Language Selection

பி.இரயாகரன் - சமர்

மூலதனத்தின் ஆன்ம ஈடேற்றத்துக்குத் தடையான  அனைத்தையும் மூலதனம் தகர்த்தெறிகின்றது. இங்கு  ஈவு, இரக்கம் என்று எதையும் மூலதனம் காட்டுவதில்லை. இன்றைய இந்த நவீன சமூகக் கட்டமைப்பு மூலதனத்தின் ஈடேற்றத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்தியப் பார்ப்பனர்கள் தனது சொந்த நலன் சார்ந்த சமூக ஈடேற்றத்துக்காக எப்படி சாதிகளை உருவாக்கினாரோ, அதேபோல் தான் இன்றைய நவீன நாகரிகக் கட்டமைப்பை மூலதனம் உருவாக்கியது, உருவாக்கி வருகின்றது. இந்த பொதுஅம்சம், மற்றவனை அழிப்பதையே அடிப்படையாகக் கொண்டது. மூலதனக் குவிப்புக்கு எதிரான அனைத்து விதமான போட்டியாளர்களையும் ஈவிரக்கமின்றி ஒடுக்குகின்றது. இதன் போது எங்கும் சமூக அராஜகத்தை ஆணையில் வைக்கின்றது. இது ஜனநாயகம், சுதந்திரம் என்ற பெயரிலேயே அரங்கேறுகின்றது. இதன் மூலம் மூலதனம் தங்கு தடையற்ற வகையில் வீங்கிச்  செல்லுகின்றது.

மூலதனங்கள் உலகை முழுவீச்சில் சூறையாடவும்,  மூலதனங்கள் தமக்கு இடையிலான மோதலை தள்ளிப்  போடவும், தமக்கிடையில் ஒன்று சேருகின்றன. இது பிரமாண்டமான ஒப்பந்தத் திருமணமாக அரங்கேறுகின்றது. மனித இனம் தனித்தனி மனிதர்களாகப் பிளவுபடுத்தப்படும், ஒற்றைத் துருவங்களாக வெம்பவைக்கும் ஒரு சமூக அமைப்பில் தான், மூலதனங்கள் தமக்கு இடையில் ஒன்று சேர்வது ஒரு முரணான போக்காக உள்ளது. தனிமனிதர்களாக வெம்பவைத்துச் சிதைக்கும் மூலதனம், தமக்கு இடையில் இதற்காக ஒன்று சேர்கின்ற போக்கு உலகமயமாதல் நிகழ்ச்சிப் போக்கில் குறிப்பான மூலதனச் செயல்பாடாக உள்ளது. ஆனால் இணைவுகள் பிரதான ஏகாதிபத்திய, சர்வதேசப் போட்டி மூலதனத்துடன் நடப்பதில்லை. இதனால் இதற்கிடையில் முரண்பாடுகள் உண்டு.

 மக்களின் வாழ்வைச் சூறையாடும் தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் உலகில் எப்படி பெருக்கெடுத்து எப்படிக் கொழுக்கின்றது என்பதை சில நாடுகள் ரீதியாக விரிவாகவும் குறிப்பாகவும் ஆராய்வோம்.

 உலகமயமாதல் என்பது உலக மூலதனம் நடத்தும் வர்த்தகம் மற்றும் சுரண்டலின் தங்கு தடையற்ற கொள்ளையை அடிப்படையாகக் கொண்டது. தங்கு தடையற்ற வர்த்தகத்தையும், சுரண்டலையும் பாதுகாப்பதே உலகமயமாதலின் அடிப்படைக் கொள்கையாகும். மூலதனம் சுரண்டிக் கொழுக்கும் தனது உற்பத்தி மற்றும் வர்த்தக விரிவாக்கத்தை சுதந்திரமாகவும், ஜனநாயகப்பூர்வமாகவும் செயலாற்றும் வகையில், உலகளாவிய நாட்டு எல்லைகளையே தகர்ப்பதே உலகமயமாதலாகும். இதுவே தனிப்பட்ட பணக்காரக் கும்பலையும், மூலதனத்தில் அராஜகத்தையும், ஏகாதிபத்தியத்தின் அதிகாரத்தையும், தங்குதடையற்ற வகையில் உலகில் நிலைநிறுத்துகின்றது.

 இவை எதைத்தான் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. கட்டியிருக்கும் கோவணத்துக் கூட ஆபத்து என்பதைத் தான். உலக மக்களை ஒன்று அல்லது இரண்டு டாலரை நாள் வருமானமாக பெறும் நிலையைக் கூட இல்லாதாக்கி, அவர்களை அடிமைப்படுத்தி அடக்கியாளும் கொள்கையையே உலகமயமாதல் தனது இலட்சியமாகக் கொண்டுள்ளது. இதனடிப்படையில் உலக மக்கள் தொகையில் அரைவாசி மக்களை, இந்த அடிமை நிலைக்குத் தரம் தாழ்த்தியதுடன், கையேந்தும் நிலையை உலகமயமாதல் உருவாக்கி விட்டது. மேலும் மக்களை அடிமைப்படுத்தி, மக்களை பண்ணையில் வளர்க்கப்படும் மிருகங்களாக மாற்றுவதை நோக்கி, உலகமயமாதல் தேசிய வளங்களையும் சூறையாடுவது இன்றைய ஜனநாயகமாகி இதுவே சுதந்திரமாகிவிட்டது.

