Language Selection

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த 30 வருடங்களிற்கும் மேலாக நடந்த உள்நாட்டு யுத்தத்தில் சந்தேகத்தின் பேரிலும், குற்றச்சாட்டுக்களின் பேரிலும் கைது செய்யப்பட்டு 10 வருடங்களிற்கு மேலாக விசாரணைகள் இன்றியும், குற்றம் சுமத்தப்பட்ட பின்னர் வழக்கு விசாரணைகள் நீண்ட காலத்திற்கு தள்ளிப் போடப்பட்டும் ஏறத்தாள 300 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தமிழ் பகுதிகளில் மைத்திரி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை தருவதாகவும் மேலும் பல வாக்குறுதிகளையும் கூறி மைத்திரி தரப்பினர் வாக்கு கேட்டனர். அதில் ஒன்று தான் அரசியல் கைதிகள் விடுதலை. ஆனால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அரசியல் கைதிகள் விடுதலை பற்றி அக்கறையற்ற நிலையே நீடித்தது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் ஜனாதிபதி அரசியல் நெருக்கடியினை சந்திப்பதால், விடுதலை சாத்தியமில்லை என ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவிக்கப்பட்டது. கூட்டமைப்பினரும் அரசியல் கைதிகள் விடயத்தில் பாராமுகமாகவே செயற்பட்டனர். இந்நிலையில் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதம் இருக்கவும் அவர்களின் குடும்பத்தினருடனும் கைதிகளின் விடுதலையில் அக்கறையுடன் செயற்பட்ட அமைப்புகளுடனும் இணைந்து சமவுரிமை இயக்கம் பாரிய போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தான பிரச்சினை மீண்டும் சுடுபிடிக்க ஆரம்பித்தது.அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் முதல் ஜனாதிபதி பிரதமர் வரை பல்வேறு கதைகளை அரசியல் கைதிகள் குறித்து தெரிவித்தனர். அரசியல் கைதிகள் என யாரும் கிடையாது. சிறைச்சாலைகளில் இருப்பவர்கள் அனைவரும் தண்டனை பெற்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள். இப்படி பல பொய்களை கூறினர்.

கடந்த வாரம் ஜனாதிபதி சிறைச்சாலைகளில் இருப்பவர்கள் 215 பேரும் குற்றவாளிகள் அரசியல் கைதிகள் யாரும் இல்லை. அரசியல் கைதி இருக்கின்றார்கள் என யாரும் தேவையில்லாத போராட்டங்களை நடாத்த வேண்டாம் என்னும் தொனியில் பேசியிருந்தார்.

அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களை, அரசியல் கைதியாக அங்கீகரிக்க மறுப்பது என்பது இலங்கையில் இன முரண்பாடு என்ற ஒன்று இருக்கவில்லை என்று மறுப்பதாகும். இதன் மூலம் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக மாற்றுவது, கைதிகளின் குடும்பங்களின் நியாயமான போராட்டத்தை மறுப்பதாகும்.

ஆனால் நேற்று திடீரென தான் அமைச்சராக இருந்த போது 2006இல் தன்னை கொலை செய்ய முயன்ற சிவராசா ஜெனிவனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இன்னும் பல ஆச்சரியங்கள் நிகழலாம்…..

இந்த வாரம் தலைநகர் கொழும்பில் நவதாரளவாத பொருளாதாரத்தை முனைப்புடன் முன்னெடுப்பது குறித்தான இலங்கை பொருளாதாரம் கருந்தரங்கம் 2016 நடைபெற்றது. மேற்குலகம் பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் நாட்டின் மூலவளங்களை கொள்ளையிட ஆட்சியில் இருக்கும் கள்வர்களுடனும், ஆட்சியாளர்களுடன் முண்டு கொடுத்து ஒத்தோடும் மக்களை ஏமாற்றும் கயவர்களுடனும் மந்திர ஆலோசனைகளை நடத்தியது. தமது கொள்ளை எந்தவித எதிர்ப்பும் இன்றி இலகுவாக நிகழ்வதற்க்காக இலங்கையில் ஒரு அமைதியான ஒரு சூழலை எதிர்பார்க்கின்றது. அதற்க்காக குறிப்பாக இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு என்று வெற்றுப் பொதி ஒன்றை, கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் தமிழ் மக்களின் தலைமேல் வைக்கும் செயற்பாடுகள் ஆரம்பித்துள்ளது. இந்த பொது மன்னிப்பும் இதன் ஒரு அங்கமாகவே நிகழ்ந்திருக்கின்றது எனலாம்.