Language Selection

பி.இரயாகரன் -2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் புலியை தடை செய்யப்போவதாக அறிவித்துள்ள பின்னணியோ, மிகவும் ஆபத்தான பாசிசமாகும். புலிப் பாசிசமோ மக்களை யுத்தப் பணயப்பொருளாக வைத்துக் கொண்டு நடத்துகின்ற மனித விரோத யுத்தத்தையே, தனக்கு சாதகமாக கொண்டு பேரினவாதம் அறிவிக்கும் புலித் தடை சூழ்ச்சிமிக்கதும், ஆபத்தானதுமாகும். இதன் மூலம் தமிழினத்தை அழித்தொழிக்கும் யுத்தத்தை, சர்வதேச ஆதரவுடன் பேரினவாதம் நடத்த முனைகின்றது.

புலிகள் தம் பிடியில் வைத்துள்ள வன்னி மக்களை 26.12.2008 முன்பாக விடுவிக்காவிட்டால், புலியை தாம் தடை செய்யப்போவதாக கூறுகின்றது மகிந்தாவின் பேரினவாத பாசிச சிந்தனை. இந்த உத்தி மூலம் தம்மை தமிழ் மக்களின் மீட்பாளராக காட்ட முனையும் பாசிசமோ, மிகத் திட்டமிட்ட சதியை அடிப்படையாக கொண்டது.

 

இதன் மூலம் புலியை அழித்தொழிக்க, சர்வதேச அங்கீகாரத்தை பேரினவாத பாசிசம் கோருகின்றது. இதற்கு புலிகள் தம் பிடியில் பணயப்பொருளாhக வைத்துள்ள அப்பாவி மக்களையே, மகிந்த சிந்தனை தன் பணயப் பொருளாக்கியுள்ளது. தமிழ் மக்களின் எதிரி என்றுமில்லாத வகையில் மிக நெருக்கமாக புத்திசாலித்தனத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிலையில் இயங்குகின்றான். மிகத் திட்டமிட்ட வகையில், புலிகளிடமிருந்து மக்களை தனிமைப்படுத்தியே யுத்தத்தை செய்யும் தன் நியாயப்பாட்டை உருவாக்கியுள்ளான்;. இந்த வகையில் தான் இந்தத் தடையும், தடைக்கான காரணமும் அமைகின்றது.  

 

புலிகளின் ஒவ்வொரு மக்கள் விரோத நடவடிக்கையையும், தனக்கு சார்பாக பயன்படுத்துகின்ற நிலையில், இதனால் தமிழ் மக்கள் தம் வாழ்வின் சகல சமூகக் கூறையும் எதிரியிடம் இழந்துவிடுகின்ற துயரம்.

 

யுத்தப் பிரதேசத்தில் இருந்து தமிழ் மக்களை புலிகள் விடுவிக்காவிட்டால் தான், புலிகள் தடை செய்யப்படுவார்கள் என்கின்றது மகிந்தாவின் பாசிச சிந்தனை. இதன் மூலம் இது உலகளாவில் தலைப்புச் செய்தியாக மாறவுள்ளது. புலிகள் மக்களை பணயம் வைத்து யுத்தத்தை நடத்துகின்ற உண்மைச் செய்தியை, பேரினவாதப் பாசிசம் தமிழின அழிப்புக்குரிய ஒரு சர்வதேச அங்கீகாரத்துக்கு பயன்படுத்தவுள்ளது. தமிழ் மக்களின் மீட்பாளராக காட்டி தமிழ் மக்களை அழிக்க, தமிழ் மக்களையே பயன்படுத்துகின்ற அவலம். 

 

இந்த புலித்தடை பற்றியும், இந்த நிபந்தனைகள் மேல் புலிகள் கருத்துரைக்க முடியாது என்பதாலும், அவர்கள் கள்ள மௌனம் சாதிக்கின்றனர். தடை எதார்த்தத்தில் அர்த்தமற்றதாக இருப்பதால், அந்த இயல்பின் மீது இதை பூசி மெழுகவே புலிகள் முனைகின்றனர்.

 

ஆனால் இது புலியை அழிக்கவும், தமிழ் மக்களை ஓடுக்கவும் உதவும் மகிந்தாவின் பாசிச சிந்தனையாகும். இது சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தியாக, ஒரு பிரச்சாரமாக மாறவுள்ளது என்பதே உண்மை. மக்களை விடுவிக்காவிட்டால் புலித் தடை என்பதன் ஊடாக, தமிழ் இனத்தின் எதிர்காலத்தை பேரினவாதம் இலகுவாக தன் சொந்த கையில் எடுக்கின்றது. தமிழ் மக்கள் மேல் உள்ள மகிந்தாவின் பாசிச சிந்தனையிலான  கருசனைதான், புலிகள் மேலான தடை என்ற செய்தி பேரினவாதத்தின் பாசிச முகத்தை அழகுபடுத்தவுள்ளது.

 

பேரினவாத பாசிசம் என்றுமில்லாத உறுதியுடன், இன்று தன்னை மூடிமறைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் உலகளாவில் தன்னை நியாயப்படுத்திக் கொண்டு, தமிழின அழித்தொழிப்பை புலிகள் மூலம் நடத்தி முடிக்கின்றது. புலிகளின் பாசிசம் மூலம் மூடிமறைக்கபட்ட இந்த பேரினவாத பாசிசம், வெளிப்படையாக மகிந்த சிந்தனையாக இருக்கின்றது. எமது தவறுகளை களையாது, களைவதற்கான எந்த போராட்டமுமின்றி, பேரினவாத பாசிசத்தை எதிர்கொண்டு தமிழ் மக்களை பாதுகாக்க யாராலும் முடியாது.   

 

பி.இரயாகரன்
25.12.2008