Language Selection

அஸ்வத்தாமா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நீங்கள் இதை வாசிக்கும் போது பிரேசிலின் றியோ டி ஜெனேரோவில் றியோ+20 புவி மாநாடு குளுகுளு அறைகளில் எந்த முடிவுமற்று முடிந்து உலகத் தலைவர்கள் தங்கள் அடுத்த வேலைகளைப் பார்ப்பதற்காகக் கிளம்பியிருப்பார்கள் என்பதை நிச்சயமாகச் சொல்லலாம்.  சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னர், 1992 இல்  றியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஐ.நா. சர்வதேசப் பூமி மாநாட்டின் தொடர்ச்சியாக, றியோ+20 என்ற நிலையான அபிவிருத்திக்கான தற்போதைய மாநாடு நடைபெற்றது.


 
மாநாட்டின் இரு முக்கிய நோக்கங்களில் ஒன்று பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்கி நிலையான வளங்குன்றா வாழ்வாதாரத்தை தந்து மக்களை வறுமையிலிருந்து மீட்பது. மற்றொன்று எவ்வாறு உலக நாடுகளிடையே கட்டமைப்பை ஏற்படுத்தி வளங்குன்றா வளர்ச்சியை நிலைநிறுத்துவது. ஆனால் இது மனிதகுலத்தின் மீதான அக்கறையினால் நடத்தப்பட்ட மாநாடு என்பதை மட்டும் நம்பாதீர்கள். ஆனால் அவ்வாறுதான் நமக்குச் சொல்லப்படுகிறது.
 
புவி வெப்பமடைதல் முதலாக சூழலியற் பிரச்சனைகளை முன்னிறுத்தி 1992-ல் கூடிய றியோ மாநாடு தொடங்கி 2009-ல் நடந்து முடிந்த கோபன்ஹேகன் மாநாடு வரை எடுக்கப்பட்ட முடிவுகளையும், விவாதிக்கப்பட்ட விடயங்களையும் பார்க்கும்போது உலகைப் பேரழிவிலிருந்து காப்பதற்கான உண்மையான செயற்பாட்டுடன் கூடிய ஆக்கபூர்வமான முடிவுகள் உலகத் தலைவர்களால் இதுவரை எடுக்கப்படவில்லை என விளங்கும்.
 
கடந்த 15 வருடங்களாய் உலகத் தலைவர்கள் எடுத்துவந்துள்ள முயற்சிகள் உண்மையிற் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மாறாய்ப் பிரச்சனையின் தீவிரத்தை அதிகரித்தே உள்ளன. காபனீரொக்சைட் வெளியீட்டைக் கட்டுப்படுத்துவதற்கான கியோட்டோ ஒப்பந்தம் அதன் மூல வடிவிற் செயற்படுத்தப்படாமல் நெகிழ்வுத் தொழில்நுட்பங்கள் என்ற பெயரில் கரிம வர்த்தகம் என்ற பெயரில் காற்றை விற்கும் ஒரு வியாபாரமாக மாற்றப்பட்டுள்ளது. தீப்பற்றி எரியும் வீட்டில் கொள்ளி திருடுபவனை போலப், பேரழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கும் உலகின் பிரச்சனைகளை காசாக்குவதும் ஏழை நாடுகளின் வளங்களை கரிம வர்த்தகம், வனங்களை கையகப்படுத்தும் திட்டங்கள் போன்ற புதுப்புது பெயர்களில் சாதாரண மக்களின் வளங்களைப் பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பதும் போன்ற பணிகளிலேயே உலகத் தலைவர்கள் ஈடுபடுகின்றனர். அதற்காகத் தான் இந்த றியோ+20-ம் நடத்தப்பட்டது.
 
