Language Selection

விருந்தினர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. அன்று மஹிந்தவின் ஆட்சி சிறுபான்மை மக்களால் தூக்கி எறியப்படுவதற்கு காரணமாக எந்த இனவாத சக்திகள் இருந்தனவோ, இன்று அதே சக்திகளை நல்லாட்சியின் அங்கமான ஐ.தே.க கையிலெடுத்திருக்கிறது.

ஜனாதிபதியும், பிரதமரும் தத்தமது பலத்தினை நிரூபித்துக்காட்ட வேண்டிய தேவையை விரைவில் நடைபெறுவதற்கு எதிர்பார்க்கப்படும் தேர்தல் ஒன்று உருவாக்கி இருப்பதால், சிங்கள பெரும்பாண்மை மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கான உபாயமாக ஜனாதிபதி தேசியவாதத்தினை கையிலெடுத்திருக்கும் அதேவேளை பிரதமர் இனவாதத்தினை கையிலெடுத்திருக்கிறார். அதன் வெளிப்பாடே அண்மைக்காலமாக நடந்தேறி வருகிற நீதியமைச்சரும், பொது பலசேனா கும்பலும் சேர்ந்து நடாத்தி வருகின்ற நிகழ்வுகளாகும்.

அண்மையில் நீதியமைச்சரும் புத்தசாசன அமைச்சருமான விஜேதாச ராஜபக்ச; பொது பலசேனாவின் ஞானசார தேரோவுடனும், அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் சிவில் நிருவாகத்தில் குறுக்கீடு செய்து வருகின்ற அம்பேபிட்டிய சுமண தேரோவுடனும் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட மங்கலாராம விகாரையில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டினை நடாத்தி விட்டு தேரர்களுடனும் பொலிஸாருடனும் மட்டக்களப்பு மாவட்ட பதுளை வீதியில் அமைந்துள்ள ஒரு இடத்தினைப் பார்வையிட்டுள்ளார். தற்போது அந்த இடத்தில் ஒரு தற்காலிக பொலிஸ் முகாம் ஒன்று அமைக்கப்பட்டு அந்த இடம் தொல்பொருள் ஆய்வுப் பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் அந்த இடம் ஒரு முஸ்லிம் பள்ளிவாயலுக்கும், தனியார் ஒருவருக்கும் சொந்தமான இடமாகும்.

கொழும்பு சென்ற நீதியமைச்சர் தனது செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்களின் சுருக்கம் பின்வருமாறு அமைகிறது.

“நேற்று நான் மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் பழமை வாய்ந்த ஒரு பௌத்த விகாரையை பார்வையிட்டேன். அதன் காணி உறுதிப் பத்திரம் முஸ்லீம் ஒருவரால் தமிழர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டு பின்னர் அது புல்டோசர் கொண்டு அழிக்கப்பட்டுள்ளது. தற்போது அவ்விடத்தில் பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு அவ்விடம் தொல்பொருள் பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளது.”

இதுவொரு தெட்டத் தெளிவான அத்துமீறலும், ஆக்கிரமிப்பு நடவடிக்கையுமாகும். ஏனெனில் அந்த இடம் பள்ளிவாயலுக்கும், தனியார் ஒருவருக்கும் சொந்தமான நிலம் என்பதற்கான சட்டரீதியான ஆவணங்கள் அனைத்தும் இருக்கின்ற நிலையில் நீதியமைச்சரின் இந்த நடவடிக்கை மிகப்பெரும் அநீதியாகும்.

குறித்த காணியின் தற்போதைய சட்ட ரீதியான வாரிசாக இருக்கும் சேகு இஸ்மாயில் பாத்துமா அல்லது செயிலதும்மா என்பவரிடம் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் குறித்த காணியின் உரிமை தொடர்பான விபரங்கள் பின்வருமாறு அமைகிறது:

இல/893/4 மைல் போஸ்ட், பதுளை வீதி, இலுப்படிச்சேனை, செங்கலடி எனும் விலாசத்தில் அமையப் பெற்றுள்ள இந்தக் காணியில் ஜனாப் காசிம் பாவா சேகு இஸ்மாயில் (தற்போதைய உரிமையாளரின் தந்தை) என்பவர் 1939ம் ஆண்டு தொடக்கம் அரச அனுமதிப் பத்திரத்துடன் வாழ்ந்து வந்திருக்கின்றார். அனுமதிப் பத்திர இலக்கம்:2375, திட்ட இலக்கம் (Pடan No): 1237 ஆகும்.

குறித்த காணியின் ஒரு பகுதியில் ஒரு பள்ளிவாயல் அமைக்கப்பட்டு அதனை உரிமையாளர் கடந்த 06.03.1962 இல் வக்பு சபையிடம் கையளித்துள்ளார். பதிவு இலக்கம்: R /799/BT 74 ஆகும். (ஆவணம் இணைக்கப்பட்டுள்ளது). வக்பு சபை என்பது முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழ் இயங்குகின்ற ஒரு அரச நிறுவனமாகும். அதன் பொறுப்புக்களும் கடமைகளும் இலங்கை வக்பு சட்டத்தினால் வரையறை செய்யப்பட்டுள்ளன. இதன் பொறுப்பின் கீழ் வருகின்ற சொத்துக்கள் பொதுச் சொத்தாகும். இதனை யாரும் உரிமை மாற்றம் செய்யவோ அல்லது முஸ்லிம் சமய விவகாரங்கள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்தவோ முடியாது.

