Language Selection

அஸ்வத்தாமா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் இடம் பெற்ற “அரபு வசந்தம்” என அழைக்கப்பட்ட மக்கள் எழுச்சி இன்று எந்தக் கட்டத்தை அடைந்திருக்கிறது என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது. ஊடகங்களாலும் சமூக வலைதளங்களாலும் சிலாகித்துப் பேசப்பட்டுப் பல தருணங்களில் உரிமை கொண்டாடப்பட்ட இந்த எழுச்சி இன்று எங்கே நிற்கிறது?

துனீசியா, எகிப்து, லிபியா, யெமன் என்பன முதலான பல நாடுகளில் மக்களின் தன்னெழுச்சியால் அவர்களது உரிமைகளுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் நடந்த போராட்டங்கள் எவ்வகையான பலன்களை தந்திருக்கின்றன எனப் பார்ப்பது, அவை அடிப்படையில் யாருடைய நலன்களைப் பேணுகின்றன என அறிய உதவும். மேலும் மக்கள் எழுச்சிகளின் திசைவழிகளைத் தீர்மானிக்கும் அம்சங்களைத் தெரிந்து கொள்ளவும் பாடங்களைக் கற்கவும் இது அவசியமானது.

இன்று துனீசியாவின் பென் அலி, எகிப்தில் முபாரக், லிபியாவில் கடாபி, யெமனில் சலே என யாரும் பதவியில் இல்லை. மக்கள் எழுச்சியின் விளைவால் தலைகள் மாற்றப்பட்டாயிற்று, நல்லபடியாக எதுவும் மாறவில்லை. துனீசியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்கிறது, எகிப்தை இராணுவம் தான் ஆளுகிறது, அன்றாட அலுவல்களைத் தீர்மானிக்கிறது. லிபியா என்றுமில்லாத அளவு பஞ்சத்தையும் பொருளாதார நெருக்கடியையும் எதிர்நோக்குகிறது. யெமனில் ஊழல் அதிகரித்திருக்கிறது, மக்கள் அல்லற்படுகிறார்கள். இந்த நாடுகளின் மக்கள் பல இன்னுயிர்களை ஈந்து போராடிய எழுச்சிகள் மக்கள் வேண்டி நின்ற எந்தவொரு விளைவையும் தரவில்லை.

மேற்குலகும் அதனுடையதும் அதன் அடிவருடிகளதும் ஊடகங்களும் இந் நாடுகளில் ஜனநாயகம் வந்துவிட்டதாக சொல்கின்றன. மக்கள் எழுச்சிகள் அரபு நாடுகளில் ஜனநாயகத்துக்கான வாயிலைத் திறந்துவிட்டுள்ளதாகவும் சுதந்திரமான ஊடகங்களும் சமூக வலைத்தளங்களுமே அதற்குக் காரணம் என்று தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்கிறார்கள். எகிப்தின் தாஹிர் சதுக்கத்தில் மக்கள் மீண்டும் கூடுகிறார்கள். இது நல்ல அறிகுறிதான். ஆனால் முன்பு போல மக்கள் மீண்டும் ஏய்க்கப்பட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

வெறுமனே ஊடகங்களாலும் சமூக வலைத்தளங்களாலும் மட்டும் எந்தவொரு பயனுள்ள மாற்றத்தையும் கொண்டுவர முடியாது என்பதை அரபு எழுச்சியின் விளைவுகள் எமக்குக் காட்டியுள்ளன. அதேவேளை, அவையே லிபியாவில் “ஆட்சி மாற்றத்தை” வேண்டிய மேற்குலக ஏகாதிபத்தியச் செய்நிரலுக்காக வேலை செய்தன என்பதையும் மறத்தலாகாது. சில நாடுகளில் மக்கள் அரசுக்கெதிராக நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடின விதமான அதே தோற்றம் லிபியாவிலும் காட்டப்பட்டது. இன்று அதே விதமான நியாயமும் காரணங்களும் சிரியாவுக்கும் காட்டப்படுகின்றன. அதுவே நாளை ஈரான் மீதான தாக்குதலை நியாயப்படுத்த வழங்கப்படவும் கூடும். 

