Language Selection

பி.இரயாகரன் -2021
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1970 களில் சண் தலைமையிலான மார்க்கிய-லெனினிய கட்சியில் ஏற்பட்ட பிளவுகளின் பின்னான, அரசியலின் நீட்சியே தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி. கார்த்திகேசன் மாஸ்ரரின் முன் முயற்சியால், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை முன்னிறுத்தி உருவானதே இந்த தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி. ஒரு சர்வதேசிய கட்சியின் பின்னணியில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை முன்னிறுத்திப் போராடவென 1975 செப்டம்பரில் உருவாக்கப்பட்ட முன்னணி தான், தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியாகும்.

தமிழ் தேசியவாதமானது வலதுசாரியமாக - உணர்ச்சி வடிவில் சமூகத்தில் புளுத்துக் கிடந்த காலத்தில், அதற்கு எதிரான போராட்டம் யாழ் பல்கலைக்கழகத்தில் எப்படி சாத்தியமானது? இதற்கான கரு எப்படி உருவானது?

1986 யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட அரசியலுக்கு, அச்சாணியாக இருந்தது என்.எல்.எப்.ரி.யே. யாழ் பல்கலைக்கழக ராக்கிங்கிக்கு எதிரான போராட்டடத்துக்கு என்.எல்.எப்.ரி.யில் இருந்த பல்கலைக்கழக மாணவர்கள, ஏனைய மாணவர்களை அணிதிரட்டி இருந்தனர். இவர்களே ராக்கிங்கிக்கு எதிரான புலியின் வன்முறையை எதிர்த்து, புலியை ஆதரித்த பல்கலைக்கழக புலியாதரவு வலதுசாரிய தலைமையை நிராகரித்து, புதிய தலைமையை உருவாக்கினார்கள். இப்படி உருவான புதிய அமைப்புக் குழுவே, விஜிதரன் போராட்டத்தின் போது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களிற்கான அரசியலை முன்வைத்தது.

புலித் தலைமையால் யாழ் பல்கலைக்கழகத்தில் தூக்கியெறியப்பட்ட இந்தத் தொடர் போராட்டங்கள் நடந்த காலமான 1986 ஆண்டு, இயக்கங்களுக்கு எதிராகப் போராடுவதற்கு அஞ்சிய காலம்;.

ரெலோ மீது புலிகள் பாரிய படுகொலைகளை நடத்தி முடித்திருந்த காலம். புலிகள் தமக்கு எதிராக தமிழ் சமூகம் போராடுவதைத் தடுக்கவும், தமக்கு மக்களை நிபந்தனையின்றி அடிபணிய வைக்கவும், வடக்கில் முக்கிய சந்திகளில் (வீதிகளில்) ரெலோவை (மனிதர்களை) உயிருடன் தீயிட்டுக் கொழுத்தியிருந்த காலம். இரண்டொரு நாளில் சில நூறு பேரை வக்கிரமான வழிமுறைகளில் கொன்று வீதிகளில் குவித்திருந்த காலம்;. ரெலோ என்ற இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு இருந்தது. பிற இயக்கங்கள் மீதான படுகொலைகளை அங்குமிங்குமாக புலிகள் அரங்கேற்றிக் கொண்டிருந்த காலம்;. பலர் காணாமல் போய் கொண்டிருந்தனர். புளட்டை தடை செய்வதாக புலிகள் அறிவித்திருந்த காலம். பலர் கைது மற்றும் காணாமல் போய்க் கொண்டிருந்த சூழல். கடத்தல், காணாமல் போதல்.. வீதிப் படுகொலைகள் என்பவற்றை, போராடுபவர்களுக்கு பரிசாக புலிகள் கொடுத்துக் கொண்டிருந்த காலம். இத்தகைய பாசிச பயங்கரங்கள் கட்டவிழ்ந்திருந்த காலத்தில், இதற்கு எதிரான மாணவர்களின் போராட்டம், அரசியல் ரீதியாக ஒழுங்குபடுத்திய வடிவில் வழிநடத்தப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து இந்தப் போராட்டம் எப்படி ஒழுங்கமைக்கப்பட்டது என்பதையே, இந்தத் தொடர் மூலம் முழுமையாக பார்க்க இருக்கின்றோம்.

இங்கு முன்வைக்கப்பட்ட இந்த அரசியலை அக்காலத்திலும், இதற்கு பின்னும் என்.எல்.எப்.ரி.க்கு வெளியில் காண முடியாது.

