Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தி இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும்: அமெரிக்கா தமிழ் மக்களின் பக்கம் நின்று நியாயம் பெற்றுக் கொடுக்கும் என்று இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள பிழைப்புவாத தமிழ்த் தலைமைகள் ஒவ்வொரு வருடமும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை நாடகம் நடக்கும் போது கொஞ்சமும் கூச்சமின்றி பொய் சொல்லுவார்கள். இந்த பொய்யர்களை அம்பலப்படுத்தி எழுதிய கட்டுரையின் மறு பிரசுரம்.

ஈராக் போருக்கு முன்பு அந்த ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காக அமெரிக்க அரசு பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டது. மேற்குநாடுகளின் ஊடகங்களில் அமெரிக்க மந்திரிகள் உலக சமாதானத்திற்கான போர் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று ஊளையிட்டார்கள். பிரித்தானியாவின் தொலைக்காட்சியான சனல் 4இல் அப்போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கொண்டோலீசா ரைஸ் அப்படியான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது யாழ்ப்பாணம் சென்று வந்த ஜோன் சிநோ (John Snow) தான் நிகழ்ச்சியை தொகுத்து நடத்தினார்.

கேள்வி நேரத்தின் போது ஒரு சோமாலியப்பெண் சொன்னார். "நான் பெரிதாகப் படிக்கவில்லை உலகத்து அரசியலும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும் உலகத்தின் முதலாவது பெரிய பயங்கரவாதி அமெரிக்கா தான். நீங்கள் தான் வேறு எந்த நாட்டையும் விட அதிகமாக மற்ற நாடுகளுடன் போர் செய்திருக்கிறீர்கள்.

அதிகமான மக்களை கொன்றிருக்கிறீர்கள். மற்ற எல்லா நாடுகளையும் விட அதிகமான பயங்கரமான ஆயுதங்களை வைத்திருக்கிறீர்கள். ஈராக்கின் எண்ணெயை கொள்ளையடிப்பதற்காக தான் இந்த போர். உங்களது பொய்களை மனச்சாட்சியுள்ள மனிதர்கள் எவரும் நம்பப்போவதில்லை". தொலைக்காட்சி அரங்கத்தில் கைதட்டல் அலை போல எழுந்தது. அரங்கத்தில் இருந்த பெரும்பான்மையான மனிதர்களின் மனச்சாட்சி உள்ள மனிதர்களின் போருக்கு எதிரான வெளிப்பாடு அது.

படிப்பறிவில்லாத உலக அரசியல் தெரியாத பெண் என்று தன்னைச் சொல்லிக் கொண்ட அந்த சோமாலியப் பெண்ணிற்கு தெரிந்தது நமது புலம்பெயர் கைப்பிள்ளைகளான பிழைப்பு வாத தமிழர்கள் அமைப்புகள் நாடு கடந்த தமிழீழம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பவற்றிற்கு தெரியவில்லை. ஏனெனில் அந்தப் பெண்ணிடம் மனச்சாட்சி இருந்தது. நேர்மை இருந்தது.

இவர்களிற்கு மனச்சாட்சி நேர்மை என்று எதுவும் இல்லாததால் அமெரிக்காக்காரன் ஜெனீவாவில் புடுங்குவான் மற்றவர்கள் எவரும் ஆணியே புடுங்கத் தேவையில்லை என்று மக்களை நம்ப சொல்கிறார்கள்.

உக்கிரேனில் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர்களிற்கும் ரஷ்ய ஆதரவாளர்களிற்கும் மோதல் ஏற்பட்டபோது அமெரிக்காவும் மேற்குநாடுகளும் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு காத்திருந்தார்கள். தானியக் களஞ்சியமான உக்கிரேனைக் கொள்ளையடிக்கவும் ரஷ்யாவை பலவீனப்படுத்தவும் சந்தர்ப்பம் வந்ததென சந்தோசப்பட்டு நாட்டாமை வேலை பார்க்க ஓடித்திரிந்தார்கள்.

புலிகளையும் இலங்கை அரசையும் போர்க்குற்றவாளிகள் என்று சமப்படுத்தும் இவர்கள் உக்கிரேனிய போராட்டங்களின் போது முன்னிலை வகித்த நாசிகளைப் பற்றி வாயே திறக்கவில்லை. ரஷ்ய மாபியா விளாடிமிர் புட்டின் “மயிரை விட்டான் சிங்கன்" என்று சண்டித்தனம் செய்த போது ரஷ்ய உக்கிரேனை ஆக்கிரமிப்பு செய்வது உக்கிரேனின் இறையாண்மையை மதியாத செயல் என்று அமெரிக்கா சொன்னதைக் கேட்டு பலருக்கு மாரடைப்பே வந்திருக்கும்.

உக்கிரேனில் நடந்த மோதல்களின் போது மக்கள் இறந்த போது அமெரிக்காவும் மேற்குநாடுகளும் அழுத அழுகை கல்நெஞ்சையும் கரைத்து விடும். இவர்கள் தான் முள்ளிவாய்க்காலில் மக்கள் துடிக்க துடிக்க இறந்த போது இலங்கை அரசிற்கு ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கியவர்கள்.

போர் முடிந்த பிறகும் மக்களை முகாம்களிலும் சிறைகளிலும் அடைத்து வைத்திருக்கும் இலங்கை அரசுடன் வியாபார ஒப்பந்தம் செய்பவர்கள். இவர்கள் தான் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு தவணை முறையில் விசாரணை நடத்தி தண்டனை வாங்கி தருவார்கள் என்று கைப்பிள்ளைகள் கதை விடுகிறார்கள்.

இதே மார்ச் மாதம் பதினாறாம் திகதி அறுபத்தெட்டாம் ஆண்டு வியட்நாமின் மை லாய் என்னும் சின்னஞ்சிறு கிராமத்தில் 347கிராம மக்கள் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார்கள்.

இது அமெரிக்க இராணுவத்தின் கணக்கு. மக்களின் கணக்குப்படி 500பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள். தங்களிற்கு எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத வியட்நாமிலே அமெரிக்கா ஒரு நாளிலே கொன்ற மக்களின் எண்ணிக்கை இது. பற்றி எரிந்து கொண்டிருந்த கிராமத்திலே இருந்து ஆடைகள் எரிந்தபடி தோல் கருகியபடி சின்னஞ்சிறு பெண்குழந்தை ஒன்று கைகளை விரித்தபடி கதறிக் கொண்டு வந்த காட்சி புகைப்படமாக அமெரிக்காவின் கொலைகளின் சாட்சியமாக இன்றும் இருக்கிறது.

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களை இலங்கை அரசுடன் சேர்ந்து கொன்ற இந்திய அரசின் எஜமானியையே சந்தித்து தமிழ்மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டுமென்று கேட்ட அரசியல் விஞ்ஞானிகள் இவர்கள். பாரத மாதா கண்ணீரும் கம்பலையுமாக இலங்கைத் தமிழர்களிற்கு பிரச்சினைகள் இருக்கின்றன. நாங்கள் இலங்கை அரசிடம் தமிழ் மக்களிற்காக பேசுகிறோம் என்றாராம். தமிழ் மக்களைப் பற்றி பேசும் போது சோனியாவின் கண்களில் ஈரம் கசிந்தது என்று கண்டுபிடித்தவர்கள் இவர்கள்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் மக்கள் போராடும் போதே தீர்வு கிடைக்கும். ஏகாதிபத்தியங்கள் மூலம் தீர்வு கிடைக்கும் என்பவர்கள் தங்களின் நலன்களிற்காகவே ஏகாதிபத்தியங்களின் கால்களிலே விழுகிறார்கள். மக்கள் எதிரிகளை இனம் காண்பது போல் எதிரிகளின் ஏஜெண்டுகளையும் இனம் கண்டு கொள்ள வேண்டும்.