கடந்த 1990 இல் முஸ்லிம்கள் இவ்விடங்களில் இருந்து புலிகளால் விரட்டப்பட்ட நிலையில் குறித்த காணியின் உரிமையாளரும், அவ்விடத்தில் வாழ்ந்து வந்த தற்போதைய உரிமையாளரும் அந்தக் காணியிலிருந்து வெளியேறி ஏறாவூரில் குடியேறினர். கடந்த 2008 இல் குறித்த பிரதேசத்தில் அமைதி நிலை ஏற்பட்டிருந்த நிலையில் காணியின் உரிமையாளர் தனது காணிக்கு திரும்பிய வேளையில் அங்கு பள்ளிவாயலும் தனது உடமைகளும் முற்றாக அழிக்கப்பட்டிருந்த நிலையில் தனது கிணறும், பள்ளி வாயலுக்கு அருகில் இருந்த இரண்டு அடக்கஸ்தலங்கள் மாத்திரமே எஞ்சியிருந்ததை அவதானித்துள்ளனர்.

பின்னைய நாட்களில் தமது காணியை செப்பனிடுவதற்கும், அழிக்கப்பட்டிருந்த பள்ளிவாயலை புனர்நிர்மாணம் செய்வதற்கும் முயற்சிகள் செய்யப்பட்டபோது அரச அதிகாரிகளாலும் தமிழ் அரசியல்வாதிகளாலும் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வந்தன. குறிப்பாக அப்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் அடியாளான தியேட்டர் மோகன் (செல்லம் தியேட்டர் உரிமையாளர்) பல்வேறு அச்சுறுத்தல்களையும் விடுத்து வந்துள்ளதோடு மாத்திரமல்லாது, மேற்படி காணிகளுக்குள் அத்துமீறி நுழைந்து சேதம் விளைவித்ததோடு மாத்திரமல்லாது பொருட்களையும் பலவந்தமாக எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக கரடியனாறு பொலிஸில் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முறைப்பாட்டு இலக்கங்கள் :CIB -I 351/127, CIB -I 101/161. (தொடர்பான ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

சில நாட்களில் பள்ளிவாயல் வளவினுள் அமைந்திருந்த இரண்டு அடக்கஸ்தலங்களும் புல்டோஸர் மூலம் நிர்மூலம் செய்யப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு பல்வேறு முட்டுக் கட்டைகள், அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் பிரயோகிக்கப்பட்டு வந்த நிலையில் அதனை ஒரு பெண்ணாக தன்னந்தனியாக எதிர்கொள்ள முடியாத நிலையில் தனது பெயரில் இருந்த குறித்த காணியின் பகுதியினை தமிழர் ஒருவருக்கு விற்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்.

அந்தக் காணியும், பள்ளிவாயல் அமையப் பெற்றிருந்த காணியுமே இன்று நீதி அமைச்சரினாலும் பொலிஸாரினால் தொல்பொருள் ஆய்வு இடமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. விகாரையின் இடிபாடுகள் என்று நீதியமைச்சர் சொல்வது இடிக்கப்பட்ட அடக்கஸ்தலங்களின் எச்சங்களையாகும்.

அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ மட்டக்களப்புக்கு வருவதற்கு சில தினங்களுக்கு முன்பு இக்காணியின் உரிமையாளரான சேகு இஸ்மாயில் பாத்தும்மா என்பவர் கரடியனாறு பொலிஸாரால் அழைக்க்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருக்கின்றார். பின்னர் மட்டக்களப்பு காட்டுக் கந்தோரில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்திலும் விசாரிக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தப் பகற் கொள்ளையின் மூலம் இலங்கையின் மூன்று இனங்களையும் பிரதி நிதித்துவம் செய்கின்ற மக்கள் பிரதிநிதிகள் தாம் சார்ந்த மக்களையும், நாட்டையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

ஓர் பொறுப்பு வாய்ந்த அமைச்சரான விஜயதாஸ ராஜபக்ஸ அந்த இடத்தில் ஒரு பழமையான விகாரை இருந்தது என்றும், அந்த இடம் முஸ்லீம் ஒருவரால் தமிழர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டு அங்கிருந்த விகாரை அழிக்கப்பட்டுள்ளது என மிக அப்பட்டமான பொய்யைச் சொல்லி நாட்டு மக்களை ஏமாற்றுகின்றார்.

அதேநேரம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரச தலைமைகள் முஸ்லிம்களின் காணி விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்பட்டு தம்மை தமிழ் மக்களின் காவலர்களாக காட்டிக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

முஸ்லீம் அரசியல் தலைமைகள் வழமை போல் தற்போதும் தம் சௌகரியத்துக்கேற்ற கள்ள மௌனம் காப்பதன் மூலம் தொடர்ந்தும் முஸ்லிம் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

-நன்றி அப்துல் வாஜி (இந்த ஆக்கம் அப்துல் வாஜியின் அனுமதியுடன் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது)