Language Selection

பி.இரயாகரன் -2021
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒடுக்கும் இனவாதத்துக்கு எதிரான ஒடுக்கப்படுபவர்களின் இனவாதம், போலி இடதுசாரியத்தின் சட்டியில் முற்போக்கான புரட்சியாக கொதிக்கின்றது. முற்போக்கு - பிற்போக்கு என்று, இனவாதத்துக்கு விளக்கம் கொடுக்கும் அளவுக்கு, வெள்ளாளிய சிந்தனையிலான இனவாதமே - இடதுசாரியத்தின் பெயரில் புரையோடிக் கிடக்கின்றது.


ஒடுக்கும் இனவாதத்தை எதிர்த்துப் போராடுகின்ற, ஒடுக்கப்பட்டவர்களின் இனவாதத்தை எதிர்க்கக் கூடாது, விமர்சிக்கக் கூடாது. அதை ஆதரித்து போற்றித் தொழ வேண்டும். இந்த வகையில் தமிழினவாத அரசியலையும், அதன் நீட்சியையும், அதன் கடந்தகால வரலாற்றையும் போற்றி வழிபட வேண்டும். அதன் தலைவர்களை விமர்சிப்பது என்பது கொச்சைப்படுத்தலாகவும், தனிநபர் தாக்குதலாகவும் தர்க்கிக்கின்ற தமிழினவாதமே - சிந்தனை முறையாக இருக்கின்றது.

அரசியலை பொத்தாம் பொதுவாக விமர்சிக்கலாமே ஒழிய, அந்த அரசியலை முன்வைக்கும் தனிநபர்களை விமர்சிக்காதே என்று கூறுவதே, ஒரு அரசியல் தான். இதன் மூலம் தங்கள் தனிநபர் வழிபாட்டு அரசியலை கேள்விக்குள்ளாக்குவதற்கும், தனிநபர் விம்பத்தை கட்டியமைக்கும் தனிநபர் அரசியல் முயற்சிகள் அம்பலமாவதற்கும் எதிராக – ஐயோ "தனிநபர் தாக்குதல்" என்ற ஒப்பாரிகளுக்கு பின்னால் இருப்பது, தனிநபர்வாத பிழைப்புவாதமே. விமர்சிப்பதைத் தடுக்க எந்த ஆதாரமுமற்ற, அடிப்படையுமற்ற, வரலாற்றுத் தொடர்ச்சியும் - தொடர்புமற்ற, கண்மூடித்தனமான கற்பனை அவதூற்றில் இறங்குகின்றனர்;.

தமிழினவாதச் சிந்தனைமுறை, தான் அல்லாத சிந்தனைகளை "எட்டப்பர்", "துரோகி" என்று காட்டிய வரலாற்றின் தொடர்ச்சியில், தமிழினவாத போலி வெள்ளாளிய இடதுசாரிகளின் சிந்தனை – கற்பனையில் கட்டியமைக்கப்படும் அவதூறுகளைச் சார்ந்து தங்களை முன்னிறுத்துவதே.

இந்த தமிழினவாதம் என்பது ஒடுக்கப்பட்ட தமிழனிலிருந்து சிந்திப்பதில்லை. தமிழனைத் தமிழன் ஒடுக்கும் சிந்தனைமுறை தான், இந்த தமிழினவாதம். தமிழ் சமூகத்தில் இது வெள்ளாளிய சிந்தனைமுறையாக இருக்கின்றது. ஒடுக்கப்பட்ட தமிழனின் சிந்தனைமுறை என்பது, வெள்ளாளிய சிந்தனைமுறைக்கு எதிரானதாக, இனவாதத்துக்கு எதிரானதாக இருக்கும். யார் வெள்ளாளிய சிந்தனைமுறைக்கு எதிராக உண்மையில் இருக்கின்றான் என்றால், அவன் இனவாதியாக இருக்கமுடியாது. எல்லா இனவாதத்தையும் எதிர்த்து செயற்படுபவனாக இருப்பான். எந்த ஒடுக்குமுறையையும் ஆதரிப்பவனாக இருக்க முடியாது.