அன்று ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டமே தமிழ் மக்களிற்கான தேசிய விடுதலைப் போராட்டம் என்ற கருத்தை முன் வைத்தவர்கள், என்.எல்.எப்.ரி. மட்டும் தான்.

என்.எல்.எப்.ரி. அல்லாத மற்றவர்கள் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் என்றனர். இந்த அடிப்படை வேறுபாட்டை புரிந்து கொள்வதில் என்.எல்.எப்.ரி.க்குள் குழப்பம் இருந்தது போல், இடதுசாரிகளாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டோர் மத்தியில் அதிக அளவிலான குழப்பத்தைக் காணமுடியும். ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்த வரலாற்று ரீதியான போராட்ட நடைமுறை மற்றும் சர்வதேசிய அரசியலில் இருந்தே, என்.எல்.எப்.ரி. அன்று உருவாகியது.

தமிழீழ(ஈழ)ப் போராட்டத்தில், சர்வதேசியத்தை முன்வைத்த இடதுசாரிய இயக்கமாக, தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியே (என்.எல்.எப்.ரி.யே) ஆரம்பம் முதல் இருந்திருக்கின்றது. என்.எல்.எப்.ரி தவிர வேறு எந்த இயக்கமும், இயக்கங்களில் இருந்து உருவாகியவர்கள் எவரும் சர்வதேசியத்தை முன்வைக்கவில்லை. என்.எல்.எப்.ரியின் சர்வதேசியத்திற்கு மாறாக, தேசியத்தை முன்வைத்து பிரிந்த பி.எல்.எப்.ரி.க்கும் இது பொருந்தும்;. இயக்க சிதைவுகளின் பின் உருவான புதிய இயக்கங்கள் தொடங்கி தனிநபர்கள் வரை, தேசியத்தில் இருந்தபடி சர்வதேசிய கோசங்களை முன்வைத்தனர். என்.எல்.எப்.ரி இதற்கு நேர்மாறாக சர்வதேசியத்திலிருந்து தேசியத்தை முன்வைத்தது. இதனால் என்.எல்.எப்.ரியின் வரலாற்றுப் போக்கில் சர்வதேசியம் - தேசியம் என்ற நேர்-எதிரான இரு போக்குகள் இருந்ததுடன், முரண்பாடுகளுக்கும், பின்னடைவுகளுக்கும், தவறுகளுக்கும்;.. காரணமாகின. கடந்தகால வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தும் சர்வதேசியத்தை தேடினால், என்.எல்.எப்.ரிக்கு வெளியில் காணமுடியாது.

இந்தத் தொடரை எழுதும் நான் (இரயாகரன்) என்.எல்.எப்.ரி.யில் இருந்தபடி இதை எழுதுகின்றேனா எனின், இல்லை. என்.எல்.எப்.ரியில் இருந்தவன். என்.எல்.எப்.ரியின் சரியான அரசியல் கூறுகளை, அரசியல்ரீதியாக இன்று முன்னிறுத்துபவனாக மட்டும் இருக்கின்றேன் என்பதால், என்னை என்.எல்.எப்.ரியாக காண்பதும் - காட்டுவதும் தவறு.

எனக்கு ஊடாக என்.எல்.எப்.ரியை முழுமையாக புரிந்துகொள்வது என்பது, வரலாற்றுத் தவறு. என்.எல்.எப்.ரி. என்பது எனது தனிப்பட்ட வரலாற்றுக்கு வெளியிலானது. நான் என்.எல்.எப்.ரிக்கு முந்தைய தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியில் (ரி.பி.டி.எப் இல்) 1980 களில் இணைந்து வேலை செய்ய முன்பே, ரி.பி.டி.எப் என்ற அமைப்பு இருந்து வந்துள்ளது. 1983 இல் ரி.பி.டி.எப் என்ற அமைப்பு என்.எல்.எப்.ரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின், நான் அதன் உறுப்பினரே ஒழிய, ஏழு பேர் கொண்ட மத்தியகுழுவில் இருந்தவனல்ல. 1984 இல் ஒன்பது பேர் கொண்ட மத்தியகுழுவாக என்.எல்.எப்.ரி யை விரிவுபடுத்திய போது, மத்தியகுழுவில் இணைக்கப்பட்டவன். 1987 இல் புலிகளால் கடத்தப்பட்டுக் காணாமல் போன காலத்தில், (நான் உயிருடன் இல்லை என்ற முடிவிலும்) என்.எல்.எப்.ரி 1987 இல் நடத்திய இரண்டாவது மாநாட்டில், நானின்றி மீளவும் மத்தியகுழுவுக்கு தெரிவு செய்யப்பட்டவன். இதன் பின் 1988 இறுதியில் என்.எல்.எப்.ரி இல் இருந்து நான் விலகிய பின், புலிகள் என்.எல்.எப்.ரியை முற்றாக 1991 இல் அழிக்கும் வரை, என்.எல்.எப்.ரி தொடர்ந்தும் இயங்கியது. என்.எல்.எப்.ரியில் எனது (இரயாகரன்) காலம் என்பது, வரம்புக்கு உட்பட்டது.

