Language Selection

விஜயகுமாரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலக நாகரீகங்கள் மனிதன் நன்றாக வாழ்வதற்காகவே நாள் தோறும் மாறி வருகின்றன. வாழ்கையை மேம்படுத்த மனிதர்கள் பலவகையான இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் முகம் கொடுக்கின்றார்கள். சிலர் போராடி வாழ்கிறார்கள். பலரோ சாவை எதிர் கொள்கிறார்கள். மனித குலத்தில் ஒரு சிறு கூட்டமே போராட தயாராக இருக்கின்றது. மனிதர்களுக்கு உதவவும் தயாராக இருக்கின்றது. அவ்வாறு போராடியவர்களே தோழர்கள் லலித்தும் குகனும்.

தோழர்கள் லலித் மற்றும் குகன் காணாமல் போனவர்களை தேடிச் சென்றதற்காய், அரசியற் கைதிகளின் விடுத்ளைகாகப் போராடியதற்காக 09.11.2011 அன்று யாழ்பாணத்தில் கடத்தப்பட்டார்கள்.

லலித் மனிதர்களையும் மனிதத்தையும் காக்க வடபகுதிக்கு புறப்பட்டுச் சென்றது இன்று நாம் பயணிக்கும் ஏ9 பாதையால் அல்ல. கப்பல் மூலமாக லலித் யாழ்ப்பாணத்திற்குச் சென்றார். மனிதர்களை மீட்க கஷ்டப்பட்டவர்களுக்கு உதவிய லலித், கடத்தப்பட்டதாகவும் காணாமல் போனதாகவும் கூறப்பட்ட பலரை கண்டு பிடித்தார். வட பகுதி மக்களின் உண்மை வாழ்வு பற்றி வெளி உலகத்திற்கு வெளிக்காட்ட லலித் தன்னை அர்ப்பணித்தார்.

லலித்தின் பயணங்கள், தேடல்கள் அனைத்தும மனிதம் சார்ந்ததாகவே இருந்தது. லலித் மனிதத்தின் தேவை. 30 வருட கால யுத்ததின் பின் வடபகுதிக்கு பயணித்த லலித் அங்குள்ள மக்களின் உண்மையான தேவை அறிந்து கொண்டார். மனிதர்களை தேடும் பணியில் அவர் இடைவிடாது பாடுபட்டார். இனி வரமாட்டார்கள் என்று நம்பியிருந்த பலரை லலித் தேடி கண்டு பிடித்தார். அரசாங்கம் சொல்வது அனைத்தும் அப்பட்டமான பொய், பெரும் தொகையான மக்கள் இன்னமும் முகாம்களில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு போதிய உணவு இல்லை. வீடு மற்றும் தொழில், பிள்ளைகளின் கல்வி வசதி கூட அங்கு சரியாக இல்லை. இவைகளை லலித் வெளி உலகத்திற்கு எடுத்து வந்தார். இத்தகவல்களை வெளிக்கொணர - கடத்தப்பட்டோரைப் பற்றிய தகவலைத் திரட்ட லலித்துக்கு உறு துணையாக நின்றவரே தோழர். குகன் .

காலங்களுக்குள் புதைந்து லலித்தும் குகனும் காணாமல் போக விரும்பவில்லை. சதா நேரமும் மற்றவர்களின் விடுதலைக்காகவே பாடுபட்டார்கள் அவர்கள். மக்கள் போராட்ட இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராகச் செயற்பட்ட லலித் கண்ட கனவுதான் மனிதர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். காணாமல் போவது கடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதாகும் .

லலித் மற்றும் குகன் வடபகுதியில் காணாமல் போனவர்களின் உறவினர்களை, கொழும்பிற்கு அழைத்து வந்து காணாமல் போனவர்களை விரைவாக தேடும்படி அரசாங்கத்தை வேண்டினார். நீங்கள் சொல்லுவது வேறு, அங்கு நிலைமை வேறு என்பதை லலித் ஊடகங்களுக்கு விளக்கினார்கள். மனிதர்கள் தினம் தினம் யாழ்ப்பாணத்தில் கடத்தப்படுகின்றார்கள். பலரோ என்ன ஆனார்கள் என்று தெரியாது. அரசுக்கு எதிரானவர்கள் கடத்தப்பட்டு வதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகின்றார்கள். புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் பெரும்பான்மையானோர் தமிழர்கள். ஆனால் தமிழர்கள் அனைவருமே புலிகள் அல்ல என்பதை அரசுக்கும் தென்னிலங்கை மக்களுக்கும் லலித் தெளிவாக எடுத்துரைத்தார்.

