Language Selection

புதிய ஜனநாயக மா-லெ கட்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மகிந்த சிந்தனை ஆட்சியின் கீழ் நாட்டு மக்கள் எதிர்நோக்கி வந்த மோசமான பொருளாதார நெருக்கடிகளும், ஜனநாயகவிரோத பாசிச குடும்ப சர்வாதிகாரமும், சட்ட ஆட்சி - நீதித்துறை மீதான நிறைவேற்று அதிகார அத்துமீறல்களும், ஊழல் முறைகேடுகளுடன் அதிகார துஸ்பிரயோக அடக்குமுறைகளும், குறிப்பாகத் தமிழ், முஸ்லீம், மலையகத் தழிழ்மக்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறைகளும் அனைத்து மக்கள் மத்தியிலும் பலநிலை அதிருப்திகளையும், எதிர்ப்புகளையும் தோற்றுவித்தது.

அதுவே ஆட்சிமாற்றம் வேண்டுமென்ற பொதுக்கருத்து வளரக் காரணமாகியது. இதனை பொது எதிரணிக் கட்சிகள் நன்கு பயன்படுத்தியதன் விளைவாக ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சாவை தோற்கடித்து வீட்டிற்கு அனுப்பவும் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக வரவும் வழியேற்பட்டது. அத்துடன் ரணில் விக்கிரமசிங்ஹ பிரதமராக  நியமிக்கப்பட்டு பொது எதிரணி ஆட்சிப் பொறுப்பை ஏற்கவும் முடிந்தது.

எனவே இவ் வெற்றியிலும் ஆட்சிமாற்றத்திலும் தமிழ் முஸ்லீம் மலையகத் தேசிய இனங்களினதும் கிறிஸ்தவர்கள் உட்பட சிறு சமூகங்களினதும் பங்களிப்பு முக்கிமானதாகும். அவர்களது வாக்களிப்பு வீதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகளில் 36சத வீதமாகும். அந்த வாக்குகளே வெற்றி தோல்வியை தீர்மானித்துக் கொண்டன. இது கடும்போக்கு பேரினவாத ஜாதிக ஹெல உறுமய பெற்றுக்கொடுத்த வாக்குகளை விடப் பலமடங்கு அதிகமானதாகும்.

எனவே மைத்திரி – ரணில் தலைமையிலான புதிய ஆட்சியினர் எந்த அளவிற்குத் தேசிய இனப்பிரச்சனையின் தீர்விற்கு முன் நிற்கப் போகிறார்கள் என்பதைக் காண வடக்கு கிழக்கு மலையக மக்கள் அக்கறையுடன் எதிர்பார்த்து நிற்கின்றனர். எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் 100 நாள் நல்லாட்சித் திட்டத்திலும் ஜனாதிபதி ஆற்றிய இரண்டு உரைகளிலும் தேசிய இனப்பிரச்சனைத் தீர்வு பற்றி உச்சரிக்கப்படவில்லை. இது புதிய ஆட்சியாளர்களின் இடத்தை சுட்டிக்காட்டி நிற்கிறது.

அதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடன் நடாத்திய சந்திப்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் செவிமடுத்ததாகவும் சாதகமான நிலையில் விடயங்கள் அணுகப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கடந்த காலங்களைப் போன்று தமிழர் எதிர் சிங்களவர் என்ற வாய்பாட்டின் ஊடாகச் சிங்கள மக்களை எதிரிகளாக கொண்ட நிலைப்பாட்டுடன்  பேசப்போகிறார்களா. அல்லது முழுநாட்டையும் உள்ளடக்கிய சிங்கள உழைக்கும் மக்களது பிரச்சனைகளிலும் கோரிக்கைகளிலும் பங்கு கொண்டு அம்மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்று தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வை நாடிச் செல்லப் போகிறார்களா என்பது முக்கியமானதாகும்.

மேலும் அவ்வறிக்கையில், மேற்படி வெற்றியிலும் ஆட்சி மாற்றத்திலும்  நாட்டின் ஆளும் வர்க்க சக்திகளான தரகு முதலாளிய பேரினவாத அரசியல் கட்சிகளே பொது எதிரணியாக ஒன்றுகூடி செயற்பட்டுள்ளன. இவர்களுக்கு பலத்த பின்புலச் சக்திகளாக அமெரிக்க, ஜரோப்பிய, இந்திய ஏகாதிபத்திய பிராந்திய மேலாதிக்கவாதிகள் தொழிற்பட்டு தத்தமது உள்நோக்கங்கள் நிறைந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

இச்சூழலில் ஆட்சி அதிகாரத்தில் ஆட்கள் மாறியிருக்கிறார்கள். அதன் கீழ் சிற்சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமாயினும் அடிப்படையான பொருளாதார அரசியல் சமூகக் கட்டமைப்புகளில் மாற்றங்கள் ஏற்படமாட்டா என்பதே அரசியல் யதார்த்தம் ஆகும. இருப்பினும் மைத்திரி-ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கம் என்பதன் ஊடாக “100 நாட்களில் புதிய தேசம்” என்பதனை நாட்டு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் நம்பி நிற்கின்றனர். அத்தகைய மக்களின் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் எந்தளவிற்கு நாட்டுக்கும் மக்களுக்கும் உகந்தவாறு சாத்தியமாக்கப்படும் என்பதை 100 நாட்களின் பின் அனைத்து தரப்பு மக்களும் கண்டு கொள்வார்கள்.

எனவே தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட  அனைத்து உழைக்கும் மக்களும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் தாங்கள் எதிர்நோக்கி நிற்கும் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை ஆட்களையும் ஆட்சியையும் மாற்றுவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்து கொள்வது அவசியமாகும். அவ்வாறன்றி அடுத்த தேர்தலில் வாக்களித்துச் சாதித்து விடலாம் என நம்பி இருப்பது ஒருவகை அரசியல் மூடநம்பிக்கையாகும். அதற்குப் பதிலாகத் தத்தமது எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் கோரிக்கைகளாக முன்வைத்து அரசியல் தெளிவுடனும் தூரநோக்குடனும் மக்கள் இயக்கங்களைக் கட்டியெழுப்ப வேண்டும். பரந்துபட்ட வெகுஜன எழுச்சியில் முன்செல்லவும் தயாராக வேண்டும். இதனையே எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி வற்புறுத்தி நிற்கிறது.

சி.கா.செந்திவேல்
பொதுச்செயலாளர்.