Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எதிரணிக் கட்சிகளின் கூட்டு மே தின ஊர்வலத்தின் போது , புலிக்கொடியை ஏந்தி வந்த அரச ஊடகமொன்றின் இரண்டு ஊடகவியலாளர்கள் பிடிக்கப்பட்டு பாதுகாப்புத் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருக்கிறார்.!

மேதினச் செய்திகளைத் திரட்டுவதற்கு உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்தனர். ஊர்வலம் சென்ற பாதைகளிலும் பொதுக் கூட்டம் நடைபெற்ற பிரதேசத்திலும் அணி அணியாக பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையிலீடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால இவர்களில் யாருக்குமே காணக்கிடைக்காத அபூர்வ சம்பவமாக     மேதின
ஊர்வலத்தில் இருவர் புலிக்கொடி ஏந்திச் சென்றது உங்கள் சுயாதீன தொலைக்காட்சி நிருபரின் கமராவில் மாத்திரம் பதிவாகியுள்ளது.

ஊர்வலத்தில் சென்ற மக்கள் இந்த ஊடகவியலாளர்கள் நடந்து கொண்ட விதத்தில் சந்தேகம் ஏற்படவே, அவர்களைப் பிடித்து கட்சியின் தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேராவிடம் அழைத்து வந்துள்ளனர். அதன்போது அந்த ஒளிப்பதிவாளர் தங்களுக்கு மேலிடம் விடுத்த அறிவுறுத்தல்களின் பிரகாரமே செயற்பட்டதாக தெரிவித்தார்.

அவ்வேளையில்  அவர்கள் பாதுகாப்புத்தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் கிடைத்த தகவலின் படி அவர்கள் வந்த வாகனத்தில் மேலும் புலிக்கொடிகளும், அவற்றை ஏந்திச் செல்வதற்காக மேலும் சிலரும் வாகனத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

தமிழ் மக்கள் மத்தியில், முள்ளிவாய்க்காலின் பின்னான இனவெறி கொண்ட மகிந்த சிந்தனைகள் பலவிதம். கிறிஸ் பூதம், வெள்ளைவான் கடத்தல், புலிப் பூச்சாணடி, முதல் தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல்வரை தொடர்கின்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால் செய்பவர்கள் எல்லாம் வலு "ஈசியாக" பிடிபடுகின்றார்கள். உளவுத்துறை முதல் அரசு இயந்திரம் வரையான "அடிபுண்ட ஓட்டை ஒடிசல்கள் எல்லாம் மிக அபூர்வமாக" வெளிவருகின்றன! மகிந்தா அலரி மாளிகையில் தடக்கி விழுந்தாலும், அவருக்கு மேர்வின் சில்வா "சின்னவீடு" அமைத்துக் கொடுத்தாலும் ஆதாரங்களுடன் அம்பலமாகின்றன! இதனால் அண்ணாவிற்கும் தம்பி கோத்தபாயருக்கும் இடையிலான இடக்கு-முடக்கான கிண்டக்க முண்டக்கங்கள் நாளாந்த செய்திகளாகின்றன!

--அகிலன் 4/5/2012