Language Selection

பி.இரயாகரன் -2020
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பார்ப்பனிய சங்கிகள் எப்படி அரசியலை அறிவுபூர்வமாக விவாதிக்க முடியாது மொட்டையாக "இந்து விரோதி", "தேச விரோதி".. என்று தங்கள் இந்து பாசிச மொழியில் கூறுகின்றனரோ அப்படியேதான், இனவாதம் பேசும் தமிழ் சங்கிகள் "தமிழினத் துரோகி" என்று தங்கள் இனவாத தமிழ் பாசிச மொழியில் புலம்புகின்றனர். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

பகுத்தறிவுடன் விவாதிக்க இடமில்லை. இந்த இனவாத தமிழ் சங்கிகள் "துரோகியாக" முன் வைப்பது, புலிகளின் மொழியில் மண்டையில் போடுவது தான். இதையே புலிகள் போராட்டமாக செய்தனர், இதை தமிழ் சங்கிகள் தங்கள் மொழியில் கூறுகின்றனர்.

பார்ப்பனச் சங்கிகள் இந்தியா எங்கும் சமூக அறிவாளிகளை கொல்வது, சிறையில் அடைப்பது எப்படியோ, அப்படித் தான் தமிழ் சங்கிகள் துரோகி முத்திரை குத்தி சமூகத்தை ஊனமாக்க முனைகின்றனர்.

இந்தக் கூட்டத்துடன் சில பெரியாரிய பெரிசுகளும் சேர்ந்து பொங்குகின்றனர். பெரியார் ஒரு நாளும் இனவாதத்தை ஆதரித்து – கருத்துக்களை முன்வைத்தது கிடையாது. பகுத்தறிவுக்கு வெளியில் சிந்தித்ததோ - கருத்துச் சொன்னதோ கிடையாது. ஒற்றைச் சொல்லில் மக்களின் வாயை அடைத்து, முட்டாளாக்கியது கிடையாது. ஆனால் பெரியாரின் பெயரில் சிலர் இதை செய்கின்றனர்.

தாம் அல்லாத எல்லாவற்றையும் கொல்வது தான் பாசிசம். இதை ஏற்றுக்கொண்டால் பேரினவாதம் தமிழ் மக்களை கொன்றதையும் சரியென்று தான், நாம் ஏற்றாக வேண்டும். அதாவது தானல்லாத அனைத்தும் துரோகம் என்றால், பேரினவாதம் தான் அல்லாத அனைத்தையும் ஒடுக்குகின்றது. துரோகிகளின் மொழியில் இதையும் ஏற்றுத்தானாக வேண்டும்.

தானல்லாத அனைத்தையும் துரோகமாக்கும் சிந்தனைமுறை தான் தமிழ் தேசியமென்றால், அது மற்றவற்றை அழித்தாக வேண்டும். இது தமிழ் பாசிசத்தின் மொழி. இது இந்தியாவில் பார்ப்பனியமாக இருக்கின்றது. இலங்கையில் வெள்ளாளியமாக இருக்கின்றது. ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் குறித்து அக்கறையற்றது. தமிழனை தமிழன் ஒடுக்கும் பாசிச அதிகார வெறியையும், அதைக் கொண்டாடும் வக்கிரமும், தானல்லா அனைத்தையும் துரோகமாக முத்திரை குத்துகின்றது.

முத்தையா முரளிதரனோ, விஜய் சேதுபதியோ சமூகத்திற்கு தீங்கிழைப்பதை விட, "துரோகி" முத்திரை குத்தும் தமிழ் சங்கிகளே சமூகத்திற்கு மிக ஆபத்தானவர்கள் மட்டுமின்றி சமூகத்தின் ஜனநாயக சிந்தனை - விவாத உரிமையை ஒடுக்குகின்றனர்.

