Language Selection

பி.இரயாகரன் - சமர்

புலிகள் இருந்த காலத்தில் கொழும்பை மையமாக கொண்டு இயங்கிய தமிழ் ஊடகவியலாளர்கள் பலர், புலிகளுக்கு ஏற்ற செய்திகளை தமிழ் மக்களின் தலையில் வைத்து அரைத்தனர். பேரினவாதம் புலிகள் போல் அனைத்தையும் வேட்டையாடத் தொடங்கியவுடன், ஊடகவியலாளர்கள் கூறித் திரிந்த இந்த புலி ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். தங்கள் அறிவுசார் மேலாண்மை மற்றும் முன்னைய மற்றைய இயக்க தொடர்புகள் மற்றும் அடையாளங்கள் மூலம், தாம் முற்போக்காக மக்களுக்கு ஊடகவியலை செய்ததாக இன்று காட்டிக்கொள்ளுகின்றனர். இன்று வரை புலியை விமர்சனம் செய்யாத சூக்குமத்தின் பின் நின்று கொண்டு தான், ஊடக அடையாளம் மூலமான பிழைப்பை இன்று நடத்த முடிகின்றது.

 

இதுதான் கிடைக்கும் என்று உன்னால் சொல்ல முடியுமா? மக்களுக்கு இந்த ஆட்சியால் என்ன நன்மை என்றாவது சொல்ல முடியுமா? தெரிவு செய்த உன்னால் அதைச் சொல்ல முடியாது. ஆனால் இது தொடர்ந்து மக்களுக்கு அடக்குமுறையுடன் கூடிய ஆட்சியையே தரும் என்று, எம்மால் நிச்சயமாக அறுதியிட்டுச் சொல்ல முடியும். இங்கு ஆட்சி மாற்றம் என்பது, உனது அறியாமை சார்ந்த அதிருப்தியின் வெளிப்பாடே ஒழிய, நீ விரும்பும் ஆட்சியை உனக்குத் தரப்போதில்லை. ஆம், உன் மீதான அடக்குமுறை தொடரும். இந்த சூக்குமத்தை நீ புரிந்து கொள்ளாத வரை, மீண்டும் உன் அதிருப்தியை தெரிவிக்க நீ இன்று தோற்கடித்த பழைய அதே ஆட்சியை மீண்டும் தெரிவு செய்வாய். இதுதான் உனது அறியாமை. அதற்குள் உன்னை தக்கவைப்பதற்காக, இதைச் சுற்றிய தர்க்கங்கள் விளக்கங்கள், வாதங்கள். இதற்காக எத்தனை அறிவுசார் மோசடிகள். நீ விழிப்புறக் கூடாது என்பது தான், இந்த அறிவுசார் மேதமை. உன் அறியாமை தான், அறிவு மீதான மேலாதிக்கம்.

 

அச்சம் சார்ந்த நேர்த்திக்கடன் தான், மகிந்த கையில் உள்ள நூல்கள். தன்னை தற்காத்துக்கொள்ள, கடவுளிடம் வேண்டுதல்கள் வைப்பதன் மூலமான பாசிசம் நம்பிக்கையாக வெளிப்படுகின்றது. இப்படி பாசிசம் கடவுள் மூலமும் தற்காப்பு பெற்றுச் செழிக்க விழைகின்றது. இதுவும் மகிந்த சிந்தனை தான். மக்களுக்கு எதிராகக் குற்றங்களை இழைத்தபடி, கடவுளிடம் தற்காப்புக் கோரிக்கை வைப்பதுமாக, ஒரே நேர்கோட்டில் பாசிசம் தன் கோழைத்தனத்தை மூடிமறைத்தபடி பயணிக்கின்றது.

எதுவுமில்லை என்பது உண்மைதான். சரி 25 வருடமாக அரசுடன் நீங்கள் நின்றதால் எமக்கு என்ன தான் கிடைத்தது? அதைச் சொல்லுங்கள். 60 வருடமாக இந்த அரசால் தமிழ்மக்களுக்கு என்ன தான் கிடைத்தது. அதையாவது சொல்லுங்கள். எதுவுமில்லை. முப்பது வருட போராட்டத்தால் மட்டுமல்ல, இதுவல்லாத உங்கள் வழிமுறைகளிலும், ஏன் 60 வருடமாக தமிழ்மக்களுக்கு யாராலும் எதுவும் கிடைக்கவில்லை.

