Language Selection

பவானி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அமைச்சர் சிதம்பரத்தின் சமீபத்திய மகாராஷ்டிரா மாநிலப் பயணத்திற்குப்பின்  அந்த மாநிலத்தைச் சேர்ந்த தலித் இயக்கச்  செயல்வீரர்களில் முக்கியமானவரான சுதிர் தாவாலே தேசத்துரோகச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த வாரம், மாவோயிஸ்ட் இயக்கம் செல்வாக்குடன் இயங்கி வருவதாகச் சொல்லப்படும் கட்ச்சிரோலி மாவட்டத்திற்கு அமைச்சர் சிதம்பரம் பயணம் செய்து போலீஸ் நடவடிக்கைகளை ஆய்வு செய்துவிட்டு வந்தார். மாவோயிஸ்டுகளையும் அதன் ஆதரவாளர்களையும் ஒடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிரமாகச் செயல் பட்டு எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்று  ‘கேட்டுக் கொண்டிருந்தார்’.

 

இந்த ஆய்வுக்காக, கட்ச்சிரோலி மாவட்டத் தலைநகருக்கு அவரால்  காரில் கூட பயணம் செய்ய முடியவில்லை. மக்களை நேரடியாகக் கண்கொண்டு பார்க்கக்கூடத் துணிவில்லாத கோழையான இந்த அறிவாளி சிதம்பரம் உயிருக்குப் பயந்து ஹெலிகொப்டரில் நேரடியாக  கூட்ட அரங்கிலேயே இறங்கி நாலடி நடந்து கூட்டத்தை நடத்தி தன் வீரத்தையும் அறிவுப் பிரதாபத்தையும் காட்டிவிட்டு  வந்தார். அவர் அங்கே ஆய்வு நடத்திய அதே நேரத்தில், ஒரு மூத்த அதிகாரி சிதம்பரம் போன்ற நபர்களுக்கு இங்கே என்ன பிரச்சனை என்றே தெரியாது என்று பேட்டியளித்தார். சாயம் வெளுத்துக் கோபத்தில் கொதித்த சிதம்பரம் அந்த அதிகாரியை ‘கவனிக்கச் சொல்ல’ அந்த நேர்மையான அதிகாரிக்கும் வந்தது வேட்டு. இது இப்படியிருக்க, ‘தன் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று அறிவித்து டாட்டா, அம்பானி போன்ற ‘தேச பக்த முதலாளிகளுக்குச்’ சேவை செய்துவரும் சிதம்பரம் போன்ற எஜமான்கள் இவ்வளவு சொன்னால் போதாதா? சொல்லிய இரண்டு நாட்களுக்குள் அதே மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தலித் இயக்க ஆர்வலரும் பத்திரிகை ஆசிரியருமான சுதிர் தாவாலே ‘தேசத்துரோகி என்று அறிவிக்கப்பட்டு’ சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பினாயக் சென்னை விடுதலை செய்யக் கோரும் பாதகையினை தாங்கியிருப்பவர் சுதிர் தாவாலே (கண்ணாடியுடன்)

கைது செய்யப்பட்டவர் ஒரு அறிவாளியும், பரிசுகள் பல பெற்றுள்ள பிரபலமான அறியப்பட்ட ஒரு பத்திரிகையாளர். அவர் அண்ணல் அம்பேத்கார் – மகாத்மா பூலே கலை இலக்கிய இயக்கத்தின் ஒரு கூட்டத்தில் பங்கேற்று திரும்பி வரும்போது ரயிலில் கைது செய்யப்பட்டார். போலீசு  சொன்னது என்னவென்றால்: ‘அவர் மாவோயிஸ்ட் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பி வந்தார், அவரை பின் தொடர்ந்து வந்து கைது செய்தோம்’.

சுதீர் ஒன்று பெயர் தெரியாத நபர்  அல்ல. மகாராஷ்ட்டிர மாநிலத்தின் பிரபலமான தலித்இயக்கத் தலைவர். மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்பேத்கார் தொடங்கிய குடியரசுக் கட்சி உட்பட பல தலித் இயக்கங்கள் ஒட்டுக் கட்சிகளாகச் சீரழிந்தபின் தலித் மக்கள் மத்தியில் கலை, பண்பாடு, மறுமலர்ச்சிக்காக சுதிர் தொடங்கிய இளைஞர் இயக்கம் தீவிரமாகச் செயல்பட்டு வந்தது. 2006ம் ஆண்டில், சாதி வெறியர்களால் கைர்லஞ்சி என்ற ஊரில் பழங்குடியினர் பலர் கற்பழித்து படுகொலை செய்யப்பட்டது இந்திய முழுமையும் பதற வைத்த ஒரு கொடும் சம்பவம். இவ்வழக்கை நடத்தவும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும் சுதிர் போராடி வந்தார். இறுதியில் இந்த வழக்கில் சிலர் தண்டனையும் பெற்றனர்.

