Language Selection

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மனித உரிமை செயற்பாட்டாளர்களும், முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்களுமான லலித் மற்றும் குகன் இருவரும் 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி யாழில் காணாமல் போனவர்களை கண்டு பிடிக்குமாறு கோரி பாரிய போராட்டம் ஒன்றிக்கான ஒழுங்கமைப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், மகிந்த கூலிக் கும்பலால் கடத்தி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். இது குறித்த முறைப்பாடு ஒன்றினை யாழ் நீதிமன்றில் லலித் - குகன் குடும்பத்தினர் பதிவு செய்திருந்தனர். குகனின் குடும்பத்தினரை இனந்தெரியாத நபர்கள் நீதி மன்றத்திற்கு சமூகமளித்தால் குகனின் மகளிற்கு அப்பா மட்டுமல்ல அம்மாவும் காணாமல் போய்விடுவா என மகிந்த ஆட்சியில் மிரட்டி, குகனின் குடும்பத்தினரை நீதி மன்றத்திற்கு போவதனை தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.

லலித் - குகன் காணாமல் போனது குறித்து முன்னிலை சோசலிச கட்சியினரின் தொடர்ச்சியான பல போராட்டங்கள் முன்னெடுத்து அரசிற்கு நெருக்கடியினை ஏற்படுத்தி இருந்தனர். அந்த வேளை முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்கல, லலித் - குகன் இருவரும் கடத்தப்படவில்லை. அவர்கள் இருவரும் அரச தடுப்பில் வைத்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அது பத்திரிகைகளிலும் வெளிவந்திருந்தது.

யாழ் நீதிமன்றத்தில் இது பற்றி அறிவிக்கப்பட்டு கெகலிய ரம்புக்கல அவர்களிடம் லலித் - குகன் காணாமல் போனது குறித்து விசாரணை நடாத்தும்படி லலித் - குகன் சார்பில் வழக்கை நடாத்தும் சட்டத்தரணி நுவான் போபகே அவர்கள் கேட்டிருந்தார். யாழ் நீதிமன்றம் கெகலிய ரம்புக்கலவினை நீதி மன்றிற்கு அழைத்திருந்தது. அன்று அமைச்சராக இருந்த ரம்புக்கல அதனை உதாசீனம் செய்து இருந்தார். யாழ் நீதிமன்றமும் மகிந்த பாசிச கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது வழக்கை பல தடைவ ஒத்திப்போட்டு வந்தது. மைத்திரி – ரணில் ஆட்சியை கைப்பற்றியதும் காணாமல் போனவர்கள் தொடர்பில் தாம் கருசணையுடன் செயற்படுவது போல சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்கு காட்டிக் கொள்ளவும், தேசிய கூட்டரசு கொள்ளையருக்கும் மகிந்தா கும்பலுக்கும் உள்ள முரண்பாட்டை கையாளவும், நீதி மன்றத்திற்கு வருகை தராது போக்கு காட்டிய ரம்புக்கெலவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் பிரகாராம் இன்று கெகல ரம்புக்கெல இன்று நீதி மன்றத்திற்கு சமூகமளித்திருந்தார்.

அவர் சமூகமளித்திருந்த போதும் அவர் மீதான எந்த விசாரணையும் இடம்பெறவில்லை. இதற்கு காரணமாக தொழில்நுட்ப பிரச்சினை மொழி பெயர்ப்பாளர் இல்லை என மே மாதத்திற்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய உலகில் நேர்மையான நடுநிலையான நீதித்துறை எங்கும் கிடையாது. நீதித்துறையானது ஆட்சியாளர்களின் தேவை நலன்களிற்கு ஏற்ற வண்ணம் வளைந்து எடுக்கப்படுகின்றது. சாதாரண மக்களை அடக்கவும், ஒடுக்கவும், ஏமாற்றவும் தான் நீதித்துறையானது ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தால் மக்களை ஏமாற்றும் ஒரு கருவியாக பாவிக்கப்படுகின்றது.

"சட்டம் தன் கடமையை செய்யும்" என்பது ஒரு பொய்க்கதை. தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த மகிந்தா, கோத்தபாய, படைத்தளபதிகள் மற்றும் இன்றைய கூட்டாட்சியில் முக்கிய பதவிகளில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் எல்லோரும் சுதந்திரமாக வெளியில் நடமாடுகின்றனர் ஆனால் அரசியல் கைதிகளும், தனது பிறப்பு உரிமையினை வழங்கக்கோரிய குமார் குணரத்தினமும் எந்த நீதி நியாயமும், விசாரணைகளும் இன்றி சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.