ஆக போராட்டத்தால் மட்டுமல்ல, போராடாமல் கூட எதுவும் மக்களுக்கு கிடைக்கவில்லை. போராட்டம் தவறல்ல. போராடிய வழிமுறைதான் இங்கு தவறாக இருந்துள்ளது.

 

இன்றைய உலக ஒழுங்கில் போராடும் தலைவர்களுக்கும், அரச பயங்கரவாதம் சொல்லுகின்ற செய்தி என்ன? சரணடையாதே, கைதாகாதே, மரணம் வரை போராடு. இதை மீறினால், எம் வதைகள் மூலம் நீ கொல்லப்படுவாய். இதுதான் இலங்கை அரச பயங்கரவாதம் முதல் அமெரிக்காவின் உலக பயங்கரவாதம் வரை உலகுக்கு சொல்லுகின்ற பாசிசச் செய்தியாகும். இது தான் ஜனநாயகம், இதுதான் சட்டம், இதுதான் நீதி, என அனைத்துமாகியிருக்கின்றது.

இதன் மேல்தான் தகவல் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. அரச பயங்கரவாதம் கட்டமைக்கும் பாசிசப் பயங்கரவாதத்தை தான், தகவல்களாக எம்முன் திணிக்கப்படுகின்றது. புலிகளை அழித்த இலங்கை அரசும், பின்லாடனை கொன்றதாக கூறும் அமெரிக்க அரசும், இதன் பின்னால் சொல்லுகின்ற பொய்கள் பித்தலாட்டங்கள் அனைத்தும் எவ்வளவு பொய் என்பது உலகறிய இன்று அம்பலமாகிக் கிடக்கின்றது. ஆனால் இதைத் தான் தகவல் ஊடகங்கள் எமக்குச் செய்தியாக, தகவலாக மீள மீளத் தருகின்றது. அரச பயங்கரவாதம், தகவல் பயங்கரவாதமாக மாறி, பொதுமக்கள் மேலான பயங்கரவாதமாக மாறுகின்றது.

 

போர்க்குற்றத்தில் ஈடுபட்ட புலிகள் அதற்காக இன்று வரை மனம் வருந்தியது கிடையாது. அதே போல் மக்களுக்கு துரோகம் செய்த ஊடகவியல், தன்னைத்தான் போற்றிக்கொள்ள முனைகின்றது. துரோகத்தின் அச்சில் எம் மக்கள் கொல்லப்பட்டனர். யாரும் இதுவரை இதற்காக மனம் வருந்தவில்லை, பொறுப்பேற்கவில்லை. தங்கள் செயலை சரியென்றும், அதன் பின்னான தங்கள் இழிந்து போன மகிமைகளை மெச்சியும் கொள்கின்றனர்.

இங்கு ஓசாமா பின்லாடன் வேட்டை, அமெரிக்காவின் மற்றொரு தோல்வி தான். 10 வருடங்கள் அமெரிக்காவின் அதியுச்ச பலத்தையும், அதன் உலக மேலாதிக்கத்தையும் எள்ளிநகையாடி வந்தது. அன்று அமெரிக்கா மீதான தாக்குதல் எப்படியோ, அப்படித்தான் 10 வருடங்களாக அமெரிக்கா ஏகாதிபத்தியம் மண் கவ்வி வந்தது.

யுத்தத்தில் காயமடைந்தவர்கள், சந்திக்கும் தொடர் அவலங்களோ எல்லையற்றது. எதையும் கண்டுகொள்ளாத சமூகத்தில், தொடர்ந்து நாம் வாழ்கின்றோம். இங்கு தனிமனிதர்களோ சிதைந்து போகின்றார்கள். சமூக ஆதாரமின்றி, அரவணைப்பின்றி, வெளிறிப்போன உலகத்தில் நின்று, இலக்கற்று வெறித்துப் பார்க்கின்றனர். வெற்றுவேட்டாக போன மனிதாபிமானம், குறுகிப்போன அரசியல் இலக்குகள், இவைகளைக் கொண்டு பிழைத்து வாழ சமூகம் பற்றிய புலம்பல்கள், இப்படி மக்கள் பெயரில் எத்தனையோ பித்தலாட்டங்கள்.

ஐ.நா. அறிக்கை புலம்பெயர் தமிழர் மீது குற்றஞ் சாட்டியுள்ளது. இது முழுமையானதல்ல. சிலதை மூடிமறைத்து இருக்கின்றது. சிலதைத் திரித்தும் இருக்கின்றது.