எல்லாவற்றையும் தமிழினவாதத்தில் இருந்து சிந்திக்கின்ற தேசியவாதமானது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே எப்போதும் - எங்கும் சிந்திக்கின்றது, செயற்படுகின்றது. பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை, தாங்களே நடத்தியதாக கூறும் இந்துத்துவவாதி தங்கள் இந்துக் கோயில்களில் சாதியப் படிநிலையை முன்வைத்து ஒடுக்கப்பட்ட சாதிகளை ஒடுக்குகின்ற – வழிபாட்டு மொழியாக தமிழை மறுக்கின்ற சாதிய கண்ணோட்டம் கொண்ட, வெள்ளாளிய – பார்ப்பனிய ஒடுக்குமுறையாளர்களே. இவர்கள் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை போராடுவதன் பின்னுள்ள அர்த்தம் தான் என்ன?

இவர்களின் அரசியல் பின்தளத்திலேயே போலி இடதுசாரியமும் புளுக்கின்றது. இந்த போலி இடதுசாரியமானது, தமிழ் சமூகத்தில் மாற்று சிந்தனைமுறை உருவாக முடியாத, நச்சு சிந்தனைமுறையாக மாறி இருக்கின்றது.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை எழுப்பிய தமிழினவாதக் கூச்சல், ஒடுக்கும் இனவாத ஒடுக்குமுறைக்கு நிகரானது. இனவொடுக்குமுறைக்கு எதிராக போராடவில்லை, தன்னை அதற்கு நிகரான இனவாத ஒடுக்குமுறை சக்தியாக முன்னிறுத்திக் கொள்ளும், அதிகார சக்திகள் கூட்டாகவும் - தனியாகவும் நடத்திய கூத்து.

இந்துத்துவாதிகள் தொடங்கி தமிழினவாத தேர்தல் கட்சிகள் வரை, தத்தம் சுயநலனுக்காக – சுய அதிகாரத்துக்காக நடத்திய போராட்டம், இனரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களையும் அவர்களின் அரசியலையும் முன்வைக்கவில்லை. தேர்தல் அரசியலுக்காகவும், மத அரசியலுக்காகவும், அன்னிய நாடுகளின் இலங்கை மீதான மேலாதிக்க தேவைகளுக்காகவும் நடத்திய போராட்டம், இனரீதியான ஒடுக்குமுறைக்கு தீர்வைத் தந்துவிடுவதில்லை.

ஏகாதிபத்தியங்கள் தொடங்கி இந்தியா வரை, இலங்கையை தங்கள் பொருளாதார - இராணுவ நலனுக்கு உட்படுத்தும் நோக்கில், ஒடுக்கப்பட்ட இனங்களின் மேலான ஒடுக்குமுறையைப் பயன்படுத்திக் கொள்கின்ற பின்னணியில், பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான இனவாதக் கூச்சல் எழுப்பப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்த, அவர்களின் கோரிக்கைகள் உள்ளடக்கிய ஒரு போராட்டமல்ல. தமிழினவாத அமைப்பு சாராத லும்பன்களை முன்னிறுத்தி, மக்கள் போராட்டம் - அமைதிப் போராட்டம் - ஜனநாயகப் போராட்டம் என்று கூறிக் கொண்டு நடத்திய, தமிழினவாத ஜனநாயக மறுப்பு போராட்டம். இந்தப் போராட்டத்தை எதிர்ப்பவர்களை, கேள்வி கேட்பவர்களை துரோகிகள், எட்டப்பர்.. என்று கூறி, ஜனநாயகத்தையே மொட்டை அடிக்கும் காவாலிகளையும் - குண்டர்களையும் தன்பின்னால், அரசியல்ரீதியாக அணிதிரட்டி இருக்கின்றது.

இனத்தின் பெயரில் ஒடுக்கப்பட்ட மக்களைக் கொன்றும், அவர்களைச் சூறையாடியும், பெண்களை தங்கள் பாலியல் வக்கிரங்களுக்கு பயன்படுத்திய இயக்கத் தலைவர்களையும், தேர்தல் அரசியற்கட்சி பிரமுகர்களையும் அரசியல்ரீதியாக கொண்டாடுகின்ற கூட்டம் தான், பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை நடந்ததை, மக்கள் புரட்சியாக காட்டுகின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் எந்தக் கோரிக்கைகளையும் முன்வைத்து மக்களை அணிதிரட்டாதவர்கள், இனவாதமற்ற மக்கள் போராட்டத்தை நடத்தி விடவில்லை.