Language Selection

செங்கொடி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக “ரஞ்சிதா” புகழ் நித்யானந்தா நியமிக்கப்பட்டதிலிருந்து ஆகமங்களின்படி விதிகளின்படி நியமிக்கப்பட்டது சரியா? தவறா? என்றொரு விவாதம் சூடாக நடந்து கொண்டிருக்கிறது. நித்தி நியமிக்கப்பட்டதில் எந்த விதி மீறல்களும் இல்லை என்று மதுரை மூத்த ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் கூறுகிறார். சொத்துகளை அபகரிப்பதற்காகவே இந்த நியமனம் நடந்திருக்கிறது, நித்தியின் கட்டுப்பாட்டில் ஆதீனம் இருக்கிறார் என்று இந்து அமைப்புகள் கூறுகின்றன. இதற்கிடையே பிடதி சொத்துக்களை விட்டுவிட்டு வரத் தயார். ஏனைய ஆதீனங்கள் விட்டுவிட்டு வரத்தயாரா? குறுகிய காலத்திற்குள்ளேயே என்னால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்று சவடால் விட்டிருக்கிறார் நித்தி. பிடதி நித்யானந்தாவை என்ன, காஞ்சி தேவநாதனைக்(காஞ்சி கோவில் மூலஸ்தானத்தில் கடவுளுக்கு சொந்த புளுபிலிம் காட்டியவன்) கூட நியமித்துக் கொள்ளட்டும், அதில் நமக்கு பிராச்சனை ஒன்றுமில்லை. ஆனால் வேறு கேள்விகள் இருக்கின்றன.

இந்த ஆதீன மடங்களின் பணி என்ன? பொருள் இல்லாமல் ஆன்மீகப் பணி என்றால் நித்தி மட்டுமல்ல, சுருட்டு சாமியார், பீர் சாமியார் என்று நித்தமும் மக்களிடம் தர்மஅடி வாங்கும் கள்ளச் சாமியார்களும் வரமாட்டார்கள். நடப்பது சொத்துச் சண்டை என்றால், அது யாருடைய சொத்து? மடங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளில் சொத்து எப்படி வந்தது? கேரளாவில் பத்மனாப சாமி கோவிலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சொத்துகளின் மதிப்பு பத்து லட்சம் கோடிகளைத் தாண்டியது, உலகம் வாய் பிளந்து நின்றது. இன்னும் இரண்டு அறைகள் திறந்து மதிப்பிடப்பட வேண்டியதிருக்கிறது. திறந்தால் இரத்தம் கக்கி செத்துப் போவீர்கள் என்று பூச்சி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். நித்தி உட்பட ஜக்கி, ரவிஜி என அனைத்து கார்ப்பரேட் சாமிகளும் கோடிகளில் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். தில்லையில் நடராஜனின் பல ஆபரணங்களை தீட்சிதர்கள் ‘ஜஸ்ட் லைக் தட்’ ஸ்வாஹா பண்ணியிருக்கிறார்கள். அத்தனையும் ஆன்மீகத்தின் பெயராலேயே நடக்கிறது. இந்த சொத்துகளையெல்லாம் ‘ஹிப்பி’ சாய்பாபா வாய்க்குள்ளிருந்து லிங்கம் எடுத்துக் கொடுப்பது போல் போக்குக் காட்டி யஜுர்வேத மந்த்ரம் அறைக்குள் இருந்து எடுத்துக் கொடுத்தது போல் கடவுள் சொர்க்க வங்கி இருப்பிலிருந்து ’வித்ட்ரா’ பண்னிக் கொடுத்ததா? உழைக்கும் மக்களின் இரத்தத்தை சுண்டக் காய்ச்சி வார்க்கப்பட்ட சொத்துகள் இவை.

 

சோமநாத ஆலயத்தை கஜினி கொள்ளையடித்தான் என்று வெறியேற்றிக் கொண்டிருக்கிறது காவிக் கூட்டம். கஜினி மட்டுமல்ல அத்தனை மன்னர்களும் தவாறாமல் கோவில்களைத்தான் சூறையாடி இருக்கிறார்கள். ஏனென்றால் கோவில்கள் தான் மன்னர்களின் சொத்துகளைக் காக்கும் பூதங்களாக இருந்திருக்கின்றன. ஆதீன மடங்களும் பூதங்கள் தாம், தனியாக பிரித்துக் கொடுக்கப்பட்ட பூதங்கள். அந்த பூதங்களை அனுபவிக்கவே இன்று ஆகமச் சண்டைகள். யார் சொத்தை யார் அனுபவிப்பது?