இதேபோல் இரயாகரனாகிய நான் 1986 யாழ.;பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தை முன்னின்று (ஆரம்பத்தில்) வழிநடத்திய அமைப்புக் குழுவின் உறுப்பினருமல்ல. அந்த அமைப்பு குழுவையும், அதன் அரசியல் முடிவுகளையும், வெளியில் இருந்து கூட்டாக முன்னின்று வழிநடத்தியவர்கள் இருவர். அந்த இருவரில் ஒருவர் நான் (இரயாகரன்), மற்றவர் நாவலன். சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நிறுத்தப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூட்டிய பொதுக் கூட்டத்தில், இரயாகரனாகிய என்னையும் - நாவலனையும் அமைப்புக் குழுவில் இணைக்கும் நிர்ப்பந்தம் - நடந்த போராட்டத்துக்கு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் இல்லாத கூட்டம் மூலம், ஜனநாயக ரீதியாக இறுதி முடிவுகளை அமைப்புக்குழு எடுக்க முடியாது இருந்தது.

எனக்கு வெளியில் வைத்து வரலாற்றை அரசியல் ரீதியில் புரிந்துகொள்வதற்கு, என் பற்றிய இந்த முன்குறிப்பு அவசியமானதாக இருக்கின்றது. எனக்கு வெளியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு இருக்கின்றது. நான் அதில் இயங்கியவன், அவ்வளவுதான்.

என்.எல்.எப்.ரியின் அரசியல் என்பது, பிற எல்லா இயக்க வரலாறு மற்றும் இயக்கங்களில் இருந்து விலகிய தனிநபர் அரசியலிலுமிருந்து வேறுபட்டது. தேசியத்தில் இருந்து சிந்தித்ததற்;கு முரணாக, என்.எல்.எப்.ரி. சர்வதேசியத்தில் இருந்து சிந்திக்கக் கோரியது. ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்திய, சர்வதேசியக் கண்ணோட்டத்திலான அரசியலை என்.எல்.எப்.ரி. கோரியது. இந்த என்.எல்.எப்.ரி. எப்படி உருவானது?

தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (என்.எல்.எப்.ரி) யானது, ஜனநாயக மத்தியத்துவ அடிப்படையில், 3-4.10.1983 இல் நடத்திய மாநாடு மூலமே, தன்னை ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னணியாக பிரகடனம் செய்து கொண்டது. முன்னணியை உருவாக்க முன்பாகவே என்.எல்.எப்.ரிக்குள் இருந்த சில கம்யூனிச உறுப்பினர்களோடு, சர்வதேசியக் கம்யூனிச கட்சிக்கான ஒரு மாநாட்டை நடத்தியிருந்தது. அந்த சர்வதேசிய கட்சியின் பல்வேறு அரசியல் நோக்கில் இருந்தே, இனமுரண்பாட்டை கையாளும் என்.எல்.எப்.ரி. என்ற முன்னணி உருவாகியது. என்.எல்.எப்.ரி என்பது தேசியத்தை சர்வதேசிய கண்ணோட்டத்தில் முன்னெடுக்கும் வண்ணம், சர்வதேசிய கட்சியால் வழிநடத்தப்பட்டது. என்.எல்.எப்.ரியின் இராணுவப் பிரிவு கூட என்.எல்.எப்.ரி க்கு கீழ் உருவாக்கப்படவில்லை, மாறாக சர்வதேசியக் கட்சிக்கு கீழ் உருவாக்கப்பட்டது. சர்வதேசியக் கட்சிக்குரிய ஜனநாயக மத்தியத்துவத்துக்குரிய வகையில் உருவானது. சர்வதேசிய கண்ணோட்டத்தில் முழுமையான கட்சியாக செயற்பட்டதா எனின், இல்லை. இந்தத் தொடர் அது பற்றி விவாதிக்காது.