இன்று உலக சனத்தொகை 7 பில்லியன். இதில் ஐந்தில் ஒருவர், அதாவது 1.4 பில்லியன் மக்கள், ஒரு நாளைக்கு ஒரு அமெரிக்க டொலருக்கும் குறைவாகவே வருமானமாகப் பெறுகிறார்கள். 1.5 பில்லியன் மக்கள் மின்சார பெற வழியின்றி இருக்கிறார்கள். 2.5 பில்லியன் மக்கள் கழிப்பறை வசதியின்றி வாழ்கிறார்கள். ஏறத்தாழ 1 பில்லியன் மக்கள்  தினமும் பட்டினியாய்ப் படுக்கைக்குச் செல்கிறார்கள். இப் பின்னணியிலே தான், பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்கி நிலையான வளங்குன்றா வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் நடந்து முடிந்த மாநாட்டை நோக்க வேண்டியுள்ளது.
 
சந்தையை மையப்படுத்தி, லாபத்தையே குறிக்கோளாக கொண்டு, பன்னாட்டுக் கம்பெனிகளால் இயக்கப்படும் இன்றைய பொருளாதாரமும் வளர்ச்சி என்ற போதையுமே உலகம் இன்று பேரழிவின் விளிம்பில் இருப்பதற்கு காரணங்களாகும். கொலனி ஆதிக்கக் காலத்திலிருந்து விருத்திபெற்ற மேற்கத்திய முதலாளியப் பாணியிலான உற்பத்தி, இன்று உலகமயமாக்கலினூடு உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது. திறந்த பொருளாதாரம், கட்டற்ற வணிகம் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில், பன்னாட்டுக் கம்பெனிகளின் பிடியில், இலாபத்தையே குறிக்கோளாகக் கொண்டு அறநெறியற்ற முறையில் இன்றைய பொருளாதார போக்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. அதற்காகவே எல்லாமும் செய்யப்படுகின்றன. அதற்காகத்தான் போர்கள் தொடுக்கப்பட்டுத் தொடரப்படுகின்றன. அத்தகையோரா மக்கள் நலன்களை முன்னிறுத்தி சூழலைப் பாதுகாக்கப் போகிறார்கள்?  
 
1992-ல் எந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்று பேசப்பட்டதோ அதே பிரச்சனைகள் இன்று மேலும் பாரியவையாக்கப்பட்டுள்ளன, தீர்வு எதுவுமே எட்டப்படவில்லை. இன்று, உலகில் வரலாறு காணாதளவிற்கு வறுமை, ஏற்றத்தாழ்வு, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரங்களின் சுரண்டல் போன்றவை தொடர்கதையாய் நிகழ்கின்றன.இப் பொருளாதாரப் போக்கினால் உருவான இடப்பெயர்வின் மூலம் புதிதாய் உருவாக்கப்பட்டுள்ள சூழலில் உலகெங்கும் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
 
உலகின் பல்லுயிர்த் தன்மை மேலும் கேள்விக்குள்ளாகி வருகின்றது. இப் பொருளாதாரப் போக்கிற்கெதிரான மக்கள் அமைப்புகளின் குரல்களை ஒடுக்கும் விதமாய், உலகெங்கும் ராணுவமயமாகும் போக்கு வலுப்பட்டு வருகிறது. இதுதான் இன்று நாம் வாழும் உலகம். நமது குழந்தைகட்கும், பேரக் குழந்தைகட்கும் வருங்காலங்களில் அமைதியான வாழ்வைத் தரமுடியாத மேலும் பயங்கரமான ஒரு உலகை நாம் அவர்களுக்கு விட்டுச்செல்லப் போகிறோம்.
 
உலகப் பருவநிலையின் அரசியல், பொருளாதாரக் காரணிகளின் மீது கட்டமைக்கப்படுவது. அது இலாபத்தை மையப்படுத்தியே தன் எல்லாச் செயற்பாடுகளையும் தீர்மானிக்கும். அதிகளவில் காபனீரொக்சைட் வெளிப்படுத்திப் பெருமளவில் சூழலியல் மாசை உருவாக்குகின்ற பல்தேசிய கம்பனிகளே இம் மாநாட்டுக்கு அனுசரணை வழங்கியதில் முரண்நகை எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

- July 20, 2012