Language Selection

விருந்தினர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

என்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப் பதிவையிடுகிறேன் .

எனக்கு உடுப்பு கழுவி தந்து என்னைக் குளிக்கவைத்து எனது கால் கைகளைத் தடவிப்பிடித்து விட்டு 70வயதிலும் என்னைப் பார்த்துக்கொள்ளுமளவுக்கு ஆரோக்கியமாக இன்னும் எந்தவித நோயுமில்லாமல் உடல் பலத்துடன் இருக்கும் எனது தாய்...

ஆரோக்கியமான ஒரு தாய்க்குப் பிறந்த மகள் நான்.. எனது சகோதரர்கள் அனைவரும் இன்னும் ஆரோக்கியமாகவே உள்ளனர்... வீட்டில் கடைசிப்பெண்... பிள்ளை பெற்ற அந்நாளே எழுந்து வீட்டு வேலைகளை களைப்பின்றி செய்யுமளவுக்கு தேகாரோக்கியத்துடன் இருந்த நான்தான் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்றால்.. அதற்கான பரம்பரைக்காரணம் எதுவுமில்லை!

மனம் திறந்து பேசுகிறேன்....

எனது இந்த நோயின் அறிகுறிகள் பற்றியும் அது எவ்வாறு வெளிப்பட்டது என்பது பற்றியும் தெரிந்து கொண்ட வைத்தியர்களும் தாதிமாரும் என்னிடம் கேட்ட கேள்வி "எப்பசரி உங்களுக்கு அடிபட்டதா? உங்கள் தம்பத்ய வாழ்க்கை எப்படி? உங்கள் கணவர் உங்களை அடித்து காயப்படுத்தியதுண்டா? அல்லது வேறு ஏதாவது வகையில் அடிகாயங்கள் பட வாய்ப்பிருந்ததா?" என்பதுதான்.

இது பல வருடங்களாக உள்ளிருந்த கண்டல்காயம். அது கட்டி என்பதை வெளிக்காட்டாமலேயே உள்ளிருந்து பழுத்து சிதல் கட்டி மார்பகம் வீங்கி வலி ஏற்பட்டு தாங்க முடியாமல் நான் துடித்து கடைசியில் இருமுறை சேஜரி மூலம் எடுக்கப்பட்ட கழிவுகள் புற்றுநோயாக்கப்பட்ட கழிவுரத்தக்கட்டிகளும் சிதலும்தான் என்பதை தெரிந்த பின்னும்... பேசாமல் இருக்க முடியவில்லை என்னால்!

தொட்டதுக்கெல்லாம் கையையும் காலையும் நீட்டும் ஆணுக்கு வாழ்க்கைப்பட்டு இன்னும் மௌனமாக இருக்கும் பெண்களே, நீங்கள் கடைசியில் என்னைப்போல் நோயாளியாகவேதான் ஆகுவீர்கள் என்பதை மறக்கவேண்டாம். டொக்டர் என்னிடம் கேட்ட அந்தக் கேள்விக்கு, உதைத்துவிட்டால் கீழே விழும் என்னை எழுந்திருக்க முடியாமல் நெஞ்சில் காலை வைத்து அழுத்தி மிதிக்கும் அவனின் கால்களும் முகமும் மனக்கண்ணில் தோன்றிய போது மௌனமாக அழுது முடித்தேன்.

நான்கு பிள்ளைகளையும் பெற்று அல்லாஹ்வின் கட்டளைப்படி இவ்விரண்டு வருடங்கள் தாய்ப்பால் ஊட்டி வளர்த்தேன் எனது பிள்ளைகள் பால்மா குடிக்கத்தொடங்கியது தாய்ப்பால் மறப்பித்த பின்னர்தான்.

குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்காக படைக்கப்பட்ட பால்மடிதான் அதற்குரிய கடமையையும் தவறாமல் நான் செய்து முடித்தபின் காயமும் வலியும் நிறைந்த உறுப்பாக மாறியிருக்கிறது என்றால்...

மார்பகத்தை அகற்ற வேண்டியதில்லை என கேன்சர் கௌன்சலஜி சசிகலா மேடம் முடிவெடுத்த பின்னும்.. நானே எனது இந்த மார்பகத்தை அகற்றிவிடுங்கள் டொக்டர் இது எனக்கு தேவையில்லை என கதறும் அளவுக்கு வந்திருக்கிறது என்றால்...