1. இங்கு திரிபு என்னவெனில் புலம்பெயர் தமிழ் மக்கள் என்று கூறும் பொது வரையறுப்பு தவறாகும். இங்கு இந்தக் குற்றச் சாட்டுக்குரியவர்கள் புலத்து மாபியாப் புலிகள். சில மட்டும் தான், புலத்து தமிழ் மக்களைக் குறிக்கும்.

2.இங்கு மூடிமறைப்பு புலத்தில் அரசை சார்ந்து நின்று போர்க்குற்றத்துக்கு துணை போன புலியெதிர்ப்புப் பிரிவை குற்றஞ்சாட்டாமை.

இந்த வகையில் புலத்தில் போர்க்குற்றத்துக்கு துணை போன, இரண்டு பிரிவுகளை ஐ.நா அறிக்கை அடையாளம் காட்டத் தவறியுள்ளது.

தமிழ்மக்கள் பெயரால் தான், அனைத்தும் முன்வைக்கப்படுகின்றது. இந்தப் போர்க்குற்றத்தை விசாரிப்பதால் என்ன நன்மை? இது இனத்துக்கு எதிரான முரண்பாட்டை கூர்மையாக்கும். அதனால் அரசுடன் இணங்கிப் போகும் வண்ணம், இதிலிருந்து அரசைப் பாதுகாக்க வேண்டும். இந்த வகையில் இலங்கை அரசைப் பாதுகாக்கும் வாதங்களும், தர்க்கங்களும் ஆங்காங்கே தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றது. "இவ் அறிக்கையை ஐ.நா. செயலர் குழு வெளியிடுவதன் மூலம், இலங்கைத் தேசத்தில் சரிசெய்யப்பட முடியாத ஒரு பாதிப்பை உருவாக்கும்" என்று இலங்கை வெளிநாட்டமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூற்றை எடுத்துக் காட்டி, தமிழர்கள் தமிழரை மறைமுகமாக மிரட்டுகின்றனர். அரசுடன் சாணக்கியமாக இணங்கி, காரியமாற்ற வேண்டும் என்கின்றனர். அரசு தன் இராணுவ பலத்தால் தமிழ் மக்களை ஒடுக்கி அடிபணிய வைக்கும் உள்ளடக்கத்தைக் காணாதவாறு, இங்கு சாணக்கியமாக பலர் இக்கருத்துக்களை முன்வைக்கின்றனர். அரசுடன் மோதி சாதிப்பதைவிட, இணங்கி ராஜதந்திரமாக சாதிப்பது தான் புத்திசாலித்தனம் என்கின்றனர். இதைப் பூசிமெழுக அரசியல் முலாம்கள்.

இனவொடுக்குமுறையின் ஒரு அங்கம் தான் போர்க்குற்றம். நீண்ட பத்தாண்டுகாலமாக நீடித்த இனவொடுக்குமுறையும், தீர்வைக் காணமறுக்கும் பேரினவாதத்தின் நீண்ட இனவழிப்பு நிகழ்ச்சி நிரலில் நடந்தேறியதுதான் இந்தப் போர்க்குற்றம். யுத்தத்தின் பின்பும் அரசியல் தீர்வை மறுத்து, இனவழிப்பு தொடருகின்றது. தமிழ் இனம் தன்னைத்தான் அடையாளப்படுத்த முடியாத வகையில், திட்டமிட்ட வகையில் அதன் சமூக பொருளாதார பண்பாட்டு அரசியல் தளம் தொடர்ந்து அழிக்கப்படுகின்றது.

இதற்கேற்ற வகையில் புலியெதிர்ப்பு அரசு ஆதரவு கோட்பாடுகள் முதல் இராணுவ நிர்வாகம் வரை முடுக்கிவிடப்பட்டு இருக்கின்றது. புலத்தில் இலங்கை அரசு ஆதரவு கருத்தோட்டத்தை திட்டமிட்டு கொண்டு செல்லும் தேனீ முதல் தேசம் வரையான இணையங்கள், புலி எதிர்ப்பின் உள்ளடக்கத்தில் போர்க்குற்றத்தை அரசியல் நீக்கம் செய்ய முனைகின்றனர். இந்த வகையில் முன்பு (சண் காலத்தில்) மார்க்சியம் பேசிய பழசுகள், கனடா முதல் இலங்கை வரை புலியெதிர்ப்பில் நின்று அரசுக்கு குடைபிடிக்கின்றனர். இதை நாம் தனியாக ஆராய உள்ளோம்.

 

 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE