Language Selection

புதியபூமி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

“சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள். அத்துடன் அவர்கள் சட்டத்தினால் பாதுகாக்கப்படுவற்கும் உரித்துடையவர்கள்.”
இவ்வாறாக இலங்கைச் சனநாயக சோசலிக் குடியரசு அரசியலைமப்பில் 12ம் சரத்தின் 1ம் உறுப்புரை கூறுகிறது.

கடந்த 03.09.2011 அன்று உயர்தரப் பரீட்சைகளின் இறுதிப் பரீட்சை நடை பெற்றது. அன்று ஹட்டன் நகரில் நின்றிருந்தேன். பாடசாலை வாழ்க்கை அன்றோடு முடிகின்ற சந்தோசத்தில் மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் மை பூசி விளையாடிக் கொண்டிருந்தனர். சட்டத்தினதும் நீதியினதும் மக்களினதும் காவலர்களும் நண்பர்களுமான போலிசார் அந்த மாணவர்களை அமைதிக்கு பங்கம் விளைவித்ததற்காகக் கைது செய்தனர்.

சில நாட்களுக்குப் பிறகு பொது இடத்தில் புகைப்பிடித்தமைக்காக ஒரு மனிதர் கைது செய்யப்பட்டார்.

வெள்ளவத்தை காலி வீதியில் வீதி ஒழுங்கை மீறியதற்காக நான்கு இளைஞர்கள் 2500 ரூபா தண்டப்பணம் செலுத்தினார்கள்.

எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் பௌத்த சாசனத்தை பாதுகாப்பதன் பொருட்டு போதைப் பொருள்கட்கு முற்றுப் புள்ளி வைக்க எத்தனித்துள்ளார். மிருகவதைக்கெதிரான பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. பௌர்ணமி தினங்களில் மாடுகளை அறுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும்,

* இந்த முப்பது வருட கால இன முரண்பாட்டு யுத்தத்தில் இலட்சக்கணக்கான சாதாரண தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் தமது உயிர்களை இழந்துள்ளனர்.

* இக் காலப்பகுதியில் வாழ்க்கைத் துணைகளை, தாய் தந்தையரை, பிள்ளைகளை, சகோதரரை, உடைமைகளை இழந்தவர்கள் பல இலட்சம் பேர்.

* இக் கொடூர யுத்தத்தின் காரணமாக ஜனநாயக முற்போக்கு சக்திகள், புத்தி ஜீவிகள், அரசியல் தொழிற்சங்கவாதிகள், ஊடகவியலாளர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். பலர் ஒடுக்குமுறைக்கும் உயிர் அச்சுறுத்தலுக்கும் சித்திரவதைகளுக்கும் கைதுகளுக்கும் ஆளாகியுள்ளனர்.

* எத்தனையோ பேர் கடத்தப்பட்டனர், காணாமற் போயினர், வல்லுறவுக்குட்பட்டனர்.

* பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இன்றும் எவ்வித தீர்வுகளும் இன்றி அரசியற் கைதிகளாக இலங்கைச் சிறைகளில் வாடுகின்றனர். மீள் குடியமர்த்தப்படாத மக்கள் இன்றும் முகாம்களில் வாடுகின்றனர்.

* முப்பது வருட காலத்தில் மக்கள் தமது வாழ்வை அச்சத்தின் மத்தியிலும் சந்தேகத்தின் மத்தியிலுமே கழித்தனர். லட்சக்கணக்கில் மக்கள் புலம் பெயர்ந்தனர்.

* இதற்கெல்லாம் மேலாக இனங்களிடையேயான நல்லுறவு இல்லாமற் போய் ஒரு இனம் இன்னொரு இனத்தை சந்தேத்தோடு பார்ப்பதும் பண்பாட்டு தொடர்பற்ற இனக் குழுக்களாக சிதறி வாழ்கின்ற சமூக அவலத்தை ஏற்படுத்தியும் உள்ளது.

Ø இக் குற்றங்களைப் புரிந்தவர் யார்?
Ø அவர்களுக்கு துணை புரிந்தவர் யார்?
Ø குற்றவாளிகளை தண்டிப்பது யார்?
Ø பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பது யார்?

இப்படிப் பல கேள்விகள் எம்முன் எழலாம் எனினும் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது ஒன்றுதான். சட்டம் சட்டத்தை நிர்வகிக்கும் நிறுவனங்கள் நபர்கள் அனைத்துமே சுரண்டல்மிக்க, ஆதிக்கவெறியுடைய, பேரினவாத, ஏகாதிபத்திய அடிவருடிகளினால் ஆக்கப்பட்டவையும் அவர்களைப் பாதுகாப்பவையும் ஆகும்.

எனவே, நாம் செய்ய வேண்டியது சட்டத்தை முற்று முழுதாக நம்பிக் கொண்டிருப்பதல்ல. மாறாக இவ் அமைப்புமுறையை மாற்றியமைத்து வெகுஜனங்களுடைய அரசைத் தாபிப்பதாகும்.

- எல்லண்ணா -

நன்றி: புதியபூமி (October 2011)