Language Selection

விருந்தினர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மார்ச் 8ஆம் தேதியை உலக மகளிர் தினமாக கொண்டாடி வருகிறோம். வீட்டிற்குள்ளே இருந்த பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே இந்த மகளிர் தினமாகும்.

முதலில் அனைத்து மகளிருக்கும் எமது "லங்கா விவ்ஸ்" இணையம் சார்பில் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

உலக மகளிர் தினத்தை வேண்டுமானால் நாம் எளிமையாகக் கொண்டாடலாம். ஆனால் இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டமும் அதன் வெற்றிகளும் அவ்வளவு எளிதாகக் கிட்டியதல்ல. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது.

 

18ஆம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர்.

பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூட மறுக்கப்பட்டது. மருத்துவமும் சுதந்திரமும் என்னவென்று கண்ணில் காட்டப்படாமல் இருந்த காலம் அது.

இந்த நிலையில்தான் 1857ஆம் ஆண்டின் நடந்த போரினால் ஏராளமான ஆண்கள் கொல்லப்பட்டதும் படுகாயமடைந்து நடக்க முடியாத நிலைக்கு உள்ளானதும் நிகழ்ந்தது.

இதனால் உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைத் தவிர்க்க நிலக்கரிச்சுரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் நிறுவனங்களில் மகளிருக்கு பணி வாய்ப்பு ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பம்தான் அடுப்பூதும் பெண்களால் தொழிற்சாலைகளிலும் திறமையாக பணியாற்ற முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தது. ஆண்களுக்கு நிகராக பெண்களாலும் வேலை செய்ய முடியும் என்று பெண் சமுதாயமே அப்போதுதான் புரிந்து கொண்டது.

எது எப்படி இருந்தாலும் வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. (அது இன்று வரை பல இடங்களில் தொடருவது மற்றொரு பிரச்சினை). இதனால் பெண்கள் மனம் குமுறினர்.

ஆண்களுக்கு இணையான ஊதியம் உரிமைகள் கோரி பெண்கள் எழுப்பிய குரலுக்கு அப்போதைய அமெரிக்க அரசு செவி சாய்க்கவில்லை.

இதனால் அமெரிக்கா முழுவதும் கிளர்ந்தெழுந்த பெண் தொழிலாளர்கள் 1857ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர்.

துணிகளை உற்பத்தி செய்யும் மில்களில் பணியாற்றிய பெண்கள் தான் இப்போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மில் உரிமையாளர்கள் இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் அடக்கினர். வெற்றி பெற்றதாக பகல் கனவும் கண்டனர். ஆனால் அந்த பகல் கனவு நீண்ட நாட்களுக்கு பலிக்கவில்லை.

அடக்கி வைத்தால் அடங்கிப் போவது அடிமைத் தனம் என்று பெண் தொழிலாளர்கள் 1907ஆம் ஆண்டில் மீண்டும் போராட்ட களத்தில் குதித்து சம உரிமை சம ஊதியம் கோரினர்.

இதைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910ஆம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டின.

இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரே செர்கினே ஒரு கோரிக்கை தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர். அந்த தீர்மானத்தின் முக்கிய சாராம்சமாக மார்ச் மாதம் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

பெண்களை அடக்கி ஆள நினைத்த ஆண் சமுதாயம் இதற்கு ஒப்புக் கொள்ளுமா? அல்லது இந்த தீர்மானம் நிறைவேற வழி ஏற்படுத்துமா...? பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேற முடியாமல் போனது.

இதற்கிடையே பெண் தொழிலாளர்கள் அமைப்பினர் ஆங்காங்கே உரிமைக் குரல் எழுப்பத் தொடங்கியிருந்தனர். 1920ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்ட்ரா கெலன்ரா கலந்து கொண்டார்.

அவர் தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 88 ஆண்டுகளுக்கு முன்பு 1921ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடத் தொடங்கினர்.

அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதியை நாம் மகளிர் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.

http://www.lankaviews.com/ta/index.php?option=com_content&view=article&id=10651:-8-&catid=150:lead-news&Itemid=113