Language Selection

இலக்கியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அங் சங் சூசி இன்று ஒரு பிரபல்யமான பெயராகி விட்டது. 1990 இல் இவர் பர்மாவின் ராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டவுடனேயே, இவரது பெயர் உலகம் முழுவதும் அடிபடத்துவங்கி விட்டது எனலாம். 1990 இல் இவரது கட்சியாகிய "தேசிய ஜனநாயக முன்னணி" பாராளுமன்ற தேர்தலில் பங்குபற்றி 59% வாக்குகளைப் பெற்று 80% ஆசனங்களை கைப்பற்றி ஆட்சியமைக்க முயலும் போதே, தான்சாவ் என்னும் ராணுவ தளபதியால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இவரது கட்சி ஆட்சியமைப்பதையும் நிராகரித்து தொடர்ந்து ராணுவம் தளபதி தான் சாவ் தலைமையில் ஆட்சியை இன்னும் தொடர்கின்றது.

அங் சங் சூசி நிறைய கற்றறிந்தவர். இவர் ஆரம்பக்கல்வியை பர்மாவில் பயின்றாலும் பட்டப்படிப்புக்களை வெளிநாடுகளிலேயே பயின்றுள்ளார். இவர் இந்தியாவுக்கும், நேபாளத்துக்குமான தூதுவராக பதவி வகித்தபோது, சிறீராம் கொலேஜில் அரசியல்துறை பயின்று பட்டம் பெற்றார். பின்னர் philosophy,politics and economics, oxford பல்கலைகழகத்திலும் phd university of london இலும் பெற்றவர்.

மற்றும் இவரது கணவர் ஒரு ஆங்கிலேயர் என்பது குறிப்பிடத்தக்கது. அங் சங் சூசி நாட்டை ராணுவ சர்வாதிகாரத்தில் இருந்து மீட்டு, முதலாளித்துவ ஜனநாயகத்தை மீட்டெடுக்க அரும் பாடுபட்டது மாத்திரமல்லாமல் 22 வருடங்கள் வீட்டுக்காவலிலும் இருந்துள்ளார் என்பது ஒரு மிகப்பெரிய தியாகமாகவே நாம் கருதவேண்டும். அதேவேளை ஜனநாயகத்தை மீட்கும் இவரது அனைத்து போராட்டங்களும், அன்று தொடக்கம் இன்று வரை ஏகாதிபத்தியங்களின் அனுசரணையோடு அல்லது தூண்டுதலில் தான் நடைபெற்றுவந்ததையும், நடைபெறுவதையும் அரசியல் தெரிந்தோர் புரிந்து கொள்வர்.

 

தற்போது அங் சங் சூசி மேற்கத்தைய நாடுகளுக்கான விருந்தாளியாக பிரயாணங்களில் இருக்கின்றார். பிருத்தானியாவின் அரசியல் தலைவர்கள் உட்பட அரச குடும்பமும் அவரை சந்திக்கின்றது. பர்மாவின் மூலவளங்களை ராணுவ ஆட்சியாளர்கள் சீன, ரஷ்ய அதிகார வர்க்கத்தோடினைந்து கொள்ளையடிக்கின்றனர். அத்தோடு மக்களை ராணுவ சர்வாதிகாரத்தினூடாக ஒடுக்குகின்றனர். இதிலிருந்து மீள அங் சங் சூசியின், ஜனநாயகத்துக்கான போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு கிடைப்பதும், ராணுவத்தை ஆட்சியிலிருந்து அகற்றத்துடிப்பதும் இயல்பான விடையம் தான்.

அதேவேளை அங் சங் சூசியால், மேற்கத்தைய நாடுகளின் உதவியோடும், பொருளாதாரத்தடை என்னும் ஏகாதிபத்தியக்கெடுபிடிகளாலும், ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டாலும் கூட அது ஒருபோதும் பர்மிய நாட்டு மக்களுக்கான ஆட்சியாக அமையப்போவதில்லை. ஏனெனில் அங் சங் சூசியால் ஏகாதிபத்திய நலன் தவிர்ந்த பர்மிய தேசிய பொருளாதாரத்தை முதன்மைப்படுத்திய ஒரு ஆட்சியை ஏற்படுத்த ஒருபோதும் முடியாது.

ராணுவ ஆட்சியாளர்கள் எப்படியோ அதிலிருந்து மாறுபட்டு முதலாளித்துவ ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும். ஆனால் பர்மிய மக்களுக்கான ஆட்சியை ஒருபோதும் இவரால் ஏற்படுத்த முடியாது. பர்மிய மூலவளங்களை ஏகாதிபத்தியங்களுக்காக கூறு போடமுடியுமே தவிர வேறெதுவும் இவரால் முடியாது என்பது திண்ணம். அதே வேலை மிகுந்த ஆத்மபலமும், உறுதியான மனோ வலிமையையும் கொண்ட பெண்மணி அங் சங் சூசி என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

--இலக்கியா. 21/06/12