எந்தவொரு மக்கள் எழுச்சியும் உழைக்கும் மக்களை முன்னிறுத்தி உரிமைக்கான மக்கள் போராட்டங்களாக முற்போக்குச் சக்திகளால் தலைமை தாங்கப்படவேண்டும். ஆதன் அடிப்படையில் குறுங்கால, நீண்டகாலத் திட்டங்களின் அடிப்படையில் இறுதி இலக்கு எட்டப்படும் வரை போராட்டம் தொடரப்படவேண்டும். அப்போதே, போராட்டம் திசை தவறுவதைத் தவிர்க்க முடிவதோடு எதிர்ப்புரட்சிச் சக்திகளை முறியடிக்கவும் முடிகிறது. தன்னெழுச்சியான மக்கள் எழுச்சிகள் திசை தவறுவதும் தொடங்கிய வேகத்தில் முடிந்து போவதும் வழமையானதே. அவ்வாறான மக்கள் எழுச்சிகள் மக்களை அறிவூட்டுவதன் மூலம் தக்கவைத்துக் கொள்ளப்பட வேண்டும். சமூக வலைத்தளங்கள் கட்டமைப்பது போல மக்கள் எழுச்சி ஒரு ஃபஷன் நிகழ்வல்ல. அது தொடர்ச்சியாக பொறுப்புணர்வோடும் நம்பிக்கையோடும் முன்னெடுக்கப்படவேண்டியது. இன்று அரபு நாடுகளில் நடந்துள்ளது போல வெறுமனே தேர்தல் ஜனநாயகத்தை உருவாக்குவது பிரச்சனைகளின் தீர்வாகவோ போராட்டத்தின் குறிக்கோளாகவோ இருக்கமுடியாது. மேற்சொன்ன அத்தனை எழுச்சிகளிலும் உழைக்கும் தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபடாமலும் தொழிலாளர்கள் தலைமைப் பாத்திரம் ஏற்காத வண்ணமும் கவனமாகப் பார்த்துக் கொள்ளப்பட்டது. குறிப்பாக எகிப்தில், அவ்வாறு ஒன்று உருவாகுவதற்கான சாத்தியங்கள் தெரிந்தபோது, மேற்கத்திய ஊடகங்கள் மதவாத முஸ்லீம் சகோதரத்துவக் கட்சிக்கு முக்கியத்துவம் அளித்து அது நல்ல ஒரு மாற்று என்ற தோற்றத்தைக்; கட்டியெழுப்பின. மதவாதமற்ற மக்களை ஒன்றிணைக்க முன்னாள் ஐ.நா. அணுசக்தி முகவராண்மைத் தலைவரான அல் பராடி வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு ஜனநாயகத் தலைவராக மேற்கத்திய ஊடகங்களால் காட்டப்பட்டார். இவையெல்லாம் மக்கள் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர உதவின. அல் பராடி தஹிர் சதுக்கம் வெறிச்சோடத் தொடங்கியவுடன் காட்சியிலிருந்து ஒதுங்கி அமெரிக்காவிற்குப் பெயர்ந்துவிட்டார்.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் பெருகி வரும் வேலையின்மைக்கு எதிராகவும் ஊழலுக்கெதிராகவுமே யெமெனில் மக்கள் போராட்டங்கள் தொடங்கின. முதற் சில வாரங்கட்கு அவை ஊடகங்களினால் இருட்டடிக்கப்பட்டன. ஏனெனில், மக்கள் எழுச்சியின் காரணங்கள் அடிப்படையானவையாகவும் முக்கியமானவையாக இருந்ததோடு அவை நீண்டகால மக்கள் போராட்டங்கட்கு வழி செய்யும் என மேற்குலகும் ஊடகங்களும் அறிந்திருந்தன. பிரச்சனைகள் இலகுவில் தீர்க்கக்கூடியனவல்லவாயினும், காலப்போக்கில் மக்கள் எழுச்சி போராட்ட அலையாகியபோது, தவிர்க்கவியலாமல், அவை ஊடகங்களால் செய்தியாக்கப்பட்டன. இந்நிலையில், துனிசியாவிலும் எகிப்திலும் நடந்த ஆட்சி மாற்றங்கள் முன்னுதாரணங்களாகக் காட்டப்பட்டன. யெமனில் தேவைப்படுவதும் ஆட்சி மாற்றமே என்ற திசை திருப்பு உத்தி பயன்படுத்தப்பட்டது. ஆட்சி மாறினால் எல்லாப் பிரச்சனையும் தீரும் என நம்பவைக்கப்பட்டது. மேற்குலக நிதி உதவிபெற்ற என்.ஜீ.ஓக்கள் இதைப் பிரச்சாரப்படுத்தி சலே ஆட்சியிலிருந்து அகற்றப்படுவதை முன்னிலைப்படுத்தின. சலே நீதியின் முன் நிறுத்தப்படாதவாறு யெமனியப் பாரளமன்றம் அவரது செயற்பாடுகளைக் குற்றமாகக் கருதமுடியாதவாறான விடுபாட்டுரிமையை அவருக்களித்தன.

அரபு மக்கள் எழுச்சியில் தங்கள் இன்னுயிர்களை நீத்தவர்கள் வெறுமனே ஒரு ஆட்சி மாற்றத்திற்காகத் தங்கள் உயிர்களை தியாகம் செய்யவில்லை. அவர்கள் மக்களது விடுதலையை, சுதந்திரத்தை, உரிமையை, கண்ணியத்தை வேண்டியே போராடி உயிர் துறந்தார்கள். மீண்டும் உரிமைகளுக்கான மக்கள் போராட்ட்தை உழைக்கும் மக்களின் தலைமையில் தொடங்குவது தான் அவர்களுக்குச் செய்ய வேண்டிய மரியாதையாகும். இருபத்தைந்து வயதில் இறந்த அல்-கஸிம் அல்-ஷமி என்ற துனீசியக் கவிஞன் எழுதிய ஒரு கவிதை, மக்கள் எழுச்சியின் போது துனீசியாவின் வீதிகளில் மட்டுமன்றி எகிப்தின் வீதிகளிலும் பாடப்பட்டது. அதை மக்கள் எழுச்சியின் தீச்சுவாலை என அழைத்தார்கள். இப்போது மீண்டும் அந்தக் கவிதையைப் பாடவேண்டிய நிலையில் மக்கள் இருக்கிறார்கள். அந்தக் கவிதையூடே மக்கள் தங்கள் எதிர்காலத்துகான விதியைத் தாங்களே எழுதலாம். நாங்களும் அந்தக் கவிதையைப் பாடமுடியும் தானே?

 

மக்கள் வாழ்வதற்கு உறுதிபூண்டால்

ஊழ் சாதகமாக எதிர்வினையாற்ற விதிக்கப்பட்டதாகும்,

இரவு கலைவதற்கு விதிக்கப்பட்டதாகும்,

விலங்குகள் உடைக்கப்படுவது திண்ணம்.

வாழ்வின் மீதான நேசத்தைப் பற்றிக் கொள்ளாதவன்,

அதன் வளிமண்டலத்தில் ஆவியாகி இல்லாதுபோவான்.   

 

-17/08/2012