 

ஆதீனங்கள் எத்தகையவை? அவைகளின் வரலாறு என்ன? மடங்கள் எனும் வடிவமே பௌத்த மதத்திற்கு சொந்தமானது தான், சைவ சமயத்தை பரப்பவும் தொண்டு செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டது தான் ஆதீனங்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். தற்போது ஆதீனங்கள் என்ன தொண்டு செய்கின்றன என்பது அனைவரும் அறிந்தது தான். அறியாதவர்கள் காணாமல் போன வைஷ்ணவியை தேடிப் பார்க்கலாம். நித்தி அம்பலப்பட்டுவிட்டான் ஏனையவர்கள் அம்பலப்பட மிச்சமிருக்கிறார்கள். இது இப்போது உள்ளவர்களின் சீர்கேடு என்று விலக்களிக்க முடியாது. தொடக்கங்களில் எப்படி துரோகத்தனமாய் ’தொண்டு’ புரிந்தார்கள் என்பதும் அறியப்பட வேண்டியவை தாம். கிபி ஆறாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் பௌத்தமும் சமணமும் செல்வாக்கோடு இருந்தன. அறிவியல் ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் அவர்களுடன் போட்டியிட பார்ப்பனிய சைவ மதத்தால் இயலவில்லை. அதனால் மன்னர்களின் தயவை நாடினார்கள். மன்னர்களின் தயவோடும், அவர்கள் தானமாக வழங்கிய ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களோடும் தான் ஆதீன மடங்கள் பிறந்தன. மதுரை ஆதீனத்தை பிரசவிவித்தவன் ஞானசம்பந்தன். பௌத்த சமண மதத்தைச் சார்ந்த அறிவுத்துறையினரை வெல்ல முடியாமல் கூன் பாண்டியன் உதவியுடன் சீர்காழியில் எட்டாயிரம் சமணர்களை கழுவிலேற்றி கொன்றதுதான் ஞான சம்பந்தனின் சைவத் தொண்டு. என்றாலும் மக்களின் வழக்கங்களை மாற்ற முடியவில்லை என்பதால் புத்தனின் போதி(அரசமரம்) மரத்தை சுற்றும் வழக்கத்தை பிள்ளையார் சிலையைத் திணித்து அரசமரத்தை சுற்றுவதாக மாற்றினார்கள். இப்படி தொண்டு புரிந்த மடங்களுக்கு; மண் பானைக்குக் கூட மக்களிடம் வரி விதித்து வந்த பணத்தை மடைமாற்றினார்கள்.

 

இதன் பிறகு இந்த மடங்கள் பௌத்த சமணப் பள்ளிகளை சைவக் கோவில்களாக மாற்றி தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டார்கள். குறிப்பாக சமணப் பள்ளிகள் என்பது மக்களுக்கு நடைமுறைக் கல்வியைப் போதிக்கும் கூடங்களாகவே விளங்கின. அதானால் தான் இன்றும் கல்வி நிறுவனங்களுக்கு பள்ளிக்கூடம் எனும் சொல் வழக்கில் இருக்கிறது. இதை 1930களில் நீதிக் கட்சி, கோவில்களையும் சொத்துகளையும் உண்டு கொழுத்துக் கொண்டிருந்த மடங்களின் ஆதீனங்களை நீக்கி அரசுடமையாக்கியது. என்றாலும் அது முழுமை பெறவில்லை. கோவில்களை மட்டுமே அரசுடமையாக்கிய நீதிக்கட்சி மடங்களை அவர்களிடமே விட்டு வைத்தது. அதனைக் கொண்டு தான் இன்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைக் கருத்துகளை மக்களிடம் விதைத்து வருகிறார்கள். வர்ணாசிரம தர்மத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள். காஞ்சி மடத்தில் எப்படி பாப்பானல்லாத யாரும் சங்கராச்சாரி ஆகிவிட முடியாதோ அதுபோல சைவப் பிள்ளைமார் அல்லது ஆதிக்க சாதியைச் சார்ந்த யாரும் ஆதீனமாகிவிட முடியாது.

