Language Selection

பி.இரயாகரன் 1996-2000
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லகைக் குலுக்கிய அந்தப் புரட்சி நாளை இன்று 90 வருடங்களின் பின் நினைவு கூறும் போது, அதன் முக்கியத்துவம், இன்று ஒரு புரட்சிகர நிலையின் ஊடகமாக மட்டுமே நாம் அணுக வேண்டிய கடமைப்பாட்டை கொண்டுள்ளோம். உலகில் பல ஆயிரம் வருடங்களில் பல ஆயிரம் ஆயிரம் புரட்சிகளை

 

மக்கள் முன்னெடுத்தனர். இப்புரட்சிகள் எல்லாம் சமுதாயத்தில் அடிப்படை இயக்கவிதி மாறாது, அதன் மேல் அடுக்குகளில் மட்டுமே புரட்சிகர மாற்றத்தை நடத்தின. இந்த ஆயிரம் ஆயிரம் புரட்சிகளில் இருந்து முற்றிலும் தெளிவாக வேறுபட்ட புரட்சியாக 1917 இல் பாட்டாளி வர்க்கம் எழுந்து ஆட்சியைப் பிடித்த போது, உலகம் குலுங்கியது மட்டும் இன்றி, அது மீள மீள நடக்கும் ஒரு மக்கள் போராட்ட நிகழ்வாக, உயிர் வீறு கொண்ட எழுச்சியாக உள்ளது.

 

இந்தப் புரட்சிதான் சமுதாயத்தின் அடிப்படை  இயங்கு விதியை கேள்விக்கு உள்ளாக்கி, அதை தலைகீழாக புரட்டிப் போட்டு நொருக்கியது. இதனால் தான் இந்தப் புரட்சி உலகில் நடந்த எல்லாப் புரட்சியையும் விட கடும் எதிர்ப்புக்குள்ளாகியது. இந்தப் புரட்சியின் உயிர் மூச்சுக்கள் மீது இன்று கூட விடாப் பிடியான தாக்குதலை எதிரி மட்டும் இன்றி, நண்பர் போல் வேடமிட்டவர்களும் விடாப்பிடியாகத் தொடுக்கின்றனர். சமுதாயத்தில் அனத்து இயங்கும் விதியும் சுரண்டல் மேல்தான் கட்டப்பட்டு இருந்தன. இந்தக் கட்டமைப்புச் சுரண்டலைத் தகர்க்காத பல புரட்சியில் இருந்து வேறுபட்ட புரட்சி சுரண்டலைத் தகர்த்து ஒடுக்கிய போது தான், இப்புரட்சியின் ஆயுள் கூட ஊசலாடத் தொடங்கியது.

 

1871 இல் பாரிசில் நடந்த புரட்சியினை முன் அனுபவமாகக் கொண்டு 1917 இல் நடந்த உலகைக் குலுக்கிய புரட்சி, லெனின் தலைமையில் சுரண்டும் வர்க்கம் மீது தனது வீரம் மிக்க தாக்குதலைத் தொடுத்தது. இந்தப் புரட்சியின் எதிரிகள் அந்நிய நாட்டுப் படை எடுப்புகளை எல்லாம் உலகை குலுக்கிய புரட்சி துவசம் செய்து முன்னேறியது. இதன் ஊடாக சர்வதேசப் புரட்சிக்கும், உலகில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எல்லை இல்லாத உதவிகளை உலகை குலுக்கிய புரட்சி வாரி வழங்கியது.

 

இந்நிலையில் சுரண்டல் வர்க்கம் வெளியிலும், கட்சிக்குள்ளும் தனது அணிகளைத் தேடியது மட்டும் இன்றி கட்சிக்குள் தனக்கான போராட்டத்தைத் தொடங்கியது. தனக்கான அணிகளை அணிதிரட்டி கட்சிக்குள்ளும் வெளியிலும் போராடத் தொடங்கியது.புரட்சிக்கு முன், பின் ஒரு வர்க்க சமுதாயத்தின் பிரதான எதிரியான சுரண்டல் வர்க்கத்தை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தில் ஸ்ராலின் மிக நீண்ட போராட்டுத்தை கட்சிக்குள் நடத்த வேண்டி இருந்தது. இப்போராட்டுத்தின் தொடர்ச்சியில் ஸ்ராலினின் மறைவைத் தொடர்ந்து குருசேவ் ஆட்சி ஏறிய உடன், வர்க்க சமுதாயத்தில் வர்க்க முரண்பாடு முடிவுக்கு வந்து விட்டது என அறிவித்து, சுரண்டும் வர்க்கத்திடம் ஆட்சியைப் படிப்படியாகக் கையளித்தான். 1917ம் ஆண்டுப் புரட்சியை மட்டும் இன்றி, உலகப் புரட்சியை கூட காட்டிக் கொடுத்து சுரண்டும் வர்க்கத்துக்கு சேவை செய்தான். 1917ம் ஆண்டு புரட்சி என்பது  ஏகாதிபத்தியத்துக்கு குலை நடுக்கத்தை கொடுப்பவையாக இருந்தது. எல்லாக் காலனி ஆட்சிகளிலும் வீறுகொண்ட எழுச்சிகள், காலனியாதிக்கத்தை விட்டு ஓட வைத்தது. உலகப் பாட்டாளி வர்க்கம் தனது புரட்சிகர இரத்தும் சிந்திய வீரமிக்க நீண்ட போராட்டத்தை நடத்த, 1917 புரட்சி முன் கையெடுத்து கொடுத்தது.

 

ஆம் இன்று உலகைக் குலுக்கும் வர்க்கத்தின் போராட்ட வடிவம் பாட்டாளி வர்க்கப்  புரட்சி மட்டுமே என்பது, எதிரியின் அணுகு முறைதான் நல்ல சான்றாக நடைமுறையில் விளக்கியது. அந்தளவுக்கு 1917 இல் ஏதிரி கிலிப் பிடிக்க பண்ணிய புரட்சி தான் இந்த உலகைக் குலுக்கிய புரட்சியாகும்.

 

இன்று நாம் முன்னெடுக்கும் ஒவ்வொரு அடியும் எதிரியின் பிடிக்கு உள்ளாகின்றது. மார்க்சிய விரோதிகளை, திரிபு வாதிகளை, பல வண்ணக் கோட்பாட்டுக் கனவான்களை கதிகலங்க வைக்கின்றது, ஒப்பாரி வைக்க வைக்கிறது. அவதூறு பொழிய வைக்கிறது. எம் கையில் உள்ள ஆயுதம் 1917 இல் நடந்த உலகைக் குலுக்கிய புரட்சி தான். ஆம் எம்கையில் இப்புரட்சியின் எல்லா ஆழமான போராட்டத்தையும் எடுப்பதன் மூலம் எதிரியை வீழ்த்துவோம் என அறை கூவல் இட்டு, போராடுவோம் வாருங்கள் தோழர்களே.