Language Selection

இலக்கியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கிரீஸ் நாட்டுத் தேர்தல் முடிவுகள்,யாருக்கும் தனிப்பெரும்பாண்மை கிடைக்கவில்லை. தீவிர வலதுசாரிக் கட்சியின் தலைமையில் கூட்டாட்சிக்கான உடன்பாட்டிற்கு வந்துள்ளனர். அடுத்ததாக எகிப்தில் muslim brother hood என்னும் இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார்.

இங்கே உலகம் முழுக்க பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தாலும்,எகிப்து பற்றிய இன்றைய எதிர்பார்ப்பு, புதிய ஜனாதிபதி எத்திசையை நோக்கி நாட்டை வழிநடத்தவுள்ளார் என்பதே?. அங்கே சிவில் நிர்வாகத்தில் ராணுவம் பங்கு வகிப்பது ஜனநாயகத்துக்கு பெரிய இடைஞ்சலாகவே இருந்து வருகின்றது. நிர்வாகக்கட்டமைப்பில் கீழிருந்து மேல்வரைக்கும் ஊழல் நிறைந்த அமைப்பாகவே பன்னெடும் காலமாக ஊறிப்போயுள்ளது.வன்முறை மயப்படுத்தப்பட்ட காவல்த்துறை. இவை அனைத்தையும் ஒருங்கே வைத்துக்கொண்டு, அங்கே எந்த ஒரு மாற்று ஆட்சி முறையையும் ஏற்படுத்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்தவைதான்.

ஏனைய நாடுகளைப் போல் அங்கேயும் பொருளாதார நெருக்கடியும், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்த வண்ணமுள்ளது. 82 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் வேலையற்றோர் தொகை 12.4% ஒட்டுமொத்த சனத்தொகையில் 94% முஸ்லிம்களும் 6% கிறிஸ்த்தவர்களும் (5 மில்லியன் கிறிஸ்த்தவர்கள்) வாழ்கின்றனர். பொருளாதார வளர்ச்சி சராசரி 4.6% மாத்திரமேயாகும்.நாட்டிலுள்ள இஸ்லாமிய மத அடிப்படை வாதிகள், சனத்தொகையில் 37% என புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.இங்கே சிறுபான்மை இனமான கிறிஸ்த்தவர்களுக்கு எதிரான பல்வேறு பட்ட தாக்குதல்கள்,கடந்த காலங்களில் நடந்த வரலாறுண்டு.இங்கே நாம் முதன்மையாக கவனிக்க வேண்டியது யாதெனில், ஹோஸ்னி முபாரக்கின் நீண்டகால ராணுவ சர்வாதிகார ஆட்சியின் கொடுமையில் இருந்து,தன்னார்வத்தோடு கிளர்ந்தெழுந்து வீதிக்கு வந்து சாதித்த மக்களையும், சமூக முரண்பாட்டுச் சூழலையும், புரட்சி கரமாக எடுத்தாளக் கூடிய கட்சியொன்று தயார் நிலையில் இல்லாமல் இருந்தது ஒரு சமூகவியல் கேள்வியாகவே இன்றும் நம் முன் உள்ளது.

எகிப்தியப் புரட்சி தொடக்கம் நடந்து முடிந்த தேர்தல் வரை உற்று நோக்கினால்,கொடுத்த உயிர்ப்பலிகட்கு ஈடாக எவ்வித மாற்றங்களையும்,ஏற்படுத்த முடியாத,திட்டமிட்ட மேற்கத்தைய ஏகாதிபத்தியங்களின் மேற்பார்வையிலே, இந்த மாற்றம் அரங்கேறியுள்ளது என்றே கூறவேண்டும். சிரியாவில் யுத்தம் நடக்கும் இவ்வேளையில், சுயஸ் கால்வாயின் ஒருபகுதியை கட்டுப்படுத்தும் எகிப்தில்,ஆட்சி மாற்றத்தை மிக நிதானமாகவே அமெரிக்கா செய்து முடித்துள்ளது என்றால் அது மிகையாகாது.இங்கே இஸ்ரேலுக்கு எதிரான எந்தக்குரலும் எழாமலும்,அமெரிக்க,மேற்கத்தைய எதிர்ப்புக்கள் எதுவும், எழாமலும் muslim brotherhood கட்சியை கையாண்டு ,தனது சாதக நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

இவைகள் யாவற்றையும் உள்ளுனர்ந்தவராகவே புதிய ஜனாதிபதியின் பேச்சு அமைந்திருந்தது. இவர் அமெரிக்க,மேற்கத்தைய, நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே செயல்ப்படுவார் என்பது திண்ணம். அத்தோடு இஸ்லாமிய மத அடிப்படைவாத சட்டங்களை,தீவிரமாக அமுல்படுத்தக்கூடும். அமெரிக்க,மேற்கத்தைய,நலனை அது பாதிக்காதவரை அமெரிக்கா இவைகளைக் கண்டுகொள்ளப்போவதில்லை.தரகு முதலாளித்துவ சக்திகளும்,பன்னாட்டு முதலாளிகளாக வரத்துடிக்கும் தரகுகளும்,ஏனைய பிற்போக்கு சக்திகளும், புரட்சியின் தீர்மானகரமான சக்திகளாக செயட்படும்போது, இதுபோன்ற தோல்விகள் தவிர்க்க முடியாதவையே.மக்களுக்கான படையை அமைக்கவும்,மக்களுக்கான நிர்வாகக்க்கட்டமைப்பை உருவாக்கவும்,வர்க்க போராட்டத்தை முன்னெடுத்து, அனைத்து முரண்பாடுகளையும் வர்க்க அரசியலாக மாற்றி, ஒரு உயர்ந்த ஜனநாயகப் பண்புகளைக் கொண்ட, பாட்டாளி வர்க்க அரசை நிறுவவும், வர்க்க நலன் சார்ந்த கட்சி என்னும் நிறுவனம் மிக அவசியம் என்பதை எகிப்தியப்புரட்சி நமக்கு இன்னுமோர் தடவை நிருபித்துள்ளது.

-18/06/2012