பல வருடங்களின் பின்னர் உள்ளிருந்து தாக்கிய இந்நோய்க்கான காரணம் நான் வாழ்க்கைப்பட்டவன் என்னை வதைத்த விதம் என்பதை சொல்லாமல் மறைக்க முடியவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அவனின் வதைகளின் போது எலும்புகள் உடைந்து முடமாகிக்கூட இருந்திருப்பேன் எனது தாய் ஊட்டிய வீரியமிக்க தாய்ப்பாலும் தந்தை ஊட்டிய ஹலாலான உணவும் என்னைப் பாதுகாக்காது விட்டிருந்தால்.

சின்னச்சின்ன வாக்குவாதங்களும் முரண்பாடுகளும் ஏற்படும் தருணங்களிலும் பிள்ளைகளின் பிரச்சினைகளின் போதும் வாயால் பேசி தீர்க்கத் தெரியாமல் மனைவி என்பவள் எனது அடிமை எப்படி அடித்து உதைத்தாலும் யாரும் கேட்க முடியாது என்ற எண்ணத்துடன் வாழ்ந்து அவளை நோயாளியாக்கும் கணவன்மார்களே உங்களுக்கு மறுமையில் அதற்கான தண்டனை கிடைத்தே ஆகும் என்பதை மறவாதீர்கள்.

கணவன்தானே... கைநீட்டுவதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது, அடிக்கிற கைதான் அணைக்கும் என்றெல்லாம் கணவனை மெச்சிக்கொண்டு போலி கௌரவத்துக்காக வாய்மூடி மௌனித்து குசினிக்குள் அடங்கிங்கொள்ளும் மனைவிமார்களே.. நீங்கள் இப்படியே இருந்தால் என்னைப்போல் நோயாளியாகவே ஆகுவீர்கள் கவனம்.

உங்களை துன்புறுத்த நீளும் கையை ஆரம்பத்திலேயே மடக்கி விடுங்கள். உங்கள் சகோதரர்களிடம் சொல்லி அதைத்தடுத்துவிடுங்கள். கணவனைப்பற்றி கணவன் தரும் துன்புறுத்தல்கள் பற்றி வெளியில் சொன்னால் குடும்ப மானம் போய்விடும் என நினைத்தீர்களானால் என்னைப்போல் வயதான தாயைப்பார்க்க வேண்டிய வயதில் அந்தத்தாய் நம்மைப்பார்த்துக்கொள்ளும் நிலைதான் ஏற்படும் மறவாதீர்கள்.

எனது கட்டிலுக்கு பக்கத்துக் கட்டிலில் இருந்த 65 வயதான தாய் ஒருவர் நோயால் அவதிப்பட்ட துயரம் பார்த்திருந்தேன். 65 வயதானாலும் 80 வயதின் மூப்புக்கு தளர்ந்திருந்தார் அவர். யாருடனும் பேசாமல் மௌனமாகவே இருந்தார். பல நாள் மருந்துவமனையில் இருந்த அவரை இரு தடவையே பார்க்க வந்து போனார் ஒரு ஆஜானுபாகுவான 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர்.

இரண்டு தடவையும் அவர் வந்து சென்ற பின் அந்தத் தாயின் கண்கள் கண்ணீர் வடித்ததை நான் கண்டேன்.. ”ஏம்மா அழுறீங்க மகளாக நினைத்து என்னிடம் சொல்லுங்களேன்” என அவர் கையைப் பிடித்தவாறு கேட்டேன்.

”...இந்தா வந்து போறானே என்ட புருஷன்.. வெறுங்கையோடயே வந்து போறான் பார்த்தியாமா..” என்று அவர் சொன்ன போது விம்மல் வெளியாகியது. அன்புக்காக ஏங்கும் அந்தத்தாய் கடைசியாக என்னிடம் சொன்ன வேதனை நிறைந்த வரிகள் இதுதான்.. "என்னைக்கடைந்து கஞ்சிகாய்ச்சி படுக்கையிலே போட்டுட்டான் பாவி” எதிர்க்கத் துணிவில்லாத ஆதரவும் இல்லாமல் முடங்கிக் கிடந்தேன்" என்றழுதார்.

மறுநாள் அந்தத்தாய் இறந்து போனது என் நெஞ்சை அழுத்தி அழச்செய்தது சொல்ல முடியாத வேதனை. இரக்கமற்ற ஆணுக்கு வாழ்க்கைப்பட்ட துணிவிழந்த குடும்பத்தினர் உதவிகளற்ற பல பெண்கள் பாவப்பட்டவர்களா சபிக்கப்பட்டவர்களா?