேச வைப்பதும் பெண்சார்ந்த முதற்ச்செயற்பாடாக கருத்திற்க் கொள்ளவேண்டும். ஆனாலும் அது பெண்சார்ந்தது மட்டுமல்ல என்பதனையும் சமுகம் - ஆண்கள் சார்ந்த தேவையாகவும் கருதுதிச் செயற்படுவது தேர்ச்சியான வெற்றிக்கும் விடுதலைக்கும் வித்திடச் செய்யும். ஒரு பெண் சமூக அரசியல் பொருளாதார அந்தஸ்த்து கடந்து தனக்கேற்பட்ட தன் சார்ந்தவர்களும் ஏற்பட்ட கொடுமைகளை அச்சமின்றி பயமின்றி கூறத்தொடங்கும் பொழுது அச்சமூகத்தின் விருத்திக்கு முதலாவது வெற்றி கேடயம் கொடுக்கப்படுகின்றது.


ஒரு சமூக பார்வையில் பொறுக்க முடியாத தனிமனித சுதந்திரத்தினையும் தன்மானத்தினையும் பாதிக்கக் கூடிய எச்செயலானாலும் அது வெகுவாக பேசப்படவேண்டிய பொருளாகின்றது. எனவே அது உலகம் விழித்துக் கொள்ளும் வரையும் உரத்துக் கூறப்படவேண்டிய இலக்குள்ள செயலாக கருதப்படவேண்டும்.


பெண் ஆளுமைகளை ஸ்திரப்படுத்துவது என்பது ஆண் சார்ந்த ஆளுமைகள் வீழ்த்துவது அல்ல அல்லது ஆணுக்கெதிரான ஆளுமைப் பரிமாணங்களை ஸ்திரப்படுத்துவதல்ல. பெண் தனக்குள்ள உச்சிமுதல் உள்ளங்கால் வரையான அனைத்து அம்சங்களும் வாழ்வியலிலும் பெற்றிருக்கும் தடைகளை அறிவு பூர்வமாக பிய்த்து எறிந்து தனக்குள் சரியான முற்போக்கு தனமான அறிவு சார்ந்த கூர்மையான ஆளுமைகளை ஆக்கிக்கொள்ள வேண்டும். தனக்கிருக்கும் இயல்பான சூழலுக்கும் தான் சார்ந்த சமூக நிலைக்கேற்ப பெண் தன் ஆளுமையை நெறிப்படுத்தி கொள்வதென்பது முக்கியமாகின்றது. மிக சீக்கிரமாக ஆக்கப்படும் பெண் ஆளுமைக்காரணிகள் மிக சீக்கிரமாக காணாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.


தனக்குப் பொருத்தமில்லாத ஆளுமை உணர்வுகளை உணர்ச்சிபூர்வமாக தனக்குள் அப்பிக்கொள்வதும் ஆபத்தானது. எனவே பெண் ஆளுமைகள் தம்மை மிக சிறந்த முறையில் வடிவமைத்துக்கொள்வதற்கான அறிவுபூர்மான சிந்தனைகளும் உயிரியல் வலிமையும், கட்டமைப்புக்களை துண்டாடும் உடைப்புக்கள் தான் தான் என்பதனை தனியாக உணரும் தற்துணிவு, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத உறுதி நேர்மை ஒழுக்கம் முடிவெடுக்கும் திறன் போராடும் நம்பிக்கை திடம் என்பன எல்லாப் பெண்களுக்கும் எப்போது மிகச் சரியாக வடிவமைக்கப்பட்டு முழுமைபெறுகின்றதோ அது பெண் ஆளுமைகளை வென்றெடுக்கும் காலமாகின்றது.


புரட்சிகரமான பெண்கள் தினம் என்பது இவற்றை அறிவு பூர்வமாய் கட்டி எழுப்பும் பணியில் காத்திரமான பங்களிப்பை வழங்கும் நாளாகும். இதனை வென்றெடுக்க தேவதூதர்களும் தேவதைகளும் இறை அரசர்களும் அவதாரங்களும் வரமாட்டார்கள். பெண்கள் தம் குரலை உயர்த்தி உயிரில் வலிமை உள்ளவரை போராடி வெற்றிக்கொள்வதே உலகத்தின் வர்க்க கட்டமைப்பின் வரலாற்றுப் பதிவாகப் காணப்படுகின்றது. எனவே பெண் ஆளுமைகள் ஸ்திரம்பெற ஐக்கியப்பட்டு போராடுவோம்.

 --நன்றி: புதியபூமி  மார்ச் 2012