Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் அனைவரும் ஆதரிப்போம், மண்டேலா தலைமையிலான அமைப்பு ஐ.நா. அங்கத்துவ நாடுகளுக்கு அவசர கடிதம்

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா உட்பட்ட நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்குமாறு மனித உரிமைகள் மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கான உலகப் புகழ்பெற்ற நிறுவனமான த எல்டர்ஸ் (the el-Ders) அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் அங்கத்துவ நாடுகளிடம் அவசர வேண்டுகோளொன்றை விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் நேற்று உதயனுக்குத் தெரிவித்தன.

 

இதற்கமைய மேற்படி அமைப்பு ஜெனிவாக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நாடுகளின் தூதுவர்களுக்கு முக்கிய கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதியும், ஜனநாயக விடுதலைப் போராளியுமான நெல்சன் மண்டேலாவைத் தலைவராகக் கொண்ட இந்த “த எல்டர்ஸ்” அமைப்பில் முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி மார்ட்டி அட்ஸாரி, முன்னாள் ஐ.நா. செயலர் கொபி அனான், பெண்கள் முன்னேற்றத்திற்காக இந்தியாவில் புரட்சி செய்த பெண்மணியான எலா பட், அல்ஜீரியாவின் சுதந்திரப் போராளி எனக் கூறப்படும் லக்தர் ப்ராஹ்மி, நோர்வேயின் முதல் பெண் பிரதமர் க்ரோ ப்ரண்ட்லண்ட், முன்னாள் பிரேஸில் ஜனாதிபதி பெர்னாண்டோ எச்.கார்டாஸோ, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், மொசாம்பிக் சுதந்திரப் போராளியென வர்ணிக்கப்படும் சர்வதேச நீதிபதி திருமதி கிரேஸா மச்சல், அயர்லாந்தின் முதல் பெண் ஜனாதிபதியும் மனித உரிமைகளுக்கான ஐ.நா. சபையின் முன்னாள் ஆணையாளருமான மேரி ரொபின்சன், தென்னாபிரிக்காவின் கிறிஸ்தவ பேராயர் டெஸ்மன்ட் டுட்டூ ஆகியோர் இதர உறுப்பினர்களாவர்.

இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்தான நீதி விசாரணைகளுக்கு சர்வதேச சமூகத்தின் அழுத்தம் அவசியமென்றும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்துவ நாடுகளுக்கு இதற்கான பொறுப்பு உள்ளதென்றும் “த எல்டர்ஸ்” அமைப்பு மேற்படி கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறது.

நன்றி: உதயன்