இந்த என்.எல்.எப்.ரி என்பது, பிற இயக்கங்கள் போல் 1983 இல் கற்பனையில் திடீரென தோன்றியதல்ல. மாறாக தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (ரி.பி.டி.எப்) என்ற இயக்கத்தின் பெயர் மாற்றம் மூலம் தோன்றியது. இந்த தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியானது, தனக்கான முதலாவது மாநாட்டை 13-14.09.1980 இல் நடத்தியதன் மூலம், முன்னணி இயக்கமாக மாறியது. இதற்கு முன்பாகவே தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியானது இருந்து வந்தது. 1960 களில் சண் தலைமையிலான மார்க்கிய-லெனினிய கட்சியின் வரலாற்றுத் தொடர்ச்சியில் இருந்தே, தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு வரலாறு உண்டு.

1970 களில் சண் தலைமையிலான மார்க்கிய-லெனினிய கட்சியில் ஏற்பட்ட பிளவுகளின் பின்னான, அரசியலின் நீட்சியே தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி. கார்த்திகேசன் மாஸ்ரரின் முன் முயற்சியால், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை முன்னிறுத்தி உருவானதே இந்த தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி. ஒரு சர்வதேசிய கட்சியின் பின்னணியில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை முன்னிறுத்திப் போராடவென 1975 செப்டம்பரில் உருவாக்கப்பட்ட முன்னணி தான், தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியாகும்.

அன்று தொடங்கி தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியானது, பல்வேறு நடைமுறை மற்றும் கோட்பாட்டு குறைபாடுகளுடன், சூழலுக்கு ஏற்ப இயங்கியது. துண்டுப்பிரசுரங்கள், கருத்தரங்குகள், சுவரொட்டிகள் மூலம், பல்வேறு கால இடைவெளிகள் விட்டுவிட்டு இயங்கிய போது, ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டும் முன்னணி அமைப்பாக மாறவில்லை. 1979 செப்டம்பரில் முன்னணியின் அமைப்பு செயற்பாட்டை கூர்மையாக்கும் வண்ணம் கல்முனையில் கூட்டப்பட்ட கூட்டம் ஒன்றின் மூலம், செயற்படக் கூடிய புதிய அமைப்புக் குழுவை உருவாக்கியதுடன், தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி என்ற பெயரை பகிரங்கமாக பிரகடனம் செய்தனர். இதற்கு முன் இந்தப் பெயர் பொதுவெளியில் பாவிக்கப்பட்டாலும், அணிதிரட்டும் தனி அமைப்பாக முன்னிறுத்தி செயற்;படவில்லை. தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் இந்த வரலாற்று பின்னணியில், எப்போதும் சர்வதேசிய கட்சியொன்று இருந்து வந்துள்ளது.

தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் சர்வதேசியக் கண்ணோட்டமும், என்.எல்.எப்.ரியின் சர்வதேசிய வரலாறும் இப்படித்தான் உருவானது. 1979 க்குப் பின்பாக அமைப்பாக்கும் செயற்பாடு என்பது, 1980 களில் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் செயலற்ற உறுப்பினர்களை படிப்படியாக ஒதுங்கக் கோரியது. புதியவர்களை இணைத்துக் கொண்டு செயலுள்ள அமைப்பாக மாறிவந்தது. 1980 முதலாவது மாநாடு, ஜனநாயக மத்தியத்துவம் மூலம் தன்னை அமைப்பாக்கிக் கொண்டது. 1980 மாநாடு தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் பொது செயலாளராகவும் - தொடர்பாளராகவும் நெடுந்தீவு சண்முகநாதனை தெரிவு செய்தது. சர்வதேச தொடர்பாளராக இலண்டனில் கல்வி கற்றுக்கொண்டு இருந்த சிறிதரன் (விசுவுக்கு பின் பி.எல்.எவ்.ரி. இல் இருந்தவர் - யாழ் பல்கலைக்கழக மனிதவுரிமை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்) தொடர்பாளராக தெரிவு செய்திருந்தது.

இப்படி சர்வதேசிய கட்சி வரலாற்று வழிவந்த இடதுசாரிகளை கொண்ட வரலாற்றுப் பின்னணியில், தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி இயங்கியது. 1980 பின் செயற்படும் அமைப்பாக மாறிய போது, தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் மத்தியகுழு என்பது செயலற்ற குழுவாகவே இயங்கியது. புதிதாக இணைந்த இளம் தலைமையிலான பிரதேச குழுவே செயற்படும் குழுவாக இருந்தது.