நமது ஊர்  சண்டியர்களான திருமாவளவன், பூவை மூர்த்தி, ஜான் பாண்டியன் போன்ற பொறுக்கிகளைப் போன்று இல்லாமல் எளிய வாழ்க்கை நடத்தி வருபவர் சுதிர். தலித் அறிவாளியாக தன்னைக் காட்டிக்கொண்டு சிதம்பரம் போன்ற காங்கிரசுக்காரர்களின் கால் நக்கிப் பிழைக்கும் தாமிழ் நாட்டுத் திருடர்களான  திருமாவளவன்,  ரவிக்குமார் போல இல்லாமல் சுதிர் உண்மையிலேயே ஒரு அறிவாளி. மராட்டியத்தில் தலித் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த ‘வித்ரோஹி’ என்ற பத்திரிகையை நடத்தி வருபவர். அவர் மனைவி, ரயில்வே மருத்துவ மனையில் ஆயாவாக பணி செய்து குடும்பத்தையும் அவர் கணவரையும் காப்பற்றி வருபவர். அவருக்கு என்று வீடோ சொத்துக்களோ எதுவும் இல்லை. ரயில்வே மருத்துவமனையில் வேலை செய்யும் ஆயாக்களுக்கு வழங்கப்படும் ஒரு மிகச் சிறிய 450 சதுர அடி பரப்புள்ள ஒரு சிறிய ஒண்டுக்குடித்தனத்தில் தன் வாழ்க்கையை நடத்தி வந்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான சுதிர் மிகச் சிறந்த ஒரு பாடகர், நாடக இயக்குனர், நடிகர், எழுத்தாளர் என்று பல கலை வல்லுநர்.

மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவர் ஒருவர் கொடுத்த தகவல்(!!) அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் அறிவித்து உள்ளது. அவருடைய அலுவலகக் கம்பியுட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் செய்த குற்றத்திற்கு ஆதாரமாக, சுமார் எண்பது புத்தகங்களை போலீஸ் கைப்பற்றி உள்ளதாக அறிவித்து உள்ளனர். இதில் என்ன வேடிக்கை என்றால் புத்தகங்கள் அனைத்தும் எல்லா ஊரிலும் கடையில் விற்கப்படும் மார்க்ஸ், லெனின், அம்பேத்கார் போன்றவர்கள் எழுதிய புத்தகங்கள். ஒன்று கூடத்  தடை செய்யப்பட்ட ஆவணங்கள் இல்லை. பினாயக் சென் வழக்கைப் போல ஒரு சிறந்த நீதிமானைக் கொண்டு புத்தரை போன்ற உண்மையைத் தவிர வேறு எதுவுமே அறியாத போலீஸ்காரர்கள் சாட்சி சொல்ல வருவார்கள் என்று நாம் நம்பலாம்.  சிதம்பரம் தீர்ப்பை எழுதி இமெயிலில் அனுப்பத் தயாராக இருப்பார் என்று நாம் எதிர் பார்க்கலாம்.

இந்திய நீதி இப்போது தலித்துகள் மீது நிறுவப்பட உள்ளது.

தற்செயலாக, பினாயக் சென்னை விடுதலை செய்ய வேண்டிப் போராடுவதற்காக அமைக்கப்பட்ட இயக்கத்திலும் சுதிர் ஆர்வமாகச் செயல் பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிதம்பரம் தமது மராட்டியப் பயணத்தில் அறிவித்தபடி மராட்டியப் போலீஸ் ஆர.எஸ்.எஸ் குண்டர்கள் ஆளும் சத்திஸ்கார் மாநிலத்தைப்போலவே, எல்லாவிதமான அறிவாளிகளையும் தேசத் துரோகிகளாக அறிவித்து சிறையில் அடைத்து வருகிறது. உலக வங்கியின் எடுபிடியான பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தபடி மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரைப் பிரகடனம் செய்துள்ளது. காங்கிரஸ், பி.ஜே.பி, சி.பி.எம் உள்ளிட்ட எல்லா ஒட்டுக் கட்சிகளும் இதில் புனிதக் கூட்டுச் சேர்ந்துள்ளனர்.

அறிவாளிகளாகக் காட்டிக் கொண்டு கால்நக்கிப் பிழைக்கும் ஒட்டுண்ணிகளான திருமா, ரவிக்குமார் போன்றவர்கள் தன் வாழ்நாள் முழுதும் தலித்துகளுக்க்காகவும் பழங்குடியினருக்க்காகவும் பாடுபட்ட பினாயக் சென்னை ஆதரித்து இதுவரை ஒரு சின்ன அறிக்கை கூட விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுதிர் போன்ற உண்மைப் போராளிகளுக்கும் இந்த எடுபிடிகளுக்கும் எவ்வளவு வேறுபாடு பாருங்கள்.

சிதம்பரம் சொன்ன படி இன்றைய தேவை !! அறிவாளிகள் அவர்களுடைய வேலையைத்தான் செய்ய வேண்டும். அதைவிட்டு உரிமைகளைப் பற்றிப் பேசினால் இதுதான் கிடைக்கும்.

இந்திய அரசுக்கு இப்போதைய தேவை அமைதி ! மயான அமைதி !!