Language Selection

பி.இரயாகரன் -2024
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எழுதியதற்காக வன்முறை ஒரு இடதுசாரியக் கட்சித் தலைவரின் முன்னால் நடந்தேறியது. எதிர்மறையான முறைகேடுகளை நேசிக்கும் அரசியல் வக்கிரத்துக்கு உடன்பட மறுத்த போது, வன்முறை அரங்கேறியது.

28.10.2023 அன்று புதிய ஜனநாயகக் கட்சி முன்னாள் உறுப்பினரான மு.மயூரன் என் நெஞ்சில் தள்ளி, வன்முறைக்கு அழைப்பு விடுத்தார். 'முடிந்தால் இதைப் பற்றி எழுது" என்று, சவால் விடுத்திருந்தார்.

கட்சி அரசியலிருந்து விலக்கப்பட்ட ஒருவரின் தனிப்பட்ட இந்த நடத்தையையிட்டு அலட்டிக் கொள்ளாது விட்டுவிட்டேன். ஆனால் 13.04.2024 அன்று மீண்டும் கட்சி சார்ந்த ஒரு கூட்டத்தில் பேச்சாளராக மு.மயூரன் கலந்துகொள்ளும் அறிவிப்பு வெளியாகியதை அடுத்து, நடந்ததை அம்பலப்படுத்த வேண்டியிருக்கின்றது.

மு.மயூரனே செந்திலுக்கு பின்பான புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் என்று பேசப்படுவது,  உண்மையாகிவிடுமோ என 13.04.2024 நாளன்றைய நிகழ்வு பறைசாற்றுகின்றது.

28.10.2023 அன்று மீநிலங்கோவின் கூட்டம் கொக்குவிலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு முடிந்ததைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடந்து கொண்டிருந்தது. எனது பிரதேசத்துக்கு போக்குவரத்து நெருக்கடி இருப்பதால், முன்கூட்டியே வெளியேறினேன்.

கூட்ட மண்டப வாசலில் மயூரனும் - செந்தில்வேலும் உரையாடிக்கொண்டு இருந்தனர். நான் அவர்களைக் கடந்து செல்ல முற்பட்ட போது, மு.மயூரன் இடைமறித்து "நீ யார்?" என்று கேட்டபடி, என்னை நெருங்கினார். நான் எனது பெயரைக் கூறியவுடன், 2021 இல் எழுதிய விடையத்தை ஆக்ரோசமாக எழுப்பி தர்க்கிக்க முற்பட்டார்.

தைப் பற்றி எழுது என்று கூறிவிட்டு கடந்துசெல்ல முற்பட்ட போது, நெஞ்சில் தள்ளி வன்முறைக்கு அழைத்தார். அன்று எழுதிய விடையத்தை (பாலியல் விடையம்) கதைக்கவும் தொடங்கினார்.

அதில் குறிப்பாக என்னுடன் கதைக்கத் தொடங்கிய விடையம், செந்தில் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடையது. மயூரன் இணைந்து கட்சி செய்த முறைகேட்டை எடுத்து, நியாயப்படுத்தத் தொடங்கினார்.

2009 பின்பாக நாங்கள் புதிய ஜனநாயக மக்கள் முன்ணணி என்ற அமைப்பாக இயங்கிய காலத்தில் நடந்த விடையம். ஜெர்மனிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (MLPD)எமக்கு இருந்த கட்சி அடிப்படையிலான எமது தொடர்புகளை, மு.மயூரன் முறைகேடு செய்த சம்பவத்தைப் பற்றியது.

ஜெர்மனி கம்யூனிஸ்ட் கட்சியுடன் (MLPD) தொடர்புடைய கட்சிகளின் சர்வதேச மாநாட்டில், கட்சி சார்பாக புதிய ஜனநாயக மக்கள் முன்ணணி (எம்மை) கலந்து கொள்ளும் அழைப்பு எமக்கு விடுக்கப்பட்டது. இந்த சர்வதேசக் கூட்டம் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.

எம்மால் அன்று நேரடியாக கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில், எமது அமைப்புடன்  தொடப்பில் இருந்த மு.மயூரனை அனுப்புவதென எமது அமைப்பு முடிவு எடுத்தது.

புதிய ஜனநாயக மக்கள் முன்ணணி அமைப்பின் முடிவுக்கு அமைவாக, எமது கட்சி ஆவணம் ஒன்றுடன் மு.மயூரன் அதில் கலந்து கொண்டார். இதற்கான பணம் எம்மால் அவருக்கு வழங்கப்பட்டது.

புதிய ஜனநாயக மக்கள் முன்ணணி சார்பாக கலந்து கொண்ட மு.மயூரன், கூட்டம் முடிந்த பின் கூட்டம் தொடர்பான அறிக்கையையோ, கொடுத்த பணத்துக்கு கணக்கோ தரவில்லை. எம்முடன் இருந்த தொடர்பை முற்றாக இல்லாதாக்கினார். திடீரென புதிய ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராக வெளிவந்தார்.

இதன் பின் ஜெர்மனி கம்யூனிஸ்ட் கட்சியுடனான (MLPD) தொடர்பு புதிய ஜனநாயகக் கட்சியுடனானதாக மாறுகின்றது. அடுத்து ஜெர்மனியில் நடந்த சர்வதேச மாநாட்டில் செந்தில்வேல் கலந்து கொண்ட நிகழ்வு நடந்தேறியது. அரசியல் மோசடி, அமைப்புக்களின் பெயரில் உள்ள பொதுத்தன்மையைக் கொண்டு அரங்கேற்றிய அரசியல் பித்தலாட்டம் அனைத்தும், புதிய ஜனநாயகக் கட்சி மூலம் அரங்கேறியது. மு.மயூரனே இதை அரங்கேற்றினார்.    

மு.மயூரனுடனான தனிப்பட்ட எனது உறவானது, அவரின் ஆரம்பகால அரசியலுடன் தொடங்கியது. பல விடையங்களை தொடர்ந்து என்னுடன் விவாதித்தவர், வேலைகள் சார்ந்து பணம் அவருக்கு கொடுக்கப்பட்ட போது, அந்தப் பணத்துக்கு வேலையும் நடக்கவில்லை. கணக்கு தந்ததும் கிடையாது.

வேடிக்கை என்னவென்றால் 2017 அல்லது 2018 இல் புதிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த  பலரும் கலந்து கொண்ட மாநாடு கொக்குவிலில் நடந்தது. அங்கு நான் உள்ளிட்ட சில தோழர்கள் திடீரெனச் சென்றோம். செந்தில், சிவசேகரம்… உட்பட பலரையும் அங்கு சந்தித்து  உரையாடினோம்;. 10 வருடங்களுக்கு மேல் என்னுடன் அரசியல் உறவில் இருந்த மயூரன் என்னை நேரில் சந்திக்காதது மட்டுமின்றி, அங்கிருத்து நழுவிச் சென்ற சம்பவம் கண் முன்னால் நடந்தேறியது. நேரடியாக முகம்கொடுக்க முடியாத அரசியல் மோசடியுடன், அங்கிருந்து வெளியேறினார். இதனால் எமக்கு இடையில் நேரடி சந்திப்பு என்றும் நடக்கவில்லை, நெஞ்சில் தள்ளிய வன்முறையுடன் அது நடந்தது.

என் நெஞ்சில் தள்ளியவர் எமது அமைப்பான புதிய ஜனநாயக மக்கள் முன்னணியில் இணையாமல், புதிய ஜனநாயகக் கட்சியில் இணைந்ததாலேயே தன்னை குற்றம் சாட்டுவதாக கூறினார். செய்தது அரசியல் மோசடி, இதற்கு தர்க்கம். அதுவும் செந்தில் முன்னிலையில்! இதன் மூலம் செந்திலுக்கு செய்தியை கூறிவிடுகின்றார்.    

2021 ஆண்டு புதிய ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான மயூரனின் பாலியல் நடத்தைகள் குறித்த விமர்சனங்களை அடுத்து, அவரைக் கட்சியில் இருந்த நீக்கிய அறிவித்தல் வெளியானது. இதையடுத்து கட்சியின் பொது அறிக்கையோ, பாலியல் குறித்த கட்சி கண்ணோட்டம் என்ன என்பதோ, இதுவரை எதுவும் வெளியாகவில்லை. திடீரென 13.04.2024 அன்று கட்சி சார்ந்த கூட்டத்தில் மயூரன் பேசும் அறிவித்தல், மயூரனின் பாலியல் கோட்பாட்டையே கட்சி ஏற்றுக்கொண்டதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

28.10.2023 செந்தில்வேலுடன் கூட்ட மண்டப வாசலில் இவர்களுக்கு இடையிலான உரையாடலும் - நெஞ்சில் தள்ளிய வன்முறையும், பல்வேறு சந்தேகங்களை - கேள்விகளை எழுப்புகின்றது.

சமூக இயக்கத்தில் இருக்கும் பெண்களை தங்கள் பாலியல் வக்கிரங்களுக்கு இணங்க வைக்கும் ஆணாதிக்க பொறுக்கிகளின்; பெண்ணியக் கோட்பாடுகள், முதலாளித்துவ பெண்ணியவாதிகள் மூலமே அம்பலமாகி வருகின்ற இன்றைய சூழலில்;, ஆணாதிக்க "இடது" அரசியல் கூத்துகளும் அரங்கேறி வருகின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் எப்படி சீரழிந்து வருகின்றது என்பதையும், சீரழிக்கின்றனர் என்பதையும் சம்பவங்கள் காட்டுகின்றது.

பின் இணைப்பு 01

முன்பு நான் எழுதியதற்காக (பார்க்க எக்சில் - உயிர்நிழல்) சோபாசக்தி எழுதிய கல்வெட்டு. கேள்வி கேட்டதற்காக (தீக்கொழுந்து சினிமாவை அரசியல் ரீதியாக காட்சிப்படுத்துவதை  பாரிசில் நிறுத்திய போது) என் மீதான வன்முறை. இலக்கிய சந்திப்புகளில் (பார்க்க சமர் 5,6 இதழ்) எதிர் கருத்தைச் சொல்ல எனக்கு விதித்த தடை… இது புலம்பெயர் இலக்கியத்தில் வெளிப்படையாக நடந்தது. இது கடந்தகால வரலாறு.

மண்ணில் இருந்த காலத்தில் புலிகள் கடத்தி காணாமலாக்கினர். புலிகள், புளட், ரெலோவால்.. எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு குறிவைக்கப்பட்டது. இவை எனக்கு தெரிய நடந்தது.

இதைவிட எண்ணற்ற கற்பனையான அவதூறுகள், கட்டுக் கதைகள்… இதற்கு காரணம், ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்க அரசியலை முன்வைத்து போராடியதும், போராடுவதுமே.

பின் இணைப்பு 02

(மு.மயூரன் விடையம் தொடர்பாக 2021 இல் எழுதிய கட்டுரைகள்)

1.புதிய ஜனநாயக கட்சி மயூரன் முதல் ம.க.இ.க வரை

2.போலிப் பெண்ணியல் வாதிகளும் "பெண்ணியம்" பேசும் மயூரனும்

3."குடும்ப வரையறைக்குள் தான் ஆண் பெண் உறவு.." இருக்க முடியுமா?

4. "குரல் கொடுக்கும் பெண்களே குறிவைத்துத் தாக்கப்படுகிறார்களா"!?

5. "பெண்ணியம்" கட்டற்ற பாலியல் சுதந்திரத்தையா முன்வைக்கின்றது!?