இவ்வாறாக தோழர்கள் லலித், குகன் மனிதர்களைத் தேடி பயணத்தை மேற்கொண்டிருந்தார்கள். பல இயக்கங்கள் ஆயுதம் வைத்துக் கொண்டு செய்ய முடியாமல் போனதை லலித் தனி மனிதனாக செய்தார்கள். நிறையவே செய்யவும் முனைந்தார்கள். லலித்தும் குகனும் மனிதத்தின் உயிர் நாடிகள்.

சக மனிதர்கள் இன்னொரு மொழியை பேசுகிறார்கள் என்பதனாலேயே அவர்களை கொல்லப்பட வேண்டியவர்கள். அவர்கள் வேறொரு பண்பாட்டை கொண்டிருக்கிறார்கள் என்பதால் கீழ்ப்பட்டவர்கள். பிறிதொரு மதத்தை பின்பற்றுவதால் கேலி செய்யப்பட வேண்டியவர்கள். நாங்கள் கத்தரிக்காயை சாப்பிடுபதால் உயர்ந்தசாதியினர், அவர்கள் கணவாய் உண்பவர்கள் தாழ்ந்த சாதியினர், மூடச்சிங்களவன், பறத்தமிழன், கள்ளத்தோணி இந்தியத்தமிழன், தொப்பிபிரட்டி முஸ்லீம்கள் என்று பட்டங்கள். இப்படியான இனவ்வாதச் சிந்தனைகள் மூலம் மக்களை பிரித்து ஒருத்தரை ஒருவர் வெறுக்கச் செய்து அதன் மூலம் மக்களின் உண்மையான பிரச்சனையான பொருளாதாரப் பிரச்சனைகளிற்கு மற்றவர்கள் தான் காரணம் என்று மனங்களை மதிமயங்க வைத்து இலங்கைத்தீவு எங்கும் இரத்த வெள்ளம் ஓட வைத்தார்கள். இந்த மதி மயக்கத்திலிருந்து மக்களைத் தட்டி எழுப்ப வித்திட்டவர்களே குகனும் லலித்தும்.

அவ் விதைதான் இன்று நீண்ட நெடுங்காலத்திற்கு பிறகு, தெற்கில் இருந்து தமிழ் மக்களின் உரிமைகளிற்கு ஆதரவாக குரல்கள் எழுகின்றன. ஒன்றாய், நூறாய், ஆயிரமாக அவை சேர்ந்து கொள்கின்றன. தமிழனில்லை, சிங்களவனில்லை நாம் மனிதர்கள் என்று அவை மானுடத்தை பாடுகின்றன. வாழ்வின் சுதந்திரத்தை, சமத்துவத்தை அவை ஓங்கிச் சொல்கின்றன.

இலங்கையின் அதிகாரங்களை, பொருளாதாரங்களை அனுபவிக்கும் கூட்டம் இலங்கை மக்கள் ஒன்றுபடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது. எந்த ஒரு முணுமுணுப்பையும் பெரும் கூச்சலிட்டு அது அடக்குகிறது. அதனது காவல்நாய்கள் கண் இமைகள் மூடாமல் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு கடைவாய்பற்களை காட்டி உறுமுகின்றன. ஆனால் எந்தவொரு தாக்கத்திற்கும் அதற்கு எதிரான மறுதாக்கம் இருக்கும் என்பதை அது மறந்து விடுகிறது. கள்ளர் கூட்டம் அதிகாரத்தை சுவைப்பதற்காக ஒன்று சேரமுடியுமாயின் எல்லாவற்றையும் இழந்து வெறுங்கையுடன் களத்தில் நிற்கும் ஒடுக்கப்பட்டவர்கள் ஏன் இணைய மாட்டார்கள்? தோழர்கள் லலித் மற்றும் குகனின் தியாகத்தை முன்னிறுத்தி மிகவிரைவில் அவ்விணைவு முற்று முழுதானதாக, வரலாறின் போக்கை மாற்றும் நிகழ்வாக ஏற்பட்டே தீரும்!

லலித், குகன் என்ற இரு மனிதர்களை, போராளிகளை விடுதலை செய் என்று இன்று எழும் முழக்கங்கள், நாம் மனிதர்கள் என்று அவை மானுடத்தை பாடுகின்றன. வாழ்வின் சுதந்திரத்தை, சமத்துவத்தை அவை ஓங்கிச் சொல்கின்றன.