நித்யானந்தன் நியமிக்கப்பட்டதில் இன்னொரு அபாயமும் இருக்கிறது. தற்போது இதுபோன்ற ஆதீன மடங்களில் இருப்பவர்கள் யாரும் மக்களுக்கு அறிமுகமானவர்களோ, மக்களை ஈர்க்கும் திறணுள்ளவர்களோ அல்லர். இந்த ஞானசம்பந்த தேசிகரை எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால் நித்தி போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் அதை ஈடுகட்டக் கூடியவர்களாக இருக்கிறார்கள். நித்தியிடம் ஈர்க்கும் பேச்சாற்றல் உண்டு. கட்டுப்பட்டு வேலை செய்ய தொண்டர்படை உண்டு. இவை பாரம்பரிய மடங்களோடு இணையும் போது, மக்கள் இன்னும் அதிகமாக மூடநம்பிக்கைகளுக்குள் ஈர்க்கப்படுவதற்கும், அன்றாடம் அவர்கள் உழன்று கொண்டிருக்கும் வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்து, அவைகளுக்கான தீர்வுகளை நோக்கிய பயணத்திலிருந்து தடம்மாறிச் செல்வத்ற்குமே பயன்படும். மக்களை நேசிப்பவர்கள் மெய்யாகவே கவலைப்பட வேண்டிய விசயம் இது தான்.

 

இவைகளை மக்கள் மீது மதிப்புக் கொண்டிருக்கும் யாரும் சகித்துக் கொண்டிருக்க முடியுமா? ஆனால் தான் உழைத்து சம்பாதித்தது போல் வாரிசை நியமிக்கும் உரிமை எனக்கு உண்டு அதில் யாரும் தலையிட முடியாது என்கிறார் ஆதீனகர்த்தா. மக்களின் அன்றாடப் பிரச்சனைகள், போராட்டங்கள், வாழ்முறைச் சிக்கல்கள் குறித்து எந்தக் கவலையும் கொண்டிராத இது போன்ற மடங்கள் நடத்தும் கல்விக் கூடங்கள் உள்ளிட்ட எதற்கும் அரசு எல்லாவித சலுகைகளையும் அளித்துக் கொண்டிருக்கிறது. மட்டுமல்லாது, இது போன்ற கார்பரேட் சாமியார்களின் முக்கியத் தொழிலே ஹவாலா மோசடிகளில் ஈடுபடுவது தான். இல்லாவிட்டால் இவர்களுக்கு ஏன் வெளிநாடுகளில் கிளைகள் தேவைப்படுகின்றன? ஆனால் இவை எதைப்பற்றியும் மூச்சுவிடாத ஊடகங்கள் நித்யானந்தா நியமிக்கப்பட்டது சரியா? தவறா? என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.

கணக்கில் வராத பணம் கருப்புப் பணம் என்கிறார்கள். இது போன்ற மடங்களுக்கும் அரசுடமையாக்கப்படாத கோவில்களுக்கும் இருக்கும் சொத்துகளுக்கும், அவற்றிலிருந்து கிடைக்கும் வருமானத்திற்கும் கணக்கு இருக்கிறதா? நம் முன்னோர்களை வருத்திப் பெற்ற பணத்தைக் கொண்டு உருவான இவைகள்; தனி மனிதர்களின் கைகளில் சிதம்பரம் கோவிலில் ஆண்டுக்கு 37 ரூபாய் நட்டம் என்பதுபோல் கணக்கெழுதி சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவைகளை மீளப் பெற்று மக்களிடம் வினியோகிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தான் ஜனநாயக் பூர்வமானதாக இருக்கும். ஊடகங்களின் கிசுகிசு பாணி செய்திகளின் தாக்கத்திலிருந்து விடுபட்டு மக்கள் தங்களுக்கான கோரிக்கைகளில் நின்று போராடத் தொடங்க வேண்டும்.

நன்றி முதல் பதிவு : செங்கொடி