Language Selection

இலக்கியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விடுதலை புலிகளின் மகளிரணி தலைவியாய் இருந்த தமிழினிக்கு புனர்வாழ்வு அளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இச் செய்தியை வைத்து, நமது நீதித்துறை முன்னேறிவிட்டதென்று நாம் நினைத்தால் அது மிகப்பெரிய தவறாகும். ஏனெனில் நமது நீதித்துறை பல ஆண்டுகளுக்கு முன்னரே அதன் சுயாதீனத்தை இழந்துவிட்டதொடு, தமிழர்கள் சார்ந்த அல்லது தேசிய இனப்பிரச்சனை சார்ந்த விடயங்களில் அரசின் கருத்தையே நீதிமன்றங்கள் பிரதிபலித்து வந்துள்ளன என்பது வரலாறு.

தமிழினியின் விடயத்திலும் அரசின் தீர்மானத்தையே நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது என்றால் அதுமிகயில்லை. அப்படியாயின்  ஆட்சியாளர்கள் திருந்தி விட்டார்கள் என்று அர்த்தப்படுகின்றது. நாம் அப்படியும் அதிர்ச்சியடைய வேண்டியதில்லை. இந்த அரசு, அணுங்கு சருகினுள் தன் தலையை புதைத்துக் கொண்டு, உலகம் இருண்டு விட்டதாகக் கருதுவது போல், தாங்கள் செய்வதெல்லாம் ராஜதந்திரம் என கருதிக்கொண்டு, புலிகளின் பிரபல்லியமான முன்னணித் தலைவர்களில் ஒருவரான தமிழினிக்கு புனர்வாழ்வளித்து சர்வதேச சமூகத்துக்கு காதில் பூசுற்ற முனைகின்றது. அது தவிர வேறெதுவும் இவ்விடையத்தில் இல்லை. ஏனெனில் இந்த அரசு மாத்திரமல்ல, கடந்த கால எல்லா அரசுகளுமே இனவாதத்தின் மீதே கட்டி எளுப்பப்பட்டதாகவே வரலாறு நமக்கு தகவு தருகின்றது. அதில் ஒவ்வொரு அரசும், இனவாதத்தின் அளவுகளில்  மாறுபடுகின்றதே தவிர, பேரினவாதத்தில் மாற்றமில்லை. குறிப்பாக இன்றைய அரசு அதன் அடி தொடக்கம், நுனிவரை பவுத்த சிங்கள பேரினவாதம் என்ற கலவையால் மாத்திரமே சேர்க்கப்பட்டுள்ளது. இனவாதத்தை அகற்றினால் இந்த அரசு சரிந்துவிடும் என்பது அரசுக்கே தெரிந்தவிடையம்.

சர்வதேச சமூகத்தின் முன், முள்ளிவாய்க்கால் தொடக்கம், காணி பறிப்புவரை புழுத்து நாறும் இந்த ஆட்சியின் பெயரை சரிசெய்ய, அனைத்து அரசியல்  கைதிகளையும் விடுதலை செய்து, அல்லது புனர்வாழ்வளிக்க கிடைத்துள்ள ஒரு சந்தர்ப்பத்தைக்கூட பயன்படுத்தாது, இனவாதப்பேச்சுக்களையே பேசிவரும் இவர்களது கபட நாடகத்தை சர்வதேசம் சரியாகவே புரிந்து வைத்துள்ளது. எதிர் வரும் வாரங்களில் தமிளினியிடமிருந்தே, ராணுவத்தைக்கொண்டு அரசு பற்றி ஒரு நற்சான்றிதழ் வாங்கி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைக்கு கொடுக்கும் மிக இலகுவான ஒரு ராஜதந்திரத்தை கடைப்பிடித்தாலும் நாம் ஆச்ச்சரியப்படுவதட்கில்லை. அல்லது நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வரும்போது, அவருக்கு அரச விருந்து அளிக்கும்போது, தமிழினியையும் துப்பாக்கிமுனையில் கூட்டி வந்து நவநீதம்பிள்ளைக்கு அருகாமையில் அமர்த்தி, நீங்களே தமிழில் கேட்டுப்பாருங்கள் முள்ளி வாய்க்காலில் ஒரு காக்காய், குருவி கூட சாகவில்லை என்பதை இந்தப்புலிப் பெண்ணே, உங்களிடம் சொல்வாள் என்ற உயர்ந்த ராஜ தந்திரத்தை பயன்படுத்தினாலும் நமக்கு ஆச்சரியமில்லை.