முத்தையா முரளிதரனோ சிறந்த கிரிக்கட் வீரனாக இருந்ததால், அரசு மட்டத்தில் தொடர்புகளை கொண்டவர். அதேநேரம் தனக்கென்று அரசியலை வெளிப்படுத்தியுள்ளார். அவரின் அரசியல் அவர் பிறந்து - வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மலையக மக்களின் அரசியலல்ல. இதனால் ஒடுக்கப்பட்ட மலையக மக்கள் அவரை "துரோகி" என்று கூறுவது எப்படி அபத்தமோ, அதை விட கேவலமானது தமிழ் தேசியம் பேசுகின்ற சங்கிகளின் வக்கிரம். இலங்கைத் தமிழனோ, மலையக மக்களோ இதைக் கூறவில்லை, இந்தியாவில் ஈழ இனவாதம் பேசும் தமிழ் சங்கிகளே "துரோகி" என்று புலம்புகின்றனர். அறிவும் அறமுமற்ற மனநோயாளிகளே இவர்கள். இவர்கள் தமிழகத்தில் தமிழனை தமிழன் ஒடுக்குவதற்கு எதிராக தேசியத்தை முன்வைத்து போராட முடியாது, அரசியல் ரீதியாக வக்கற்றவர்கள். ஒற்றைச் சொல்லில் இனவாத தேசியம் பேசும் சங்கிகள். தனிநபர் வழிபாட்டை அரசியலாகக் கொண்டவர்கள்.

தமிழகத்தில் பார்ப்பனிய பாசிசத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியப் போராட்டத்தை நடத்த வேண்டியது தானே. தமிழகத்தில் தமிழனை தமிழன் ஒடுக்கும் பார்ப்பனிய சாதிய தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் இந்த சங்கிக் கூட்டம், இலங்கையில் தங்களை அனுமானாக முன்னிறுத்துகின்றது. பார்ப்பனிய இராமனின் கூலிப்படையாக, தமிழகத்து தமிழ் சங்கிகள் கூச்சல் இடுவதும், முத்திரை குத்துவதையும் கடந்து, இதற்கு எந்த அரசியல் அடிப்படையும் ஈழத்தில் கிடையாது.

விஜய் சேதுபதியோ புகழ் பெற்ற ஒரு நடிகனாக இருப்பதால், பாசிசமயமாகி வரும் இந்திய சூழலில் - ஜனநாயக குரல்;களை அண்மையில் வெளிப்படுத்துவதன் மூலம், தனது அரசியலை வெளிப்படுத்திய ஒருவர். தமிழ் சங்கிகள் அவருக்கு "துரோக" முத்திரை குத்துகின்ற வக்கிரம், அரசியலற்ற வங்குரோத்துத்தனத்தின் பொது வெளிப்பாடாகும்.

மொட்டைத் தலைக்குப் பச்சை குத்துவது போல், சங்கிகள் தங்களது தனிநபர் வழிபாட்டை மூடிமறைக்க தாம் அல்லாத அனைத்தையும் "துரோக" முத்திரை குத்துகின்றனர்.

ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களை குறித்து, அதற்;காக எதையும் நடைமுறையில் முன்வைத்து போராட முடியாத மனநோயாளிகள்.

இந்துத்துவம் பேசும் சங்கிகளின் மனநோய் போல், இனவாதம் பேசும் சங்கிகளின் மனநோய்;. இது பார்ப்பனியத்தின் தமிழக வடிவம். தமிழகம் முதல் இந்தியா வரையான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது. இலங்கை ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்க உதவும், இந்திய பார்ப்பனிய வழிவந்த அனுமான்களே இந்தச் சங்கிகள். இலங்கையை தீயிட்டு குளிர்காய முனைகின்றனர்.

இதைக் காட்டி புலத்து மாபியா புலிகளிடம் பணவேட்டை நடத்துவதையே தொழிலாக கொண்ட தலைவர்களின் அரசியலாக இருக்கின்றது.