இந்த செயற்பட்ட குழுவிற்கு மத்தியகுழுவில் இருந்த விசுவானந்ததேவன் வழிகாட்டுபவராக, தீவிரமாக செயற்படும் உறுப்பினராகவும் இருந்தார். அதேநேரம் பிரதேச குழுவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மார்க்சிய அரசியலை முன்வைத்து முரண்பட்ட தமிழ்மாறன் (ராகவன், தடியன்) மற்றும் இலங்கை திரொஸ்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வந்த விக்கினேஸ்வரன் (பிரபா).. சர்வதேசிய அரசியலை முன்வைத்ததுடன், அரசியல் வழிகாட்டிகளாகவும் இருந்தனர்.

தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி தொடங்கி என்.எல்.எப்.ரி வரை, விசுவானந்ததேவன் (மோகன்), தமிழ்மாறன் (ராகவன்) அரசியல் ரீதியாக வழிகாட்டியவர்கள். விசுவானந்ததேவன 1983 க்குப் பின் இந்தியாவிலேயே இருந்தவர். 1980 - 1983 இடைப்பட்ட காலத்திலும், விசு இலங்கையில் இல்லாத நீண்ட இடைவெளிகள் கொண்ட பல காலங்கள் இருந்தன. அமைப்பின் பொது அரசியல் வழி, விசு – தமிழ்மாறன் (ராகவன்) காலத்துக் காலம், இடத்துக்கு இடம் - இவர்கள் இருவருமே வழிகாட்டினர். விக்கினேஸ்வரன் (பிரபா) அமைப்பு கொள்கைகளை அமைப்புக்குள்ளும் - மக்கள் மத்தியிலும் பிரச்சார ரீதியாக அரசியல் மயப்படுத்தியதில் செயலூக்கமுள்ளவராக இருந்தார். அதேநேரம் ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் (நான் உட்பட) பல தோழர்கள் தீவிரமாக என்.எல்.எப்.ரி அரசியலை எடுத்துச் செல்வதில் முன்னணியாளராக இருந்தனர். அதேநேரம் மக்கள் மத்தியில் செயற்பட்ட எம்மால் புதிய நிலைமைகளை எதிர்கொள்வதில் ஏற்பட்ட தொடர் நெருக்கடிகள், அமைப்பில் முரண்பாடுகளாக மாறிக்கொண்டு இருந்தது.

இப்படி சர்வதேசியவாத பின்னணியில் உருவான அமைப்பு, சர்வதேசியம் மற்றும் சர்வதேசியத்துக்கு முற்றாக முரணான தேசியத்தைக் கையாள்வதில் ஏற்பட்ட சரி, பிழைகள் கொண்டு நிலைமைக்கு ஏற்ப ஊசலாடியது. கோட்பாட்டு ரீதியானதும், தத்துவ ரீதியானதுமான முரண்பாடுகளுக்கு இது இட்டுச் சென்றது. இந்த முரண்பாடுகளே இயக்கங்களில் இருந்து விலகி, இடதுசாரியத்தை முன்வைத்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்டது. தேசியம் - பாசிசத்தை நோக்கி பயணிக்கின்ற திசையிலேயே, தொடர் முரண்பாடுகள் தொடர்ச்சியாக வெளிப்பட்டன. சர்வதேசியம் - தேசியம் என்ற இரு நேர் எதிரான விடையத்தை ஒரு நேர்கோட்டில் கொண்டு வந்து பயன்படுத்துவதில், எந்த சிந்தனைமுறை அதை வழிநடத்துகின்றது என்பதை கொண்டுதான் - அது எந்த மக்களைச் சார்ந்த அரசியல் முன்வைப்பது என்பதை வரையறுக்கின்றது. இதை விளங்கிக் கொள்ள என்.எல்.எப்.ரி - பி.எல்.எவ்.ரி. முரண்பாட்டுக்குள்ளும், அதன் பின்னான பிளவுகளையும் அக்கால ஆவணங்களையும் கொண்டு ஆழமாக விளங்கிக் கொள்ள முனைவோம்.

தொடரும்

 மாணவர்களின் இயல்பும், சமூக முரண்பாடுகளும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01

தமிழ் "மார்க்சிய" சிந்தனைமுறைக்கான கரு - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 02

1985 யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்துக்கு வித்திட்ட சூழல் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 03

பல்கலைக்கழக போராட்டத்துக்கு விதையாக இருந்தவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 04

ஒடுக்கப்பட்டவர்களுக்கான இயக்கத்திலிருந்து விதையானவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 05

1986 இல் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்திய போராட்டம் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 06