 சுதந்திரம், ஜனநாயகம் பற்றி வாய்கிழிய பிரகடனம் செய்து எதைச் சாதிக்கின்றனர் என்பதைக் குறிப்பாகப் பார்ப்போம். உலகில் மிகப் பெரிய நிறுவனமான ஜெனரல் மோட்டார் நிறுவனம் சீனாவில் தனது விற்பனையை 2003இல் ஆறு மடங்காக்கியது. சந்தை உருவாக்கித் தரும் ஜனநாயகம், மக்களின் அடிப்படை வாழ்வுரிமையைச் சூறையாடுவதையே பிரகடனமாகின்றது. 2002இல் ஜெனரல் மோட்டார் நிறுவனம் 14.2 கோடி டாலரை லாபமாக பெற்ற இந்த நிறுவனம், 2003இல் 43.7 கோடி டாலர் லாபத்தைப் பெற்றது. சீனாவின் ஜனநாயகம் மக்களின் வாழ்வை சூறையாடி விட, அதுவே லாபங்களை அள்ளிக் கொடுத்தது.

 இப்படி உருவாகும் பன்னாட்டு தேசங்கடந்த நிறுவனங்கள் பல கோடி மக்களின் வருடாந்தர கூலிகளை மிஞ்சியதாக காணப்படுகின்றது. உதாரணமாக உலகில் மென்பொருள் உற்பத்தியில் மிகப் பெரிய நிறுவனமான  மைக்ரோசாப்ட் (Mடிஞிணூணிண்ணிஞூt) நிறுவனத்தின் மொத்தச் சொத்து 1999இல் 50,000 கோடி டாலராக இருந்தது. இது பிரேசில் நாட்டில் உள்ள மக்களனைவரும் வருடாந்தரம் உழைத்து உருவாக்கும் மொத்த தேசிய வருமானத்துக்குச் சமனாக இருந்தது.

 உலகமயமாதல் என்ற வர்த்தகப் பண்பாடு, பண்பாட்டு ரீதியான வியாபாரச் சின்ன ("மார்க்') அடையாளத்துடன் உலகை அடிமைப் படுத்துகின்றது. மனிதன் பொருட்களின் அடிமையாக இருந்த காலகட்டம் என்பதை கடந்து, பொருட்கள் மேல் பொறிக்கப்பட்ட வியாபாரச் சின்ன ("மார்க்') அடையாளங்கள் சார்ந்த மந்தைகளாகி விடும், புதிய சமூக அடிமைத்தனமே உலகமயமாதலின் நவீனப் பண்பாடாகி வருகின்றது. அதுவே நவீன கலையுமாகியுள்ளது. இதன் மூலம் வியாபாரச் சின்னம் ("மார்க்') சார்ந்த பன்னாட்டு, தேசங்கடந்த நிறுவனங்களை வீங்கி வெம்பவைக்கின்றன.

 ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள ஒருசில பன்னாட்டு நிறுவனங்கள், உலகளாவிய மூலதனங்களையும் மனித உழைப்பையும் தமதாக்கி ஒன்று குவிப்பதே உலகமயமாதலாகும். இதன் மூலம் தனிப்பட்ட சிலரின் சொத்துக்கள் வரைமுறையின்றிக் குவிகின்றது. இப்படிக் குவியும் தனிப்பட்ட நபர்களின் சொத்துக்களே, ஆடம்பரமாகி மனிதனுக்கு எதிரான வக்கிரங்களாக வக்கரிக்கின்றன. இதுவே சமூகப் பண்பாடாகி உலகமயமாகின்றது. இன்றைய சமூக அமைப்பு என்பது, தனிப்பட்ட நபர்களின் செல்வக் குவிப்பை அடிப்படையாகக் கொண்டது.

 இப்படி உலகை ஜனநாயகத்தின் பெயரிலும், சுதந்திரத்தின் பெயரிலும் ஆளுகின்ற பலர் கோடீஸ்வரர்களாகவும், லட்சாதிபதிகளாகவும் இருக்கின்றனர். இந்த ஆளும் வர்க்கமும், அதைச் சுற்றி உள்ள அதிகாரவர்க்கமும் கூட பெரும் பணக்காரக் கும்பலானதே. இந்தக் கும்பல் ஏழை மக்களின் நலனையிட்டு ஒரு நாளும் ஒரு கணமும் சிந்திக்கப் போவதில்லை. மக்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும் எனின், தமது சொந்தச் செல்வத்தின் இழப்பை அங்கீகரிக்க வேண்டும். எந்தப் பணக்காரனாவது தனது சொந்த சொத்து இழப்பை அங்கீகரிக்க போவதில்லை.

 இந்த அமைப்பைப் பாதுகாக்கும் சட்டதிட்டங்களும், அதைக் கையாளும் நீதிபதிகள் கூட பெரும் பணக்காரக் கும்பலே. 1997இல் புதிதாக நியமிக்கப்பட்ட 25 நீதிபதிகளின் சராசரியான தனிநபர் சொத்து, 18 லட்சம் டாலருக்கும் அதிகமாகும். அமெரிக்காவில் உள்ள நீதிபதிகளில் 34.1 சதவீதம் பேர் 10 லட்சம் டாலருக்கும் அதிகமான சொத்துடைய பணக்காரக் கும்பலே. பொதுச் சட்ட திட்டங்கள் பணக்கார நலன்களைத் தாண்டி, எதையும் மக்களுக்காக வழங்குவதில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE