Language Selection

பி.இரயாகரன் -2021
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"வெருகலில்" பலி கொடுத்தவர்கள் தங்கள் பிழைப்புவாத - பிரிவினைவாத தேர்தல் வாக்கு அரசியலுக்காக, பலி எடுத்தவர்களை குற்றஞ் சாட்டுகின்றனர். இதன் மூலம் பலிகொடுத்த தங்கள் அரசியலை புனிதப்படுத்துகின்றனர்.

கிழக்கில் கொல்லப்பட்ட பல பத்தாயிரக்கணக்கானவர்களை, இந்த கிழக்கு மையவாதம் பிரிவினைவாதம் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக புலிகளின் அரசியலை விமர்சிப்பதில்லை. புலிகளின் அதே அரசியலையே கொண்டு, யாருடைய மேலாதிக்கம் என்பதை பிரிவினைவாதம் மூலம் முன்வைக்கின்றனர். அதாவது "யாழ்ப்பாணிக்கு" பதில் "கிழக்கான்" என்ற பிறப்பு சார்ந்த - இது சாதியக் கோட்பாட்டு அடிப்படையுமாகும். எந்த மண்ணில் பிறந்தனர் என்று, பிறப்பை முன்னிறுத்தி முரண்பாட்டையும் - பிரிவிiனையையும் முன்னிறுத்;தும் குறுக்கிய அரசியல்.

 

புலிகள் நடத்திய "வெருகல்" படுகொலை, கிழக்கைச் சேர்ந்தவர்கள் என்பதால் நடந்ததா? இல்லை. கிழக்கு பிரிவினைவாதிகளும் - பிளவுவாதிகளும் திரித்துப் புரட்டியும், வாக்கு அரசியலுக்காக, "வெருகல்" பிண அரசியலை செய்கின்றனர்.

புலிகளுடன் முரண்பட்ட கருணா தன் தற்பாதுகாப்புக்கு யாழ்மையவாதத்தைப் போன்று கிழக்கு மையவாதத்தை முன்வைத்து, கிழக்கைச் சேர்ந்தவர்களை புலிகளின் பாசிசத்துக்கு பலியிட்டதே வரலாறு. புலிகள், தமிழ்தேசியத்தின் பெயரில் பலியெடுக்க, கிழக்கு மையவாதத்தை முன்வைத்து பலிகொடுக்கப்பட்ட இடம் தான் "வெருகல்". கிழக்கைச் சேர்ந்தவர்களை தங்களின் தனிப்பட்ட சுயநலனுக்காக, கருணா – பிள்ளையான் பலியிட்ட இடம் தான் வெருகல். இப்படி புலிக்கு பலியிட்டதைக் கொண்டாடும் காட்சிகள் தான், இன்றைய "வெருகல்" அரங்கேற்றங்கள்.

2009 இல் முள்ளிவாய்க்காலில் புலிகள் எப்படி பலியிட்டதை எப்படி தமிழ் தேசிய வாக்கரசியல் கொண்டாடுகின்றதோ, அதேபோன்றே வெருகலில் பலியிட்டவர்கள் கிழக்கு மையவாத வாக்கரசியலுக்காக கொண்டாடுகின்றனர்;.

புலிகள் என்பது வெறும் யாழ்மையவாத இயக்கமல்ல. மாறாக தேசியவாத பாசிச இயக்கம். வர்க்க, சாதிய, ஆணாதிக்கம்.. என்று இருக்கும் சமூக அமைப்பில், இருந்த ஜனநாயகக் கூறுகளை இல்லாதாக்கிய பாசிச இயக்கம்;. இதில் இருந்து வேறுபட்டதல்ல, அன்றைய கருணா -பிள்ளையான் முன்வைத்த கிழக்கு மையவாதம். இன்று தமிழ் தேசியத்தை முன்வைக்கும் தேர்தல் அரசியலில் இருந்து வேறுபட்டதல்ல, கிழக்கு மையவாத தேர்தல் அரசியல்.

புலிகள் தான் அல்லாத அனைத்தையும் அழித்தது, மாற்று அரசியலை முன்வைத்த நபர்களைக் கொன்றது. அனுதாரபுரப் படுகொலை, காத்தான்குடிப் படுகொலை, வீதிவீதியாக ரெலோவை உயிருடன் எரித்து நடத்திய படுகொலைகள் என்று எல்லா இயக்கங்களையும் தடைசெய்து, தன் கையில் சிக்கிய பிற இயக்க எல்லா உறுப்பினர்களையும் கொலை செய்தது. யாரும் சுதந்திரமாக சிந்திக்கவும், செயற்படவும் முடியாது. சிங்களக் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்கள், மக்கள் கூடும் இடங்கள், மக்கள் பயணிக்கும் பஸ்கள்… என்று, கொன்று குவித்த நூற்றுக்கணக்கான படுகொலை சம்பவங்கள் அடங்கியதே புலிகளின் வரலாறு.

இயக்க தலைவர்களான சுந்தரம் படுகொலை, ரெலி தலைவர் ஜெகன் படுகொலை, ரெலா ஒபரேய் தேவன் படுகொலை, மனோ மாஸ்டர் படுகொலை.. என்ற புலிகள் கொன்றவர்களின் நீண்ட பட்டியல் உண்டு. சொந்த இயக்கத்திற்குள்ளும் விதிவிலக்கு கிடையாது. படுத்திருந்தவரை பாயில் கொன்றது தொடங்கி,ம மாத்தையாவையும் மாத்தையாவுடன் இருந்தவர்களும் படுகொலை செய்தது வரை, படுகொலைப் பட்டியல் நீண்டது.