சிலமாதங்களுக்கு முன் நடந்த சரத்பொன்சேகாவின் வழக்கொன்றில், மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு என நினைக்கிறேன் அதில் இரண்டு நீதிபதிகள் சரத் தேசத்துரோகம் செய்தார் என்றும், ஒரு நீதிபதி அதற்கு ஆதாரம் இல்லை எனவும் தீர்ப்பளித்தனர். ஆதாரம் இல்லை என தீர்ப்பளித்த நீதிபதி வீடுபோய் சேருமுன்னரே, கோத்தபாய அவரை தொலைபேசியில் அழைத்து very good judgement thank you very much என கூறி தொலை பேசியை துண்டித்ததாக ஊடகங்களில் வந்த செய்தியை அநேகம் பேர் மறந்திருக்க வாய்ப்பில்லை.

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது சமூகவியல் ரீதியாக எழுந்த பிரச்னைக்கு அரசியல் அடிப்படையில் ஏற்பட்ட தீர்வு என்றே சொல்ல வேண்டும். அது பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தோடு செயட்படுத்தப்பட்டது. JVPயால் பிரிப்பதற்காக  தொடுக்கப்பட்ட வழக்கை நீதிமன்றம் நிராகரித்திருக்க வேண்டும். ஏனெனில் தேசிய இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட முடிவில், சட்டப்புத்தகத்தின் ஊடாக நீதிமன்றம் குறுக்கிடுவது, சட்டத்தை இயற்றும் பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளை குழப்புவதாகும். நீதிமன்றம் பாராளுமன்றத்தை கேள்வி கேட்க முடியுமேதவிர, அரசியல் தீர்வுகளையோ, பாராளுமன்ற முடிவுகளையோ மாற்றுவது மரபல்ல. ஆனால் இந்த விடையத்தில் பேரினவாதிகள் சந்தோசப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள் விருப்பமும் அதுவே.

ஜனநாயக மரபு ஒன்று மீறப்பட்டதைப் பற்றி எந்த ஒரு சிங்கள அரசியல்வாதியும் கவலைப்படவில்லை. பேரினவாதத்தின் கட்டுப்பாட்டில் இந்த நாட்டின் அரசியல் இருக்கின்றது என்பதற்கு இதுவே மிகப்பெரிய உதாரணமாகும். பின்னாளில் எரிபொருளின் விலையை குறைக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டதை அரசு காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. ஏனெனில் வரவு செலவை திட்டமிடுவது நீதிமன்றத்தின் வேலையல்ல என்பது அரசுக்குத் தெரியும். இப்படி நீதித்துறையும், பாராளுமன்றமும், சிங்கள ஊடகத்துறையும், நிர்வாகத்துறையும் தமிழர்களை பாரபட்சமாகவே கையாண்டு வந்துள்ளது.

ரோகன விஜெயா வீராவை கொன்றவர்கள், அவரது மனைவியையும், குழந்தைகளையும் காப்பாற்றினார்கள். பிரபாகரனை கொன்றவர்கள் அவரது மனைவியையும், குழந்தைகளையும் கூட விட்டு வைக்கவில்லை. அரசியல் கைதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்து 15 பாதுகாப்பு படையினரையும் அவரது பாதுகாப்புக்கு வழங்கியுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித விசாரணையும் இன்றி அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகின்றனர். இன்று சர்வதேசத்தை ஏமாற்ற தமிழினிக்கு புனர்வாழ்வு அளிக்கின்றனர். இப்படி எத்தனை காலம் இவர்களால் ஏமாற்ற முடியும்? இவ்வளவு ஏமாற்று வேலை செய்யும் இவ்வரசு தமிழினியை சுதந்திரமாக பேட்டியளிக்கவோ, வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்திக்க அனுமதியளிப்பார்களா????