பிற தேசிய இனம் என்பதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம் மக்களைச் சூறையாடி விரட்டியது, மன்னாரில் இருந்து முஸ்லிம் மக்களை துரத்தியது, மூதூரில் இனச் சுத்திகரிப்பை தொடங்கியது என புலிப் பாசிசத்துக்கு என்று, அழிக்க முடியாத வரலாறுகள் உண்டு.

இந்த வரிசையில் கருணா விதிவிலக்கா என்ன!. கருணா முரண்பாடு என்பது குறைந்தபட்சம் ஜனநாயக அடிப்படையிலானதல்ல. மக்கள் குறித்தும், மக்கள் நலன் குறித்ததுமல்ல. மக்கள் குறித்ததும், மக்கள் நலன் குறித்ததுமானதாக இருந்தால், வடகிழக்கு மக்களையும் மையப்படுத்தி, இலங்கையின் அனைத்து மக்களையும் முன்னிறுத்துவதே. அப்படி அன்றும் நடக்கவில்லை, இன்றும் நடக்கவில்லை.

கருணா தனது தனிப்பட்ட முரண்பாட்டை கிழக்கு மையவாதமாக திரித்து புரட்டிக் குறுக்கினார். கருணா தன்னை தற்காத்துக் கொள்ள கிழக்கு மையவாதத்தை முன்வைத்ததன் மூலம், கிழக்கு மக்களை ஏமாற்றினார். மக்களை ஏமாற்றி பலி கொடுத்த இந்த கிழக்குப் பிரிவினைவாத கோசத்தை, இந்திய - அமெரிக்காவின் ஏஜன்டாக இருந்த சிவராமே கருணாவுக்கு எடுத்துக் கொடுத்தவன்;. இப்படித்தான் கிழக்கு வெருகல் பலியிடலுக்கான, கிழக்கு மையவாதம் உருவானது.

இதன் மூலம் யாழ் மையவாத சிந்தனைக்கு நிகரான கிழக்கு மையவாதத்தை முன்வைத்து, கிழக்கைச் சேர்ந்தவர்களை கருணாவும் - பிள்ளையானுக்கு புலிக்கு பலி கொடுத்தனர்.

இந்தப் பலியிடலுக்கு இலங்கை இராணுவத்தின் மறைமுக ஒத்துழைப்பை புலிகள் பெற்றுக் கொண்டனர். இந்த "வெருகல்" வெறியாட்டத்தின் பின்னணியில் ஒத்துழைத்த இலங்கை இராணுவம் வேறு யாருமல்ல, கிழக்கில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் பாரிய கூட்டுப் படுகொலைகளை நடத்திய அதே இராணுவம் தான். கிழக்கில் பொதுமக்களை அதிகளவில் கொன்று குவித்த இராணுவத்தின் துணையுடன் தான், அன்று "வெருகல்" படுகொலைக்கு துணை நின்ற இராணுவத்தின் துணையுடன் தான், இன்று "வெருகல்" நினைவைக் கொண்டாடுகின்றனர்; கிழக்கு மையவாத – பிரிவினைவாதமானது, இராணுவம் படுகொலை செய்த கிழக்கு மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதில்லை. மாறாக அதே இராணுவத்தினதும் - அரசினதும் ஆதரவுடன் தான், கிழக்கு மேலாதிக்கத்துக்காக பலிகொடுத்த "வெருகலை" முன்னிறுத்துகின்றனர்.

தங்கள் வக்கிரமான மனித விரோத நடத்தை மூலம் புலிகளின் தலைவர்களாக கருணா – பிள்ளையான் இருந்த காலத்தில், எல்லையோரங்களில் முன்னின்று தலைமையேற்று நடத்திய கிராமப் படுகொலைக்கு பொறுபேற்பதில்லை. அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில்லை.

கிழக்குப் பிரதேசவாதத்தை முன்வைத்த வெருகலில் புலிக்கு பலிகொடுத்த கருணா –பிள்ளையான், அதன் பின் கிழக்கில் நடத்திய நூற்றுக்கணக்கான படுகொலைகள் புலிக்கு நிகரானது. அரசின் கூலிப்படைகளாக செயற்பட்ட காலம். இதன் நீட்சி தான் இன்று கிழக்கு பிரிவினைவாத தேர்தல் அரசியல்.

யாழ்மையவாத அரசியல் போல் கிழக்கு மையவாதத்தை முன்னிறுத்திக்கொண்டு, இலங்கையின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களை தமக்கு எதிராக முன்னிறுத்துகின்றனர். இதை மூடிமறைக்க, கிழக்கின் பெயரில் தாங்கள் முன்னின்று பலிகொடுத்த "வெருகல்" படுகொலையை நியாயப்படுத்தி, வாக்கு அரசியல் நடத்துகின்றனரே ஒழிய. ஒடுக்கப்பட்ட கிழக்கு மக்களின் அரசியலுக்காக அல்ல.

m leo congue nisl, eget luctus sapien libero eget urna. Duis ac pellentesque nisi.